12 – செங்கல்பட்டு

 

ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  !  ௧௨ – ( 12 )

களப்பணி   அறிக்கை

 

சிலநாள் ஓய்வுக்குப் பின் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  ஓலைச் சுவடி தேடுதலுக்காக நாங்கள் மூவரும்  22 / 02/ 10  அன்று செங்கல்பட்டில் ஒன்றாகக் கூடினோம்.  இந்த முறை காஞ்சிபுரம் மாவட்டத் தேடலுக் காக நாங்கள் தங்குவதற்குச் செங்கல்பட்டைத் தெரிவு செய்தோம்.

 

 

மாவட்டத்தின் நடுவே நான்குபுறமும் செல்வதற்கு வாகாக செங்கல் பட்டே அமைந்திருந்தது. காஞ்சிபுரம் நகரம் ஒரு ஓரமாக ஒதுங்கி  இருந்தது.  எப்போதும் ஒன்றுகூடியபின் நாங்கள் உடனே  தங்குவதற்கு  விடுதியைத்  தேடமாட்டோம் , உடனே எங்கள் சுவடி  தேடுதலைத் தான் ஆரமிப்போம் . இரவில் திரும்பிவந்து  அலைந்து திரிந்து ஏதாவது ஒரு விடுதியைத் தேர்ந்தெடுத்துத்  தங்குவோம்; இதனால் எங்களுக்கு ஒரு நாள் தங்கும் செலவு மிச்சமாகும்.  அவ்வாறே வழக்கம் போல் முதலில் ஒரு வாகனத்தை அமர்த்திக்கொண்டு எங்கள் தேடுதலைத் தொடங்கினோம். 

ஆயிரம் கோயில்களின் நகரம் என்று  வழங்கப்பெறும் காஞ்சிபுரம் அந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆகும் .இது ஒரு பாரம்பரியமான தலை நகரம்.  இது முந்தய சோழர் காலத்திலேயும் ,பல்லவர்கள் காலத்தி லேயும்  தலைநகராக விளங்கி "நகரேஷு காஞ்சி " (நகரென்றால் காஞ்சிதான்) என மாபெரும் கவிஞர் பாரவியால் புகழப்பெற்றது. மணி மேகலை, பெரும்பாணற்றுப்படை , பத்துப்பாட்டு இவற்றில் காஞ்சியின் பெருமை பலவாறு கூறப்பட்டுள்ளது. இந்நகர் பண்டைய நாளில் கல்வியின் முக்கிய இருப்பிடமாக விளங்கியது; எனவே மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் எங்கள் தேடுதல் துவங்கியது .

காஞ்சிபுரம் மாவட்டம் பத்து வட்டங்கள் அடங்கியது; எங்களது MNN முகவரிப்பட்டியல் படி அனைத்து வட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 133 முகவரிகள் இருந்தன.  நாங்கள் இவற்றை ஐந்து நாட்களில் முடிக்கத் திட்டமிட்டிருந்தோம்.

எங்கள் வாகனம் திருக்கழுகுன்றம் கடந்து  செல்ல ஆரம்பித்தது.

திருக்கழுகுன்றம் ஊரில் இரு முகவரிகள் இருந்தன. கடம்பாடி ,வீராபுரம் ,ஓரகடம் முதலிய பகுதியில் ஒவ்வொரு முகவரி. நாங்கள் முதலில் ஓரகடம்  சென்றுவிட்டுத் திரும்பிவரும்போது வழியில் இருப்பனவற்றைப் பார்த்துவரலாம் எனத் திட்டமிட்டோம் .

  • ஓரகடத்தில்
  • விஜயராகவன்.ஆர்
  • ஓரகடம்

என்று ஒரு முகவரி இருந்தது. நாங்களும் வழக்கம் போல் எங்கள் விசாரிப்பைத் தொடங்கினோம். ஓரகடம் ஓரளவு பெரிய ஊராகவே விளங்கியது.  எனவே நாங்கள் தேடுவதும் சிரமம் ஆயிற்று. விஜயராகவன். ஆர்  என்ற பெயரில் இருந்து அவரின் தொழிலை  ஊகிக்க முடியவில்லை. சில முகவரிகளில் பட்டர் ( வெண்ணையன்று), குருக்கள் ,ஜோதிடர், சாஸ்திரிகள் எனச் சில’ CLUE’ இருக்கும் .இதில் அப்படி ஏதும் இல்லை. நாங்களும் எதையும் அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை. அப்படியே விசாரித்துக் கொண்டு பிராமணர் தெருவுக்கு வந்தோம். அங்கும் யாருக்கும் இந்த விஜய ராகவன் யாரெனத் தெரியவில்லை. ஒரு முதியவர் மட்டும் எங்கள் முழுக்கதையையும் பொறுமையுடன்  முழுமையாகக் கேட்டு விட்டு "யார், பாஷ்யத்தைப் பார்க்கணுமா ?"  என்றார்; நாங்களும் ’ஆமாம் ஆமாம் அவரேதான்’ என்றோம். எங்க ளுக்கு ஏதாவது பிடிப்புக் கிடைக்காதா என்ற ஆவல். எது கிடைத் தாலும் பிடித்துக்கொள்வோம். அதில்  இருந்து பாதை போடமுடியுமா என்று பார்ப்போம்.

அந்த முதிய அந்தணர் ஒரு சிறிய ஓட்டு  வீட்டைக் காட்டினார்.

"சார் சார் " என்று அழைத்தபடி உள்ளே சென்றோம்; அங்கே ஒரு பெரியவர் தன்னந்தனியே ஒரு ஈசிச்சேரில் சாய்ந்திருந்தார்.

 

"ஐயா வணக்கம் "

"நமஸ்காரம்,   என்ன வேணும் ?"

"ஐயா உங்களிடம் ஓலைசுவடிகள் நிறைய இருப்பதாக தகவல் "

"ஆமாம், அதற்கு என்ன இப்போ ?"

"ஐயா, நாங்கள் தஞ்சைப் பல்கலையில் இருந்து வருகிறோம் ; உங்களிடம் இருக்கும் ஓலைச் சுவடிகளைப் பார்க்கவேண்டுமே  "

அவர் சற்று தூரத்தில் இருந்த ஓர் இரும்புப் பெட்டியை  டிரங்க் பெட்டி என்று சொல்லும் ஒரு ரகப்பெட்டியை  சுட்டிக்காட்டி அதை எடுங்கள் என்றார்; அதை எடுத்தோம் .

பார்த்தால்   அது முழுவதும் ஓலைச் சுவடிகள் !

நாங்கள் இத்தனைநாள் தேடியது மொத்தமாக ஒரே இடத்தில்.  அதை ஒன்று ஒன்றாக வெளியில் எடுக்க ஆரம்பித்தோம்; எங்களைச் சுற்றி ஓலைச் சுவடி, கடை பரப்பப்பட்டது. மெதுவாக ”ஐயா இவை அத்தனையும் பயன்பாட்டில் இருக்கிறதா ?  " என்று ஆரம்பித்தோம். அவரும் " ஆம், நான் படித்ததுதான் அனைத்தும், எப்போதாவது எடுத்துப் பார்ப்பேன் " என்றார்.  " தக்கபடி பாதுகாக்க வசதியாக இவற்றைத் தஞ்சைப் பல்கலைக் கழகத்துக்குக் கொடையாகத்  தாருங்களேன். நாங்கள் நல்லபடி உங்கள் பெயரிலேயே பாதுகாக்கிறோம் " என்றோம்.  " ஊஹும், அது எப்படி! நான் இவற்றை அவ்வப்போது பார்ப்பதுண்டு” என்றார்.  "ஐயா, இங்கிருந்தால் மேலும் மேலும் வீணாகும், நாங்கள் உங்கள் பெயரால் பாதுகாத்து வைக்கிறோம்” என்றோம்.

யாரையும் கட்டாயப்படுத்தியோ,  கட்டளையிட்டோ சுவடி களைப் பெற இயலாது; அது அவர்களது சொத்து. அவர்களை உணர வைத்து நயமாகத்தான் பெறவேண்டும்.  என்ன செய்வது! இவை அத்தனையும் எப்படிப் பெறுவது?  என்ற கவலை வந்தது. அப்போது அக்கவலையைத் தீர்க்கக் கடவுளே அனுப்பியமாதிரி அவரது மனைவி வேகமாக வீட்டினுள்  நுழைந்தார்.

எங்கோ ஊருக்குப் போகப் புறப்பட்டு பஸ்ஸுக்கு காத்திருந்தவரை
ஊர்ஜனங்கள் சிலர்  ’உங்கள் கணவரை யாரோ மூன்று பேர் தேடிக் கொண்டு உங்கள் வீட்டுக்குப் போகிறார்கள்’ என்றதும்  பார்த்து விட்டுப் போகலாமே என்று வீட்டுக்கு திரும்பிவிட்டார். நாங்கள் தான் வழியில் அத்தனைபேரை விசாரித்திருக்கிறோமே !  நாங்கள் விசாரித்ததில் யாரோ சிலர் அவரிடம் சொல்லிருக்கிறார்கள்.

வந்த அவர் மனைவி " நீங்கள்தான் நேற்று போன் செய்தீர்களா? " என்றார் ."இல்லையம்மா, நாங்கள் இப்போதுதான் வருகிறோம்"  என்றோம்.  " இல்லை, யாரோ பத்திரிகையில் இருந்து இவரிடம் பேச வருவதாக போன் செய்தார்கள்; காமரா எல்லாம் எடுத்துக்கொண்டு வந்ததும் நீங்கள்தான் என்று நினைத்தோம்  " என்றார்  அந்த அம்மா.

பிறகு நாங்கள் விபரமாக எங்கள் தேடுதல் பயணம் இவற்றைப் பற்றி கூறினோம்; அவரும் பரிவுடன் கேட்டார். பேச்சை கேட்ட அம்மா  உடனே "  உங்களுக்கு இந்த ஓலைச் சுவடிகள் தானே வேண்டும் எடுத்துக் கொள்ளுங்கள் " என்றார். 

 

அவரது கணவரால் ஒன்றும் பேச முடிய வில்லை;  அவரது மனைவியை முறைத்தார்.
ஆனால் அவர்கள் ஒருவர் போல் ஒருவர் கொண்ட அன்பு தெளிவாக வெளிப்பட்டது .மனைவி சொல்வதை அவர் தட்டவில்லை.  "இவர் ஆசைப்படுவார்; ஆனால் இனி அவரால் படிக்க முடியாது.வயதும்  ஆகிவிட்டது ,கண்ணும் சரிவரத் தெரியவில்லை. இனி இவரால் படிக்க முடியாது. நீங்கள் எடுத்துப் போய்ப் பாதுகாத்து வைத்திருங்கள் " என்றார் .அந்த அம்மா. அத்தோடு விட்டாரா  " இன்னும் ஏராளமான புத்தகங்கள் பரணில் தூங்குகிறது பாருங்கள் ! இனி  அவற்றையும் அவரால் படிக்க முடியாது; ஆசைப் படுகிறார் ,ஆனால் படிக்க முடிவதில்லை " என்று கூறிப் பரணைக் காண்பித்தார்.

நாங்களும் பரணில் ஏற முஸ்தீபுகள் செய்ய ஆரம்பித்தோம்.  பரணில் அடுக்கடுக்கான மூட்டைகள்; அவ்வளையும் கீழே இறக்கி னோம். மெதுவாகப் புத்தகங்களைப் பிரித்தெடுக்க ஆரம்பித்தோம்.  எங்களைச் சுற்றி புத்தகங்களும் ஓலைச் சுவடிகளும் குவிந்தன !

 

பெரியவரோ ஒன்றும் செய்ய இயலாது சோகமாக எங்களைப் பார்க்க ஆரம்பித்தார். அதற்குள் அம்மா உள்ளே சென்று மோர் எடுத்துவந்து குவளை குவளையாக வழங்க ஆரம்பித்தார். நாங்கள் பரணில் இருந்து புத்தகங்களையும் ஓலைச் சுவடிகளையும் எடுத்த மாதிரியே, அம்மாவும் அடுக்களையில் இருந்த பழங்கள், தின் பண்டங்களை எங்கள் முன் பரப்பினார்.

 

 

நாங்கள் பரப்பிய ஒவ்வொரு புத்தகத்தையும் அவர் எடுத்துத் தன் பக்கம் திரும்ப அடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு புத்தகத்தின் மேலும்  அவரது ஒரு இனிய நினைவு பொதிந்திருந்தது. அவர் அவற்றைக் கூற ஆரம்பித்தார் – "இது என்  பையன் வாங்கிக் கொடுத்தது; இதை வைத்து இந்தப் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினேன்"  என்று தம் நினைவுகளை விவரிக்க ஆரம்பித்து விட்டார்;  எங்களுக்கோ பாவமாகிவிட்டது. ஆனாலும் எதையும் விட மனமில்லை.

 

நாங்கள் அடுக்குவதும் அவர் திருப்பி எடுப்பதுமாக சிறிது நேரம் போனது; ஆனாலும் அவர் மனைவி சொல்லை அவர் தட்டவில்லை. அவரது மனைவிக்கும் அவர் கவலை புரிந்து விட்டது. அவர் முகம் வாடியதை அந்த அம்மா உணர்ந்து கொண்டார்கள்.

" சரி, அப்படியானால் ஒன்று செய்யுங்கள்; ஓலைச் சுவடி களை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள் ! புத்தகங்களைச் சிறிது காலம் கழித்து எடுத்துக் கொள்ளலாம்  " என்றார். பெரியவரும் புத்தகங்கள் கிடைத்ததும் சற்று அமைதியாகி விட்டார்;  எங்களுக்கோ ஓலைச் சுவடிகள் கிடைத்த சந்தோஷம் .

 

பெரியவர் புத்தகங்களிலேயே மீண்டும் ஆழ்ந்துவிட்டார் .  எங்களுக்கு அந்தப் பெரியவரின் வாட்டம் புரிந்தது.  வாழ்நாள் முழுவதும் அவர் படித்த புத்தகங்களை அவர் நண்பர்போல் கருதுகிறார்;  நண்பர்களைப் பிரிவது  போல் அவர் மனம் வருந்தினார்.  நாங்கள் ஒருவழியாக அவ்வளவு  ஓலைச்சுவடிக் கட்டுகளையும் ஒரு அட்டைப்பெட்டியில்  அடுக்கினோம். அவரிடம் இருந்த எழுத்தாணியையும் பெற்றுக் கொண்டோம்.

 

அவருக்கும் அவரது மனைவிக்கும் நன்றி கூறினோம்;  அவருக்கு நமஸ்காரம் செய்தேன்.  ஒருபுறம் மிக்க மகிழ்ச்சி, ஒருபுறம் இந்தப் பெரியவருக்குப் பிடிக்காத காரியத்தைச்  செய்கிறோமே என்ற வேதனை.

இருந்தாலும் முதல்நாளே ஒரு மிகப்பெரிய சுவடிப் புதையல் ஒன்று கிடைத்ததில் மனத்தில் மிக்க மகிழ்ச்சி; எல்லாம் இறைவன் செயல் என்று மன மகிழ்வுடன் விடுதியில் அறை போடும் போதே சுவடிப் பொதியுடன் சென்றோம்.  இறையரு ளால் அனேகமாக  வரும் நாட்களில் சில நாட்களைத் தவிர தினமும் ஓலைச் சுவடிகளைத்  தொடர்ந்து பெற ஆரம்பித்தோம்.

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *