ஓலைச்சுவடிகள் தேடிய படலம் —— ௨௧ (21)
நாமக்கல் பகுதியில் இருக்கும் வரை தினமும் தொடர்பு கொள்ளச் சொல்லி வேங்கட நரசிம்ம பட்டாசாரியார் முதல் தவணை ஓலைச் சுவடிகளைத் தரும்போது கூறினார் அல்லவா? அதையே வேதவாக் காகக் கொண்டு தினமும் வேலை முடிந்ததும் நேரே வேங்கட
நரசிம்ம பட்டாசாரியார் வீட்டுக்குப் போவதை வழக்கமாகக் கொண்டோம் ; இந்த முறையினால் கூடுதலாக ஸ்ரீ ஆஞ்ஜநேயர் சன்னிதியிலும் சில நிமிடங்கள் அமரும் வாய்ப்பு கிடைக்கும் .
எங்களைப் பார்க்கும் போதெல்லாம் அன்றைய அனுபவங்கள், கிடைத்த சுவடிகள் பற்றிக் கேட்பார். பிறகு “இன்னும் நான் எனது சுவடிகளைத் திரட்டவில்லை; நாளை வாருங்கள்” என்பார் . நாங்களும் விடாமல் போய்க் கொண்டிருந்தோம். சில நாட்கள் சென்றதும் ” நாங்கள் நாளை கொல்லி மலை செல்கிறோம்; வர இரண்டு நாளாகும். கொல்லிமலை முடிந்ததும் எங்கள் தேடுதல் பணி இந்த மாவட்டத்தில் முடிந்து விடும். பிறகு ஊருக்குத்தான் போகிறோம்” என்றோம்.
அவரோ ”கொல்லி மலையில் இருந்து நாமக்கல் வந்துதானே உங்கள் ஊருக்குப் போக வேண்டும்; எனவே வரும்போது போன் செய்யுங்கள்; நான் தயாராகக் கட்டி வைத்திருக்கிறேன்” என்றார் .
நாங்களும் கொல்லிமலை முடிந்து திரும்பும் போது சிறிது தூரத்தி லேயே அவருக்கு போன் பேசினோம். நாங்கள் அவர் வீட்டிற்குச் சென்ற போது அவர் வீட்டில் இல்லை . ஸ்ரீ ஆஞ்ஜநேயரிடமும் கொஞ்சம் நேரம் பேசி விடைபெற்றோம் .
அதற்குள் வேங்கட நரசிம்ம பட்டா சாரியார் வநது விட்டார்; பிறகு உள்ளே சென்று ஒரு மிகப் பெரிய மூட்டை ஒன்றைக் காட்டி ”இதைத் தூக்கி வாருங்கள்” என்றார். அது நிறைய முழுவதும் ஓலைச் சுவடிகள். அவை முதல் தவணை ஓலைச் சுவடிகள் போல் வெயிலில் காய்ந்து கருத்துப் போகவில்லை; ஆனால் அவை அனைத்தும் கட்டுகள் பிரிந்து உதிரி ஆகிவிட்டன . அவரே இவற்றை எண்ணைப் பார்த்தும், அளவைப் பார்த்தும் அடுக்குவதற்கே ஆறு மாதம் ஆகிவிடுமென்றார். அவ்வளவும் நல்ல சுவடிகள்தான் ஆனால் கட்டுப் பிரிந்து கலந்து விட்டது . எனன செய்வது ? இது கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டம் என்று எண்ணி அவசர அவசரமாக மூட்டையைக் கட்டினோம்.
வேங்கட நரசிம்ம பட்டாசாரியார் தாமதமாக வந்ததற்கு வருந்த வேண்டாம் என்று கூறி, அன்று அவர்களின் திருமண தினம் எனவே கோயிலுக்குச் சென்று வந்தோம் என்றார். நாங்கள் அவர்களுக்கு வாழ்த்துக் கூறி, அவர்கள் இருவரையும் நிற்கச் சொல்லி ஒரு படம் எடுத்தோம். அம்மையாரும் எங்களுக்கு அங்கே சுவடி கிடைக்கப் பல விதத்தில் உதவியவர்.
இந்தத் தருணத்தில் சில விஷயங்களைக் கூற ஆசைப்படுகிறேன்.
நீங்கள் படங்களில் இதுவரை பார்த்தபடி சுவடிக் கட்டுகளாக கிடைக் கும்போதும் சரி , இவ்வாறு கட்டுகளாக, உதிரிகளாக மூட்டை மூட்டையாகக் கிடைக்கும் போதும் சரி எங்களுக்கு அவற்றை எண்ணவோ வகைப் படுத்தவோ நேரம் இருப்பதில்லை. வாரிச் சுருட்டி
அடைத்துக் கொண்டு அடுத்த இடம் நோக்கி விரைவதிலேயே நாங்கள் குறியாக இருப்போம். எங்களுக்குக் கிடைத்த குறைந்த நாட்களில் அதிக பட்சமாக எனன முடியுமோ அதைச் செய்யவே நினைத்தோம் .
பெட்டிகளிலும், சாக்குகளிலும் அடைக்கப்பட்ட சுவடிகள் உடனே எங்கள் வாகனத்தில் டிக்கியிலோ, அதில் இடமில்லை எனில் வண்டி யின் மேலோ ஏற்றப்படும் .பிறகு வேலை முடிந்து இரவு விடுதி திரும்பும் போது அந்தப் பொதிகள் முனைவர் கோவை மணி அறைக்குச் சென்றுவிடும். அந்த மாவட்டம் முடிந்ததும் அவை எல்லாம் தஞ்சைச் சுவடிப் புலத்திற்கு போய்ச் சேர்ந்து விடும். எனவே எண்ணிக்கை எங்களால் ஏதோ மனத்தில் தோன்றுவதை – கண்ணால் பார்க்கும் அளவை வைத்தே கூற முடிந்தது; அவற்றையே சுபாவிற்கும் தெரிவித்தோம் .எண்ணிக்கை பற்றிச் சுவடிகளைக் கொடையாகத் தந்தவர்களிடமும் நாங்கள் அப்போது தெரிவிப்பதில்லை; அவர்களும் கேட்பதில்லை. பிறகு பல்கலையில் இருந்து துறை மூலம் கடிதம் வரும் என்றே சொல்லி வந்திருக்கிறோம். இதுவே இன்னும் கொஞ்சம் அதிக ஆட்கள் எங்களுடன் இருந்திருப்பின் அங்கேயே எண்ணியும் இருந்திருக்கலாம். நீங்களே பாருங்கள், இந்த மூட்டையில் இருப்பதை எண்ண எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதை? ஒரு சிறு குழுவால் எண்ணஇயலுமா?
மின்னாக்கம் செய்யும் கருவிகள் நாங்கள் கேட்டபடி கிடைத்திருந்தால் சென்ற இடத்திலேயே சில சுவடிகளை மின்னாக்கமும் செய்திருக் கலாம் . செல்வமுரளியை மின்னாக்கத் தொழில் திறமைக்குதானே அணியில் சேர்த்தது; ஆனால் அதற்கு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை .
மீண்டும் அந்தச் சுவடிகளைக் காண எங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது இறை சித்தம் தான் .
அடுத்து கொங்கு நகர் என்ற பகுதியிலே சில முகவரிகளைத்தேடிச் சென்றோம் . இப்போதெல்லாம் செல்வமுரளி ஓபனிங் பாட்ஸ்மேன் ஆகிவிட்டார்; அதாவது அவர்தான் முதலில் காரைவிட்டு இறங்கி முகவரிகள் விசாரிப்பார். அணியணியாகச் செயல் படுவோம்.
அங்கே பெருமாள் முருகன் என்று ஒருவரைத்தேடி வந்திருந்தோம்.
செல்வமுரளி அங்கே வழியில் சென்று கொண்டிருந்த ஒருவரை நிறுத்திக் கேட்டார்; பார்த்தால் அவர்தான் பெருமாள் முருகன்.
அவர் எங்களை அருகில் இருந்த அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் .
அங்கே நாங்கள் அமர்ந்ததும் அவர் மெதுவாகத் தம் பெயர் முனைவர் பெருமாள் முருகன் என்றும், நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணி புரிவதாகவும் தெரிவித்தார். அடக்கமான மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள். இச்செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவருடன் சிறிது நேரம் எங்கள் பணிப் பற்றி விவரித்தோம். அவரிடம் ஓலை எதுவும் இல்லை என்று கூறிவிட்டார் ; ஆனால் மிக்க பயன்தரும் விபரங்கள் சில கூறினார். நான்கு வருடங்களுக்கு முன் இந்த NMM திட்டம் செயல் படுத்திய போது நாமக்கல் மகளிர் கல்லூரிப் பேராசிரியை ஒருவர்தான் இதில் தீவிரமாக இருந்து செய்தார் என்று கூறி, அவரது கணவரின் கை பேசி எண்ணை எங்களுக்குத் தந்தார் .நீங்கள் அவரை நேரில் சந்தித்து பேசினால் பயனுள்ள விபரங்கள் கிடைக்கும் என்றார் . எங்களுக்கு அதை விட வேறு என்ன வேலை? உடனே அவரது கணவரிடம் பேசி பேராசிரியையின் எண்ணைப் பெற்றோம். அவரிடம் பேசி வீடு இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டோம் .உடனே அங்கே புறப்பட்டோம். அவரும் சுவாரசியமான பல தகவல்களை தந்தார்.
அவற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்