32. முடிசூட்டு விழா

01-Nov-2010

 

32. முடிசூட்டு விழா 
   

Etaiyapuram Past and Present  நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் பிஷப் கார்ட்வெல் (R. Caldwell, Bischop – Author of the History of Tinnevelly) 18th July 1889 என்று தேதியிடப்பட்ட  இம்முன்னுரையில் இந்த நூலினை முக்கிய சரித்திரச் சான்றாகத் தான் கருதுவதாகக் குறிப்பிடுகின்றார்.    அத்தோடு பாஞ்சாலங்குறிச்சி போரில் எட்டயபுர ஜமீன்தாரின் துணை உதவியதையும் இப்பகுதியில் இப்படி குறிப்பிடுகின்றார்.

"The services rendered by the immediate ancestors of the present Zamindar to the British Government and to the country in helping to quell the Panjalamcourchy rebellion, the most serious rebellion that ever took place in Tinnevelly, are especially worthy of notice and will be found  in detail in their proper places in the history."

இந்த நூல் 1890 ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளதால் அதுவரை ஆட்சி செய்த ஜமீந்தார்கள், அவர்கள் காலத்து வரலாற்றுக் குறிப்புக்கள் என்பதோடு முற்றுப் பெறுகின்றது.

வம்சமணி தீபிகை இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்நூலிலுள்ள குறிப்புக்கள் ஏறக்குறைய 1880ம் ஆண்டோடு முற்றுப் பெறுகின்றன. இந்த இரண்டு நூல்களோடு இளசை மணியனும் அவர் நண்பர்களும் இணைந்து வெளியிட்டிருக்கும் எட்டயபுர வரலாறு என்ற நூலும் மேலும் எட்டயபுரத்தைப் பற்றிய பல விளக்கங்களைக் கொண்டிருக்கும் ஒரு நூலாக அமைகின்றது.

வம்சமணி தீபிகையின் இறுதிப் பகுதி ஒரு முழு ராஜ்ஜிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வை விவரிப்பதாக அமைந்துள்ளது. முற்றுப் புள்ளியில்லாத அக்கால  தமிழ் நடையில் அமைந்துள்ள இரண்டு பக்க நீண்ட தொடர் செய்திகளைப் பிரித்து குறிப்பாக இங்கு பட்டியலிட்டிருக்கின்றேன். இப்பட்டியல் இந்த நிகழ்வை சற்று விளக்குவதாக அமையும்.

 

 • ஜெகவீரராமகுமார எட்டப்ப மகாராஜா அய்யனுக்கு 1878 வருடம் 21 வயது நிறைவடைந்தது.
 • இதனையொட்டி இவருக்கு 1878 ஆகஸ்டு மாதம் 1ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற்றது. அப்போது எட்டாயபுர சமஸ்தானத்தின் மேலாளராக இருந்தவர் எச்சு.சுப்பராய அய்யர்; திருநெல்வேலி ஜில்லா கலெக்டராக இருந்தவர் ஜே.பி.பென்னிங்க்டன். இவர்கள் இருவரும் இந்த முடிசூட்டு விழா மிகச் சிறப்பாக அமைய மிகவும் சிரத்தையெடுத்துக் கொண்டனர்.
 • இந்த நிகழ்வின் அழைப்பிதழ்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு ஆங்கிலேய அதிகாரிகள், பிரபுக்கள் என பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
 • ஆகஸ்ட் 1ம் தேதி காலை திருநெல்வேலி கோயிற்பட்டி ரயில் நிலையத்தில் பல ஐரோப்பிய பிரபுக்களும் உயர் அதிகாரிகளும் காலை 8 மணி அளவில் வந்திறங்கினர்.
 • இவர்கள் பல்லக்கு குதிரை வண்டிகளில் ஏற்றி வந்து எட்டயபுரத்திற்கு அருகாமையில் சிறப்பாக பூக்களாலும் வாழை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட குடில்களில் தங்க வைக்கப்பட்டனர்;  அங்கு களைப்பாறி உணவருந்தினர்.
 • இந்த நிகழ்ச்சிக்காகச் சிறப்பாக கலந்து கொள்ள வரவழைக்கப்பட்டிருந்த பல அறிஞர்களும், இசைக்கலைஞர்களும் இந்த நகரத்திலேயே வாழும் பிராம்மணர்களும் சிறப்பாக கவனிக்கப்பட்டு விருந்து உபசாரம் செய்து மகிழ்விக்கப்பட்டனர்.
 • பின்னர் எட்டயபுர அரண்மனை கல்யாண மகால் (தர்பார்) மண்டபத்தில் ஐரோப்பிய பிரபுக்கள், ஆங்கிலேய அதிகாரிகள், இந்த நிகழ்ச்சிக்காகச் சிறப்பாக கலந்து கொள்ள வரவழைக்கப்பட்டிருந்த்த பல அறிஞர்கள், இசைக்கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் அவரவர் அந்தஸ்துக்கு ஏற்றார் போல வரிசைப்படுத்தப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டர்கள்.
 • அந்த தர்பார் மண்டபத்தில் நடுவில் இருந்த தங்க சிம்மாசனத்தில் கலெக்டர் ஜே.பி.பென்னிங்கடன் அமர்ந்திருந்தார்.
 • அருகில் ஜெகவீரராமகுமார எட்டப்பமகாராஜா, அவர் சகோதரர்கள் வெங்கிடோவரபட்டப்ப பாண்டியன் முதலானோர்  அமர்ந்திருந்தனர். எட்டயபுர ஆஸ்தான பண்டிதர் கவிகேசரி சாமி தீஷிதர் ஜமீந்தாரை வாழ்த்தி ஆறு சமஸ்கிருத ஸ்லோகங்களைப் பாடினார். அதன் ஆங்கில விளக்கம் மொழி பெயர்க்கப்ட்டு வைக்கப்பட்டிருந்தது. அது வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது.
 • பின்னர் இசைக் கச்சேரி வாசிக்கப்பட்டது.
 • பின்னர் கலெக்டர் ஜே.பி.பென்னிங்கடன்  எட்டயபுர சமஸ்தான ராஜ்ஜியத்தை ஜெகவீரராமகுமார எட்டப்பமகாராஜா அய்யனுக்கு வழங்கும் ஒரு அறிக்கையை எடுத்து வாசித்தார்.
 • இதற்கு பின்னர் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கப்பட்டன.
 • அந்த சபையில் வீற்றிருந்த அனைவரும் மலர்களை எடுத்து தூவி மன்னராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகவீரராமகுமார எட்டப்பமகாராஜா அய்யனை வாழ்த்தினர்.
 • பின்னர் ஜெகவீரராமகுமார எட்டப்பமகாராஜா சபையோருக்கு வந்தனம் செய்து  கலெக்டர் ஜே.பி.பென்னிங்கடன்   இந்த நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு நன்றி கூறி பேசினார்.
 • இந்த நிகழ்வைக் காண பெரும் மக்கள் கூட்டம் வந்திருந்ததால் தர்பார் மண்டபம் நிறைந்து அருகில் இருக்கும் ஆஜார மண்டபத்திலும் மக்கள் குழுமியிருந்தனர்.
 • ஆஜார மண்டபத்தில் வருகை புரிந்தோர் பார்வைக்காக எட்டயபுர ஜமீனின் ஆயுதங்கள்.ஆபரணங்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.
 • அன்று மாலை 8 மணியிலிருந்து 11 மணி வரை எட்டயபுரத்தில் பட்டாசுகளும் வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நிகழ்ந்தன.
 • மறுநாள் காலை விருந்தினர்கள் அனைவரும் இல்லம் திரும்பினர்.
 • இரண்டாம் நாள், ஜெகவீரராமகுமார எட்டப்பமகாராஜா அய்யனவர்கள் தமக்கு வழங்கப்பட்ட எல்லா விருதுகளுடன் அரண்மனை சுந்தர விலாசமென்னும் கட்டிடத்தில் இருந்து அவரது உறவினர்கள், அரண்மனை ஊழியர்கள், இசைக் கலைஞர்கள், ஊர் மக்கள் என அனைவரும் வந்து சந்தித்து பேசிச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
 • ஜெகவீரராமகுமார எட்டப்பமகாராஜா அய்யனவர்களுக்கு இளம் வயதில் ஆங்கில ஆசிரியராக இருந்த  குப்புசாமி சாஸ்திரியவர்கள் சமஸ்தானத்தின் மேலாளராக நியமிக்கப்பட்டார்.
 • பின்னர் ஜெகவீரராமகுமார எட்டப்பமகாராஜா அய்யனவர்களின் உத்தரவின்படி யானை மேல் அம்பாரி வைத்து ஊர்வலம் செல்ல ஏற்பாடாகியிருந்தது. ஜெகவீரராமகுமார எட்டப்பமகாராஜா அய்யனவர்களின் இந்த ஊர்வலம் முடித்தவுடன்,  பிராமணர்கள் வழங்கிய ஆசீர்வாத அஷதைகளைப் பெற்றுக் கொண்டு அரண்மனைக்குள் பிரவேசித்தார்.
 • இப்படி சிறப்பாக இந்த முடிசூட்டு விழா நடந்திருக்கின்றது.

 

அன்புடன்
சுபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *