Home HistoryEtayapuram 30. கோடங்கி நாயக்கர்கள்

30. கோடங்கி நாயக்கர்கள்

by Dr.K.Subashini
0 comment

21-Oct-2010

 

30. கோடங்கி நாயக்கர்கள்
 
கோடங்கிகள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்றும் குறி சொல்வதும் நல்ல நேரம் பார்த்து சொல்வதும் இவர்களில் சிலரது தொழிலாக இருக்கின்றது.  எட்டயபுர மன்னர்களின் குலதெய்வ வழிபாடு, சடங்குகள் பற்றி  Etaiyapuram Past and Present  இவ்வாறு கூறுகின்றது.
 
"Though they outwardly profess to be of the Vaishnava faith, their religion may be described as a kind of fetichism or demonism. Each family has its household deity or fetish which is instituted by the consecretion of some relics of departed relatives, more especially, of women who have performed sati; or of those who have led reputedly chaste and continent lives or have died virgins, to whom their first prayers and devotions are made, of divine dispensers of health, happiness, and prosperity.
 
They never consult a Brahmin for any purpose and are spiritually guided by Gurus of their own caste, styled Kodangki Nayakans, who have the reputation of being well versed in astrology and demonology. " (Page 6)
 
"Saka-Devi is the chief household goddess worshipped by the Kambalatars. She has no temples, and is represented by no form or image, but is worshipped in an enclosure fenced in by branches of the Elandai tree (Zizyphus Jujuba)" (Page 9)
 
ஜக்கம்மாள் என்றழைக்கப்படும் தெய்வமே எட்டயபுர அரச வம்சத்தினரின் குலதெய்வம். எட்டயபுர அரண்மனையின் வாசல் பகுதியில் வலது பக்கத்தில் ஒரு சிறிய ஆலயமும் இருக்கின்றது. இன்றளவும் இங்கு பூஜை தினமும் நடைபெற்று வருகின்றது.  அதோடு எட்டயபுர அரச வம்சத்தினர் முருக பக்தர்களாகவும் இருந்திருக்கின்றனர். கழுகுமலையில் சுப்ரமணிய சுவாமிக்குக் கோயில் கட்டியமை அக்கோயிலின் பராமரிப்புக்கு அரச வம்சத்தினரால் தொடர்ந்து அளிக்கப்பட்ட கொடைகள் போன்றவை இதற்குச் சான்று எனலாம். அதோடு அரண்மனை பூஜையறையில் முருக தெய்வத்தின் பல  படங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகின்றன.
 
எட்டயபுரத்தில் பாரதியார் இல்லத்திற்கு எதிரே இருக்கும் பெருமாள் கோயில் 28ம் பட்டமாகிய எட்டயபுர மன்னர் கண்கொடுத்த ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்ப நாயக்கர் அவர்களால் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த மன்னர் பெயரால் கடிகைமுத்து புலவர்  சமுத்திரவிலாசப்பிரபந்தம்,  காமரச மஞ்சரிப்பிரபந்தம் ஆகிய இரண்டு பிரபந்தங்களை இயற்றியிருக்கின்றார். அதனை வம்சமணி தீபிகை இப்படி கூறுகின்றது.
 
"மேற்படி பிரபுக்கள் பேரில் கடிகைமுத்துப் புலவரவர்களாற் சமுத்திரவிலாசப்பிரபந்தமும் காம ரச மஞ்சரிப் பிரபந்தமுஞ் செய்து சபையிற் பிரசங்கஞ்செய்யப்பட்டதை ஆதரடவுடன் கேட்டு மேல்படி பிரபுக்களாலே உயர்ந்த சம்மானங்கள் செய்யப்பட்டன. மேற்படி பிரபந்தம் இரண்டுகளில் சமுத்திரவிலாசப்பிரபந்தமானது சிலேடை யமகம் பாவ புஷ்டிமுதலான குணங்களால் தமிழ் பண்டிதர்களாலே பிரவுடப்பிரபந்தமாக ஒப்புக் கொள்ளப்பட்டு இச்சென்னைப் பிரதேசங்களில் இப்பவும்வழங்கிவருகின்றது…" (பக்கம் 38)
 
எட்டயபுர அரசர்களுக்குக் குருவாக இருந்தவர்கள் கோடங்கி நாயக்கர்கள் எனப்படுபவர்கள்.  இவர்களும் கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர்களே. சோதிடம், மாந்திரிகம் போன்ற கலைகளில் திறமை மிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்தக் கோடங்கி நாயக்கர்கள் முன்னிலையில் தான் திருமண வைபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திருமணம் மட்டுமல்ல, இறப்பு சடங்குகள், கிரியைகள் ஆகியற்றோடு ஒரு குருவின் அனைத்து கடமைகளையும்   நிறைவேற்றுபவர்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர். இவர்கள் அக்காலத்தில் அரச குடும்பத்தினரால் மிகவும் உயர்ந்த நிலையில் ஸ்தானத்தில் வைக்கப்பட்டு சிறப்பு மரியாதைகளுடன் போற்றப்பட்டுள்ளனர்.
 
முன்னர், கம்பள நாயக்கர்களின் துணைவியர் கணவரை இழக்க நேரிட்டால் சதி வழக்கத்தில் ஈடுபட்டு தம் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இவ்வகையில் உயிர் நீத்தவர்கள் இந்த வம்சத்தினரின் ஏனையோரால் குலதெய்வங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளனர்.  சதி வழக்கப்படி உயிரை மாய்த்துக் கொள்ளும் பெண்களை தேவதைகளாக வைத்து அவர்களுக்குக் கோயில் கட்டும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. இவ்வகை கோயில்களை "தீப்பாஞ்சான் கோயில்" என்று அழைக்கின்றனர்.
 
எட்டயபுர அரச வம்சத்தினரின் திருமணம் தனித்தன்மை வாய்ந்ததாக சித்தரிக்கப்படுகின்றது.  திருமண வைபவம் கோடங்கி நாயக்கர்களால் உறுதி செய்யப்பட்டு முறையாக இவர்களால் அறிவிக்கப்படுமாம். கிராமத்திற்கு வெளிப்புறத்தில் இரண்டு குடில்கள் அமைத்து அவற்றை அவரைக் கொடி, பொங்கு மரத்தின் கிளைகளால அழகு செய்வார்களாம்.  இந்தக் குடில்களில் மணமகளும் மணமகனும் இருக்க,  கோடங்கி வருகை புரிந்திருக்கும் விருந்தினர்களையும் உறவினர்களையும் உபசரித்து வரவேற்பாராம்.  உருமி மேளத்துடன் சீர்வரிசைகள் மணமகள் இல்லத்திற்கு கொண்டு வரப்படுமாம்.  பின்னர்  கோடங்கி மணமகனிடமிருந்து மஞ்சள் கயிற்றில் இணைக்கப்பட்ட தங்க பொட்டு ஒன்றை பெற்றுக் கொண்டு அதனை மணமகனின் சகோதரியிடம் கொடுக்க அந்தப் பொட்டு இணைத்த மஞ்சள் கயிற்றை மணமகனின் சகோதரி மணமகள் கழுத்தில் கட்டுவார்களாம். இந்த திருமண வைபவம் ஒரு வாரம் தொடர்ந்து விருந்துகள் மற்றும் உபசரிப்புகளோடு நடைபெறுவது என்பதும் தெரியவருகின்றது.
 
 
தொடரும்…
 
அன்புடன்
சுபா

You may also like

Leave a Comment