13 – ஸ்ரீபெரும்புதூர்

 

ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  – ௧௩   (13 )

களப்பணி   அறிக்கை

ஒரகடத்தில் இருந்து நாங்கள் நேரே செங்கல்பட்டு திரும்பவில்லை; வழியில் இருந்த ஊர்களையும் பார்த்துவிட்டு ஏழு மணிக்குத்தான் செங்கல் பட்டு திரும்பினோம்.

இது எங்களின்   தினசரி வாடிக்கை ஆனது; உடல் களைத்து இருப்பினும் ‘திரும்பி வந்தோமா?  உணவுண்டு படுத்தோமா?’ என்று இருக்காமல்,  பிறகு இணைய இணைப்பு  எங்கே கிடைக்கும் என்று அங்கே அலைவதும், அதற்கு மேல்  அடுத்த நாளைய  பயணம் பற்றி ஒரு  சிறிய திட்டம் வகுப்பதுமாக நேரம் ஓடிவிடும்; பிறகு மனம் ஒடுக்கம் பெறச்  சிறிய அவகாசம்  தேவைப் படும். காலையில் பெரும் பாலும் எட்டு மணிக்கு முன்னே  புறப்பட்டு விடுவோம்; இதில் பல் வேறு பயன்கள் உண்டு. இன்று ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தொடங்க எண்ணி அங்கே  விரைந்தோம் .

விட்ட இடத்தில் தானே தொடர வேண்டும் !

இன்றும் நாங்கள் பார்க்க வேண்டிய முகவரி விஜய ராகவன் டீ .ஆர் .!

ஆனால் ஓரகடம் அன்று ! ஸ்ரீபெரும்புதூர் .

 

ஆனால் இதில் ஆச்சரியமாக தெருப் பெயரும் இருந்தது; எனவே  நேரே அந்தத் தெருவுக்கு நாங்கள் விரைந்தோம். முகவரிக்கும்  சற்று எளிதில் போகமுடிந்தது;  ஓலைச் சுவடியையும் சற்று எளிதாகவே வாங்க முடிந்தது !

ஏதோ காத்துக்கொண்டு இருப்பவர்கள் போல் திரு விஜயராகவன் அவரது மகன் ஸ்ரீதர்  இருவரும் எங்களை வரவேற்றனர்.  கேட்டவுடன் அவர்களிடம் ஓலைச் சுவடிகள் இருப்பதை ஒப்புக்கொண்டனர். நாங்கள் கூறிய ஓலைச் சுவடிப் பாதுகாப்பு விஷயங்களை அவர்களும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய அரிய அறிவின் எச்சங்களைப் பாதுகாக்க வேண்டியது இன்றைய தலையாய கடமை என அவர்களும் கருதினர்.

 

 

அவர்களிடம் வடமொழிச் சுவடிகள் மூன்று கட்டுகள் இருந்தன. அவை நீத்தார் கடன்கள் செய்வது பற்றிய மந்திரங்களும், அதன் முறைகளும், சாம வேதக் குறிப்புகளும் அடங்கிய சுவடிகள் என அவர்கள் கூறினர். நன்றி கூறி அவர்களிடம் இருந்து அந்த மூன்று சுவடி கட்டுகளைப் பெற்றுக்கொண்டோம்;  அவர்களும் எங்களை மகிழ்வுடன் வழி அனுப்பினர் .

அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் அடுத்த முகவரி.

 

 

வியப்பாக அது ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் ராமானுஜர் சன்னிதிக்கு நேர் எதிர் வீடு. நாங்கள் ஸ்ரீபெரும்புதூரிலும் கோவிலுக்குச் செல்ல முயலவே இல்லை. அனைவரையும் வற்புறுத்திக் கோயிலுக்கு அழைப்பதை நான் விரும்புவ தில்லை. செய்யும் தொழிலே தெய்வம் என்று இந்த தேடுதல் வேட்டை முடியும் வரை எண்ணியிருந்தோம்.

 

ஆனால் ராமானுஜர் சன்னிதிக்கு எதிர்வீடாகவே  திரு பாஸ்கரர் வீடு அமைத்தால் , கோயிலைப் பார்த்து மனத்தில் பிரார்த்தனை  செய்தவாறே அந்தப் பாரம்பரிய வீட்டில் நுழைந்தோம். வீடும் பார்ப்பதற்கு ஓலைச் சுவடிகளைப் பேணும் இடம் போலவே  கலையுடனும், மரபு அழகுடனும் விளங்கியது. 
 

 

திரு.  பாஸ்கரர்  எங்கள் அழைப்பிற்கு பதிலொலி தந்தபடி வெளியே வந்தார்; அப்படியே அசரவைக்கும் முக ஒளி. நெறி தவறாத தீவிர நோன்பு மிகுந்த வாழ்க்கையாலும்,  ஆழ்ந்த ஞானத்தாலும் கண்களின்  கூர்மை முதலில் எங்களைக் கவர்ந்தது; "வாங்க"  எனப் பரிவுடன் வரவேற்றார் . நாங்கள் எங்களைப்பற்றிக் கூறிக்கொண்டோம் . " ஓலைச் சுவடிகள் இருப்பது உண்மைதான்; ஆனால் அவற்றைத் தருவது என்பதுதான் சற்று சிரமம்; எனக்கும் மகன் இருக்கிறான். அவனுக்கும் இதில் நாட்டம் உண்டு. எனவே சற்று  யோசிக்கணும் " என்றார்.
"சுவாமி ! அவற்றைக் கண்ணாலாவது பார்க்க முடியுமா ? "
”செத்தே இருங்கோ !"   என்றபடி தனது மகனை அழைத்து எங்களுக்கு அறிமுகப்படுத்தினார் .

 

 
அவரிடம் ஏதோ கூறினார்.  அவரும்  உள்ளே சென்று முதலில் சில சுவடிகளைக் கொணர்ந்து திண்ணையில் வைத்தார் . நாங்கள் அவற்றை ஆர்வமுடன் பார்த்தபடி பேச ஆரம்பித்தோம் .பேச்சு பல திசையில் நீண்டது.  பாஸ்கரர் விரும்பும் வண்ணம் பேச்சு அமைத்தது; அவரும் எங்களை விரும்ப ஆரம்பித்தார். யாருமுணராமல்  திண்ணையில் இருந்த ஓலைச் சுவடிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போனது.

 

 

சிறிது நேரத்தில் மகனை நோக்கிய பாஸ்கரர்  "எல்லாம் வெளியில் வநது விட்டதா? ” என்றார்.
"இன்னும் கொஞ்சம் மீதி இருக்கிறது "
” சரி !  எல்லாத்தையும் எடுத்து வந்துடு  !  இவாதான் இப்படி சொல்லுகிறார்களே !"
மீண்டும் உள்ளே சென்ற அவரது மகன் தம் இருகை  கொள்ளாமல் சுவடிகளை அடுக்கிச்  சுமந்துவந்தார் .

 

 

" எல்லாம் இவ்வளவுதாம்பா "
"சுவாமி, இவ்வளவும் தாங்கள் படித்திருக்கிறீர்களா ?"
"ஆமாம் அத்தனையும் படித்திருக்கிறேன் ."
"இவைகளில் தமிழ் ,கிரந்தம் ,தெலுங்கு இவை கலந்துள்ளது
"இவைகளில் எத்தகைய நூல்கள் இருக்கின்றன ? "
"இவற்றில் திருவாய் மொழி ,பிள்ளை லோகாசார்யர்,  தத்வ போதினி, தத்வ மாலிகா, பாணினி  சூத்திரம்  இன்னும் பல அரிய வேதாந்த நூல்கள் இருக்கின்றன. இவை பூர்விகமாக எங்கள் வீட்டில் இருந்து வருகின்றன; நாங்களும் இவற்றை மிகப் புனிதமாக மதித்து வருகிறோம் "

 

 

நான் முன்னே சொன்னபடி இது ஒரு மன விளையாட்டு , சரியாகக் கையாண்டால் நிச்சயம் ஓலைச் சுவடி கிடைத்து விடும்.  அதுவும் நாங்கள் வாங்கியது அத்தனையும் கொடை! எந்த விதப் பணமோ, விலையோ பேசப்படாமல் இவை தரப்பட்டன. தற்போது இருக்கும் காலநிலையில் யாராவது இத்தகைய அரிய பொருட்களை இனாமாகத் தருவார்களா ?

"சுவாமி இவற்றைப் பாருங்கள் ! சிறுகச் சிறுக முனை முறிந்து, இடையில் ஒடிந்து, மையில்லாமல், எண்ணெய் இல்லாமல் எப்படிப் பொலிவிழந்து  இருக்கிறது பாருங்கள்! இத்தனை உயர் தத்துவங்கள் நமது முன்னோரின் அறிவு செல்வங்கள் இப்படி இந்த  ஓலைகளோடு  முடிவடைந்து, இவை இல்லாமல்  மறைந்து போக  நீங்கள் விடலாமா ?"
" இவற்றைப் பாதுகாப்பதும் உங்கள் கடமையல்லவா?  இத்தனை காலம் உங்கள் முன்னோர் பாதுகாத்து உங்களுக்குத் தந்தது போல், நீங்களும் பாதுகாத்து வரப்போகும் தலைமுறைக்குத் தரவேண்டாமா ? இதுவே சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் பெரும் தொண்டாக அமையுமே ! தெய் வங்களின் ஆசியும்  இதற்குக் கிடைக்குமே ! இவற்றை எழுதிய பெரிய வர்கள் இவை இப்படி அழிந்து போகவேண்டும் என்றா எழுதிருப்பார்கள்  ? இத்தனை புனிதர்கள் கைப்பட்ட ஓலைச்சுவடி இது ! இவை இப்படி அழிந்து போகலாமா?  நாம் இன்றைய நவீனக் கண்டுப்பிடிப்புக்களை இவற்றைப் பாதுகாக்கப் பயன்படுத்தலாமே ."

" இதுவே எங்களிடம் இருந்தால் இவற்றைப் பராமரித்து, மையிட்டு, எண்ணெயிட்டு , சிங்காரித்து, புதுக் கயிற்றில் கோத்து, இப்போது இதில் குடிகொண்டிருக்கும் பூச்சிகளை அழித்து , இவற்றை குளிரூட்டப்பட்ட அறைகளிலே வைத்து இன்னும் சில நூறாண்டுகள் சுவடிகளின் வாழ்வை அதிகரிக்கச் செய்வோம்.

இத்தனையும் செய்தாலும் அவற்றில் உங்கள் பெயரையே, இந்த இடத்தில் எடுத்தது , இவர்கள் கொடையாகத் தந்தது எனக் குறிப்பிடுவோம். உங்கள் பரம்பரைப் பெயர்கள்  அத்தனையும் குறிப்பிடுவோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் சுவடிகளைத் தஞ்சை வந்து பார்க்கலாம் படிக்கலாம்.  சுத்தம் செய்தவுடன் இவற்றை மின்னாக்கம் செய்து, சில சி டி களில் அத்தனையும் பதிவுசெய்து உங்களிடம் தந்துவிடுவோம். தாங்கள் அவற்றைக் கணினியிலோ  ,டீ வீ யிலோ இட்டு வேண்டும்போது பார்த்துக் கொள்ளலாம்"  இவ்வாறு மீண்டும் மீண்டும் பேச ஆரம்பித்ததும்,  அவர்களும் மெளனமாக யோசனை  செய்ய ஆரம்பித்தனர்; அவர்களுக்கும் இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை; நாங்கள் இவற்றைப் பாதுகாக்கிறோம் என்று சொன்னதும்  அந்தத் தன்னல மில்லாப் பெரிய உள்ளங்கள்,  தங்கள் பிள்ளைகளைப் பிரிவது போல் பாசத்துடன்  அவற்றை எங்களிடம் ஒப்படைக்க முன்வந்தனர். 

 

ஒருவாறு ஒரு மிகப்பெரிய சுவடிக் குவியல் ஸ்ரீ பெரும்புதூர் ராமானுஜர் சன்னிதிக்கு எதிரில் கிடைத்தது எங்களுக்கும் பெரும் மகிழ்ச்சி  தந்தது. வழக்கம் போல் கையோடு கொண்டு சென்று இருந்த ஒரு பெரிய அட்டைப் பெட்டி நிறைய  அங்கிருந்த சுவடிகள் அனைத்தையும் அடுக்கி கொண்டு பெரியவரிடம் விடை பெற்றோம்.

 

அவர்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தனர்; எங்களுக்கும் மனத்திற்குள் வேதனைதான் ! ஆயினும் அறிவுச்  செல்வங்கள் எப்படியும் காக்கப்படவேண்டும். தமிழர் பண்டைய கலைகள் இன்னும் உலகோரின் அங்கீகாரம் பெறக் காத்திருக்கின்ற னவே எந்தவித ஆய்வும் இல்லாமல்!  தகுதியில்லை என முதல் சுற்றிலேயே நிராகரிக்கப்படும் அவலம் தொடர்கிறதே !

இன்னும் இத்தகைய அறிவுகளின் மூலமும் அழிந்து விட்டால்,  பிறகு சொல்வது எல்லாம் வீணர்களின் பிதற்றல் என்றுதானே ஒதுக்கப்படும். முதலில் மூலத்தைப் பாதுகாப்போம். பிறகு அதில் என்ன இருக்கிறது என்பதைப் பதிவு செய்வோம். பிறகு அதைப் பன்னாட்டு மொழிகளிலேயும் மொழி மாற்றம் செய்து உலகத்தார் யாவரும்  அறியச் செய்வோம். இவ்வா றாக எங்கள் சிந்தனை அடுத்த இடத்தை அடையும் வரை எங்களை ஆட்கொண்டிருந்தது
 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *