Home Palm Leaf 23 – நாமக்கல்

23 – நாமக்கல்

by Dr.K.Subashini
0 comment

 

ஓலைச்சுவடிகள்   தேடிய படலம் –  ௨௩    (23)

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். முழுமை பெறக்கூடிய காரியங்களை    அவை செல்லும் விதத்தைப் பார்த்து ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ளலாம், ஆகுமா ஆகாதா என !  .நீர் ஒழுக்குப்போல் செவ்வனே தடையின்றி நடைபெறும்  செயல்கள் நடக்காமல் போகாது. முன்னமே முரண்டு பிடிக்கும் காரியங்கள் நம் ஊக்கத்தின் வேகத்தைப் பொறுத்துக் கொஞ்சம் கூலி மாதிரி பலன் அளிக்கும். இப்படித்தான் நாககிரிப் பண்டிதரிடமும் ஒரு பெட்டி நிறைய ஓலைச் சுவடிகளைப் பெற்றபோதும் உணர்ந்தோம்.

 

உண்மையில் நாங்கள் பெருமாள் முருகனை சந்திக்கவில்லை எனில் எங்களுக்கு "இ " எனும் பெயரில் ஆரமிக்கும் பேராசிரியையைப் பற்றித் தெரிந்திருக்காது; நாங்கள் தேடிப்போகும்போது  பெருமாள் முருகனும் வழியிலேயே வந்து எதிர்கொண்டார். பேராசிரியையைப் பார்த்திராவிட்டால் நாககிரிப் பண்டிதரிடம் அவ்வளவு ஓலைச் சுவடிகள் இருப்பதும் எங்களுக்குத் தெரிந்திராது; அவரைப் பற்றிய ஒரு குணச் சித்திரமும் எங்களுக்கு முன்னேயே கிடைத்து விட்டது; எனவேதான் அவரது மகனின் மிக  அலட்சியமான மறுத்தலையும் எங்களால் செவ்வனே  எதிர்கொள்ள முடிந்தது. எல்லாம் இறைவன்  காட்டிய வழி என மகிழ்ச்சி கொண்டோம்.
இறைவனை பார்க்கக் கோயிலுக்குச் செல்லுவதை  வழிபடுதல் என்று தானே கூறுகிறோம் ; அவரின்பால் செய்யும் ஆராதனையும் வழிபாடு என்றுதானே  கூறப்படுகிறது; பிறகு அவரையன்றி வேறு யார் வழி காட்ட முடியும்? எப்போதுமே ஓயாமல் ஏதோ ஒன்றிற்கு வழியைத் தேடித்தான் அலைந்து கொண்டிருக்கிறோம்.

 

இப்படித்தான் பாருங்கள், இன்னொரு சம்பவமும் நடைபெற்றது. 

 

நாமக்கல்லில் கணபதி நகர் என்ற பகுதியில்  மாதவன் என்ற ஒரு முகவரியைத் தேடிக்கொண்டிருந்தோம். பலரிடமும் எல்லா வழிமுறையிலும் விசாரித்தும் யாருக்கும் நாங்கள் தேடிய முகவரியைக் காட்ட முடியவில்லை .

வழியில் ஒரு TVS 50  வாகனத்தில் ஒருவர் வந்து கொண்டு இருந்தார். அவரை வழி மறித்து அவரிடமும் மாதவனைப் பற்றிக் கேட்டோம். அவருக்கும் உடனே தெரியவில்லை; கொஞ்ச நேரம் யோசிப்பது போல் பாவனைகாட்டி ”ஒருவேளை நீங்கள் தேடுவது சாமியாக இருக்குமோ?  இங்கே ஒரு சாமி இருக்கிறார், அவரைப் போய்ப் பாருங்கள்” என அருகில் இருந்த ஒரு தெருவைக் காட்டினார். உடனே நான் "உங்கள் பெயர் கணேசனா ? " என்றேன் ,"ஏன் அப்படிக்  கேட்கிறீர்கள்? என் பெயர் கணேசன்தான்" என்றார். "இல்லை; வழக்கமாக இந்த மாதிரி சந்தர் பங்களில்  ( situation )  ’அவர்’  வருவதுதான் வழக்கம் " என ஜோக் அடித்தபடி அவர் சொன்ன சாமியாரைத் தேடி  நடந்தோம் .

 

சாமியாரிடம் போய்ச் சேர்ந்தால், அவர் ஒரு சிறிய குடிலில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆனால் அவர் பெயர் மாதவன் இல்லை. அவர் தம்மை ஆதி மூலம் ஸ்வாமிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் வருபவர்களுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லி, மருளும் குழந்தைகளுக்கு மந்திரங்கள் செய்து தோஷங்கள் நிவர்த்தி செய்து வருவதாகக் கூறினார். சமுதாயத்தில்  இத்தகையோருக்கான இடம்தான் எப்போதும் உண்டே !  வேதாந்தங்கள், தத்துவங்கள் எனப் பேச்சு நீண்டதும், தம்மிடமும் ஞான சைதன்யம் எனும் ஓர்  ஓலைச் சுவடி இருப்பதைக் கூறினார். அதைப் பெருமையுடன் எங்களிடம் காட்டினார். இதைத்தானே நாங்கள் எதிர் பார்த்தோம். எங்களது அடுத்து வந்த பேச்சுகள்  தஞ்சைக்கு இந்த ஓலைச் சுவடிகள் கொடையாகக் கொடுக்கப்பட்டால் எப்படிச் சீராகப் பாதுகாக்கப்படும் என்பதைப் பற்றி நீண்டது . சாமியார்தான் எப்போதோ எங்கள் எண்ண அலையில் வந்து விட்டாரே! அவரும் மன மகிழ்ச்சியுடன் ஓலைச் சுவடிகளை எங்களுக்குத் தரச் சம்மதித்தார்.
இவ்வாறு  கணபதி நகரில் தேடிப் போன மாதவனைக் காண இயலா விட்டாலும், பட்டியலில்  இல்லாத ஒருவரிடம் இருந்து ஓர் அரிய சுவடியை அறிமுகமற்ற ஒருவரின் வழி காட்டுதலின் பேரில் பெற முடிந்தது.

இது ஏதோ தற்செயல், ஒரு முறை நடந்தது என எண்ணாதீர்கள்; அறிவியல் திரும்பத் திரும்ப அதே செயல் நடந்தால்தான் அதில் இருக்கும் உண்மையை ஆராய ஒப்புக்கொள்ளும். இதே மாதிரி அனுபவம்  எங்களுக்குப் பலமுறை ஏற்பட்டது. அவற்றை சமயம் வரும்போது   அவ்வப்போது  கூறுகிறேன் .

 

 

ஆதிமூல ஸ்வாமிகள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சமூக சேவகர்

 

 

ஒரு ஓலைச் சுவடியை அன்புடன் அளிக்கும் சுவாமிகள் – அவர் மனைவியும் படத்தில்

 

அடுத்ததாக  குருசாமிப் பாளையத்தில் ஒரு நாவிதரிடம் நிறைய வைத்தியச் சுவடிகள் இருப்பதாகப் பேராசிரியை சொன்னதாக நான் எழுதியதும், எனக்கு ஒருவித அச்சம் உண்டானது . இவ்வாறு எழுதியது யார் மனத்தையாவது புண்படுத்தியிருக்குமோ என்று.  உண்மையில் நான் ஒரு குலப் பெயர் கூறுவதால் தாழ்வு ஏற்பட்டுவிடும் என நினைக்கவில்லை;  அந்தப்  பேராசிரியை குறிப்பிட்டதை அப்படியே எழுதினேன்.

சொல்லப்போனால் நாவிதர் எனப்படும் குடிகள்தான் பண்டைய நாளில் அந்தந்த  ஊரின் மருத்துவத் தேவைகளைக் கவனித்துக் கொண்டவர்கள்; அறுவை சிகிச்சை செய்யவும் தெரிந்தவர்கள். இப்போது சிகை திருத்துவோராக மட்டுமே சுருங்கிப்போய் விட்டனர். இவர்கள் மருத்துவர் எனவும்  அழைக்கப்பட்டனர் .

 

வள்ளுவர் என்று அழைக்கப்படும் குடிகள் அந்த நாளைய ஜோதிட, வானியல்  நிபுணர்கள். நெல்லைப் பகுதியில் வண்ணார்கள் எனும் துணி வெளுப்போர் மந்திர தந்திரங்களில் சிறந்து விளங்கியதாகக் கூறப்படுகிறது. சிறிது சிறிதாக அந்தக் குடிகளில் வந்த அவர்களின் வாரிசுகள் வேறு வேலைகளை நாடிப் போய் விட்டனர்; ஆனால் அவர்களிடையே வளர்ந்த அந்த பாரம்பரிய அறிவு இன்னும் வாழும் மிகச் சில முதியவர்கள் மத்தியில்தான் இருக்கிறது. அவர்களும் மறைந்து விட்டால் தமிழர் தம் பாரம்பரிய அரிய கலைகளில் சில பிரிவுகள் அறியப்படாமலேயே மறைந்துவிடும். இத்தகைய குடிகளில் வந்த முதியவர்களிடம் சென்று இயன்றவரை அவர்களைப் பேசச் செய்து அவற்றைப் பதிவு செய்வதும் மரபு காக்கும் ஒரு செயலாகும். இத்தகைய முதியவர்கள் "வாழும் ஓலைச் சுவடிகள்".  கிடைக்கும் போதே அவற்றைப் பதிவு செய்ய வேண்டும்;  .அவர்களின் நம்பிக் கையைப் பெற்று அவர்களிடம் தொடர்ந்துவரும் பாரம்பரிய அறிவைச் சேகரிப்பது என்பதும் ஒரு மிக முக்கிய பணியாகும்;  தக்க ஆதரவு இருந்தால் இவற்றையும் செய்யலாம். 

 
நாங்கள் குருசாமிப் பாளையம் சென்றோம்.  முகவரியைத் தேடி அலைந்தோம்; முடிதிருத்தும் நிலையங்களிலும் கேட்டோம் . ஒருவரும் சரியான தகவல் தரத் தயாராக இல்லை; ஒருவாறு ஒரு வீட்டைக் காட்டினார்கள். அங்கே பாஸ்கரன் என்று ஒருவர் இருந்தார். அவருடைய தந்தை வசம் சுவடிகள் இருப்பதாக ஒருவாறு ஒப்புக் கொண் டார்; எங்களை வீட்டிலேயே காத்திருக்கச் சொல்லி விட்டு அவரது தந்தையைக் கூப்பிடச் சென்றார். சிறிது நேரத்தில் அவரது தந்தையும் வந்து விட்டார் (அவர் வெளியுலக அறிமுகத்தில் ஆர்வமற்றவர்; அவர் சுவடிகளை யாருக்கும் தர விரும்பாததால் தொல்லை தவிர்ப்பதற்காக அவரது பெயரை இங்கு வெளியிடவில்லை)  கண்ணியமான தோற்றம் கொண்ட அந்த முதியவர் எங்களிடம் கனிவாகவே பேசினார். சுவடிகள் அவரின் கடையில் இருப்பதாகக் கூறி, எங்களை அவரது சிகை திருத்தும் கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கே சுமார் இருபது கட்டுகள் (1000)   மருத்துவம், ஜோதிடம் பற்றிய மிக அரிய சுவடிகள் இருந்தன. அவற்றை ஆசையாகக் கையில் எடுத்துப் பார்த்தோம்;  அனைத்தும் முழு சித்தர் நூல்கள்.  அவற்றைக் கொடையாக பல்கலைக்குத் தருமாறு கேட்ட போது அவர்  “உணர்வு பூர்வமாக இவற்றைப்  பிரிந்தால் எனது உயிரும் போய்விடும்” என்றார். இத்தனை தூரம் சுவடிகளை மதித் துப் போற்றுபவரை நாங்கள் மீண்டும் வற்புறுத்த  விரும்பவில்லை.  அவர் அந்தச் சுவடிகளை உயிரைப் போல் கருதுவ தாகவும், தக்கபடி பாது காப்பதாகவும்  கூறினார்; மின்னாக்கம் செய்து கொள்ள மட்டும் அனுமதி வழங்கினார். அவரிடம் பலவாறு சித்த மருத்துவ முறைகளைப் பற்றிப் பேசி மகிழ்ந்து அங்கிருந்து புறப்பட்டோம் .

 

கட்டுகட்டாக சுவடிகள் -கடையின் கண்ணாடி தெரிகிறது பாருங்கள்

 

 

 

அத்தனையும் அரிய சித்தர் நூல்கள் 

 

 
அங்கிருந்து அடுத்த இடம் நோக்கிப் புறப்பட்டோம்.  சுவடியைப் படித் தால் மழை பெய்யும் என நம்பும் ஓர் ஊரையும்,  மழை வரவைக்கும் சுவடியையும், அதை வைத்திருப்பவரையும் பார்த்தோம்.
 
அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம் .
 

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

You may also like

Leave a Comment