Home First Tamil Novel ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4

ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4

by Dr.K.Subashini
0 comment

 

 

 

 

கலகம் விளைத்துக் கைகொட்டித் தான்சிரிப்பாள்
அலகை போலாடி யமர்க்களஞ் செய்திடுவாள்
இதுவும் விதியென் றிருந்தா ரவதானி
மதிஇலாத் தாய்க்கும் வருந்திப் பயந்திருந்தார்.
கண்ணாளன் தந்தையவர் காலையொட்டித் தானிருப்பான்
எண்ணி யவரோடே யெப்போதுங் கூடிநிற்பான்
மனது கசந்தவரும் வண்மையுள்ள யாத்திரையில்
தனையனுடன் கூடத் தான்போய்த் திரியலுற்றார்
மலையாளம் நீலமலை மற்றுமுள்ள நாடுகளில்
நிலையான காட்சிகண்டு நெஞ்சாறித் தாம்வருவார்.
புவியிருந்த தூறதுபோல் பெண்டிருந்த பொய்மனையில்
சலியு முளத்தவரும் தங்கியே தானிருப்பார்.
சுகத்தின் வியாஜமிட்டுச் சூழ்ந்த கிராமங்களில்
வகையாகப் போயிருந்து மைந்தனுடன் மீண்டிடுவார்.
வந்தவர்க்கும் போனவர்க்கும் வாங்காமல் வித்தைசொல்லி
சிந்தை நோயுள்மறைத்துத் தேறிச் சிரித்திருப்பார்
மைந்தனைக் கண்டுமுகம் வாடாமற் றானிருப்பார்
மைந்தனு மாங்கவரை வாங்காமற் காத்திருப்பான்.
தந்தை பசித்திருக்கத் தன்பசி தான்தணியான்
தந்தை படித்திருக்கத் தான்மகிழ்ந்து கேட்டிருப்பான்
கவனங்கள் பாடக் கண்டு மகிழ்த்திருப்பான்
இவ னதைக்கூட விசையப் படித்திடுவான்
தந்தையரைக் கொண்டாடத் தான்மகிழ்ச்சி கொண்டிடுவான்
தந்தை யுரைதானுஞ் சத்திய மென்றிருப்பான்
கண்ணாளன் தன்முகத்தைக் கண்டவ தானியரும்
புண்ணான நெஞ்சீற லெண்ணாமற் றானிருந்தார்.
இவ்வா றிருக்க விராஜநகர் தன்னுளொரு
செவ்விதாஞ் சீவனமும் சேர்ந்துவரத் தானுணர்ந்து
பெற்றாள் மனைவிகளை பேர்த்துப் பிரித்துவைக்க
அற்ற மென்றெண்ணி யவதானி தான்முடுகித்
தாயைப் பதியில்விட்டுத் தனிமனைவி மக்களுடன்
போயப் பணிபொறுத்துப் புண்ணியரு நாட்கழித்தார்.
மீண்டுங் கருத்தரித்து வீணிமகள் தான்படுத்தாள்.

ஆண்டவ னின்னருளால் ஆண்மகன் தான்வளர்ந்தான்
சீராள னென்றேயந்தச் செல்வனுக்குப் பேருமிட்டார்.
நேரா யவன்வளர நெஞ்சங் களித்திருந்தார்.
என்ன பிறந்தாலும் ஏதுமதி சொன்னாலும்
அன்னவள் மூர்க்கம் அணுவுங் கரையவில்லை.
வேலைகள் செய்வோரை வேர்த்து வெடுவெடுத்தே
ஏலாத வேச்சேசி யில்லம் விடப்புரிவாள்
மூலைப் படுத்து முதுகுறட்டை தான்விடுவாள்
காலை மடக்காள் கணவனைக் கைநொடிப்பாள்
பால னழுதால் படுக்கென் றுதைத்திடுவாள்
கொல நமன்போல் குடிகொண்டு தானிருந்தாள்.
ஆதியூர் தன்னில் அமர்ந்தவொரு தாயவளும்
நீதி யறியாத நீசர்க் குதவிசெய்தே
இச்சகம் பாடுவோர்க்கு மேற்ற பொருள்வழங்கி
நிச்சலும் வேளைதப்பி நேரு மமுதருந்தி
தள்ளா துடம்புடனே தானாக வேலைசெய்தே
எள்ளியே யூர்நகைக்க விங்குமங்குந் தானோடி
பிள்ளை சிணுங்கான் பெரும்பணந் தானனுப்பக்
கொள்ளு மதனையெல்லாம் கோணற் செலவுசெய்து
சுடுகொள்ளி மண்டை சொறிந்து கொள்ளத் தேடினாற்போல்
கொடும்பாவி தன்னோடு கோடி சமர்விளைத்துத்
தனக்குஞ் சுகந்தேடாள் தம்மவர்க்கு மும்முரமாய்க்
கனக்க கொடுத்தாலும் கண்டோ மோ வென்றுரைப்பார்.

கொண்ட பேரெல்லாரு முண்டையிவள் சாகவென்பார்.
சண்டிக ளெல்லாம் தலைதடவிக் காசடிப்பார்.

ஊற்றை வாய்தேட வொருகர்ப்பூர வாயழிக்கும்
நேற்றி யீதென்றே நீசர் நொடித்திடுவார்.

இந்தப் படியா யிருந்தாளக் காந்தாரி
சிந்தை வருத்தித் திடன்கெட் டவதானி

ஈசன் செயலென் றிரங்கியே தானிருந்தார்
பேசுங்கலை யோதும் பெற்றி யவர்க்கிருந்தும்
ஆசை மனைவிமடம் ஆங்கவர் போக்கறியார்
அம்மைக் கறிவும் அவதானி சொல்லறியார்
நம்மைப் படைத்தவொரு தாதன் செயலிதன்றி
என்ற னியல்பதனில் ஏதோ பழுதிருக்கும்
நின்ற குறையால் நெருங்கிய கட்டமிது
பெற்றாள் மனைவிகளைப் பேசல் பிசகிதென்று
குற்றந் தனதாய்க் குறித்தவர் தானழுதார்.

அம்மையு மப்போ தழகான பேரனுக்குச்
செம்மையா யேழுந் திரும்பாச் சிறுவனுக்குக்
கண்ணா லந்தான்புரிந்து கண்களிக்கப் பார்க்கவென்று
பெண்ணை யமர்த்திப் பெருமுகூர்த்தந் தானுமிட்டே
உந்தன் மகனுக் குபநயனப் பந்தலிலே
கந்தனே கல்யாணம் கண்ணில்நான் காணவேண்டும்
பேராற் பெரிய பெருங்குடியில் பெண்ணமர்த்திச்
சீராக வேண்டுஞ் சிறப்பெல்லாஞ் செய்துவைத்தேன்
கல்யாண வேலை கருக்காய் நடத்திவைப்பேன்
எல்லா மறிவேன் எதிர்ஒன்றும் பேசாதே
ரூபா யிரண்டுநேர் ரொக்கங் கடன்வாங்கி
நீவா மகனே நில்லாது கல்யாணம்
என்னவே யோலை யெழுதிவிட்டாள் காந்தாரி
அன்னைக்கு மாறா யவதானி சொல்லறியார்
ஆதியூர் தன்னில் அவதானி நன்மகற்கு
வேத முறையால் விளங்கு முபநயனம்
ஆன விவாகம் அம்மை மனப்படிக்கே
மானமாய்ச் செய்து மனது கனிந்துவரும்
சென்னைக்கு மீண்டு திறமாகத் தானிருந்தார்
அன்னையு மாங்கே யகமகிழ்ந்து தானிருந்தாள்.
சின்னஞ் சிறுபேரன் சின்னாணிப் பெண்டாட்டி
தன்னை யகத்தழைத்துத் தக்கசீர் தானெடுத்து
வங்கானுந் தொங்கானும் மாட்டிக் கிளுகிளுத்துச்
சிங்கார மாகவம்மை சீராட்டித் தானிருந்தாள்.
இப்படி யாக விருக்கின்ற நாளையிலே
செப்ப முடையவந்தச் சென்னை நகரதனில்

க்ஷத்திரியச் சாதி கனத்தகுடிப் பிறந்தாள்
வித்தை யறிந்துகுண மேவும் புகழுடையாள்
அறிவுடை யார்மாட்டே யனுதினந் தான்பழகி
மறுவுடை யார்தம்மை மதித்து முகம் பாராத்
தேவதத்தை யென்னுந் திருநாமம் பூண்டவொரு
காவல் மனதுடைய கட்டழகி யாங்கவளும்
அவதானி தம்மை யறிய விரும்பினளாய்
கவலை யுடனனுப்பக் கண்டவரும் அண்டியவள்
மெய்யறிவு மீக்குணமும் மேலான நல்லுருவும்
அய்ய ருளமழிக்க யாங்கவரு மையலுற்றார்
தன்னுடைய மெய்ச்சரிதம் தாழ்குழலுங் கேட்டறியப்
பன்னி யுரைத்தாரே பாவலரும் பாங்காக.
மங்கையுந் தன்னுடைய மாசரிதம் பேசிநின்றாள்
பொங்கு புகழுடையான் போந்தபொருள் மேலுடையான்.

நரசிங்க ராஜூவெனு நாமத்தான் நாட்டவர்கள்
துரைசிங்க மென்றுபுகழ் சொல்லுந் திறமுடையான்
சிறந்த அவர்தமக்குச் சீமந்த புத்திரியான்
பிறந்து வளர்ந்துவந்தேன் பேரும்பிர திஷ்டையுடன்
கல்வி யறிந்தேன் கலைதெரி யுத்தமர்பால்
செல்வ மிகுந்திருந்தேன் சீலமுள்ள வையரிடம்
சாத்திரங் கற்றறிந்தேன் தப்பாத நல்வழியில்
ஏற்றமாய் நானிருந்தே னென்னை யவர்தாமும்
பருவ நிறைந்துவரப் பர்த்தாவைத் தான்றேடி
திருவ துவைசெய்து திருநாடு சென்றடைந்தார்.

தந்தைவைத்த மெய்த்தனத்தைத் தான்வாரி யென்கணவன்
சிந்திவிட்டுத் தாசிகளைத் தேடியே சீரழிந்தான்
சூதாடிக் கட்குடித்துத் தோற்றான் வெகுபணத்தை
வாதாடி யென்றன் வரிசைதனைக் குலைத்தான்
பூணு நகைகளெல்லாம் போக்கி யழிம்புசெய்தான்
கோணல் வழிநடந்துங் கூசாமற் றானிருந்தான்
தொத்தும் பிணியால் சொரூபங் குலைந்துகெட்டான்
பித்தனாய் நல்லறிவு போகித் திரியலுற்றான்
ஆங்கவனுக் கெட்டா தடக்கிச் சிறிதுதனம்

நான்கரு திவைத்து நலங்கெட்டுப் போகாமல்
கஞ்சி குடித்துவித்தை கற்றவர் நற்றுணையால்
நஞ்சுடைய நாள்களைய நான்கழிக்கப் பார்த்திருப்பேன்.

நெஞ்சின் மெலிவுபட நீள்கலைக ளாய்ந்திருப்பேன்
தஞ்ச மெனவீசன் தனியடியைப் போற்றிநிற்பேன்.

தனித்திருக்கு மென்னைத் தனமதங்கொள் வம்பர்சிலர்
மனத்தைக் கரைத்து வசப்படுத்தப் பார்க்கிறார்கள்
பெண்பழி பூணப் பெருமிதங் கொண்டவர்கள்
என்சிந்தை யோராமல் எண்ணமிட்டுக் கொண்டிருப்பார்.

இச்சகம் பாடிமெத்த வென்னைப் பசப்பவரும்
பிச்சரை மெள்ளமெள்ளப் ஧கூசிப் புறக்கணிப்பேன்
பதறி நடந்தவரைப் பாராமல் தூரவைக்கச்
சிதறு மனத்தார் தெருவிற் குலைக்கலுற்றார்
பேரூருங் கட்டிவிட்டிப் பெண்பாவங் கொண்டார்கள்
சாருநரகை விட்டுத் தாமீளார் சத்தியந்தான்.

தொப்பை பெருத்தவருந் துள்ளுக் கடாக்களுமாய்
எப்போது மென்னை விழுக்கவழி பார்த்திருப்பார்
நம்பு மனிதரென்னை நட்டாற்றில் கைவிடுத்தார்
கும்பலாய் வந்துபொருள் கொண்டுடன் போயொளித்தார்;
பந்துக்க ளெல்லாரம் பார்த்து நகைக்கலுற்றார்
வந்தது கொண்டு வசைசொல்லித் தாமிருந்தார்
நல்லதிக் கில்லையைய நல்கூர்ந்த வென்றவனுக்கும்
எல்லா மறிகடவுள் ஏற்றதுணை யென்றனுக்கும்

ஈதென் வரலாறென் றேங்கியவன் தான்முடித்தாள்
வேதியர் தான்கேட்டு வெம்பி மனந்தளர்ந்தார்.

தேற்றரவு சொல்லித் தெரிவை மனத்துயரை
யாற்றி யவதானி யன்பது காட்டிவந்தார்.

மறுவிலா நேசம் வளர்ந்த தவர்களுக்குள்

திறமான நேசம் தினமு முதிர்ந்துவர
வாரத் தொருக்கால் வனிதை யவள்வீட்டில்
பாரக் கலைகள் பரிந்து படிப்பதிலும்
வாடு மனது மகிழ்ச்சி யதுகூர
வேடிக்கை யாக வின்னாணஞ் சொல்வதிலும்
காரணன் றன்னைக் கருத்தில் நினைப்பதிலும்
பூரணன் பாதம் புகழ்ந்து துதிப்பதிலும்
காலங் கழித்துக் களித்தவர் தாமிருந்தார்.

வேலை புரிந்து விகிதமாய்த் தாமிருந்தார்.

ஒருத்தர் படிக்க வொருத்தர் செவிகொடுப்பார்
ஒருத்தர் உரைக்க வொருத்தர் எழுதிடுவார்!
அன்ன மிசைபாட அய்யர் களித்திடுவார்
பன்னி யவர்பேசப் பார்த்தவள் தான்மகிழ்வாள்.

கண்ணாளன் கூடக் கலந்து களித்திருப்பான்
கண்ணாளன் தாய்போலக் காரிகையுந் தானிருப்பாள்
பாலும் பழமும் பரிந்தவள் தான்கொடுப்பாள்
பாலனு மன்னையெனப் பாலித்துத் தானடைப்பான்.
அன்னை யரவணைப்பை யாங்கறியாப் பிள்ளையவன்
அன்னை யிவளாமென் றானந்தங் கொண்டிருந்தான்.
இப்படி யாக விருவருஞ் சிந்தையொத்துத்
துப்பான காரியங்கள் தோராமற் செய்துவந்தார்
அவதானி யப்போ தகத்தில் நினைக்கலுற்றார்
புவனம் படைத்தோன் புதுமை தனைவியப்பார்
ஆனதுக் காகாதும் ஆகாதுக் கானதையும்
தானு மிணைப்பானோ தற்பரன் நீதியீதோ
என்விதி நீசமென வெண்ணினே னிம்மடந்தை
தன்விதி போலும் தலத்திற் கிடையாது!
குடிகேடன் பித்தன் கொடிய பிணிகளுக்கே
இடமாக நின்றோனை யேற்ற கணவனெனப்
பாராட்டி யென்ன பலன்கண்டா ளிம்மாது
போராட்டங் கொள்ளு மொருபூதகி தன்னாலே
நான்பட்ட பாடனைத்துந் தான்பட்டாள் சீமாட்டி
கான்பட்ட தீயில் கவிபட்ட மானதுபொல்
என்றே யிரங்கியவ ரேங்கி மனம்மடிந்து
கன்றி வருந்தியந்தக் காரிகைக்குச் சோகமுற்றார்.

தன்னை யறியாமல் தானவளைக் காதலித்தார்
அன்னமு மவ்வாறே யையர்மே லாசைகொண்டாள்
ஒருவர் மனதை யொருவர்க்குச் சொல்லாராம்
இருவரு முள்ளே யெரியின்மெழு காவாராம்.

தேவதத்தை யப்போது சேரும் புலவர்களை
ஆவலாய் நாடும் அநந்தம் பிரபுக்களையும்
தன்வீ டணுகாமல் தாமகலத் தானிழைத்தாள்
பின்னொருவர் வாராமல் பெருங்காவல் போட்டுவைத்தாள்
அவதானி பேச்சில் அனவரதந் தான்மகிழ்வாள்
அவதானி பாட்டிலவள் ஆனந்தங் கொண்டிடுவாள்
தானுங் கவிபாடித் தையலவன் கைக்கொடுப்பாள்.
மானுங் கவிபாடி மைற்றவள் கைக்கொடுப்பான்.

உள்ளக் கருத்தை யொளித்தவர் தாமிருப்பார்
கள்ளக் கருத்ததனைக் கட்டியவர் மறைப்பார்
இரவெல்லாந் தூங்காம லேதேதோ பேசிநிற்பார்
பரிய உபசாரம் பண்ணியே வேறிருப்பார்.

ஈங்கிவ ரிவ்வா றிருக்குமந் நாளையிலே
தாங்காத காதல் தலைமுட்டத் தான்மயங்கி
வையத் திவளை மணந்தில மாமாகில்
உய்யவு மல்லோமென் றுணர்ந் தவதானியரும்
சமய மதுபார்த்துத் தையலுட னுரைப்பார்.

அமையும் புருஷனவ னாகாத பேயாகி
அற்றறிவுநீங்கி யலைகுவ னாமானால்
மற்றொரு வன்றன்னை மணப்பது நீதியாகும்.

மனுநீதி கோடா மறையுந் துணையிருக்கும்
இனியொன் றுரைப்பேனான் ஏந்திழையே நீகேளு.

அக்காலத் துள்ள அருமை யறிந்துமனு
தக்க விதியுரைத்தார் தாரணியில் அந்நெறியுள்
பிற்காலந் தன்னிற் பொருந்தாப் பகுதிகட்கு
மிக்க வுரையாலும் வேறு விதியாலும்

திருத்திச் சனங்களுற்ற சீர்மைக்குத் தக்கபடி
பொருத்திச் சிடுக்கறுத்தார் பின்புதித்த மாரிஷிகள்.

(நம்) பக்கமாய் நூலே பகராமற் போனாலும்
இக்காலத் துள்ளோர்க் கிசையவிதி யாக்கவேண்டும்.

ஈங்கிதுவு மல்லாமல் இன்னமொரு சன்னமுண்டு
பூங்கொடிநீ கேட்பையெனப் போற்றி யுரைக்கலுற்றார்.
ஈசன் படைத்த விருசாதி மக்களுக்குள்
நேசமு நெஞ்சு நிலைக்குங் குணங்களுந்தாம்
இருவருக்கு மொன்றா யிருப்பது வையகத்தில்
அருமை யதனாலே அவ்வா றமைந்தவர்கள்
கூடுவரே யாகில் வீடுவ தில்லென்றறிநீ
பாடுள தேயானாலும் பாவம் புரிந்தாலும்,
ஒன்றி யவரிருப்பார் ஊறுவரிற் றாமுடிவார்
நின்ற நமக்கும் நிலையிது நீயறிவாய்
இவ்வுரையைக் கேட்டே யிதமகிதஞ் சொல்லாமல்
நவ்வி விழியாளு நாணமுடன் தானிருந்தாள்.
ஐய ருளந்தனிலே யச்சமுற்றுத் தானகன்று
மெய் வளவுசேர்ந்து விதம்விதமா எண்ணமிட்டு
துக்க முற்றாள் நெஞ்சையின்னஞ் சோதித்தறியாமல்
நெக்குருகச் செய்தேனே நீசனா னென்றிரங்கி
இனியவளைப் பார்த்தா லிச்சை யடங்காது
பனிமொழியைப் பாராமற் பாவி யுயிர்தரியேன்.
ஆங்கவளுக் கென்மீதோ வாசையது தோற்றவில்லை
பூங்கொடிபாற் போகாமற் புண்பட்டு நானிருப்பேன்
என்றுறுதி செய்தே யெழுதிமொழி போகவிட்டார்
நின்றுறுதி செய்தவரும் நேயமொழி போகவிட்டார்.

மாதர சேயுன்றன் மனையின் வழிவாரேன்
ஆதரவு செய்வேன் அகன்றிருந்து நானுனக்கும்
உற்ற துணையாக வொண்டொடி நீயென்னைநினை
குற்ற முளதாகிற் கொள்ளாதே யுள்ளமதில்
குணங்கள் சிறந்தவல்லால் குற்றமிலை யுன்னிடத்தில்
இணங்கப் பிழைவிளைக்கு மீடழிந்த வென்மனந்தான்.

தூர விருந்தினிமேல் தோன்றுங் கருத்ததனைப்
போர வெழுதிமனம் பூரித்து நாமிருப்போம்

என்றவ தானியப்போ தெழுதிவிட்ட வேடுகண்டு
கன்றி மனம்பதைத்துக் காரிகையு மெய்பதறிப்
பாரா திருப்பதுண்டோ பாவலரே யும்மையுநான்
தீராத் துயரதனைத் தீர்ப்ப துமதுகடன்
கன்னெஞ்சைக் கொஞ்சங் கரையவிட வேண்டுமிப்போ
தென்னெஞ்சை நீர்திருடி யேங்க வைக்கலாகாது
மைற்றது கண்முன் வகுப்ப லெனவெழுதி
முத்திழை போகவிட்டாள் முன்னி யொருகடிதம்,

அதுகண் டவதானி யாங்கவள் பாலடைந்து
மதிகாண் கடல்போல் மனம்பொங்கி மேலெறியும்
உவகைப் பெருமலையில் உள்ளங் குளித்தமிழக்
கவலை யெறிந்தவரும் கண்டாரே காரிகையை.

காரிகை யப்போ கனக்க வுபசரித்துக்
கோரிய தென்னவென்று குண்டுமுகங் கோட்டிநின்றாள்.

இருவர் வரலாறும் ஏந்திழையே நீயறிவாய்
இருவர் மனமொன்றாய் இருப்பதுவும் நீயறிவாய்
இருவரைச் சேர்த்ததுவு மீசன்றா னென்றறிவாய்
இருவருயிரு மிப்போ தேகமென நீயறிவாய்
இருவருந்தா மணத்தல் ஏதமிலை யென்றறிவாய்
மருவியே வாழ்வோம் வனமயிலே யென்றுரைத்தார்.

காந்தருவந் தன்னில் கனிய மணந்திடுவோம்
மாந்தரது பேச்சை மனதில்வைக்க நீதியில்லை
ஈச னறிய விணைந்தினி நாமிருப்போம்
கூசாமல் நெஞ்சறியக் கூடியிருப் போமென்றார்.

ஆசை மொழிகேட்டே யன்னமவ ளுரைப்பாள்
பூசை யுமக்குப்புரியா திருக்கறியேன்
உம்பாதம் போற்றி யுமக்குநான் தொண்டுசெய்து
நம்பு மனையாளாய் நாயகரே நானிருப்பேன்
கோண லுரைபகரேன் கும்பிட் டெழுந்திருப்பேன்
வீணியென் றெண்ணாமல் வேண்டும் பணிபுரிவேன்
நல்லுயிர் நீராக நானும்மைக் காத்தளிப்பேன்

சொல் கலையாயத் துணைவியாய் நானிருப்பேன்
உங்கள் குழந்தைகளை யோம்பியே நான்வளர்ப்பேன்
திங்களு ரோகிணிபோற் சேர்ந்து மகிழ்ந்திருப்போம்.

கண்ணாள னென்றனுக்குக் கண்மனணியாங் காதலரே
கண்ணாளன் நான்பயந்த காதற் குழந்தைகாணும்
ஆதி பதத்தாணை ஐம்பூதந் தம்மாணை
நாதன் பதத்தாணை நல்லவர் தம்மாணை
உன்றன் பதத்தாணை யோர்பகவன் தன்னாணை.
நின்றே னருளுமென நேரிழையுந் தானுரைத்தாள்.

“ஞான குருந/ணரே நற்றந்தை தாயருநீர்
மான மதுகாக்கு மாபதியும் நீராவீர்
என்னுடைய பங்கினுக்கு மீசனார் நீராவீர்
இன்ன முரைப்பதென வென்றனை யாளுமென்றாள்”

“உலகம் பழித்தாலும் உற்றார் துறந்தாலும்
கலகம் விளைந்தாலும் கண்டோ ர் நகைத்தாலும்
உமக்கடிமை தன்னை யொருநாளு நாள்மறவேன்
உமக்குரிய சொத்தை யுகந்தருள வேண்டுமென்றாள்”
அவ்வார்த்தை கேட்டே யவதானி மேலுரைப்பார்
செவ்வாய்ப் பசுங்கிளியே சேர்த்தவ னீசனன்றோ!

நீயெங் கிருந்தாய் நிலத்தெங்கே நானிருந்தேன்
மாய னறியாமல் வைத்த துரும்பசையா
காந்த மிரும்பிழுக்குங் கார்கடலைக் கோளிழுக்கும்
நேர்ந்த நமதுமன நின்றொன்றை யொன்றிழுக்கும்
ஆவி கலந்திருக்கும் யாக்கை பிரிந்திருக்கும்
பாவங் கனிந்திருக்கும் பற்றடி நாம்பற்றுவது;
கள்ளந் தவிர்ந்திருக்குங் காதலடி நங்காதல்
உள்ளங் கலந்த வுருக்கமடி நம்முருக்கம்.
உன்மகிழ்ச்சி யென்மகிழ்ச்சி யுன்றுயர மென்றுயரம்
உன்மனது மென்மனது மொன்றடியோ வின்றுமுதல்.

கூடு பிரிந்தாலும் கூட்டுப் பிரியாது
பாடுங் குயிலே பரமனிரு தாளாணை
உன்னைப் பிரிவதிலை யுன்னாணை என்றுரைத்தவ்

வன்ன நடையாளை யழகு கரம்பிடித்தார்.

காந்தருவந் தன்னில் கலியாணந் தாம்புரிந்து
காந்தனுடன் கூடியந்தக் கல்யாணி தான்களித்தாள்.
அவதானி யப்போ தகமகிழ்ச்சி கொண்டிருந்தார்.

புவியிலே தம்போலப் பூத்தவர்க ளில்லையென்றும்
சதிபதிகள் தம்போலத் தாம்சமைந்த தில்லையென்றும்
இதுபுதுமை யென்றவ் விருவர் சுகித்திருந்தார்.

இருங்கலைக ளாய்வார்கள் ஈசனடி பூசைசெய்வார்
மருமலர்ப் பூங்காவில் வளைந்துலவித் தாம்வருவார்
சரசவுரை யாடியவர் சாதுரியங் காட்டிநிற்பார்.

வரிசை யிசைபாடி மனமகிழ்ந்து வீற்றிருப்பார்
கதைகள் பலசொல்லிக் கனிவாகத் தாமிருப்பார்
இதயங் குளிர விருவரு நாட்கழித்தார்.
கண்ணாள னந்தநல்ல காதற் துணைக்குமொரு
கண்ணாய் வளர்ந்து கலைகள் பயின்றுவந்தான்.

இத்திறங் கூடி யிருக்குமந்த நாளையிலே
பித்த வெடியால் பிளந்தகுதி காலதனில்
முள்ளொன்று தைத்து முனையொடிந்து சீழ்ப்பிடித்தே
அவதானி யப்போ தாதியூர் போயடைந்தார்
கவலை மனத்தோடு காரிகையும் பின்தொடர்ந்தாள்
ஆங்கவளைக் கண்ட அழிநாக் கிழிசனங்கள்
பாங்கறியா நீசர் பழிசொல்லும் பட்டிமக்கள்
ஐயர்க் கவதியிந்த அம்மையால் வந்ததென்று
பையச் சரடுவிட்டுப் பக்கம் பழித்திருந்தார்
காந்தாரி பக்கல் கலகம் விளைத்துவிட்டார்
ஆங்காரக் கொள்ளிதனை யாங்கெழுப்பித் தூபமிட்டார்.

ஆகா வழியு மவள்மகள் மூத்தவளும்
சாகசஞ் சற்பனைகள் தாமிழைக்குந் தீம்பர்களும்
கலகமே கல்யாண மாய்த்திரியுங் காதகரும்
பலவருமாய்க் கூடிப் பகடிபண்ணிக் கேலிசெய்தார்.

தேவதத்தை யொன்றுந் தெரியாமல்தான் திகைத்தாள்

தேவதத்தை நெஞ்சில் திகில்விழுந்து நொந்தலைந்தாள்.

காலக் கேடென்றே கதைகதைத்து நெஞ்சழன்று
கோலக் கண்ணூற்றாகக் கொட்டிப் பதைத்தழுவாள்.

ஆங்கவள் தன்னை யவதானி கிட்டழைத்துப்
பூங்கொடியே யென்னைவிட்டுப் போகநீ வேண்டுமிப்போ
இக்கால மிங்கே யிருப்பதி லுன்மானம்
தக்காது துட்டர் சலியார் அலர்தூற்ற
முன்னம் நீபோனால் முடிகிப்பின் நான்வருவேன்
இன்னஞ் சிலனாளி லென்பிணி தீர்ந்தகலத்
துட்டர்கள் நாவின் துடுக்கடக்கி நான்வருவேன்
கட்டங்கள் நீங்கிக் கவலையற்று நான்வருவேன்
போய்வருவா யென்றவரும் புத்திசொலித் தான்விடுத்தார்
நாயகியு மப்போது நற்சீவன் போய்நடந்தாள்.

நல்லவள் போனபின்பு நாயகன் பட்டதுன்பம்
சொல்லி முடியாது சூழுமனந் தாளாது
அல்ல லெழுதுதற்கும் ஆனமொழி வாய்க்காது
கல்லா மனதுங் கரைந்து துடித்திடுமே.

காலிலுதித்த ரணங் காணாப் புரையோடி
மேலே புடைத்தெழுந்து வேதனைதான் விளைக்க
அடிவயிற்றுட் கட்டியொன்று மாழ்ந்துள்ளே தான்படர்ந்து
கடுமை யுடனே கனத்துப் பருத்தெழும்பி
மாங்காயாய்த் தேங்காயாய் மாபடுவன் தான்வளர்ந்து
தாங்க வசமின்றித் தவித்தா ரவதானி.

படுத்த படுக்கையிலே பாவலருந் தாம்பதைத்தார்
அடுத்த வுறவினர்கள் அங்கைகொட்டித் தாம்நகைத்தார்.

ஆங்காலந் தன்னில் அடுத்தன்பு காட்டினபேர்
சாங்கலங் கண்டு தயவாய்ப் புறங்கழிந்தார்
காசுள்ள போது கனியவுற வாடினபேர்

மோச மறிந்து முகமறைந்து போயொழிந்தார்
பத்து பத்தாகப் பற்கெஞ்சிக் கொண்டவர்கள்
தத்தது கண்டு சதிராகத் தாம்மறைந்தார்.
செத்தக்கால் அய்யரவர் தேட்டமதைத் தாமடைய
ஒற்றர் தமைவிடுத்தே யற்றமது பார்த்திருந்தார்.

கொள்ளிவாய்ப் பெண்டுங் கொழுந னெதிரணுகித்
துள்ளி விழுந்தாயே தொட்டுப் புண்கொண்டாயே
என்வதை வீணோ விடித்தது பாருடனே
பெண்வதை வீண்போமோ பின்னே தொடராதோ?
என்றவ ளேசியுட னெட்டவே போய்மறைந்தாள்
கன்றுங் கணவன்றனைக் காறி யுமிழ்ந்திருந்தாள்
நமையுங் கணவனிடம் நாடி யவள்வாராள்
குமையு மவனைக் குறித்தொன்று தான்புரியாள்
ஐயோ வெனவிரக்க மங்கனை தானறியாள்
நையும் புருஷனுக்கு நாவரள நீருதவாள்.
தாயான காந்தாரி தானு மனங்கசந்து
தீயருரை கேட்டுச் சித்தங் கலங்கிவெந்து
வந்தாரோ டெல்லாம் மகன்கெட்டா னென்றுரைப்பாள்
வந்தாரோ டெல்லாம் மகன்பிழையா னென்றழுவாள்.

ஊரிரண் டானாலும் கூத்தாடிக் குண்டுநலம்
பேரது கெட்டால் பெருமையிலார் தாம்மகிழ்வார்.

கைக்கூலி வாங்கிக் கணிகைக் கழுதுபடும்
மிக்கவ ரெல்லாம் விரும்பி மனங்களித்துப்
புவனத்தில் நல்ல புனிதரெனப் பேரெடுத்த
அவதானி கூட அகப்பட்டார் நம்வலையில்
இனியென்ன வெட்கம் இலைமறைவு காய்மறைவு
பனிபோலப் போச்சே பயமென்று கைநொடிப்பார்.

அரைக்காசு செல்லா வழுகப் பயல்களெல்லாம்
சிரித்துப் புறம்பழித்துச் சீக்கொட்டித் தூறுரைப்பார்.

சீலர்தாமென்றிருக்குஞ் சீமான்க ளீங்கிவர்தாம்
பாலரோ வென்று பகடிகள் பண்ணிநிற்பார்

ஓராம லிவ்வா றுரைப்பவர் தாமொழிய
நேரா யவர்தந் நிலையறி மாந்தரில்லை
தோஷங்கள் சொன்னாலுந் துன்பத் துதவுபவர்
வேஷங்கள் அல்லாமல் மெய்யா யொருவரில்லை.

வரயோக சித்தியென்பார் வண்மையுட னவர்க்கும்
அருமை மதியுரைத்தே யாறுதல் சொல்லிவந்தார்.

சுமதிப் பெயருடைய தோழ ரகலாமல்
சமயத் துதவிசெய்து தற்காத்துத் தாமிருந்தார்.

ஊரெங்குங் கூடி யொருவாய்ப் படப்பிழையான்
பாருங்க ளென்று பலவாகப் பேசிவரத்
தள்ளாத வன்஡ன தவித்தழுது மெய்குலைந்தாள்
உள்ள பேரெல்லா மொதுங்கியே பார்த்திருந்தார்.

மாமியார் மூத்த மகளுமவ ளன்பனோடு
ஆமிவன் செத்தால் அகன்றிருக்க லாகாது
பங்காளி யுண்டு பலத்த சம்பந்தியுண்டு
மங்குங் கிழவி மகளுக்குத் தாயாதி
காலத்தை நோக்கியேநாம் கட்டி யிருப்போமென்று
சீலைப்பேன் போலவவர் தின்றழித்து நின்றார்கள்
காந்தாரி தன்னையவர் கண்ணெரிய வைத்தார்கள்
தாந்தாங்கள் கூடிவெகு கற்பனைகள் செய்தார்கள்.

அள்ளும் பிணியா லவதானி தான்பதைக்க
கொள்ளிவாய் நீலியுந்தன் கூட்டத் துடன்கூடி
போளிக ளாமவடை பொன்வறுவல் பச்சடிகள்
பாளிதந் தேங்குழலும் பண்ணிப் புசித்திருப்பாள்
ஐயோவென் றய்யர் அலறுங் குரல்கேட்டுப்
பொய்யோநீ போவதென்று பூவை புடுபுடுப்பாள்.
தாயாதித் தம்பியான தான்றோன்றி தானறிந்து
நேயமாய் வந்து நிலைகண் டழுதிரங்கிக்
கைவாசி யென்னுங் கனத்த வயித்தியரை
மெய்வாசி செய்ய விதித்தவர் தாம்நடந்தார்.

ஆங்கவ் வயித்தியரை யவதானி கிட்டழைத்துத்
தாங்கமுடியாமற் றவிக்கிற வென்னுயிரைப்
போக்கி யருளும்வகை புண்ணியரே செய்யுமென்றார்.
நோக்கி யிரங்கியந்த நுண்மை மதியுடையார்
ஓற்றடங்கள் தாம்போட்டே யுற்ற மருந்தளித்துக்
கற்றதொரு வித்தையெல்லாம் காட்டியேபார்த்துவந்தார்.

பத்தியம் போடுதற்கும் பக்கத் துணையேது!
திக்கற்று நிற்கையிலே சின்ன மதியுடையான்
கீழறுப்பா னென்னுங் கிளரும் பெயருடையான்
ஆழமதியா லளந்து நினைக்க லுற்றான்
இவனுக்குப் பாடுபட்டால் இருவழியில் நன்மையுண்டு
புவனத்தில் பேரடைவோம் போங்கால முற்றானேல்,
பிழைப்பானே யாமாகில் பின்பயன் பெற்றிடலாம்
இழப்பொன்று மில்லையென வேற்றுப் பணிபுரிந்தான்
செய்யாத வேலைகளையெல்லாஞ் செய்தவன் காத்திருந்தான்
மெய்யான நற்றூக்கம் விட்டவன் காத்துவந்தான்.

கொடும்படுவ னுள்ளே கோப்பளித்துத் தான்பழுக்கக்
கடுங்குத்தல் கண்டு கலங்கினா ராரியரும்
இசுசன்னி கண்டவரும் இம்சைகள் தான்படுவார்
விசைசன்னி தானலைக்க மேலெழும்பித் தான்விழுவார்.

துள்ளிசுவு கொண்டே துணுக்குற்றுத் தான்பதைப்பார்
தள்ளி யுயிர்போகுஞ் சமயமெப்போ தென்றழுவார்
தாயே தயாபரனே தற்பரனே மெய்ப்பொருளே!
நீயிரங்கிக் கொண்டிடுவாய் நின்சரண மென்றழுவார்.

தேவ தத்தைக்காகத் தெளிவழிந்து தேம்பிநிற்பார்
பாவ மவள்மானம் பதறித்தேனே பாவியென்பார்.

நெட்டுயிர்ப் போடே நினைத்தவர் தானழுவார்
விட்டுப் பிராணன் ஒழிவாளே மெல்லியென்பார்
ஆவி பதைக்க வழுதவர் தாமிருந்தார்
பூவை நினைவால் புழுங்கி யவரிருந்தார்.

கட்டியைக் குத்திவிட்டார் கைவாசி யப்போது
மட்டிலாச் சீழும் வடிந்தது தாரைகொண்டு
வேளைக் கரைநாழி வெள்ளைச்சீழ் துள்ளிவர
நாளுக்கு நாட்குறைய நல்லநமன் சீட்டழித்துத்
தேறி யெழுந்திருந்தார் தீர ரவதானி
தூறின பேர்கள் துணுக்குற்றுத் தாம்வருந்த
பழிசொன்ன பேர்கள்முகம் பாராமற் போயொளித்தார்
.இழிவாஞ் சனங்களெல்லாம் இச்சகம் பாடிநின்றார்
கொள்ளிவாய்ப் பெண்டவளுங் கூசாமல் முன்புவந்து
துள்ளிவிழுந்த சுகம் போதுமோ சொல்லுமென்றாள்
சடகோபம் வைத்தாளே தையலினி யாங்கவளை
விடவெண்ணந் தானுமுண்டோ வேதியரே சொல்லுமென்றாள்.

காந்தாரி யப்போ கதுமெனத் தானணுகி
தான்றோன்றி யாதியாகச் சகலருந் தாமறிவார்
பிள்ளை பிறந்துவசை பூண்டாயே பேயமகனே
உள்ள மதியுனக்கு மோமுடிந்து போச்சுதையோ!
தாய்க்கு மொளித்தேயிந்தச் சங்கடம் பட்டாயே
வாய்க்குள் மடுத்தவெமன் மற்றிரங்கி விட்டானே!
அன்னை யிவ்வார்த்தைசொல்ல யவதானி யாங்கறைவார்
என்னை வசைகூறி ஈசனர்கள் வாயழிந்தார்
சிற்றின்ப நோய்தான் சிறிதெனக்கம் வாராது.

மற்றவள் சீலமதை மானித்தோர் ஆரறிவார்
உற்ற துணையுமவள் உள்ளத் துயிருமவள்
பற்றும் பிடியுமவள் பாரிலே யென்றனுக்கும்.

ஆரென்ன சொன்னாலு மவளைத் துறப்பதில்லை
ஊரென்ன சொன்னாலும் உத்தமி யுற்றதுணை.

உறவின ரன்பதனை யுள்ளபடி கண்டேனே
பறிபோகும் வேளையிலே பார்த்தே னவர்கள்குணம்
கேட்டி லுறுதி கிளைஞர்க் குறுகுணத்தை
நீட்டி யளக்கு நெடிய கோலென்பரது
நேராகக் கண்டேன் நிலத்தென்னை பெற்றவளே
ஆரேயென் பக்கலம்மா ஆதரவாய் நின்றவர்கள்

வரயோகி யென்குருவும் மற்றொரு மித்திரரும்
விரதம் புரிபவளும் மேலாந் துணையெனக்கு.

மற்றவ ரெல்லோர்க்குஞ் செத்தவ னானானேன்
செத்தவன் பக்கலினி மற்றவர்க் கென்னபயன்
நான்தெரிந்து கொண்டவளைத் தான்கருத நீதியுண்டோ ?
ஆனவொரு தாய்நீயும் ஆற்றாமற் றூற்றிவிட்டாய்
தாயறியும் பேச்சல்ல தாரணியி லிம்மருமம்
நீயறியும் பேச்சல்ல நீதியல்ல நீவினவல்
தாரத்தால் நானடைந்த சங்கடங்கள் நீயறிவாய்
பாரில் துரும்பாய்ப் படுத்தின பாடறிவாய்
என்மனம் பூந்த விடந்தனிலிச்சை வைத்தால்
உன்மனம் நோகாமல் ஒற்றுமை யாகவேண்டும்.

இவ்வார்த்தை கேட்க வெரிந்தந்தக் காந்தாரி
ஒவ்வாத பேச்சுரைத்தாய் ஓகெடுவாய் நீபடுவாய்
பெற்று வளர்த்துனக்குப் பெரும்பாடு பட்டவெல்லாம்
சற்றும் நினையாயோ சண்டாளப் பேய்மகனே
பிறந்த நாள்தொட்டுப் பிசகாம லென்னுரையை
மறந்தவ னல்லவிப்போ வாழ்வென்ன வந்ததடா;
சேர்ந்த வொருத்தியிட் திட்டத்தில் நிற்பதையோடா
ஏர்ந்த புதுமையிது வென்றுசொல்லித் தான்சிரித்தாள்.

புத்திர னப்போது பெற்றவள் புல்லுரைக்கோர்
உத்திரஞ் சொல்லாம லூமைபோல் தானிருந்தார்.

அரிய பிணியா லவதானி நெஞ்சழிந்து
தெரியு நிலைகெட்டுத் தியங்குகிற நாளையிலே
சென்னை யணுகியந்த தேவதத்தை பட்டதனைப்
பன்னி யொருவாறு பாங்காகப் பேசிடுவோம்.

தூக்கம் பிடியாளாம் சோறுகந்து தின்னாளாம்
ஏக்கம் பிடித்தே யினியவைகள் வேண்டாளாம்
நாளுக்கு மூன்றுதர நாடி யெழுதிடுவாள்
நாளுக்கு மூன்றுதர நல்லபதில் பார்த்திருப்பாள்
நாயகற் குற்ற நலிக்கு நடுங்கிடுவாள்

நாயக னுக்கு நலமது கோரிநிற்ஒ஡ள்
விரக நோய்பூண்டு மெலிவுற்றுத் தான்துடிப்பாள்
சருகென வாடித் தளர்ந்து மெலிந்திடுவாள்
அறிந்தவர் வந்தால் அவர்களுடன் பேசாளாம்
மறிந்தவர் பேச்சும் மடற்காதி லேறாதாம்.

பார்த்தவ ரெல்லாம் பழிப்ப தறியாளாம்
வேர்த்தழுது விம்மி விதியை வெறுப்பாளாம்
தெய்வத்தை வேண்டித் தினமுந் தொழுவாளாம்
தெய்வத்தை நொந்தவளுஞ் சீவன்விடப் பார்ப்பாளாம்
உலைவாய் மெழுகாய் உருகிப் படுவாளாம்
தலைதனை மோதித் தடுமாறி நிற்பாளாம்
நல்லுயிர் போயே நலங்கெட்டுத் தானிருந்தாள்
அல்லலில் மூழ்கி யருவையுயிர் துவண்டாள்.

தத்துக் கவதானி தப்பினது தானறிந்து
மெத்த மனங்களித்து மெய்க்கடவுள் தாள்பணிந்து
உற்ற கொழுநன் உவந்தவை தானனுப்பிக்
கற்ற கலையாலே கற்பனைகள் கண்டெழுதிப்
பொழுதுகள் போக புதுமை கதை யெழுதி
பழுதில் கவிகள் பலபன்னித் தானெழுதிப்
பனிபோல வந்த பயங்களகன்ற வென்றும்
இனிவருவ னென்னாத னேங்குமுயிர் தாங்கவென்றும்
உள்ளுக்குள் பொங்கி யுவந்து களித்திருந்தாள்
மெள்ளத் தொலைத்துவந்தாள் மேல்வளர்ந்த நாள்களெல்லாம்.

அந்தப் படிக்கே யவதானி தான்பெயர்ந்து
சிந்தைப் பிணிதீரச் சென்னைப் பதிசேர்ந்தார்
சென்னைப் பதிசேர்ந்தம் மின்னைப்போய்க் காணலுற்றார்
மின்னைப்போய்க் காணலுமே தன்னைத்தான் மெய்மறந்தார்.

அன்னமு மெய்மறந்தாள் ஆங்கவ ருற்றநிலை
என்னென் றுரைப்பதது வேழமைப் பாலதன்றோ?
சோகக் கடலுடனே சோகக் கடல்கதிய
மோகக் கடலுடனே மோகக் கடல்படியக்
காதற் கடலுடனே காதற் கடலுதைய
ஓதை யொடுங்கியலை யோய்ந்த வுளத்தவராய்
இருவரு மப்போ தெதிரோடிக் கண்டவர்கள்.

இருவருங் கையா லிறுகத் தழுவி நின்றார்
மருவி யவர்கள் மதிமயங்கி நின்றார்கள்.

ஒருவர்க் கொருவர் உதைவாக நின்றார்கள்
பேச்சற்று நின்றார் பெருங்கால மாங்கவரும்
மூச்சற்று நின்றார் முடிந்தவர் போலவரும்.

நெடுநேரஞ் சென்று நெடுமூச்சுத் தாமெறிந்து
நெடுநேரஞ் சென்று நிலைத்துப்பின் வாய்திறந்தார்.

ஒட்டின நாவை யுமிழ்நீரா லூறவைத்துக்
கட்டின கைஞெகிழக் கால்கள் நடுக்கமுற
மெல்ல விழிமலர வேர்வை பொடித்துவிழ
வல்லியு மானவனும் வாய்ந்த அமளியுற்றார்.

என்சாமி யென்றே யிரங்கியவள் விழுந்தாள்
என்கண்ணே யென்றே யெடுத்தவர் தானயன்றார்.

தான்பட்ட தெல்லாம் தையலுக்குத் தானுரைத்தார்
தான்பட்ட பாடனைத்துந் தையல் புகன்றழுதாள்.
நெஞ்சுருகி நின்று நெடிதுயிர்த்துத் தாந்தளர்ந்தார்.
அஞ்சறிவு மோய்ந்தே யசையாமல் தாமிருந்தார்.
உணர்ந்தவர் பின்னு முயிர்த்து மிகத்துவண்டார்.

தணந்தவர் தேகந் தரியாது போலிருந்தார்,
தயிரியங் கொண்டு தடுமாற்றஞ் சற்றொழிந்தார்
உயிருடையர் போல வொருவாறு தாந்தெளிந்து
தங்கள்தம் பாட்டைச் சலியா துரைத்திருந்தார்
துங்கமா மீசனிழை சோதனை யீதாகுமென்றார்

இனிப்பிரிய லாற்றோம் இறைவ னறியவென்பார்
தனித்திருக்க மாட்டோ ம் தரியாது ஜீவனென்பார்
இத்துணை யாக விருவரும் பேசிநின்றார்
தத்தை நினைத்தவர்கள் தாமழுது வெம்பிநின்றார்.

முன்போ லவர்கள் முகமலர்ச்சி கொண்டிருந்தார்

முன்போ லவர்கள் முதுநூல் படித்திருப்பார்
சரசங்க ளாடித் தனிமகிழ்ச்சி கொண்டிருப்பார்
பரவசங் கொண்டு பரிந்தவர் பார்த்திருப்பார்
குடதிசை நூல்கள் கூடிப் படித்திருப்பார்
தெடரு நயமறிந்து சொல்வரிசை கண்டுகப்பார்
வடநூல்க ளாய்ந்து மனங்கனிந்து தாமிருப்பார்
திடமாக வீசன் செயலில் வியப்புறுவார்
காரணன் பாதங் கருத்தாகத் தாம்பணிவார்
பூரணன் றன்னைப் புகழ்ந்து துதிருப்பார்.

இப்படி யாக விருந்தவர் நாட்கழித்தார்
ஒப்பிலா வின்ப மொருமிக்கத் தாமயின்றார்.
வம்பர்கள் தூறு வரவுசெலவில் வையார்.

தும்பி யறிந்துவக்குந் தூமலரின் றேனருமை
ஞானியறிந் துவக்கும் நன்னூற் பொருளருமை
ஆனை யறிந்துவக்கும் ஆன கரும்பருமை
சூர னறிந்துவக்குங் கொல்லும் படையருமை
வீர னறிந்துவக்கும் வீரன் செயலருமை
கவிக ளறிவார்கள் காவியத்தின் நல்லருமை
புவியி லிருப்பவர்கள் பொன்னுலகின் மாண்பறியார்
பன்றி யறியாது தேமாம் பழத்தருமை
நன்றி யறியாதார் நன்மை புரியறியார்
கழுதை யறியாது கான ரசத்தருமை
பழுதை யறியாது பாம்பின் கதியருமை
காக மறியா கருங்குயிற் சொல்லருமை
தாக மறியாது தண்ணீரில் நண்ணுரிசை.

நரிக்குப் புனைசுருட்டு நாய்க்கு முசுற்றுகுணம்
தரைக்குட் குதிர்ட்டிகட்குந் தாங்காத கண்சூடு
மிண்டர் குணந்திருந்தி மேதினியில் மாறாது
குண்டுணி மக்கள்குணம் மண்டையொடு மாறாது.

கல்லெல்லா நல்வயிரக் கல்லாமோ கல்லாதார்
சொல்லெல்லா மெய்பயக்குஞ் சொல்லாமோ துட்டருக்கும்
ஊரைப் பழியாக்கால் உள்வாய் தினவெடுக்கும்
பேரைப் பழியாக்கால் பின்னுந் தினவெடுக்கும்
கண்டொன்று சொல்லாக்கால் காந்தி மனங்கமறும்

மிண்டுகள் பேசாக்கால் விம்மிக் குழைந்திடுவார்.
ஆங்கவர் தூறுவதற் கஞ்சினவர் தஞ்சுகமும்
நீங்க மனம்மறுகி நிற்பார் நெடும்பாரில்.

தம்மனது தாமறியத் தற்பரன் மேலறிய
மெய்மை துணையாக வேண்டி வினைபுரிவர்
நன்மைச் சுகநுகர்ந்து நாத னருளடைந்து
துன்மை வழிதுறந்து தூயராய் வீற்றிருப்பார்.

இத்திற மிந்த விருவருந் தாமிருந்தார்
குத்திர புத்திக் கொடியர் பழித்திருந்தார்.
விற்பன்னை யானவந்த மேலான பெண்மணியைக்
கற்புடைப் பெண்டாக் கருதாத பாவிமக்கள்
அவதானி வைப்பாட்டி யாயவளைத் தாம்நினைந்து
கவர மனந்துணிந்து கற்றவுபாய மெண்ணிக்
காசெறிய வேசிவருங் கையணையும் பார்யாகத்
தேச வியற்கையெனத் திண்ணமா யெண்ணியவர்
ஆசையது காட்டி யாங்கவளைத் தாமிழுக்கத்
தனமதங் கொண்டவர்கள் தாமு முளங்கொதித்து
மனதிற் பெருமைகொண்டு வருந்தி யெழுதலுற்றார்.

இருந்திருந்து மாதேயோர் ஏழையைத் தேடினையே
வருந்திய வென்னை வயிறெரியக் கண்டனையே
பலகாலும் வந்து பயனென்ன யானடைந்தேன்
இலவினைக் காத்த கிளியென்ன லானேனே
சந்தன வாழ்மரத்தைச் சர்ப்பம் வளைந்ததுபோல்
உன்றனை நற்றி யொருவ னிருக்கலாமோ
என்றொவ் வொருவர் எழுதிவிட்டுக் காத்திருந்தார்
மன்றல குழலி மனதை யறியாமல்
சிங்கத்தின் பேடதனைச் செந்நாய் நயந்ததுபோல்,
அங்கக் கடிதங்களை யாரியர் முன்புவைத்துப்
பூமியி லும்மைப் புருஷனாய்த் தெய்வமதாய்க்
காமிப்ப தல்லாம் கடைப்பட்ட நாய்களைநான்
கண்ணா லும்பாரேன் கணவரே யென்றுரைத்தாள்.

எண்ணி யுரைப்பாராம் ஏங்கி யவதானி
பெண்ணர சேநானோர் பொருளில்லாப் பேதையடி
உங்காரஞ் செய்தே நானூரை மருட்டறியேன்
பங்களாக் கட்டிப் பதமா யமர்த்தறியேன்
இந்தா தனமென்றே யேற்றபடி தூற்றறியேன்
நந்தா விளக்கே நயந்தேது செய்வேனான்?
ஊராளி யல்லனடி யுற்றதன மேடியல்ல
பாராள் வோனல்ல பருத்தவதி காரியல்ல
என்னை யடைந்தாயே வீனாயப் பட்டாயே
மின்னே பசுங்கிளியே மேன்மக்கள் பாலிருந்தார்
மான மழியாது வையகத்தோ ரேசார்கள்
தீன மடையாது தேனே சிறந்திருப்பாய்!
தெரிந்தவ் வுரைகேட்டுத் தேவதத்தை யுண்ணடுங்கி
எரிந்த மனதுடனே யேங்கித் துடித்தவளும்
பர்தாநீர் நானுமக்குப் பாரியை யென்றுசொல்லிக்
கர்த்தா வறியக் கலந்ததுவும் பொய்யாமோ!
நெஞ்ச மறிய நிறைகடவுள் தாமறிய
அஞ்சு மறிய வறிந்ததுவும் பொய்யாமோ!
நான்படையாச் செல்வமிந்த நாய்கள் படைத்திடுமோ
மான மறியாத மக்களுக்கு வெட்கமுண்டோ
நீதி யறியாத நெஞ்சத்தா ரஞ்சுவரோ
பேத மறியாத பித்தர்க்குப் பத்தமுண்டோ
கொள்ளக் கிடையாவுங் குணத்தினி லீடுபட்டேன்
உள்ளக் கலையறிந்த உத்தமரே யென்றுரைத்தாள்.

நாதன் பதத்தானை நல்லவர் தம்மாணை
பூதங்கள் மேலாணை பொய்யே னொருநாளும்
ஏவல் புரிந்திருப்பேன் ஏற்றபடி நான்நடப்பேன்
பாவ வழியகற்றிப் பண்புட நானிருப்பேன்
சித்த மறிந்து சிணுங்காமல் நானடப்பேன்
மற்றொன்று கோரி மறுகாமல் நானிருப்பேன்
உம்மோ டுறும்வாழ்வே யுற்ற சுகமென்றிருப்பேன்
இம்மை மறுமை யிருமைக்கு மும்பாதம்
தன்னை மறவேன் தரியேனு யிர்பிரிந்தால்
உன்னாணை யென்றே யுறுபதந் தான்பணிந்தாள்.

பணிந்த அவளைப் பரிவாகத் தானெடுத்தே!
அணங்கே யென்மீதுமனம் ஆயாசங் கொள்ளாதே
வேடிக்கை யாக விரும்பா மொழிபகர்ந்தேன்
நாடிக்கை தொட்டிருக்க நானோ விடுவதுனை
உன்னாணை பெண்ணே யுளநொந்து வாடாதே
என்னவே நங்கை யினிது களித்திருந்தாள்.

கண்ணாள னந்தக் கனங்குழையே தாயாக
வெண்ணி யிருந்தான் இனிதினவள் வளர்க்க.
சீராள னென்னுஞ் சிறுவனுந் தான்வளர்ந்தான்
தோராத வொண்குணத்தாள் தொட்டு வளர்த்துவந்தாள்
கொள்ளிவாய் நிலி கொழுநன் சுகம்பார்த்துத்
துள்ளி மனங்கொதித்துத் துர்ப்பாஷை தான்படித்தே
ஆகிற காலமெல்லாf ஆருனைச் சீந்தினவர்
சாகிற காலமதில் சக்களத்தி தேடினாயே
அண்ணையுனை யொருத்தி யண்டி யடைந்தாளே
பண்ணிய பாவமுனைப் பற்றி யழிக்காதோ
கண்க ளவியாவோ கட்டையி லேறாயோ
பெண்கள் நகையாரோ பெண்பாவம் சுற்றாதோ
கொண்ட வெனைத்துறந்த கூழை யழியாயோ
கண்டுகதை கேட்குங் காதடைத்துப் போகாதோ
கருதுமுன் கண்ணைக் கழுக்கள் பிடுங்காவோ
பரியு முனதுனெஞ்சம் பாழடைந்து போகாதோ
புனையு முன்நாக்கும் புழுத்து நெளியாதோ
எனைவிட்ட கைகள் எரிந்து கழியாவோ
ஒத்து நடக்கு முன்மகன் போகானோ!
பத்து வயதுடைய பாலகனை நீலிவைய
ஆவி தரியா ரவதானி தான்பதறிப்
பாவி மகளே பாலகனை வைவையோடி
கட்டின காலமும் தொட்டாயே வன்சனியாத்
தொட்டாயே வன்சனிபோல் கெட்டேனே யுன்னிமித்தம்
நன்றி யறியாத நாய்மகளே பேய்ப்பிணமே
குன்றள வுண்டே கொடும்பாவி யுன்சதிகள்.

என்றவர் சொல்ல வெடுத்தாள் பெருங்கோபம்
வான மதிர மறிந்த நிலமதிரத்

தானானே யாடித் தரிக்காமல் தான்குதித்து
நீட்டிய கையால் நெடுமுகத்திற் குத்தியவள்
தாட்டிக மாகத் தலைகால் தெரியாமல்
சீக்கொட்டிக் காறிச் சிதர முகத்துமிழ்ந்து
நாக்கெட்டு மட்டும் நாநா விதம்பாடி
ஆங்கவள் போயடைந்தாள் அம்மை வளவினுக்குத்
தாங்கி யையரெல்லாம் தரைபார்த்துத் தானிருந்தார்.

கண்ணாளன் தாயுடைய காரமதைக் கண்டிருந்தான்
புண்ணாகி நெஞ்சம் புழுங்கியழு திருந்தான்,
அம்மகனைத் ஧துற்றி யவதானி தானிருந்தார்.

செம்மை யுளமுடைய தேவதத்தை யின்றுணையால்
நற்பொழுது தாம்போக்கி நாட்கழித் தாரங்கவரும்
கற்புடைய நங்கையவள் காத்தவரைப் போற்றிவந்தாள்.

பொய்யுறவைப் பொய்த்தமரைப் போக்கி மனைதுறந்து
மெய்யுறவாய் மெய்த்துணையாய் மெய்த்தெய்வ மாய்நினைந்து
அவதானி தன்னை யடைந்தவள் வாழிந்திருந்தாள்
புவன மறியவள் போற்றிக் களித்திருந்தாள்
பத்தா பணிவிடைகள் பார்த்தவள் செய்துவந்தாள்.

அவதானி யன்னை யவர்க ளிருப்பறிந்து
தவறாக வெண்ணித் தனையனைத் தான்வெறுத்தாள்.

தனையன் மனந்திருப்பத் தாயவன் பாலடைந்தாள்
நினையா நினைவுகொண்டு நெஞ்சங் குறுகுறுத்து.

அன்னை மனங்கலைக்க ஆகாத மாக்கள்வந்தார்
எண்ணிக் கலகமிழை வினர்கள் தாமும்வந்தார்.

பாலுக்குங் காவல்நல்ல பூனைக்குந் தோழராக
கீலகஞ் செய்யவல்ல கேள்கள் அடுத்துவந்தார்.
கீழறுப்பான் தானெடுத்தான் கிட்டியவன் அத்தைகுடி

பாழடிக்க வல்ல படுநீலி பட்டிமகள்
குடும்பங் கலக்கியென்னுங் கோலப் பெயருடையாள்
படும்பஞ்சிற் றீயெனவே பற்றும் பாதகியவள்
கொடுமைகள் சொல்லுவதில் கூசாத நெஞ்சுடையாள்

அத்தை மருமகனாய் அண்டி அகத்தில் வினை
முற்ற விளைத்தார்கள் மூதேவிப் பட்டிமக்கள்

அவதானி தீயென்றே யன்னைக்குக் கோளுரைப்பார்
அவள் மெத்த நச்சியென்றே யாங்கவர் பாலுரைப்பார்
தேவதத்தை பேரினிலே தில்லுமுல்லும் போயுரைப்பாய்
பாவ வுரைகேட்டுக் காந்தாரி தான்பழிப்பாள்
சீறிப் பழிப்பதனைத் தேவதத்தை பாலுரைப்பார்
தூறு பொறுக்காமல் சுந்தரியுந் தானழுவாள்
அவதானி யீதறிந்தவ் வன்னையைத் தானழைத்துப்
புவனத்தி லென்போலப்பிள்ளையுண்டோ நீபுகல்வாய்
ஆதி முதலாக அம்மையுன் சொற்றவறேன்
பூதகி போலவொரு பெண்பார்த்துப் பூட்டிவைத்தாய்
தன்மை யறியாய் தலைமேலே யேறவிட்டாய்
நன்மை வழிகள்பல நான்சொல்லி வாய்சலித்தேன்
இம்மையி லீங்கிவளால் என்ன சுகமறிந்தேன்
அம்ம! அதனாலே யகநொந்து நானிருந்தேன்.

வேசிமனை தேடிவீணனாய்ப் போகவில்லை
காசை யழிக்கவில்லை கண்டநோய் கொள்ளவில்லை
மண்டைப் புழுவாய் வாய்த்தவள் வன்கொடுமை
விண்டு சுகம்பூண மெய்க்கடவுள் கண்பார்த்தார்!
மனதிற் கினியவளாய் வாஞ்சை யுடையவளாய்
எனதுயிர்க் கின்றுணையாய் ஏற்றகலை கற்றவளாய்
தன்சுகம் பாராம லென்சுகம் பார்ப்பவளாய்
என்னிழல் போல விருந்து மருவுவளாய்
ஒருத்திகிடைத்தவளை யுள்ள முவந்துபற்றிப்
பருத்தி புடவையாகக் காய்த்த படிமகிழ்ந்தேன்.

ஆன துணையுமவள் ஆருமு யிருமவள்
மான மனைவியவள் மற்றவளைச் சொல்லாதே
நாட்டில் நடவா நடக்கையென்ன நானடந்தேன்
கூட்டத்தார் செய்யாக் கொடுமையென்ன நான்புரிந்தேன்?
குடும்பங் கலக்கியுரை கொஞ்சமுங் கேளாதே
கொடும்பாவி கீழறுப்பான் கோள்களொன்றுங் கொள்ளாதே!
பிறந்து முயவாண்டிலெனைப் பெற்றபிதா செத்தொழிந்தார்
சிறந்த பேரன்பாலே தேற்றியெனைக் காத்துவந்தாய்
தாயாதி வீட்டினிலே தாழ்ந்து பணிபுரிந்து
நீயான தாலே நிலத்தி லெனைவளர்த்தாய்

சிரிப்பாணிப் பட்டுத் தெருப்பிச்சை தேடாமல்
தரிப்பான வித்தை தனியறியச் செய்துவைத்தாய்!
உன்சொற் றவறாமல் உள்ளளவு நானடந்தேன்
என்சொல்லைத் தட்டியம்ம வெத்தனையோ நீநடந்தாய்
பெற்று வார்த்தவுன்றன் பேச்சின் படிநடந்தேன்
சித்தப் படிநடந்து செய்யுங் கடமைசெய்தேன்
சிந்தை யுவந்தபடி செலுஞ் செலவிடுநீ

இந்த வொருவரமு மென்றனுக் கீந்தருள்வாய்.
உரைத்த வுரைகேட்டே யொப்பினவள் போலிருந்து
வருத்த முளத்துவைத்து மாதாவுந் தானிருந்தாள்.

கீழறுப்பா னத்தையுடன் கீலகங்கள் செய்துவந்தான்
வாழுங் குடிக்குமவர் வங்கையா வந்துதித்தார்.

அல்லயலில் தூற்றியவர் அம்ப லெடுக்கலுற்றார்
தில்லுமுல்லுஞ் சொல்லித் தெருவூர் நகைக்வைத்தார்
தாங்குவார் போலத் தலைதுள்ளித் தாம்நடந்தார்
ஆங்கவரை மெல்ல அவதானி தான்தொலைத்தார்.
மெய்வருந்தும் போதவர்க்கு மேலா முதவிசெய்த
கைதவன் கையில் கனக்கப் பொருளுதவிக்
கண்ணின் மறைந்து கயவரைப் போகவிட்டார்
எண்ணிப் பிழையிழைத்த வீனரைத் தான்கழித்தார்.
அன்னையுஞ் சின்னாளில் ஆதியூர் போயடைந்தாள்
பின்னை யவளும் பெரிது நினைக்கலுற்றாள்
ஊரார் வழிவிலகி யொன்றிவழி தானடக்கும்
தேரா மகனுடைய சித்தத்தை மாற்றறியேன்
வேண்டிய போதிலொரு வேசிதனைத் தேடாமல்
தீண்டிய மாதைத் தெறிக்கவிடே னென்றுசொல்லி
அவளேயென் நன்மனையாள் ஆனதுணை யென்றனுக்கும்
அவளேயென் நல்லவுயிர் ஆமுயிரை நானகலேன்
என்று பிடிவாதம் ஈனன் பிடிக்கிறானே
நின்று பிடிவாதம் நீசனன் பிடிக்கிறானே
பிடிவாதக் காரனான பிள்ளையின் பேய்மதியைப்
படியும் படியுரைக்கப் பாரி லொருவரில்லை.

குணந்தரு வித்தையென்று கொண்டாடி முன்பொருகால்
பிணமறுத்துச் சாதிகெட்டுப் போகவழி தேடிநின்றான்
சூத்திர மாதவளைத் தொட்டு மனைவியென்று
சாத்திரஞ் சொல்லியவள் தன்னை மருவுகின்றான்
வைப்பாட்டி யென்றுரைத்தால் வாயழுகிப் போகுமென்பான்
தப்பாதவள் பிரிந்தாள் தன்னுயிரே போகுமென்பான்.

அவன்பிடித்த மின்னாளும் ஆனபணி செய்திருப்பாள்

அவன்சுகம் பேணுதற்கே யானவழி தேடிடுவாள்
சொம்பிற் சலந்தூக்கித் தொண்டிழைத்துப் பின்தொடர்வாள்
இன்பம் வரத்தலைக்கே யெண்ணெயிட் டாட்டிடுவாள்
பரிசாரகன் சமைக்கப் பத்துவித மொத்தகறி
பரிவாகத் திட்டமிட்டுப் பத்தாவை யுண்ணவைப்பாள்
ஏற்ற பெண்டாட்டிபோல வேதேதோ செய்துநிற்பாள்
வேற்றுப் புருஷர்தம்மைப் பார்த்து விழிப்பதில்லை.

மாதின் மயக்கில் மயங்கிய வென்மகன்றான்
சாதிக் கடுக்காத சங்கடம் செய்கிறானே
படித்து நான்சொல்லி வையப்பாவை யவளுடனே
அடுத்துப் பரதேச மாங்கவன் போகவேனென்று
சபத மிடுகிறானே சண்டாள னென்னசெய்வேன்!
விபரீதம் வாராமல் மேலல்லோ காக்கவேண்டும்.

பேற்றி மணம்புரிந்தால் பின்பொரு நன்மையுண்டு
ஏற்ற படிக்கே யிழுக்க வுபாயமுண்டு
கொண்டு கொடுத்தவர்கள் கூட்டத்தில் நாணமின்றி
மிண்டவன் செய்தக்கால் மேலோர் நகைத்திடுவார்
மேலோர் நகைக்கவென்றன் பாலன் மிகப்படிவான்
பாலன் மிகப்படிந்தே சீலமுட னடப்பான்.

இல்லாத போதும் இணங்கிவந்த நாரிதனை
எல்லாருங் கூடிசெகு வேளனங்கள் செய்திடலாம்
ஏளனங்கட் காற்றாமல் மூளியவள் போய்விடுவாள்
மூளியவள் போயினக்கால் ஆளடங்கித் தானிருப்பான்.

இந்த முறையாக வெண்ணமிட்டுக் காந்தாரி
பந்தமுடன் வரனைப் பார்த்து முகூர்த்தமிட்டு
மைந்தற் கெழுதிவரச்சொல்லிச் செய்திவிட
அவதானி யோலை யகப்பொரு ளுற்றறிந்து
குவளை விழியாளைக் கூப்பிட் டுரைக்கலுற்றார்
நம்மைப் பிரிக்கவன்னை நாடு முயற்சியிது
செம்மை யிதுநமக்குஞ் சேமந்தான் பின்னாலே
நம்மகள் நன்மணந்தான் நன்கு முடியுமெனில்
இம்மையிற் சிந்தையில்லை யேற்ற படிநடக்க,
என்றவர் ஆய்ந்தே யிருந்தனந் தாமெடுத்துச்

சென்றனர் பெண்ணின் சிறக்கும் வதுவைசெய்ய
கல்யாண வேலை கணக்காகத் தானனுப்ப
வெல்லாரும் வந்தார்கள் எக்கருடன் கொக்கரித்து.
வீரப் பிடாரிவந்தாள் வெம்புமவள் தம்பிவந்தார்.

கோரப் பிணியதுபோற் கூடுங் கிளைஞர்வந்தார்
சம்பந்தி மார்கள்வந்தார் தள்ளொணாக் கள்ளர்வந்தார்
வம்பர்கள் முண்டிவந்தார் வாய்ப்பட்டி மாக்கள்வந்தார்.

அவதானி யப்போ தறிந்தொரு சூதிசைத்தார்
இவர்களுக் குட்கலக மேற்றபடி விளைத்தால்
நம்மை யிகழ்வதற்கு நற்சமயம் வாய்க்காது
செம்மை யிதுவென்று தீர்க்கமா யெண்ணமிட்டுத்
தாயாதித் தம்மியரைத் தனியா யருகழைத்து
நீயே யெஜமானன் நின்னதிக் கல்யாணம்
இந்தா பிடியென்றே யேற்ற பணங்கொடுத்தார்.
சிந்தை மகிழ்ந்தே செருக்கா யவர்நடந்தார்.

தாரை யதுவார்த்துத் தன்மகளைத் தான்கொடுத்து
நேரு முகூர்த்த மவதானி நிறைத்துவிட்டார்.

தமக்கை மகற்குத் தரவில்லை பெண்ணையென்று
தமக்குள்ளே சிந்தையிட்டுத் தாங்க லடைந்ததம்பி
இஷ்டப் படிக்கலக வேதுவுண் டாக்கிவந்தார்
திட்டி யவனைச் செருப்பாலே தானடித்தார்.

வீரப் பிடாரிகண்டு வெம்பி மனங்கொதித்து
நேருங்குரற் பாய்ச்சி நெட்டுயிர்த்துத் தானழுதாள்.
கேவென் றழுவாள் கொடுஞ்சாபந் தான்கொடுப்பாள்.

இந்த விழவினுக்கு மேன்வந்தே னென்றழுவாள்
சொந்த மகனைத் துடுக்கனடித் தானென்பாள்.

தம்பி யுடனே தரிக்காமற் கண்டுசெவந்து
நம்ப விவன்றனக்கு நாட்டி லுறவுமுண்டோ !

வாய்ச்சோ றிடுவார் வகையுண்டோ மற்றவனென்
பேச்சின்படி நடவான் பிள்ளையோ வென்றுரைத்தார்.
அந்த வுரைகேட் டனியாயப் பட்டவளும்
எந்தன் மகனுக் கீசன் துணையிருப்பான்
குருட்டுப் பிணங்களெல்லாங் கூடித் தலையெடுத்தார்
திருட்டுப் பயல்களெல்லாந் தேடிப் பணங்குவித்தார்
எச்சிற் கலைகளெல்லாம் எப்படியோ தாம்பிழைப்பார்
பிச்சை யெடுத்தவர்கள் பேர்பெற்றுத் தாமிருப்பார்.

என்பிள்ளைக் கென்னகுறை யாரென்ன செய்யலாகும்
பொன்னான மைந்தனுக்குப் பெண்கொடுப்பா ரில்லையோதான்.

தாயாதி யண்ணன் சதிசெய்தான் ஆங்கவன்றன்
தாயுஞ் சதியிழைத்தாள் சண்டாள முண்டைதனக்
கென்ன கதிவருமோ வென்சாப வீணாமோ
பின்னைத் தெரியும் பெரும் சாப மென்றழுது
மார்பி லறைந்து மணப்பந்தல் முன்றிலிலே
வீரப் பிடாரியவள் வீர நடம்புரிந்தாள்.

அவதானி வாயை யசைக்காமல் போய்மறைந்தார்
அவளோடு போராட வாங்குவந்தாள் காந்தாரி.

தம்பி புரத்துத் தமக்கையுடன் கூடிச்
சம்பிரம மாகவொரு சண்டை விளைத்தார்கள்.
அம்மையு மப்போ தழுதே யொதுங்கிவிட்டாள்.
இம்மாத் திரத்தில் இதுவடங்க வின்னமுள்ளே
குட்டிக் கலகம் குமைந்து வளர்ந்துவர
எட்ட மறைந்தே யிருந்தா ரவதானி
கொடும்பாவி வம்பருடன் கூடித் திருக்கிழைத்துக்
கொடுமைகள் கோடி குழைந்து புரிந்திருந்தாள்.

சம்பந்தி வர்க்கங்களைத் தக்கமரி யாதையின்றிப்
பம்பர மாட்டிவைத்தார் தம்பி யொருபுறத்தில்
கொள்ளிவாய் நீலிமாமி கூடிப் படைபுரிந்து

தள்ளி யிரச்சலிட்டுத் தாமிருப்பா ரோர்புறத்தில்
வந்தவர்கள் போகவர்கள் வம்புரைப்பா ரோர்புறத்தில்
இந்த விதமா யிருப்தனைத் தானறிந்து
அவதானி யப்போ தவரவர்க்குத் தக்கபடி
விவர முரைத்து மெதுவாகத் தானடந்தார்.
சாபமிட்டுத் தூளிசெய்யும் தாயாதித் தங்கையரைக்
கோபம் அடக்கும்படி கூடி யிதமுரைத்தே
அம்மை பிடிமானம் ஆற்ற முடியாது
சும்மா யிருப்பையென்று நல்லதனஞ் சொல்லிவந்தார்
துட்டரைப் பார்த்துத் துடுக்கனென் தம்பிகண்டீர்
மட்டி லிருங்களென்று வாய்ப்பூட்டுப் பூட்டிவந்தார்
தேறுங் கலையறிந்த தேவதத்தை தன்வசத்தில்
ஆரம்பணிக ளெல்லாம் அமையும் படியமர்த்தி
உக்கிராண வீட்டிலவள் உற்றிருக்க வைத்துவிட்டுப்
பக்குவமாய்த் தனக்குப் பாரமில் லாமற்செய்தே
ஆரோபோல் தானிருந்தார் அப்போ தவதானி.
சீராய் முடிந்ததுதம் செல்லமகள் கல்யாணம்
வதுவைக்கு வந்தோர் வரிசைபெற்றுத் தாமகன்றார்
புதுமைத் திறமறிந்து போனார்பெண் கொண்டவரும்
அவதானி தேவதத்தை யன்பிற்கு வேறுவமை
புவனத்தி லில்லையென்று பேசியவர் போனார்கள்.

கொள்ளிவாய் செய்யுங் கொடுமை பொறுக்காமல்
தள்ளியே சென்னைவந்து தாமடைந்தார் ஆங்கவரும்
கண்ணாளன் சீராளன் காதல் மகளுடனே
நண்ணுமொரு தோழியுடன் நன்றாக வாழ்ந்திருந்தார்
சீலமுள்ள தாயான தேவதத்தையுட் கனிந்து
பலார நாளும் பரிவாய் வளர்த்துவந்தாள்.

பெற்றவளைப் பாலர்களும் பின்மறந்து பேர்மறைந்து
மற்றவளைத் தாயாய் மதித்தன்பு காட்டிவந்தார்.

நேர மறிந்து நிறுத்துணவு தானூட்டி
வார மறிந்து வரிசைமுறை மாறாமல்
தலைக் கெண்ணெய்யிட்டுத் தப்பா மருந்துதவி
நிலத்தில் படுக்காமல் நேரமளி மேல்வளர்த்திக்

கண்ணை யிமைபோலக் காத்தவரைப் பார்த்துவந்தாள்
பெண்ணிற் சிறந்தாளும் பேணிப் பெரிதுவந்தாள்
தன்கொழு நன்மக்கள்தமைத் தன்மக்க ளாய்நினைத்து
நன்மனந் தான்கனிந்து நாளும் வளர்த்துவந்தாள்.

அவர்க ளுறவை யடுத்தடுத்துக் கண்டவர்கள்
இவர்க ளறிந்தசுக மேழுலகி லில்லையென்பார்
நல்லவ ரெல்லாரு நற்கண்ணாற் பார்த்துவந்தார்
புல்லர்க ளெல்லாரு பொச்செரிச்சல் கொண்டிருந்தார்.

தனமதத் தோரெல்லாம் தளர்ந்து வருந்திநின்றார்
மனதி லம்மாதை வசம்பண்ணத் தாமுயன்றார்
கற்புடை மெல்லியெனக் காணும் பரிசுவிட்டே
யற்ப மதியோட யாங்கவளைக் காதலித்தார்.

பெண்ணாசை கொண்டஅந்தப் பேய்மாலப் பட்டிமக்கள்
மண்ணாசை காட்டி வளங்கள் பலகாட்டி
நகை யாசை காட்டியவர் நல்ல பொருள்காட்டி
மிகையாசை காட்டி வினைய நலங்காட்டி
தம்பெருமை கூறித் தனித்தூது போகவிட்டு
வம்பர்க ளேங்கி வழிபார்த்துத் தாமிருந்தார்.

தேவதத்தை தானுந் தெரிந்தவர் தீக்குணத்தைப்
பாவதத்த ராகுமந்தப் பஞ்சைகட்குத் தான்பதிலாய்
நீங்களெல்லா மென்றனுக்கு நித்தச் சகோதிரர்கள்
நீங்களெல்லாம் பாவ நினைவொழிந்து வாழ்ந்திருப்பீர்.

கற்புடைய பேரைக் கருதாமல் வாழ்ந்திருப்பீர்
பொற்புட னன்னெறியைப் போற்றிநீர் வாழ்ந்திருப்பீர்
தீமை வழிதுறுந்து சீராக வாழ்ந்திருப்பீர்
ஆமும் முடன்பிறப்பை யஞ்சியினிப் போற்றிடுவீர்
உரைபோக்கி விட்டாள் உறுதியுள்ள மாதவளும்
உரைபோக்கி விட்டாளே யுத்தமி பித்தருக்கு
கறுத்த வுளத்தார் முகமுங் கறுத்தார்கள்
வெறுத்துத் தலைகுவிந்து வெந்துருகிச் சாம்பினார்கள்.
கோவித்த காந்தாரி கொள்ளி மருகியுடன்

மேவிக் கறுக்கொண்டு வேதனை தாம்புரிந்தாள்
மகனென்று பாராமல் வார்த்தை வழங்கலுற்றாள்.
புகைகொள்ளுங் கண்ணாள் புழுங்கிப் பொரியலுற்றாள்.

ஆங்கவளை நோக்கி யவதானி யேதுரைப்பார்
பாங்கறி யாத்தாயே பவிஷெடுக்க வந்தாயோ!
நம்மவ ரெத்தனைபேர் நாட்டுக்குக் கேடிழைப்பார்
செம்மை நெறிபிசகித் தீங்கொரு நூறிழைப்பார்
பொய்ச் சீட்டெழுதிப் பொய்ச்சாக்ஷி சொல்லவஞ்சார்
கைக்கூலி கொள்வார் கடன்வாங்கி யில்லையென்பார்
பிறர்மனை கைப்பிடிக்கும் பேதைய ரெத்தனைபேர்
மறைந்து கள்வுசெய்யும் வஞ்சர்க ளெத்தனைபேர்
பரத்தயரைச் சேவைசெய்யும் பண்டித ரெத்தனைபேர்
துரத்தியே கற்பழிக்கும் துட்டர்க ளெத்தனைபேர்
பண்டித ரெத்தனைபேர் பந்தலுமா ரெத்தனைபேர்
மிண்டராய்த் தீம்பிழைத்து மேலுக்குச் சீலஞ்சொல்வார்.

சாஸ்திரிக ளெத்தனைபேர் சம்பன்ன ரெத்தநபேர்
பார்த்துச் சமயம் பரதாரந் தோய்ந்திருப்பார்
ஆசாரி யெத்தனைபேர் ஐயங்கா ரெத்தனைபேர்
வேசிகள் வீட்டினிலே வேலைகள் செய்திருப்பார்.

வெளியில் வரும்போது வீண்விருது கூடவரும்
பளபள வென்று பகல்வேஷந் தாந்தரிப்பார்
சன்னாசி யெத்தனைபேர் தாசியொடு ராக்கழிப்பார்.
மின்னிய தாலியில்லா முண்டைகளை மேவிநிற்பார்
சளுக்கும் பிளுக்குமுள்ள தாட்டோ ட்ட ரெத்தனைபேர்
தளுக்கி குலுக்கிவருந் தட்டுகள் பின்றொடர்வார்
தேவடியாள் வாயுறுஞ்சிச் சின்ன மழியாமல்
கோவிலிலே பேரங்கட்குக் கோலவ பிஷேகஞ்செய்து
திருநீறு தந்து திருத்துழாய் கைக்கொடுத்தே
அரிய சடகோப மானதலை மேற்பதித்துத்
தீர்த்த மதுவார்த்துத் தினமும் புரட்டிழைக்கும்
தூர்த்தக ளெத்தனைபேர் சொல்லக் கணக்குமுண்டோ ?
சாதியி லீங்கிவரைத் தள்ளிக் கழித்தாரோ
பேதைமதியா லென் பேரைப் பழிக்கலுற்றாய்
தெரிந்தவ ரென்னடையைத் தீதென்று தாம்பழியார்
தெரியார்க்கு நான்பயந்து செப்புஞ் சுகந்துறவேன்

“உற்ற பொருளழித்தே யூர்திரிந்து கட்குடித்துப்
பித்தேறிப் போயே பெரும்பிணிகள் கொண்டவனைக்
கைவிட்டு நாட்கழித்த காரிகையைப் பெண்டாக
மெய்யாங் கலையறிந்த மெல்லியலைப் பெண்டாகத்
தெரிந்தே யெனைவரித்த தேமொழியைப் பெண்டாகப்

பரிந்தென் மனமிசைந்த பாவைதனைப் பெண்டாக”
“கொண்டவள் பல்லாலே கொத்துண்ட நான்றானும்
பெண்டவள் கையாலே பெயரழிந்த நான்றானும்
நீலி யுரையாலே நெக்குவிட்ட நான்றானும்
சூலம் போற்சொல்லால் துளையுண்ட நான்றானும்”

ஆக்கினே னம்மாநான் ஆன சுகந்தேடி
வாக்கினிற் பொய்யுரையேன் வம்புக் கிழிக்கிறீரே
மரியாதை யில்லாமல் வார்த்தை பலுக்கிறீரே
தெருவார் நகைக்கவழி தேடிப் பழிக்கிறீரே
பெருமை பாராட்டாமற் பேசத் தொடங்கினீரே
புருஷனா யெண்ணாமல் புன்மை யுரைக்கிறீரே
முழுதுந் தலையில் முளகரைக்கப் பார்க்கிறீர்கள்
பழுதது பாரீர் பரதேசம் போய் விடுவேன்
என்னை யிழந்திடுவீர் யீன ருரைகேட்டுச்
சன்னதங் கொண்டு சதிசெய்தா லென்றுரைத்தார்.

கொள்ளிவாய் நீலி குழுமி யெழுந்திருந்து
கள்ளப் பயலேயென்னைக் கைவிடப் பார்க்கிறையோ?
உன்சமர்த்து மென்சமர்த்து முள்ளபடி பார்ப்போம்
உன்போ லிருப்பவரை யுற்றழைத்துக் கேட்டிடுவோம்
என்னைத் துரத்தவந்த வீங்கிவளை மொட்டையிட்டுப்
பின்னைத் துரத்தாமற் போவதில்லை பாரடா நீ

பள்ளிச்சி வந்தாளே பார்ப்பான் கடைத்தேற
உள்ளதொரு நூலை யுருவி யறுத்தெறிநீ
சத்தியஞ் செய்தெனைநீ தள்ளிவிடா யிப்போது
தத்தி விழுந்து தலைதுள்ளிப் போகாதே

என்றவள் சொல்ல வெழுந் தவதானியப்போ
இன்று முதலா வெனக்கு நீதாயாவாய்

உன்னைத் தொடாதகுறை யொன்றொழிய வுன்றனுக்குப்
பின்னைக் குறைபுரியேன் பீடழியப் பேசாதே.

இவ்வார்த்தை கேட்டே யெரிந்தவ ளேதுரைப்பாள்
ஒவ்வாத மூளி யுடன்கட்டை யேறுவளோ
அழுகி நீசெத்தால் அவளோ அறுப்பதென்றாள்
கிழிவியுட னெழுந்து கிட்டியொரு பேச்சுரைப்பாள்.

பள்ளச்சி நாறியிவள் பார்ப்பானைத் தேடிவந்தாள்
தள்ளிக் கழியாமல் சாகும் பொழுதிருந்தால்
செருப்பா லடிப்பார்கள் சேர்ந்த வுறவினர்கள்
சிரிப்பாணிப் பட்டவர்களுஞ் சீர்குலைந்து போகவேண்டும்.

மருந்தில் மயங்கினையே மாபாவி யிட்டாளே
தெரிந்த குழந்தைகளும் சித்தம் மலைந்தாரே
பாலகன்கள் இங்கிருந்தால் பாதகிதான் கெடுப்பாள்
சீல வழிமாறித் திறங்கெட்டுப் போவார்கள்
குழந்தைகளை நாங்களிதோ கூட்டியே போய்விடுவோம்
இழைந் திவளோடே யிருந்தழி யென்றுரைத்தாள்.

ஊரார் சிரித்திடவும் ஒத்துண்டு நீயழிவாய்
பேரூருங் கெட்டுப் பெருமை யழிவையென்றாள்.

இங்கிவர்கள் தீயுரையை யெண்ணமிட்டுத் தான்கேட்டுப்
பொங்கு சினத்தால் புழுங்கு மனமுடையார்
அவதானி நெஞ்சினுக்கோர் ஆன துணையாவார்
புவியி லெவர்க்கும் பொருந்து முதவிசெய்வார்
அனுகூல ரென்னும் அழகு பெயருடையார்
கனிவா யவதானி காற்கட்டைத் தான்பார்த்துப்
பிள்ளைகள் பெற்றுப் பெருங்காலங்கண்டாயே
கொள்வன செய்து குடித்தனம் பண்ணினையே
ஆனாலு மிந்த அதமை யுனக்காமோ
தானாக வுன்னைத்தள்ளிவிட்டா லென்னசெய்வாய்.

பேய்மாலப் பெண்ணே பொறுத்துக்கொள் ளென்றுரைத்து
தாய்தனை நோக்கியவர் தள்ளாத நீகிழவி

பிள்ளை மனதின்படி போகாமல் வாதுசெய்தால்
கொள்ளி யிழந்திடுவாய் கூடா துனக்கிதென்றார்.

என்ன வுரைத்தும் இருவருஞ் சம்மதியார்
பின்னை யிடுக்கண் பெரிது மிழைத்துவந்தார்.

தொப்பை முதலி சுடுசொற்கள் தாங்கேட்டுத்
தப்பிலிச் சொட்டை சலங்கொள் மொழிகேட்டுக்
குளறுவாய்க் குள்ளன் குயுத்தி யதுகேட்டுக்
களரி யதுகூட்டிக் கண்டவர்க்குச் சீட்டெழுதி
முண்டைகளைச் சேர்த்து முறிமருந்து தாம்தேடி

அண்டிப் பிறர்பால் அழிமருந்து தாம்தேடி
மந்திர வாதிகளால் மாற்றும் வழிதேடி
இந்திர ஜாலங்கள் ஏதேதோ பண்ணிவந்தார்.

அவ்வழிக ளெல்லாம் அவதானி தானறிந்து
ஒவ்வா மருந்துகளால் ஊறுவரு மென்றுணர்ந்தே
அனுகூலந் தம்மோடு மாலோசனை புரிந்து
மனதாரச் செய்துவரும் மற்றவர் சற்பனையால்
தீமை விளையுமெனச் சிந்தையு ளேக்கமுற்றே
யாமவர் தம்மை யகற்ற வழிதேடி

கொள்ளி வாயோடு கொடுமைசெய் அன்னையையும்,
மெள்ளப் புறம்போக்க வேண்டும் விரகிழைத்தார்.
ஆங்கவ ரப்போ தயிர்த்து மனங்கசந்து
நாங்களேன் போவோமோ நன்மைந்தர் தம்மைவிட்டு
என்னலு நெஞ்சத் திரங்கி யவதானி
தன்னந் தனியே தான்வருந்திப் பின்துணிந்து
வந்தவர் தம்மை வரக்கொண்டு போங்களென்றார்.
வெந்த வுளத்தாரும் மேலவரைத் தாமழைத்தார்
கண்ணாளன்றானுமப்போ கட்டோ டேபோகேனென்றான்
பெண்ணின் மணாளனுடன் பித்தரே போங்களென்றான்
மாற்ற மறியாத மற்றிருவர் போவதற்குப்
பேர்த்தடி வைத்தார் பெரும்பயண வாசையினால்

சீராளன் கல்யாணி சேர்ந்து வரப்போனார்
போராட்டந் தாமிழைத்துப் புண்படுத்தும் பொய்மனத்தார்

ஆதியூர் தன்னை யடைந்தவர் தாமிருந்தார்
தீதி லவதானி செல்லுஞ் செலவனுப்ப.
அவதானி பின்னே யனுகூல ரோடுரைப்பார்
புவனத்தி லில்லாப் புதுமை யெமதுநிலை
அறிந்தோ ரறிவார் அறியா ரெனவறிவார்
திறந்தெரியா வீணர் திருக்கு மொழிபகர்வார்
தேவதத்தை யென்னோடு சேர்ந்து வந்தாளென்றுரைப்பார்

பாவமதை மாற்றவொரு பக்குவஞ் செய்யவேண்டும்
நாடறியக் கல்யாணம் நானவளைச் செய்யவேண்டும்
தேடியே சூதிழைக்குந் தீயர் அடங்கவேண்டும்
புருஷன் பெண்சாதியென்று பூமியில் சொல்லவேண்டும்
வரிசைதப்பிச்சொல்பவரை வாய்மீதடிக்கவேண்டும்
சாத்திர மொப்பாது தப்பு விவாகமென்று
பார்த்தெவர் சொன்னாலும் பாவமிலை யிருக்கருமம்
விவகாரங் கண்டவர்கள் வேறா யுரையார்கள்
இவளை மணத்தலைய வேதமிலை நீதியென்றார்.
ஆபத்தோ ரைந்தில் அருவை மறுமணந்தான்
பாப விலக்காய்ப் பரியுந் தருமமுறை
பரதாரம் பார்த்தறியேன் பாவவழி போயறியேன்.
சரத மிவளுறவைத் தற்பரன் கூட்டிவைத்தான்.
ஆன மனையாக யாவரும் கண்டறிய
நானிது செய்யவேண்டும் நண்பரே யென்றுரைத்தார்.
அனுகூலர் கேட்டே யறைகுவா ரோர்வசனம்
கனமாம் விநாயகரைக் கண்டு கொணர்ந்திடுவேன்
சாத்திரங் கற்ற சதுரரைக் தானழைப்பேன்
பார்த்திது செய்யவல்ல பாசுரரை யானழைப்பேன்.
நீதி யறியாத நீசரை வாய்மடக்க
வேதமுறை யறிந்த விப்பிரரை நானழைப்பேன்.
பாரியைப் பார்த்தாவைப் பார்த்தேன் நான்பாரினிலே
ஓரினிவள் போல வுத்தமியைக் கண்டதில்லை
காசைப் பணத்தைக் கருதியிவள் வந்ததில்லை
மோசம் புரிந்து முழுத்திட வந்ததில்லை

தனிகர் கிடையாமல் தானும்மைப் பற்றவில்லை
இனிய குணம்பார்த்தே யீண்டுமைத் தானெடுத்தாள்.
தரிசனந் தேடித் திரிந்த பிரபுக்களைத்தான்
வரிசை யறிந்து வழிவழியே போகவிட்டுத்
தன்னைத் தான்காத்துத் தாழும் வழிபோகாமல்
மின்னும்மைக் கண்டு வெகுநா ளுறவாடி
இருவர் மனதும் ஏகமெனத் தானறிந்து
மருவினா ளும்மை மனது கனிந்தவளும்.
நற்கலை யோதி நறுங்கவி தான்புனையும்
அற்புதங் கண்டே யகமுருகி யிச்சைவைத்தாள்
கன்னிகை யாகக் கருதினாள் தன்னையவள்,
பின்னும்மை யேற்ற புருஷனென வரித்தாள்.
உம்பா கந்தன்னை யுறுதியாய்த் தான்பிடித்தாள்
தன்பாவ மெல்லாந் தவிடாய்ப் பறக்குமென்று;
கண்ணை யிமைபோலக் கட்டியுமை காத்திருப்பாள்
புண்ணியப் பேறாகப் போற்றியுமை யாதரிப்பாள்
தாது கலங்கையிலே தற்பரன் கண்பார்த்துத்
தீதிலுமை யளித்தார் திண்ணமென மகிழ்ந்தும்
அல்லும் பகலு மறுபது நாழிகையும்
நல்ல வளும்மை நயந்து பணிகள்செய்வாள்
உற்ற துணையா யுயிருக் குயிர்தருவாள்
பெற்ற தவமிவளைப் பெண்டாக நீர்படைத்தீர்!
அவளகம் நோகாமல் ஐயோவென் றேங்காமல்
குவளை விழியில் முத்துக் கோவைகள்தோன்றாமல்
காத்து நடத்தவேண்டும் கற்பகம்போல் நீரிருந்து
பார்த்து நடக்கவேண்டும் பண்பாக நீரிருந்து.
ஆகையி னாலே யழகு மணமதனைத்
தோகைக்குச் செய்து சுகம்பெற்று வாழ்ந்திடுவீர்
என்றூர தந்தவரும் ஈச்சுர பட்டரெனும்
நன்றாய் மறையுணர்ந்த நல்லவர் கையாலே
வேதியர் கையால் விவாகச் சடங்கிழைத்தே
ஆதி யூராரும் அரிவை கழுத்தினிலே
மங்கல மாகுநல்ல மாங்கிலியந் தான்முடித்தார்.
திங்களு ரோகிணிபோல் சேர்ந்தவர் தாமிருந்தார்!
சங்கதி யெங்குந் தழைத்துப் பரவியது
அங்குறு தாயு மறிந்துள்ளே யாயலுற்றாள்
பேதை மதியாலே பிள்ளைமேல் தண்டெடுத்தோம்

ஏதினிச் செய்வோம் இணங்கி நடக்கவேண்டும்
வம்பி மருமகளும் வன்னாக்குக் கொண்டவனைப்
பம்பர மாட்ட அவன்பார்த்து மனங்கசந்தான்.
நெல்வேலிச் சேஷையங்கார் நேயமுள்ள புத்திரிக்குச்
சொல்லுமுமணந்தான் தோஷமிலையென்று செய்தார்!
கைம்பெண் விவாகமிந்தக் காலத்தி லுண்டாச்சு
அம்புவி எங்கு மதுவே தலையெடுக்கும்
காலத் தியற்கைதனைக் கட்ட முடியாது
கோலமகனு மந்தக் கொம்பனையைத்தான் மணந்தான்
சாதிவிட்ட சாதியென்று தள்ளிலினி வாய்க்காது
நீதிக் கடுத்ததென்று நின்றுமகன் வாதிழைப்பான்
அவன் சொல்லனுமதிக்க வாயிரம்பேர்முன் வருவார்
புவனத் திதுவும் புதுமையாய் விட்டதிப்போ
பெண்டாக வந்தஅந்தப் பெண்ணும் பெருமையுளாள்
கொண்டவன் தன்னை விழிக்குள்வைத்தங் காதரிப்பாள்
குழந்தைகள் தம்மைக் குறைவின்றித் தான்வளர்ப்பாள்
பழந்தவறிப் பாலில் விழுந்த பழங்கதைபோல்
ஆச்சென்று சொல்லி யம்மை யகமகிழ்ந்தாள்.
பேச்சொன்றுஞ் சொல்லாமற் பேமாலக் கொள்ளியப்போ
நம்மால் நமக்கு நலக்கேடு வந்ததிப்பொ
சும்மா அவனையினித் தூஷித் திலாபமில்லை
பிள்ளைகள் பெற்றோம் பெரிய குடியானோம்
உள்ளபடிக் கவனும் ஓர்குறையுஞ் செய்யவில்லை
போக மனுபவிக்கப் புத்தியவன் கொண்டாக்கால்
சாகசஞ் செய்து தடுக்க முடியாது,
கொள்ளி வாய்கூசி கொடுமை தணிந்திருந்தாள்
உள்ளுளே கோபம் ஒடுங்கி யவளிருந்தாள்.
அறிந்தவ ரெல்லாம் அகத்துள் வியப்படையச்
சிறந்தவர் வாழ்ந்திருந்தார் தேவ னருளாலே.
அவதானி வாழி அவர்குடும்பந் தான்வாழி!
புவியிலிந்நூல் படிக்கும் புண்ணியர் தாம்வாழி!
இவ்வுலகில் உள்ளவர்கள் எல்லோரும் தாம்வாழி!
நவ்வி விழித்துரைச்சி ராணியார் கோல்வாழி!
அவதானிநற்கதையை யாதரவாய்க்கேட்பவர்கள்
புவனத்திதுவோர் புதுமையாய்க்கேட்பவர்கள்
தானாய்த்தலையெடுத்துத் தாரணியிற்பேரெடுத்துப்

பேனாய்ப் பெருமாளாய்ப் பிள்ளையவர் சீரடைந்து
தாயாதிக் காய்ச்சல் தகிக்காமற் றான்வளர்ந்து
வாயாடிப் பட்டிமக்கள் வம்புக்குத் தான்விலகித்
தாயால் விளைந்தபல சங்கடங்கள் தான்சகித்துப்
பேயாமனைவி செய்யும் பேயாட்டந் தான்பொறுத்துப்
பரம னருளாலே பாக்ய வசத்தாலே
தரும வழியாலோர் தார மடைந்தவர்தன்
குற்றங்கள் போக்கிக் குறித்தவர் தம்மிடத்தில்
நற்றங்கள் தூக்கி நடுவாய் நினைக்கவேண்டும்.
தேவதத்தை மெய்க்கதையைச் சிந்தைவைத்துக் கேட்பவரகள்
பாவ மதியால் படுநிந்தை சொல்லாமல்
ஆதி முதலாய் அவள்பட்ட மாவிடும்பைப்
பாதகர் கூடிப் படுத்திய பாடதனைப்
பேருக்குக் கட்டினவன் பேரழிம்பு செய்ததனை
ஆருக்கு மாகாமல் ஆஸ்தி யழிந்ததனை
பிணிக்கு மிரையாகிப் பேரழிந்து போனவனைத்
தனித்தவள் தள்ளித் தனியே யிருந்ததனைக்
குறும்பர்கள் சுற்றிக் கொடுமை புரிந்ததனை
மறுவி லவளை மசக்க முயன்றதனை
தன்னைத்தான் காத்துத் தரும வழியாகத்
துன்னிய பர்த்தாவைத் தூய வதுவைசெய்து
பதிக்குப் பணிகள்செய்து பாங்கா யிருப்பதனை
மதித்து மறுவொழித்து மாண்பது கொள்ளவேண்டும்
மானங் குலங்கல்வி வண்மை யறிவிவைக்குத்
தானமாய் நின்றவள்தன் தன்மை யறியவேண்டும்.
அம்மாணை யாடும் அழகுச் சகோதரிகாள்
இம்மாண் கதையை யிதயங் களிகூர
பாடுவீர் பாடிப் பலன்கள் பெறுவீர்கள்
நாடிப் படித்து நலங்கொள் நெறியமர்ந்து
குழந்தைகள் பெற்றுக் குணமாக நீர்வளர்ப்பீர்
விழைந்து நலம்பருகி மேலாக வாழ்ந்திருப்பீர்!
கழங்குக ளாடக் கவிபாடி நான்றருவேன்.
குழந்தைகாள் நீங்கள் குணமுடன் வாழ்ந்திடுவீர்!

ஸ்ரீ கருணாநிதியேநம:

முற்றிற்று

நூல் தட்டச்சு லோகசுந்தரம் ,செல்வநாயகி – சென்னை

 

 

You may also like

Leave a Comment