01 Dec, 2010
36. எட்டயபுர மைய சாலை
எட்டயபுரத்தின் வரலாற்றை வாசித்து பின்னர் அரண்மனையையும் சுற்றிப் பார்த்து பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டு மீண்டும் இந்த ஊரையும் அதன் தற்போதைய நிலையையும் பார்க்கும் போது இப்போதைய எட்டயபுரத்தை விட முன்னர், அதாவது 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சிற்றூர் பிரசித்தி பெற்ற, பலரும் வந்து செல்லும் முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. கடந்த 50 ஆண்டுகளுக்குள் இந்த சிற்றூரின் நிலையில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பது உண்மை. கிராமத்தின் பசுமை குறையவில்லை; ஆனால் முக்கியத்துவம் குறைந்திருக்கின்றது.
பல விஷயங்கள் அப்படியே மாற்றமின்றி இருக்கின்றன. தற்கால நிலையை பிரதிபலிக்கும் மாற்றங்கள் இங்கு தெரியவில்லை. நகரம் முழுதுமே மிகவும் அமைதியாக, போக்குவரத்து குறைந்து மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகின்றது. சாலையின் பல இடங்களில் மனிதர்கள் சர்வ சாதாரணமாக அமர்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்தேன். நான் அங்கு இருந்த நாள் ஒரு செவ்வாய்கிழமை. ஒரு வேலை நாளை பிரதிபலிக்கும் சுறுசுறுப்பை உணர முடியவில்லை. எங்கே சென்றது இந்த நகரத்தின் செழிப்பு என்பது தான் ஒரு மாபெறும் புதிர்!
நகரத்தின் மைய சாலையில் தீஷிதர் இசை நினைவாலயத்திற்கு எதிர்புரத்தில் தான் அன்றைய புகழ்பெற்ற பாரதமாதா திரையரங்கு இருக்கின்றது. முன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் கூட இந்த அரங்கில் பாட்டு கச்சேரி நடத்தியுள்ளாராம். இந்த கட்டிடம் தற்போது புழக்கத்தில் இல்லை. வெறும் கட்டிடம் மாத்திரம் பூட்டப்பட்ட கதவுகளுடன் ஆள் நடவமாட்டம் இன்றி காட்சியளிக்கின்றது.
இந்தத் திரையரங்கு எத்தனை கலை நிகழ்வுகளைச் சந்தித்திருக்கும்? எத்தனை கலைஞர்கள் இங்கு வந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மக்களை மகிழ்ச்சி படுத்தியிருப்பர். சில தினங்களுக்கு முன்னர் நான் பதிப்பித்த அவ்வை டி.கே.ஷண்முகம் எழுதிய "காசி வள்ளல்" கட்டுரை கடந்த 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்னர் இச்சிற்றூரில் இருந்த கலை உணர்வு, எட்டயபுரத்தில் நிகழ்ந்த நாடகங்கள் பற்றிய தகவல்களை ஓரளவு வெளிப்படுத்துகின்றது. ஆனால் அந்த சிறப்பும் பிரமாண்டமும் இப்போது இங்கு காணப்படவில்லை.
இதே சாலையில் பஸ் நிறுத்தம் இருக்கும் இடத்தில் தான் அரசரின் விருந்தினர் மண்டபமும் இருக்கின்றது. முன்னரெல்லாம் இங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்குமாம். எட்டயபுரத்திற்கு யார் வந்தாலும் இந்த மண்டபத்தில் இலவசமாக தங்கியிருக்கவும் அவர்கள் இருக்கும் காலத்தில் அவர்களுக்கு இலவச உணவு ஏற்பாடுகள் இருந்ததாகவும் கூட கேள்விப்பட்டேன். அவ்வளவு சிறந்த விருந்தோம்பலை வழங்கிய இந்த மண்டபம் இப்போது வெரிச்சோடிப் போய் கிடக்கின்றது. கதவுகள் உடைந்து பாதைகள் புல் மண்டி, கட்டிடம் பாழ் பட்டு கிடக்கின்றது. வாசலில் ஆங்காங்கே சிலர் அங்கும் இங்கும் அமர்ந்திருந்தனர்.
எந்த வேலையும் இல்லாது அவசர உணர்வு என்பதே முகத்தில் இல்லாத ஒரு வித சோம்பல் நிலையில் இவர்கள் இருப்பதை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது.
இந்த ஊரில் தொழில் வாய்ப்புக்கள் குறைவு என்பதால் படித்து முடித்தவுடன் பலர் வெளியிடங்களுக்குச் சென்று விடுவதாகக் கேள்விப்பட்டேன். புதிய வேலை வாய்ப்புக்கள் அமையப் பெற்றால் இந்த ஊர் மீண்டும் அதன் பழைய சிறப்பையும் பொலிவையும் அடையக் கூடும். நல்ல பல புதிய தொழில் திட்டங்களை அரசாங்கம் மக்களை மனதில் கொண்டு இங்கு அமைத்துத் தரலாம். சிறு தொழில், உற்பத்தி தொழிற்சாலைகள் போன்றவற்றை உருவாக்கினால் மக்கள் இப்புதிய வேலை வாய்ப்புக்களினால் பலன் பெறலாம்.
இதே சாலையில் தான் கல்கி அவர்கள் முயற்சியில் உருவான பாரதி மண்டபமும் இருக்கின்றது. அந்த மதிய வேளையில், சாலையப் பார்த்துக் கோண்டே அந்த மண்டபத்தை நோக்கி நடந்தோம்.
தொடரும்…
அன்புடன்
சுபா