தமிழ் மரபு அறக்கட்டளையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளும் ஓலைச் சுவடிகள் தேடும் பணி
தமிழ் மரபு அறக்கட்டளை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 18.12.2009 அன்று செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் கட்ட நடவடிக்கையாக தனியார் வசம் பாதுகாக்கப்பட்டு வரும் பனை ஓலைச்சுவடிகளைத் தேடும் பணி ஜனவரி முதல் வாரத்திலிருந்து தொடங்கப்பட்டது. ஜனவரி மாதம் ஏற்பாட்டு வேலைகளும் அதனைத் தொடர்ந்து பிப்ரவரி, மார்ச்சு மாதங்கள் நேரடி களப்பனிகளும் மேற்கொள்ளப்பட்டன.
படத்தில்: முனைவர்.ஜெயக்குமார், திரு.சுகுமாரன், முனைவர்.க.சுபாஷிணி (தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை), முனைவர்.ம.ராசேந்திரன் (துணை வேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்), முனைவர்.கார்த்திகேயன் (பதிவாளர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்), முனைவர்.மாதவன் (சுவடிப்புலத்தலைவர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்)
திகதி: 18.12.2009
தனியார் வசமுள்ள ஓலைச் சுவடிகள் தேடும் பணியின் முதல் திட்டம்:
இந்த முதல் கட்டப் பணியில் தமிழகத்தின் சில இடங்கள் தேந்த்தெடுக்கப்பட்டு இப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதிநிதிகளாக திரு.சுகுமாரன், திரு.செல்வமுரளி இருவரும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தற்காலிக ஊழியர்களாக இந்தத் திட்டம் நடைபெறும் வரை பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்களுடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக சுவடிப்புல ஆசிரியர் முனைவர்.கோவை மணி அவர்களும் முழுதுமாக இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
களப்பணியின் போது திரு.சுகுமாரன்
முதல் கட்ட களப்பணிக்காக தேர்ந்தெடுக்கபப்ட்ட இடங்கள் :
- திருவள்ளூர்
- சென்னை
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர்
- காஞ்சிபுரம் – உத்தரமேரூர்
- நாமக்கல்
- கொல்லி மலை
- திருநெல்வேலி
- கண்யாகுமரி
- நாகர்கோவில்
இவற்றில் சுவடி நூல்கள் உள்ளவர்களில் இல்லங்கள் ஒவ்வொன்றாகச் சென்று அவர்களுடன் கலந்துரையாடி சுவடி பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்து மின்பதிப்பு சுவடி நூல் ஆய்வு எனும் வகையில் விழிப்புணர்ச்சியையும் இந்த நடவடிக்கையின் வழி மேற்கொண்டனர் இம்மூவரும். சுவடி நூல்களை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்து சுவடிப்புலத்தில் பாதுகாப்பதின் வழி முறையாக ஆய்வு செய்ய உதவும் என நினைப்பவர்களிடமிருந்து மட்டும் இச்சுவடி நூல்கள் பெற்று வரப்பட்டுள்ளன.
களப்பணியின் போது திரு.கோவை மணியுடன் திரு.செல்வ முரளி
இதுவரை பொது மக்களிடமிருந்து பெற்று வரப்பட்ட பனை ஓலை சுவடி நூல்களில் :
- மருத்துவம்
- தமிழ் இலக்கியம்
- கதைகள்
- ஓவியங்கள்
- குடும்ப குறிப்புக்கள்
- குடும்ப கணக்கு விபரங்கள்
- இலக்கண நூல்
- குற்றாலக் குறவஞ்சி
- ஆருடம்
- சோதிடம்
- நஞ்சு முறிவு
- மாட்டு வைத்தியம்
- சைவ நூல்கள்
- வைஷ்ணவ நூல்கள்
- நிகண்டு
- சிலப்பதிகாரம்
- மாந்த்ரீகம்
- தல புராணங்கள்
என பல விதமான் நூல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட இந்த சுவடி நூல்கள் அனைத்தும் உடனுக்குடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்து சுவடிப்புலத்தில் உடன் சேர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை முறையே தூய்மை செய்யப்பட்டு, மின்பதிப்பு செய்யப்பட்டும, அப்குக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.
இதுவரை சேகரிக்கப்பட்ட ஓலை நூல்கள் பகுதி வாரியாக:
எண் | பகுதி | இடம் | ஓலை எண்ணைக்கை | குறிப்பு |
1 | திருவள்ளூர், சென்னை | பழவேர்க்காடு | 300 | இலக்கியம், மருத்துவம் |
2 | காஞ்சிபுரம் | ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர் | 8,400 | மருத்துவம், ஆரூடம், அருணாசல புராணம், நாலடியார், சில தமிழ் இலக்கியங்கள் |
3 | நாமக்கல், கொல்லி மலை | 12,550 | வெவ்வேறு வகை | |
4 | திருநெல்வேலி | 3090 | சகாதேவன் வாகடம், விஷ்ணு சகஸ்ரநாமம், குற்றாலக் குறவஞ்சி, தொடுகுறி சாஸ்திரம், காப்பியம், ராமாயணம், மார்கண்டேய புராணம், சித்திர குப்த புராணம், திருமண வாழ்த்து, மருத்துவம் | |
5 | கன்யாகுமரி | 700 | இலக்கியம், நெல்லியின் கதை | |
6 | பாளையங்கோட்டை | 70 | ||
7 | நாகர்கோவில் | 1775 | விஷக்கடி மருந்து, மருத்துவம், மாந்திரீகம் | |
முதல் கட்ட தேடுதல் பணியில் சேகரிக்கப்பட்ட பனை ஓலைகள்: 26,885
தமிழகத்தில் ஓலைச்சுவடி தேடுதல் பணி – இரண்டாம் கட்ட தேடுதல் பணி
இந்த இரண்டாம் கட்ட ஓலைச்சுவடி தேடுதல் பணி ஆகஸ்டு 2010 தொடங்கி நவம்பர் 2010 வரை நடைபெற்றது. இப்பணியில் தமிழ் மரபு அறக்கட்டளயைப் பிரதிநிதித்து திரு. சுகுமாரன் அவர்கள் இத்தேடுதல் களப்பணியின் குழுவுக்குத் தலைமை பொறுப்பேற்றார். இந்த நான்கு மாதங்களில் தமிழகத்தின் கீழ்க்காணும் பகுதிகளில் ஓலைச்சுவடி தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- விருது நகர் மாவட்டம்
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- தேனீ மாவட்டம்
- திண்டுக்கல்
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- காஞ்சிபுரம்
இந்த தேடுதலில் இடங்கள் வாரியாக கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடி கட்டுக்கள் அதில் உள்ள ஓலைகளின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் வருமாறு:
இடங்கள் | கட்டுகள் | ஓலைகளின் எண்ணிக்கை | |
1. | விருது நகர் மாவட்டம் | 237 | 36,053 |
2. | தூத்துக்குடி | 79 | 7261 |
3. | கன்னியாகுமரி | 4 | 630 |
4. | தேனீ மாவட்டம் | 13 | 850 |
5. | திண்டுக்கல் | 64 | 8918 |
6. | சிவகங்கை | 3 | 120 |
7. | ராமநாதபுரம் | 9 | 500 |
8. | காஞ்சிபுரம் | 3 | 40 |
9. | விருது நகர் -தூத்துக்குடி | 5000 |
பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட இந்த சுவடி நூல்கள் அனைத்தும் உடனுக்குடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்து சுவடிப்புலத்தில் உடன் சேர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை முறையே தூய்மை செய்யப்பட்டு, மின்பதிப்பு செய்யப்பட்டும, பகுக்கப்பட்டு பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழக சுவடிப்புலத்து ஆழ்வாளர்களால் ஆய்வு செய்யப்படும்.
இரண்டாம் கட்ட தேடுதல் பணியில் சேகரிக்கப்பட்ட பனை ஓலைகள்: 59,372
07-Feb, 2011
முனைவர்.க.சுபாஷிணி
[தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை]