37. பாரதி மணி மண்டபம்
எட்டயபுரமென்றாலே பாரதி என்னும் அளவிற்கு பாரதியை நினைவு படுத்தும் ஊர் எட்டயபுரம் என்றால் அது மிகையாகாது. ஆக, அந்த மாபெரும் கவிஞரின் நினைவுச் சின்னங்கள் சில இந்த ஊரில் இருப்பதில் சந்தேகமேயில்லை. இந்தத் தொடரின் ஆரம்பப் பகுதிகளில் பாரதி பிறந்த இல்லத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்தேன். இன்று இந்த பகுதியில் பாரதி மணிமண்டபம் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
எட்டயபுரத்தில் பாரதி நினைவாகப் பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுருக்கின்றன. பாரதியின் நினைவு நாளின் போதும் பிறந்த நாளின் போதும் பாரதி முற்போக்கு இளைஞர் சங்கம் போன்ற அமைப்புக்கள் ஊர்வலமாகச் சென்று பாரதி நினைவு இல்லத்தை அடைந்து அங்கு இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற நிகழ்வுகள் இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கின்றன. அதே போல எட்டயபுரத்தில் இயங்கும் ரகுநாதன் நூலகம் பாரதி ஆய்வு மையம் என்ற பெயரையும் இணைத்துக் கொண்டு தான் இயங்குகின்றது.
பாரதி மணி மண்டபம் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் முயற்சியால் 1945ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாரதி மணி மண்டப திறப்பு விழாவிற்கு மகாத்மா காந்தி அவர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார் என்பதும் ஒரு முக்கியச் செய்தி.
இந்த மணி மண்டபத்தைக் கட்ட கல்கி முயற்சித்தார் என்பதை திருமதி.சீதாலட்சுமி அவர்கள் தனது "நினைவலைகள்" தொடரில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
"கல்கி ஏன்? வெள்ளையனிடம் பயமா? சுதந்திரம் கிடைக்கும் முன்னர் தான் பாரதி மணி மண்டபம் கட்ட கல்கி பத்திரிகை மூலம் பணம் வசூலிக்கப்பட்டது. பயம் இருந்திருந்தால் விலாசத்துடன் நன்கொடை கொடுத்திருப்பார்களா? நிதி போதும் என்று அறிக்கை கொடுக்கும் வரை பணம் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். பயத்தை நீக்க ஒரு பத்திரிகை ஊன்றுகோலாக வரக் காத்திருந்தார்களா? பாரதி ரோசக்காரன். பிடிவாதக்காரன். சுதந்திரம் ஆகஸ்டில் கிடைத்தது. அதன் பின்னரே அக்டோபரில் மண்டபம் திறக்கப்பட்டது. சுதந்திரம் வரும் முன்னரே ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாடியவன். பாரதியின் நினைவு மண்டபம் விழாக்கோலம் காணும் பொழுதெல்லாம் அறிஞர்களும் அரசியல்வாதிகளும், இயல், இசை, நாடகப் பெருமக்களும் வந்தவண்னம் இருக்கின்றார்கள். "
மணி மண்டபத்தின் வெளித்தோற்றம் மிகச் சிறப்பாகவே அமைக்கபப்ட்டுள்ளது. வாசலில் உள்ள வளைவைக் கடந்து உள்ளே சென்றோம். வாசலிலேயே நம்மை வரவேற்பது மகாகவி பாரதியின் ஏழு அடி உயரச் சிலை. இந்த உருவச் சிலை 11-12-1999 அன்று பஞ்சாப் முதல்வர் தர்பார்சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதாக தமிழ் விக்கி பீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தால் கண்காட்சி மண்டபம் இருக்கின்றது. இங்கு காட்சிக்காக வைக்கபப்ட்டிருக்கும் படங்களில் பாரதியின் உறவினர்கள் மட்டுமன்றி அவருடன் பழகிய நண்பர்கள், அரசியல் வட்டார பிரமுகர்கள் படங்களும் உள்ளன.
முதல் வரிசை மேல்:
1.சோமசுந்தர பாரதி, 2.சத்தியமூர்த்தி, 3.குருசாமி முதலியார், 4.வேதநாயகம் பிள்ளை
இரண்டாம் வரிசை நடுவில்:
1.டாக்டர்.வரதராஜுலு நாயுடு, 2.வ.உ.சிதம்பரனார், 3. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
கீழ்வரிசை:
1.காமராஜரின் நெருங்கிய நண்பர் முத்துசாமி ஆசாரி, 2.மண்டையன் சீனிவாச ஐயர், 3,காமராஜர்
பாரதியின் கையெழுத்திலான அவரது பாடல்கள், கவிதைகள் பெரிதாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அதனைப் பார்த்த போது மனதில் ஒரு பிரமாண்ட உணர்வு எழுந்தது. அவரது கையெழுத்தில் அவரது பாடல்கள்; சில சொற்களை அவரே வெட்டித் திருத்தி அதன் மேல் எழுதியிருக்கின்றார். இவை பார்ப்பதற்கு பாரதியே நேராக இருப்பது போன்ற ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தியது.
இந்தக் கண்காட்சி மையத்தை மேலும் சிறப்புர அமைத்திடலாம். உதாரணமாக பாரதியின் பாடல்களையும் கவிதைகளையும் கேட்கும் ஒலிப்பதிவு பேழைகள், தொலைகாட்சிப் பெட்டியில் பாரதியின் அக்கால நிழ்வை காட்டும் சில குறும்படங்கள் காட்டப்படுதல், அவரது பத்திரிகை பிரதிகள், போன்றவற்றைக் காட்சிக்கு வைத்து இந்த மையத்தை வளப்படுத்தலாம். இந்த மண்டபம் ஊராட்சி மையத்தின் நிர்வாகத்தில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ஆக கால மாற்றத்திற்கேற்ப பாரதியின் தகவல்களை வழங்கும் கலைக்களஞ்சியக் கூடமாக இதனை அரசாங்கமே தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்தி மேம்படுத்தலாம்; மேம்படுத்த வேண்டும் என்பதே எனது அவா!
தொடரும்…
அன்புடன்
சுபா