23 Jan 2011
42. எட்டயபுரத்து வெங்கடாசலபதி கோயில்
எட்டபயபுரத்தில் பெருமாள் கோயில் கட்டப்பட்டது பற்றிய தகவல் வம்சமணிதீபிகை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மேற்படி ஜெகவீரராமவெங்கிடேசுரஎட்டப்பநாயக்கர் அய்யனவர்களால் 885ம் வருடம் எட்டயபுரத்தில் வெங்கிடாசலபதி கோயிற்கட்டிப் பிரதிஷ்டைசெய்து உத்ஸவாதிகளும் நடப்பி விக்கப்பட்டன. " (பக்கம் 38).
இந்த ஆலயத்தைக் கட்டிப் பிரதிஷ்டை செய்ததாகக் குறிப்பிடப்படுபவர் 27வது பட்டமாகிய ஜெகவீரராம வெங்கிடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யன். இங்கு 885 எனக் குறிப்பிடப்படுவது ஆங்கில ஆண்டு அல்ல. இது நூலில் கொல்லம் ஆண்டு என்று குறிப்பிடப்படுகின்றது. ஆக ஆங்கில வருஷம் 1705லிருந்து 1725வரை பட்டத்து ராஜாவாக திகழ்ந்த ஜெகவீரராம வெங்கிடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யனவர்களால் இந்தக் கோயில் இவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று கொள்ளலாம்.
இந்த பெருமாள் கோயில் அரண்மனைக்குச் சற்று தள்ளியே இருக்கின்றது. திருமதி.சாவித்ரியின் வீடு இருக்கின்ற, பாரதியாரின் பிறந்த இல்லம் இருக்கின்ற தெருவின் மதில் சுவர் இந்தக் கோயில் சுவர் தான்.
300 வருட பழமை வாய்ந்த இந்தக் கோயில் இன்னமும் பூஜையும் திருவிழாக்களும் நடைபெறும் முக்கிய ஆலயமாக இருந்து வருகின்றது. நான் இருந்த வேளையில் மார்கழி சிறப்பு பூஜை காலையிலேயே ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தது. அதோடு ஆலயத்தில் திருப்பணியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பெருமாள் கோயிலின் முழு பராமரிப்பும் எட்டயபுரத்து ஜமீன் குடும்பத்தாரின் பொருப்பிலேயே அமைந்திருந்தது. இந்தக் கோயிலில் திருவிழாக்கள் ஏற்படுத்தி விஷேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் கொண்டாடப்பட்டு வந்துள்ளன.
கோயில் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. தூண்களில் ஆங்காங்கே கலை சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தற்சமயம் பராமரிப்பு போதாமையால் சிற்பங்கள் சற்று பொலிவிழந்து காணப்படுகின்றன. முன்னர் தேர் திருவிழா, ஆலய திருவிழா போன்றவற்றிற்காக பயன் படுத்தப்ட்ட பெரிய பொம்மை வாகனங்கள், வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்றன. தூசி படிந்து இவை அழுக்கேறி காணப்படுகின்றன.
இக்கோயில் இன்னமும் நேர்த்தியாக கவனிக்கப்பட வேண்டும். கோயிலுக்கு வெளியே அதிலும் மதில் சுவறுக்குப் பக்கத்தில் குப்பை கொட்டிக் கிடக்கின்றது. பன்றிகள் குப்பைகளைக் கிளறி போடுவதாலும் தூய்மை பாதிக்கப்படுகின்றது. எட்டயபுரத்து மக்களே கூட ஆலய தூய்மையைப் பாதுகாப்பதற்கும் அதன் சுற்றுப் புறத்தின் தூய்மையை மேம்படுத்துவதற்கும் உதவலாம். உதவ முன்வர வேண்டும்!
தொடரும் ..
அன்புடன்
சுபா