29-Oct-2010
30. அரசவை தர்பார்
இங்கிலாந்து மகாராணியாரின் புதல்வர் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் 1875ம் ஆண்டில் இந்தியா வருகை தந்திருக்கின்றார். அப்பொழுது தமிழகத்துக்கு அவர் வந்திருந்ததன் தொடர்பான செய்திகள் வம்சமணி தீபிகை நூலில் குறிக்கப்பட்டுள்ளன.
இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள:
இங்கிலாந்திலிருந்து கப்பலில் புறப்பட்டு 1875ம் ஆண்டு பம்பாயில் நவம்பர் மாதம் 8ம் தேதி வந்திறங்கியிருக்கின்றார். பம்பாயில் சிறப்புக்களைப் பெற்றுக் கொண்டு சில நாட்கள் இருந்து பின்னர் அவர் கொழும்பு சென்றிருக்கின்றார். பின்னர் கொழும்பிலிருந்து கப்பல் பயணம் மேற்கொண்டு தூத்துக்குடிக்கு வந்திருக்கின்றார். அப்பொழுது இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் அவர்களைப் பார்ப்பதற்காக எட்டயபுர ஜமீந்தார் கடற்கரையோரம் துறைமுகத்தில் பந்தல் கட்டி சிறந்த ஏற்பாடுகளைச் செய்து வைத்து அவரைச் சந்தித்திருக்கின்றார். அது பற்றிய விபரம் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.
"கோவிற்பட்டியில் ஸ்டேஷனுக்குச் சமீபத்தில் அசிஸ்டாண்டு கலைக்கட்டர் சின்ன பரடுதுரையவர்கள் ஜெனரல் சார்ஜிடிப்டிக் கலைக்கட்டர் எச்சு. சுப்பராய அய்யரவர்கள் இவர்களுடைய ஏற்பாட்டுப்படிக்கு எட்டயபுரம் அரண்மனையிலிருந்த தங்கக்கலசம் 2 வைத்த பெரிய கூடாரம் அடிக்கப்பட்டிருந்தது ரயில் ஸ்டேசனில் பந்தல் போட்டு அநேகமான அலங்காரங்களுஞ் செய்யப்பட்டிருந்தது அவ்விடத்தில் பிரின்சாப்வேல்ஸ் அவர்களுக்கு மத்தியான போசனத்துக்குத் தீனி முதலானதுகளும் சன்னத்தஞ் செய்யப்பட்டிருந்தது." (பக்கம் 120)
இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் அவர்களை எட்டயபுரம் ஜமீந்தார் எவ்விதமான ஏற்பாடுகளுடன் சென்று கண்டார் என்பதையும் சுவை பட விளக்குகின்றது இந்த நூல்.
"எட்டயபுரம் ஜெகவீரராமகுமார எட்டப்பநாயக்கர் அய்யனவர்கள் அவர்களைப் பேட்டி செய்து கொள்ளுவதற்காக எப்போதும்வென்றான் மார்க்கமாக அவர்களுடைய விருதுகளையும் பரிவாரங்களையும் தூத்துக்குடிக்கனுப்பி அவர்களும் அவர்கள் சகோதரர் வெங்கடேசு எட்டுநாயக்கரவர்கள் சிறிய தகப்பனாராகிய குமார முத்துப் பாண்டியனவர்கள் குமாரர் செல்லச் சாமியென்ற வெங்கடேச எட்டுநாயக்கரவர்கள் இவர்களுடன் புறப்பட்டு கோயிற்பட்டிக்குப் போனதில் அவ்விடத்தில் மானேஜர் எச்சு.சுப்பராய அய்யரவர்களுடன் சந்தித்துக் கொண்டார்கள்.."
"அன்றிராத்திரி எட்டு மணிக்கு மேற்படி பிரின்சாப்வேல்ஸ் அவர்கள் பரிவாரங்களுடன் கொழும்பிலிருந்து கப்பலேறித் தூத்துக்குடி சமுத்திரத்தில் கப்பலிறங்குகிற துரைமுகத்திலிறங்கியிருந்தார்கள் அப்பொழுது அவர்களுடைய சந்தோஷத்துக்காக சமுத்திரக் கரையில் அநேகவிதங்களான வாண வேடிக்கைகளும் நடக்கப்பட்டன."
இது போன்ற மேலும் சில சந்திப்புக்களும் அச்சந்திப்புக்களுக்காக ஜமீந்தார் மேற்கொண்ட பயணங்களும் கூட வம்சமணி தீபிகை நூலில் விளக்கப்படுகின்றன.
பல நிகழ்ச்சிகள் இந்த எட்டயபுர அரண்மனியிலேயே கூட நடந்திருக்கின்றன. பல சந்திப்புக்களும் கூட அரண்மனை தர்பாரிலேயே நடந்திருக்கின்றன. அதிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நிகழ்வாக கொள்ள வேண்டியது மகாகவி பாரதியாருக்கு "பாரதி" என்று வழங்கப்பட்ட பட்டம் பற்றியது. இந்த அரண்மனையில் தர்பார் மண்டபத்தில் தான் அந்த இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்று பாரதி எனும் பட்டம் சபையில் வழங்கப்பட்டுள்ளது.
அரண்மனை தேர்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன் புறத்தில் வலது பக்கத்தில் இந்த தர்பார் மண்டபம் இருக்கின்றது.
இந்த மண்டபத்தின் ஒரு பகுதியில் சிம்மாசனம் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. இங்கு தான் ஜமீந்தார் அமர்ந்திருப்பாரம். ஏனையோர் இந்த விரிந்த அகலமான மண்டபத்தில் சூழ்ந்து அமர்ந்திருப்பார்களாம். கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் பல இங்கு நடந்திருக்கின்றன. சிம்மாசனம் மிகத் தரமான மரப்பலகை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தோரணங்கள் கிழிந்து, அழுக்கேறி தொங்குகின்றன. தூண்கள் இன்னமும் மிக ஸ்திரமாக நிற்கின்றன.
தற்போது தரைப் பகுதி முற்றிலும் சேதமடைந்து இருக்கின்றது. தரை ம்ண் நிறைந்து தூசி படர்ந்து காட்சியளிக்கின்றது.
கூரைப் பகுதியும் சிதைந்து தான் இருக்கின்றது.
இந்த தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கும் ஓவியங்கள் அனைத்தும் மூலிகை வர்ணங்களினால் தீட்டப்பட்டுள்ளன. அவை ஓரளவு இன்னமும் வடிவம் கெடாமலேயே இருக்கின்றன.
பாரதியாருக்குப் பாரதி எனும் பட்டம் கிடைக்கப்பட்ட இந்த தர்பார் மண்டபத்தில் நின்று பார்த்தலந்த நிகழ்வை ஓரளவு கற்பனையும் செய்து பார்த்தேன். திரு.கருணாகர பாண்டியனின் விளக்கம் இந்த கற்பனைக்கு நன்றாகவே உதவியது . பாரதியார் போன்றே உமறுப் புலவருக்கும் இதே தர்பாரில் எட்டயபுர மன்னரால் சிறப்புச் செய்யப்பட்டுள்ளது.
அன்புடன்
சுபா