21 Jan 2011
40. இரண்டாம் நாள் பயணத்திட்டம்
நான் பார்த்து வரவேண்டிய இடங்களின் பட்டியலில் மேலும் ஒன்று கீரை மஸ்தான் சமாதி. இதனைப் பார்க்க மறுநாள் செல்வதாக முடிவானது. முதல் நாள் மாலையே திரு.கருணாகர பாண்டியன் மதுரைக்குத் திரும்பிவிட்டார். அவர் திரும்புவதற்கு முன்னர் அன்று மாலை எட்டயபுரத்தில் திருமதி.சாவித்ரியின் இல்லத்தின் முன் அமர்ந்து காபி அருந்திக்கொண்டே எட்டயபுரத்தையும் அதன் பழம் சிறப்பைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். வேப்ப மரத்தின் நிழலிலே பாரதியார் பிறந்த இல்லத்திற்கு அருகிலேயே பெருமாள் கோயில் சுவரைப் பார்த்த படி அமர்ந்து இவ்வாறு பேசிக் கொண்டிருப்பது இதமாக இருந்தது. சற்று நேரத்தில் என்னைப் பார்க்க திரு.இளசை மணியன் அவர்களும் வந்து சேர்ந்தார். அவர் வம்சமணி தீபிகை புதிய நூல் ஒன்றினை எனக்காகக் கொண்டு வந்திருந்தார். அவரோடு பற்பல விஷயங்களை நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம். அன்றைய பொழுது மிக இனிதாகக் கழிந்தது.
மறுநாள் காலை மூன்று இடங்களுக்குச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தேன். பெருமாள் கோயில், அதன் பின்னர் எட்டீஸ்வரன் கோயில், அதற்குப் பின் கீரை மஸ்தான் சமாதி. நான் அங்கிருந்த நேரம் மார்கழி மாதம் ஆகையால் அதிகாலையிலேயே சிறுவர்களும் சில இளைஞர்களுமாக ஒரு கூட்டம் ஒன்று கையில் விளக்கை ஏந்திக் கொண்டு திருப்பள்ளியெழுச்சி பாடிக் கொண்டு சென்றனர். இப்படிக் காண்பது எனக்கு இதுவே முதல் முறை என்பதால் வாசலில் நின்று அவர்கள் சாலையில் பாடிக் கொண்டே செல்வதைப் பார்த்து ரசித்தேன்.
கிருஷ்ணவேணி காலையிலேயே தயாராகி வாசலில் கோலம் போட்டு அதனை அலங்கரித்துக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பெண்கள் பெரிய அரிசி மாக்கோலங்களை போட்டுக் கொண்டிருந்தனர்.
இவற்றை பார்த்து ரசித்தவாரே காப்பியை அருந்தி விட்டு பின்னர் காலை உணவு சாப்பிட்ட பின்னர் அன்றைய பயணத்திட்டத்தை பற்றி கிருஷ்ணவேணியிடம் பகிர்ந்து கொண்டேன். அவர் பள்ளி தலைமை ஆசிரியை என்பதால் அவருக்கும் அலுவலகத்தில் பல வேலைகள் இருந்தன. அதனால் காலையில் நான் தனியாக பக்கத்திலுள்ள பெருமாள் கோயிலைப் பார்த்து வருவதாகச் சொல்லி புறப்பட்டேன். அவர் வேலைகளை முடித்ததும் நாங்கள் இருவருமாக சேர்ந்து எட்டீஸ்வரன் கோயிலுக்குச் சென்று அதன் பின்னர் கீரை மஸ்தான் சமாதியைப் பார்த்து வரலாம் என முடிவெடுத்தோம்.
தொடரும்
அன்புடன்
சுபா