சென்னை நகரணுகித் தேரும் வினைகள்செய்து
மன்னு மகனை வளர்த்தாளே மாலுமையாய்
அன்னையு மிவ்வாறு றருமையுடன் வளர்க்க
சின்ன மகனுஞ் செருக்குடன்தான் வளர்ந்தான்
செல்வர் மகன்போலச் சீர்மையுடன் றான் வளர்ந்தான்
வல்லமை கொண்டு வரிசையாத்தான் வளர்ந்தான்
தாயுடனே பிள்ளை தழைத்திங் கிருக்கையிலே
நேயமற்ற வெட்டுணிக்கு நேர்ந்த பலவிடும்பை.
பேராளூர் நாதன் பெருங்கடன் பட்டதனால்
வாரா வருத்தம்வர வண்மைகெட்டு பேரழிந்தே
ஆத்திக ளெல்லாம் அயலார்க்குத் தானழுது
தோற்றார் தம்மூர்தனையும் சொல்லுங் கடனிருக்க.
கொண்ட வெசமானன் கோவப் பரங்கியவன்
குண்டுணி வெட்டுணியைக் கூப்பிட்டு நீங்களினி
ஊர்விட்டுப்போங்கள் உறுதொழில் பார்ப்பதற்கு
நேரு மனிதருண்டு நேயமுள்ள கேள்க ளேன்றான்.
அச்சொல்லைக் கேட்டே யனியாயப் பட்டிவர்கள்
பச்சைப் பசும்பயிரும் காய்ந்த கழனிகளும்
தொண்டை கதிர்ப்பயிரும் தோட்டக்கால் செங்கரும்பும்
அண்டை அயலுடனே யாய்ந்தகை மாற்றுகளும்
சகலமும் விட்டே தனித்தெங்கே போவதென்று
வகையாகத் தாமுரைத்த வார்த்தையவன் கேளான்
பரங்கிச் சனத்தை பரிவாகத்தான் கொணர்ந்தே
இருங்கா மனத்துனும் எங்கெங்குந் தானிருந்த
வேதியர்க ளப்போது வெந்துமன நொந்துருகித்
தாது கலங்கியவர் தங்கள் மனைமக்களுடன்
வலசையெடுத்தார்கள் வம்பருக் காற்றாமல்
பலவூ ரடைந்து பதிகண்டு தாமிருந்தார்.
வெட்டுணியு மப்போது வேங்கையூர் தானடைந்து
துட்டப் பரங்கிமேலே தோரா வழக்கேடுத்துத்
தாம்பட்ட கட்டமெல்லாந் தாவென்று வாதிழைத்து
வீம்பன் மேல்தீர்ப்பும் விறல்கொண்டு தாமடைந்தார்.
அந்தப் பரங்கியப்போ ஆனபொருள்க ளேல்லாம்
கந்தையு மீராமல் கள்ளத் தனமுடனே
பந்துக்கள் பேராலே பார்த்தெழுதி வைத்துவிட்டுச்
சிந்தை மகிழ்ந்தே சிரித்தவன் கைவிரித்தான்
வெட்டுணியும் வாயில் விரல்வைத்துக்கோண்டழுதார்.
துட்டனாந் குண்டுணியும் சோல்லியே காட்டலுற்றார்
மாடு கன்றெல்லாந் மடிந்தன வெக்கையினால்
ஓடெடுத்து முன்போலேத் தேடி யலய லுற்றார்
மதிகெட்டுத் தள்ளாடி வாடி வதங்கியவர்
புதுவைப் புறந்துறந்து போனார் வழிதேடி
அங்கிங்கலைந்தே யடுத்தரோ சென்னைநகர்
துங்க மதனியுறை சூழலைத் தாமடைந்தார்.
ஆங்கவள் கேட்டே அவர்பட்ட கஸ்தியெல்லாம்
ஏங்கி யிரங்கி யிருமென்று கையமர்த்தித்
தங்கை வருந்தத் தற்யாமல் தான் பதறி
மங்கை யவர்களையும் வைத்தாங்கே யாதரித்திதாள்.
வெட்டுணி தானும் விதம்விதமா முயன்று
பட்டணத் துள்ள பணக்காரர் தம்மிடத்தில்
ஓடி யலைந்தே யுறுபணி தாமிழைத்துச்
சரக்குகள் வாங்கித் தரகரியா யமைந்து
வரத்துள்ள வேலைபல வாகாகப் பார்த்துவந்தார்.
அழிகண்ட குண்டுணிகள் ஆன வினையாளன்
குழை கன்றுபோலக் குலவி வளர்வதனைப்
பார்த்துச் சகியாமல் பாலனிருப் பறிந்து
வேர்த்து மனம்புழுங்கி வீங்கற் பயலுமிப்போ
நோஞ்சற் பயலுமிப்போ நோக்கப் பருத்தானே
ஆனை போலுப்பி யகமை மிகவடைந்து
தானிப்போ நம்மையொரு சட்டையுஞ் செய்யானே
என்றிந்த வண்ண மெரிந்துள நொந்தார்கள்
நன்றி சுட்டுத் தீமையது நாளும்புரிந்தார்கள்.
வினையாள னப்போ மிகையடைந்து கொக்கரித்து
கணியா னொருவரையும் கைகொட்டித் தானகைப்பான்
மானாவதி யறிந்து மருவும் புருஷனுடன்
ஈனருரை கேட்டே வீங்கிவரை வீட்டைவிட்டி
முன்னே துரத்திவிட்டு முடுகியவர் வந்திடத்தில்
சின்னத் தனமாகச் சேர்ந்திருந் துமும்மருகன்
தம்பியு முன்னருந்த தாயாதிக் காய்ச்சல்தன்னால்
துன்பமவர்க் கிழைக்கச் சோலிபல செய்கிறார்கள்
வினையாளனாங்கவரை வேண்டுமட்டும்பேசுகிறோன்
நினையாமற் கூடியின்ன நேர்ந்திருக்க லாகாது
பச்சைமண் தன்னுடனே சுட்டமண் பற்றாது
லச்சைக் கேடாவதன்முன் நேரொதுங்கி நிற்கவேண்டும்
தனியே குடியிருந்து சாணொதுங்கி நாமிருந்தால்
இனியிவர்கள்செய்யு மிடைஞ்சலுக்குத்தப்பிநிற்போம்.
என்றது கேட்டே யிதுசரி யென்றவரும்
ஒன்றிடம் பார்த்தே யொதுங்கிக் குடியிருத்தார்.
அழிகண்ட குண்டுணிகள் ஆகட்டு மென்றிருந்து
வழியில் வினையாளன் வந்த பொழுதறிந்து
பதுங்கி மறைந்தவரும் பாலகனைத் தாமடிப்பார்.
அதுகண்டு மைந்தனப்போ ஆனைமுகன் பூனைமூஞ்சி
துங்கப் புலிகளென்னுந் தோழர்களைத் தானழைத்துப்
பங்க மடைந்தனைப் பாங்காகத் தானுரைக்க
ஆகட்டு மென்றே யவர்கள் கறுவடைந்து
போக விடுத்தே புறத்தவர் தாமிருக்க
வினையாளன் றன்னையிந்த மிண்டரவர் கண்டறையப்
பனையேறிப் பாம்பெனவே பாய்ந்தவர்கள் மற்றவர்கள்
குண் டுணிதன்னைக் குமைத்துப்பிழிந்தெடுத்தார்
அழிகண்டன் றன்னை யறைந்துதைத்து விட்டார்கள்
பிழிய வழுதுகொண்டு போனார்கள் பேதைமக்கள்
வெட்டுணி யண்டை விருவிருத்துத் தாமழுது
பட்டி மகன்செய் படுவினையைப் பாருமென்று
மூர்க்கன் வினையாளன் முன்பகையைத் தானினைந்து
மார்க மதில்வளைத்து வலலாரைக் கொண்டடித்தான்
என்ற உரைகேட்டே யெரிந்தந்த வெட்டுணியும்
ஒன்று முரையாமல் ஓடிவந்து காந்தாரி
சிறந்த மகனும் தெருவிலே கோலிகுண்டு
அறிந்தங் கேயாடும் அமையமதில் ஆங்கவனைக்
கன்னத் தறையலுமே கண்டுநின்ற தோழரெல்லாம்
என்னத்துக் கென்றவரை யெதிரிட்டுதங தாக்கினார்கள்
நீங்கள்யார் போங்களென்று நெடியவர் தாமுரைத்தார்
நாங்க ளின்னார்களென்று நாய்மகனே சொல்வமென்றே
கல்லாலுங் கட்டியாலுங் கைகுண்டு கோலியாலும்
எல்லாரும் தாம்புடைக்க விளைத்தவர் தாமெலிந்து
பற்றிச் சிலரைப் பதைக்கவே தானறைந்தார்
எற்றி யவர்கள் இரைச்சலிட்டு மேல்விழுந்தார்
மண்டன்னை வாரி மலர்க்கண்ணில் தூற்றிவிட்டார்
கிண்டரு மப்போ கிறுவெனத் தாஞ்சுழன்று
காலா லுதைத்திடுவார் கைகொண்டு தாமடிப்பார்
பாலர்க ளெல்லோரும் பக்கம் பறிந்திடுவார்.
பேருத்தி யானபெருஞ் சிறுவர் தாமறிந்து
நேரு மிடத்தினுக்கு நெறநெறனப் பற்கடித்துத்
துங்கப் புலியும்வந்தான் சோட்டாத் தடிபிடித்து
மங்காதவானைமுகன் மார்ச்சாலமூஞ்சிவந்தான்.
ஓயேய் பெரியோய் உமக்கென்ன கேடுகாலம்
சாயம் எடுத்திடுவோம் சாப்பாடுதான் கொடுப்போம்.
வந்த வழிபார்த்தே வகையாக வோடுமென்றார்
இந்த வினையாளன் எங்களுயிர்க் குயிர்பார்
இன்றது கேட்டே யினியிருத்தல் மோசமென்று
துன்றுஞ் சனங்கள்தமைச் சூழ்ந்தவர் நோக்கியப்போ
அண்ணன் மகனிவனை யானடக்கி நல்லவழி
நண்ணும் படிக்குவந்தேன் நாணமற்ற பட்டிமகன்
துட்ட ருறவுகொண்டு துன்மார்க்கந் தானிழைத்துக்
கெட்டினிப் போவானென்றே வெட்டுணி தாம்நடந்தார்.
திட்டமாய்க் கேட்டவர்கள் சீயன்று திட்டியென்ன
மட்டிநீ யென்றுரைத்து வந்துவழி போனார்கள்.
வினையாள னப்போ விதியென்னக் கேட்டிருந்தான்
அனியாயப் பாவி யகந்தைக்குத் தான்வியந்தான்.
வீடடைந்து வெட்டுணியும் வெந்துருகித் தம்பியையும்
நாடுமழி கண்டனையு நன்காய்ப் புறமழைத்துத்
துட்டன் வினையாளன் சோலிக்குப் போகவேண்டாம்
மட்டி லிருக்கவேண்டும் வம்பிநழுத் தீராமானால்
படுக்காளிப் பையனுக்குப் பக்கப் பலன்களுண்டு
அடுத்தவனைக் காப்பதற்கு மண்டைப் பலன்களுண்டு
சும்மா யிருங்களென்று சொல்லி மதியுரைத்தார்.
சும்மா யிருப்பாரோ சூதிழைக்கும் வஞ்சமக்கள்
உறவாடித் தான்கெடுக்க வுள்வயணந் தேடினார்கள்
மறைவாய்க்கொடுமைசெய்ய வன்சமயம்பார்த்திருந்தார்.
வினையா ளனப்போ விகடங்கள் தான்படிப்பான்
பணிவான பார்ப்பாரப் பாலரைப்போல் நடவான்
இரக்க நடவானாம் ஏங்கிக்கை யேந்தானாம்
பரக்க விழியானாம் பற்றிறந்து கெஞ்சானாம்
கெம்பீர மாகக் கெரிவித்து நிற்பானாம்
அம்மா வடக்க வடங்கா திருப்பானாம்
தோழர்க ளோடு துடுக்குகள் செய்வானாம்.
ஏழை போல்தானும் இருந்திடும்பு செய்வானாம்
தத்தாரி யென்றுந் தறிதலைக் கொள்ளியென்றும்
எத்தாலும் தான்படியா னீனனிவ னென்றவனைக்
கண்டபேர் சொல்லக் கருத்தழிந்து காந்தாரி
துண்டரிகப் பிள்ளைதனைச் சூழ்ந்து பிடித்தவளும்
பாவி மகனே பழிகாரா வென்மனது
வேகவே நீயும் விடுபட்டி யானாயே
பங்காளி முன்னே பரிபவங் கண்டாயே
இங்கவர்க் கையோ விளக்கா ரமானாயே
தந்தை பெயரதனை மைந்தனீ தான்கெடுத்தாய்
மைந்தன் பிறந்து வரிசை குலைத்தாயே
இல்லாமற் போனாலும் ஏக்கமற்று நானிருப்பேன்
பொல்லாத பிள்ளைநீ போனாலும் நல்லதென்று
இழுத்து மகன்முதுகி இருகையால் தானறைந்து
தழுத்தழு சொல்லாள் தலையி லறைந்துகொண்டு
கதறிப் புலம்பலுமே காளையும் கைதிமிறி
யுதறி யெறிந்தவனு மோடியே தான்மறைந்தான்.
அச்சமயங் கண்டே யழிகண்ட குண்டுணிகள்
கொச்சை நினைவால் குமரன் றனையணுகி
இங்குவா அப்பாநீ யெம்முரையைத் தட்டாதே
மங்கு மதியுடையாள் மாதாவோ வுன்றனுக்குப்
பாலலெனனப் பாராமல் பாவி யடித்தாளே
கோல முதுகில் கொழுக்கட்டை போலாச்சே
இன்னம் மிருந்தக்கால் இப்படித் தானடிப்பாள்
பின்னைநீ யெங்கேனும் போய்விடா யென்றுரைத்தார்.
அம்மை மேற்சொல்லும் அவர்கள் முகநோக்கிச்
சும்மாநீர் போங்களெனச் சொல்லி யயல்நடந்தே
உள்ளங் கலங்கி யொருவீட்டுத் திண்ணையிலே
மெள்ள விருந்து விதியை நினைந்தழுதான்.
தாயும் வருந்தித் தவிக்கிறா ளென்பொருட்டால்
நாயினுங் கேடாய் நலங்கெட்டு நான்வளர்ந்தேன்
கல்வி யறியேனான் காலம் பழுதாச்சு
புல்லுந் தொழிலறியேன் புத்திகெட்டு நானிருந்தேன்
மதங்கொண்டு நானிருந்தேன் மாதாசொற் கேளாமல்
இதஞ்சொல்லி யென்னையினி யிங்கார்க்கை தூக்கவல்லார்
என்றுருகி நிற்கவெதிர் வீட்டு மாடியின்மேல்
நின்றுலவு பூபனருள் நெஞ்சுடைய கங்குரெட்டி
கங்கு ரெட்டிகண்டு கருணையுடன் றாழவந்து
இங்குவா பிள்ளாய்நீ யேனழுவ தென்றறைந்தான்.
கண்களி னீர்துடைத்துக் காளைமைந்த னேதுரைப்பான்
பெண்கள் சிகாமணியென் பெற்றதாய் பாஷணையால்
துள்ளு குட்டியானேன் தொழிலொன்றுங் கற்றதில்லை
எள்ள வுடம்பெடுத்தேன் என்றாய் மனம்வருந்த
ஆண்டு பதினைந்தானேன் ஆணழகனாய் வளர்ந்தேன்
நீண்ட கலையறியா நிர்மூடன் நாட்கழித்தேன்
என்செய்வ தென்றே யிதயம் புழுங்குகின்றேன்
என்செய்தி யீங்கிதென்றே யேங்கி யழுதுநின்றான்.
இந்த மொழிகேட்டே யீர மனமுடையான்
மைந்த மயங்காதே மாண்பாக நீபடிப்பாய்
நித்தம் படிப்பதனை நேசமுட னென்மகற்குப்
பத்திரமாச் சொல்லிவைத்தாற் பாங்காக நானுனக்கு
மாத மைந்துரூபாய் வகையாக யுதவிசெய்வேன்
கேத மினிவேண்டாம் கிளர்ச்சிய,டன் வாசியென்று
சொல்லி யைந்துரூபாய் சொடுக்கெனக் கையிலிட்டார்.
மெல்ல மகனும் வெறுதததாய் முன்னணுகி
அம்மா வருந்தாதே யாண்டவ னின்னருளால்
செம்மைப் படவுதவி செய்தா ரொருவரென்று
தாயார்தங் கைக்கொடுத்துத் தத்துவத்தை மேலுரைத்தான்
தாயாரும் வாங்கித் தழைத்து மனங்குளிர்ந்தாள்
தன்மகனை வாரியவள் தானெடுத்து முத்தமிட்டாள்
தன்மகனை வாழ்த்தியவள் தான்மகிழ்ச்சி கொண்டிருந்தாள்.
வினையாளன் சென்றானே மேதைப் புலவரிடம்
துணிவாகத் தான்படித்தான் தொட்ட நூலத்தனையும்
படித்ததனை ரெட்டிபெற்ற பாலனுக்குச் சொல்லிவந்தான்
படிப்பவர்க்குச் சொல்லும் பரிசிற்றிற மடைந்தான்
பாடங்கள் கேட்கப் பலசிறுவர் கூடினார்கள்
பாடங்கள் சொல்லிப் பயன்கண்டு பேரடைந்தான்
பார்புகழும் பேருடையான் பச்சையப்பன் பள்ளிதனில்
யார்வமுடன் வித்தை யடவாய்ப் பயின்றுவந்தான்
பரிக்ஷைகள் தந்து பரிசுகள் தானடைந்தான்
அரை க்ஷணம் வீணே யழியாமற் றான்படித்தான்
பச்சையப்பன் தர்மப் பரிபாலனத் தலைவர்
இச்சிறு வன்றன்னை யினிய துரைத்தனத்தார்
சாத்திர சாலையினில் தான்கற்றுத் தேறுதற்கே
யேற்றவ னென்றே யிருநிதி தானுதவி
அனுப்ப வினையாள னாங்கணுகித் தான்படித்தான்.
தனக்குள் மகிழ்ந்து தளர்வினறி தான்படித்தான்
அக்கழக நற்றலைவர் ஆச்சரிய நற்குணத்தார்
துக்க முகங்கண்டால் துவளு மனமுடையார்
கருணைப் பெருக்குடையார் கற்பிக்கு நேர்மையுள்ளார்
அருணன் றன்கோமான்போல் ஆழ்ந்தவிரு ளோட்டவல்லார்
ஊணர் கலைக ளொருங்கறிந்த வானிதியம்
காண்போ ரருந்தக் கறந்தளிக்குங் காமதேனு
முகத்திற் குறியறிந்து முதிர்ந்த வறிவதனால்
அகத்தில் நிகழ்வதனை யாராய்ந்து தாமறிவார்
தன்கீழ்ப் படிப்பவரின் தன்மைகளை தாமறிவார்
அன்பா யவர்கள் அளவறிந்து நூலுரைப்பார்
பைந்தேன் ஒழுகுமொழி பால்வடியு நீண்டமுகம்
சிந்தை விசாலநெற்றித் திண்மை நெடுங்கரமும்
கண்டோ ர் மனமுருக்குங் கற்பவர் மெய்க்கனிவுக்
குண்டோ குறையொருக்கால் ஓதுவிக்கு நல்லகுரு
குணங்கள் பலபெருக்கிக் குற்றங் குறைத்திடுவார்
இணங்கா முரடர்களும் ஈங்கிவர்க்குத் தாம்மசிவார்
உள்ளே கறுக்கொண் டொருதீங்கு தாம்புரியார்
மெள்ளக் களையகற்றி மேம்பயி ரோம்புவார்போல்
நாளு மதியுரைத்து நல்லவழி புல்லவைத்து
நாளு மனப்பயிரை நன்கு வளர்த்துவந்தார்
ஏழைச் சிறுவருக்கு மேற்கு முதவிசெய்வார்
மொழை மதியும் முழுமதி யாக்கிடுவார்
ஈன்ற வொருவனைப்போல் எல்லோர் தரமறிவார்
ஈன்ற வொருத்தியைப்போல் ஏற்றபே ரன்புவைப்பார்
ஆசான் துரோணனென்பார் ஆய்ந்த கலைபயிற்ற
நேசமா யெல்லோரும் நேருறத் தாம்பயின்றார்.
வினையாள னப்போ வினையமுடன் றான்பயின்றான்
கனிவாக வாசான் கருதும் படிநடந்தான்
எல்லோருக்கும் முந்தியிருங் கழகந் தான்புகுவான்
எல்லோர்க்கும் பிந்தி யிருந்தவன் தான்படிப்பான்
உரைத்தவை யெல்லாம் உருவிட்டுத் தான்படிப்பான்
தரித்திர புத்தியென்று தன்னை வெறுத்திடுவான்.
நாளுமிவன் செயலை நன்றாய் நினைந்துகலை
ஆளுந் துரோணரவர் ஆச்சரிய முள்ளடைந்தே
அன்பா யருகடைந்தே யப்பாவுன் மெய்ச்சரிதம்
என்பாலு ரைப்பாயென வேழைச் சிறுவனப்போ
தான்பட்ட பாட்டைத் தலைக்கட்டிச் சொல்லிநின்றான்.
தேன்பட்ட வின்சொலினால் தேற்றிக் குருவுரைப்பார்:
வையகத்தி லுன்போல் வருந்தினார் வாழ்ந்திடுவார்
மெய்யாய்த் தலையெடுப்பாய் மேலே சுகம்பெறுவாய்
உழைக்கச் சலியாதே யுற்றதுணை நானுனக்குப்
பழிப்பில் நெறியிலிரு பாலவெனச் சொல்லியவர்
சீவனஞ் செய்வதற்குஞ் செல்லுந் தனமுதவி
நாவலர் மைந்தனுக்கு நல்ல மதியுரைத்துச்
சிறுவருடன் கூடச் சேர்த்துக் கலைபயிற்றிப்
பொறுமையுடன் தனியே பின்னுங் கரைத்துரைத்தே
ஆன குருவருள ஆங்கவ னாடோ றும்
ஞான மதில்பெருகி நற்குணங் கொண்டிருந்தான்.
சாத்திரங்கள் கற்றான் தமிழ்நூல்கள் தானறிந்தான்
பார்த்தவர்கள் மெச்சப் பலவர்க்குத் தானுரைத்தான்
தன்கீழ்ப் படித்தவரைத் தன்னைப்போ லாக்கிவைத்தான்
மின்னுந் தமிழதனில் மெய்ப்புலவ னாயிருந்தான்
தமிழருமை கண்டதனிப்புலவ னாயிருந்தான்
தமிழருமை கண்டு சபைமெச்சப் பேசிவந்தான்
அவதானஞ் செய்தே யரியபுக ழேடைந்தான்
அவதானி யென்றே யழகுபெயர் வாய்ந்திருந்தான்
துரோண ருரைத்தபடி தூய வழிநடந்தான்
அரணா யவரிருக்க அல்லல் தொலைத்திருந்தான்.
ஊணர் வயித்தியங்கள் உள்ளபடித் தான்பயின்று
காண மனந்துணிந்து கனிவுடைய சற்குருபால்
கருத்தை வெளியிடவே கற்றவரும் மற்றுவந்து
மருத்துவச் சாலையிலே வைத்தார் மகன்றனையும்
உடற்கூறு கண்டே யுயிருலவும் போததனில்
நடக்குந் தொழில்களையும் நாதன்கை நேர்மையையும்.
நோய்கள் வரும்வழியும் நோய்கள் படுமுறையும்
நேய மருந்துகளும் நேரிரண மாற்றும்வகை
ஆய விவையெல்லாம் அவதானி கண்டறிந்தான்
ஓயா முயற்சியுடன் உள்ளபடி கண்டறிந்தான்
அவதானி தேகத் தவயவங்கள் தான்பகுத்தே
அவதானமாக வவற்றுண் ணிலையறிந்தான்.
ஆய்ந் தறியும்வேளை அவனிப் பிராமணர்கள்
வாய்ந்த மதக்குறும்பால் வண்மையில் மத்திமர்கள்
ஈங்கிவர்கள் பொங்கி யெழுந்தாரே மேல்வெகுண்டு
ஆங்காரத் தோடே அவதானி முன்திரண்டு
உன்சாதி யென்ன உறுகுடியின் கீர்த்தியென்ன
புன்சாதி செய்யும் புழுக்கைத் தொழிலிநழுத்துச்
சாதி கெடுக்குஞ் சதிகாரா வெங்கிருந்தாய்
நீதி மதந்துறந்து நீங்கினாற் றோஷமில்லை
பிணந்தின்னி யன்றோ பிணமறுத்துச் சோதிப்பான்
பிணந்தீண்டத் தீட்டுப் பிடியாதோ பார்ப்பானை
பார்பானோ நீயும் படித்த பறையனென்றார்
ஆர்ப்பாட்டஞ் செய்தே யவர்கள்வளைந்துகொண்டார்
கவிசிங்க மப்போ கருத்திற் பயமொழிந்து
விவிதமா ஞாய விவரங்கள் தானெடுத்துக்
காட்டி விரித்துக் கசடர் மனந்தெளிய
நாட்டிற் கிதம்புரியு நல்வினை யென்றேடுத்துச்
சொல்லியே வாய்மடக்கத் தோஷமிலை யென்றவர்கள்
எல்லாரும் போனாலும் ஏறாமடைக் குத்தண்ணீர்
பாய்ச்ச முயலும் பதடிக ளெத்தனைபேர்
தீய்ச்செயல் சோறாகத் தேடுபவர் எத்தனைபேர்
தாயாதிக் காய்ச்சலினால் தஞ்சமயம் பார்த்திருந்த
தீயர்க ளெல்லாரும் சேர்ந்தார்கள் சற்பனைக்கு
வெட்டுணியுங் குண்டுணியும் வீணழி கண்டனுமாய்க்
கட்டாகத் துட்டர்களைக் கட்டித் திரண்டுவந்தே
அவதானி வீட்டை யவர்கள் வளைந்துகொண்டு
அவதானி தன்னை யழித்திடுவோ மென்றுநின்றார்.
ஆங்கதனைக் கண்டே யவதானி யென்னசெய்தார்
பாங்குடனே கொல்லை வழியாகத் தான்பறிந்து
மதியுள் துரோணருடன் மந்திரந் தான்புரிந்து
அதிகாரி பாற்சென் றடங்கலுந் தானுரைத்துச்
சந்தடி யின்றித் தலையாரிக் காவலுடன்
வந்து வளவடைந்து வம்பர்களைக் கைபிடித்துப்
பிணைகள் தரக்கொண்டு பேயர்களைத் தாம்விடுத்தார்
பிணைகள் கொடுத்தவரும் பேசாமற் போய்மறைந்தார்.
மறைந்தாலு மென்ன மனத்துட் கறுவுடையார்
துறந்தா னிவன்குலத்தைத் துட்டனெனப் பேரெழுப்பிச்
சாதிவிட்டு நீக்குதற்குச் சற்பனகள் தாமிழைத்தார்
போதனைகள் செய்து புறத்திருந்து தீங்கிழைத்தார்.
கவிசிங்க மப்போ கருதுவார் தம்மனதில்
புலியில் மதங்களென்று பொய்யனுட் டானமென்று
மாசுள்ள நெஞ்சரன்றோ வேஷங்கள் தாம்புரிவார்
சீசீ யிதென்னவென்று சிந்தை யொழிந்திருந்தார்
பெற்றவ ளப்போது பேத மனதுகொண்டு
புத்திரன் மாட்டுப் புழுங்கியே யேதுரைப்பாள்
பிணமறுத்துப் பார்த்தால் பிசகிது ஞாயமன்று
குணமன்று பிள்ளாய் குரங்குப் பிடிவேண்டாம்
ஊரோட வொக்கவுநீ யோடல் தகுதியென்றாள்.
நேராகத் தாயுரைத்த நீள்வசனம் தான்கேட்டு
கவிசிங்க மப்போது காட்டியொரு வார்த்தைசொல்வான்
அவதானி யப்போ தருந்தாய்க்கு நீதிசோல்வார்
குருட்டுச் சனங்களுடன் கூடவோ போவதம்மா?
திருட்டுப் பயல்வேஷந் தேர்ந்தோர் மருவுவரோ?
வெளிச்ச மதுபோட வேண்டாதே யென்மனந்தான்
ஒளித்துப் பிசகுசெய்ய வொப்பாதென் னுள்ளமம்மா
கள்ளைக் குடிப்பவருங் கைமோசஞ் செய்பவரும்
உள்ளத்து ளொன்றா யுதட்டொன் றுரைப்பவரும்
கொடுத்தவன் சாகவென்று கோரும் பெரியவரும்
எடுத்தறு தக்கவென்றே யெண்ணமிடும் புண்ணியரும்
பிறருடைய வாழ்வு பொறுக்காத பேதையரும்
பிறர்பொருளை வவ்வுதற்குப் பேராசை கொள்பவரும்
பொய்ச்சாக்ஷி சொல்லிப் பிழைக்கும் புரட்டர்களும்
இச்சகம் பாடி யிருந்துண்ணும் பாவிகளும்
வக்கணை பேசி வழிச்சண்டை கிண்டிவிட்டுக்
கைக்கொள்ளை கொள்ளுங் கடன்காரப் பேயர்களும்
திண்ணைகள் தூங்கித் திடங்கெட்ட மாக்களைக்கண்
டுண்ணிகள் போல உறுக்கும் பதடர்களும்
கொடுத்தவிடம் வாழ்வு கொடாதவிடம் கல்லெடுப்பு
வடிப்பமாய்ப் பேசிவரும் வல்லடி வம்பர்களும்
அடுத்துக் கெடுப்பவரும் ஆகாத செய்பவரும்
தொடுக்கும் வழிகளுக்குள் துட்டவழி நாடுவோரும்
பொய்யாணை யிட்டுப் பொறுத்தார்க்குத் தீங்குசெய்தும்
ஐயோவென் றெண்ணாத அனியாயப் பாதகரும்
கட்டுக் கட்டாகக் கனக்க விபூதியிட்டு
மட்டில்லா நாமம் வழித்துக் குழையலிட்டு
மாணிக்கப் பட்டையிட்ட வண்ணப் பெருந்தூண்போல்
சாணுக்கு மேலகலச் சாயக்கரை பொலிய
ஓப்புந் துகிலுடுத்தி ஓரைந்து மெட்டுஞ்சொல்லி
வைப்பாட்டி கொண்டையிலே வாடும் மருவெடுத்தே
அம்மன் பிரசாதம் ஆத்துமா வீடேறும்
இம்மைச் சுகந்தரும் இந்தாறும் என்றுசொல்லி
ஏமாற்றி மூடர்களை யெத்திப் பணம்பறிக்கும்
சிமான்கள் ஈங்கிவர்பின் தேடிநான் போகவோகாண்?
இப்படிப் பட்டவர்கள் எத்தனைபேர் நங்குலத்தில்
செப்படு வித்தைகாட்டி சீவனம் செய்பவர்கள்
அப்படிக் கொன்றறியேன் ஆகாத காரியங்கள்
துப்பா மென்வித்தையினால் சுகசீவி யாயிருந்து
தத்துவங்கள் ஆய்ந்தால் தரணியிற் றீட்டுமுண்டோ !
வித்தகன் கைவேலை விரித்தறிந்தாற் குற்றமுண்டோ
பிணத்தீட்டுப் போவதற்குப் பின்னைவினை யில்லையோதான்
குணக்கு மனத்தவர்கள் கூறுவதுங் கோணலன்றோ
நிறைந்த வுயிருலவு நேயமுள்ள இவ்வுடலைக்
குறைந்த குணத்ததென்று கூறுவதும் புன்மையன்றோ?
ஈசன் கரத்தமைந்த வெண்ணரிய விவ்வுடம்பை
சீசீ யெனத்தொலைத்தால் சிட்டர்கள் செய்கையாமோ?
ஆன்மா பிரிந்துவிட வைம்பூத வாக்கையிது
தான்மாத் திரமிராது தக்கதன் மாத்திரையாய்
பிரியுஞ் சமயம் பிணநாற்றந் தானேடுக்கும்
எரியிடா விட்டாலே யெங்கும் விஷமாகும்
என்பது கொண்டே இருந்த பெரியோர்கள்
என்பவளவாக வெரியிடுக வென்று வைத்தார்.
மற்ற வுயிர்கள் மரித்தக்கால் ஆங்கவற்றைச்
செத்த வுடனே சேமிப்பார் தின்றொழிப்பார்
ஏனம்மா வீட்டில் எலிகள் பெருச்சாளி
ஈனப் புழுக்கரப்பு மெத்தனையோ சாமவைக்கு
வீடே சுடுகாடு மேலாம் மனிதருடல்
காடே கழியவேண்டும் கைதொட்டால் தீட்டுமுண்டு?
அற்ப வுடல்போல் நம்அங்க மழியாது
சொற்பக் கடிகையிலே துர்நாற்றம் போகாது
காக்கை கழுபிடுங்கக் கண்டு சகியார்கள்
ஆக்கை யதனால் அரிய வரிசையுண்டு.
பாக்கிய முள்ள பரமன் படைப்பதனில்
மீக்கோள் ளறிவால் விளங்கிடு மின்னுயிர்தான்
உவந்து வசிக்கு முடலுக்குத் தீட்டுமுண்டோ !
கவந்தங்கள் பேச்சால் கலங்காதே தாயேயென்றார்.
கட்டுரை கேட்டுமந்தக் காந்தாரி சம்மதியாள்
நெட்டுயிர்ப்போ டுள்ளமது நெக்குருகித் தானயர்ந்தாள்.
ஊர் வாயைமூட வுலைமூடி யில்லையென்று
தேராம லம்மை திடங்கெட்டு நிற்கையிலே
ஓருறுதி செய்ய வுளத்திலே தான்மதித்தாள்.
சீராம் மகற்குத் திருமணஞ் செய்துவைத்தால்
பேரா முறவாகும் பின்பலமே லுளதாம்
சாதியார் கைசலித்துத் தாமே யடங்குவார்கள்
சூதிது வென்றே துணிந்தாளே காந்தாரி.
காந்தாரி யம்மன் கருத்துக்குத் தானிசையப்
பாந்தமாப்பெண்கொடுக்கும் பண்புடையவொண்கிளைஞர்
போகா வழியென்று புண்டபெய ரந்தணரும்
ஆகா வழியாம் அவர்மனைவி தன்னுடனே
பலாமுருடென்னும் பரிவுள்ள பெண்ணுடனே
குலாவி யிருக்குமொரு கூலங் கிஷமறிந்து
காந்தாரி யம்மன் கடுகியவர் பாலடைந்து
ஆந்தரஞ் சொல்லி அரியமகன் றனக்குப்
பெண்ணைக் கொடுத்தே பெரியகுடி யாக்கவேண்டும்
கண்ணைக் கொடுத்தே கனத்தகுடி யாக்கவேண்டும்
சம்பந்தஞ் செய்தே தழைத்தகுடி யாக்கவேண்டும்
நம்பி நீரிந்தசுபம் நாளையே செய்யவேண்டும்
குலத்தை யறியவேண்டாம் கோத்திரந் தேடவேண்டாம்
கலப்பதி னத்திலென்றால் காணுஞ் சகுனமில்லை.
இவ்வார்த்தை கேட்டே யிருவழியுஞ் சம்மதித்துச்
செவ்விதா மென்றுரைத்துச் சிந்தை களித்தார்கள்.
ஆனாலு மொன்றுரைப்பேன் அம்மணியே கேளென்று
தானாகச் சொல்வாளாம் தன்வழியே போமடந்தை
உன்பிள்ளை யிப்போ துலகமெல்லாம் பழிக்க
என்பு தோல் கீண்டிங் கிருக்கிறான் புத்திகெட்டே
அவனுக்குப் பெண்கொடுத்தால் ஆரார் நகையார்கள்
புவன நகையாதோ போடிபோவென் றுரைத்தாள்.
அவ்வார்த்தை கேட்க அகங்கொதித்துக் காந்தாரி
சவ்வாசு கெட்டியடி சண்டியென்ன பேச்சுரைத்தாய்
என்மகனைச் யேசுதற்கே இவ்வூரிலார் துணிவார்?
நன்மகனைச் சொல்லுதற்கும் நாவேழுமோ மாந்தருக்கு
ஞானி யவனாச்சே நல்லோர்க்குக் கண்ணாச்சே
மானி யவனாச்சே மற்றவன்மேற் குற்றமுண்டோ
ஆகா வழிநீதான் ஐந்தறிவுங் கெட்டையென்றாள்.
போகா வழியும் பொறுப்பாயெனப் புகல்வார்
இங்கு வாயம்மாநீ யென்மனைவி புத்திகெட்டாள்
மங்கு மதியுடையாள் வாக்குவழி யொன்றறி யாள்
வினையாள னுன்மகனும் வேதாந்தப் பேச்சொழித்துத்
தனியே சம்பாதனைக்குத் தக்க முயற்சிசெய்தால்
எத்தொழி லானாலு நற்றொழி லாகுமம்மா
செத்த பிணமறுத்தால் தீங்கொன்றும் நேராது
நாய் விற்றகாசு குலைக்குமோ நன்னுதலே
பேய்கட்டு வீடு பிலன்கெட்டுப் போகுமோதான்
எந்த வழியாலு மேற்றதனங் குவித்தால்
வந்திடுவார் சுற்றம் வரிசை முறைமைகொண்டு
பரிவுடனே யெந்தம் பலாமுருட்டை நாம்கொடுத்தால்
உரிய பணயமென்ன வோதென்றா ராங்கவரும்
ஆகா வழியுரைப்பாள் அப்படியும் வார்த்தையுண்டோ
நாகரிகங் கொண்டிருக்கும் நாமும்பெண் விற்கலாமோ
உள்ள பணிபூட்டி யுன்மனதுக் கேற்றபடி
கொள்ளடியோ பெண்ணையென்றாள் கூசுங் குணமுடையாள்.
கையமர்த்தி யப்போது கன்னிகர்க்குத் தந்தையரும்
பைய வொருவார்த்தை பாங்காகத் தாமுரைப்பார்
இருநூறு ரூபாய்நீ யென்கையிற் போடவேண்டும்
இருநூறு ரூபாக்கும் ஏற்றநகை பூட்டவேண்டும்
கலியாண முங்கள் கணக்கிலே சேரவேண்டும்
சலியாமல் நாங்களும் பெண்தன்னை யளித்திடுவோம்.
இச்சொல்லைக் கேட்டே யிளங்கொடியு மேதுரைப்பாள்
சிச்சீ பணங்கேட்டீர் சின்னத் தனமாக
மதியெங்கே போச்சோ மகளையும் விற்பீரோ
ஆதி யாசையாலே அடிமாண்டு போகீரோ
போம்போ பெனவுரைக்கப் போகா வழியெழுந்து
ஆம்போநீ யென்னறிந்தாய் ஆகாத தொத்தலுன்னூர்ப்
பேரென்ன வுன்றன பெரியதனந் தானுமென்ன
சீரென்ன செல்வமென்ன சீமை யறியாதோ
உடுக்கத் துணியுமற்றாய் உண்ணப் பிடியுமற்றாய்ப்
படுக்கப்பாய் தானுமற்றாய் பட்டாங் கடிக்கிறையே.
ஐயரது சொல்லலுமே யாகா வழிரைப்பாள்
பொய்யோநீர் சொல்வதெல்லாம் புண்ணியரே நீர்தாலி
கட்டினநாள் முதலாக் கண்டசுக மெத்தவுண்டோ
பெட்டி மகனுமக்குப் பெண்டொருத்தி வாய்த்தேனே.
பத்தாவுங் கேட்டுப் படபடத்தங் கேதுரைப்பார்
தொத்தல் பிறந்த சுடுகாட்டுச் சீதனத்தால்
நானென்ன வாழிந்தேனிந் நக்கலின் துர்க்குணத்தால்
தானென் குடித்தனமும் தாதுகெட்டு நிற்கிறது
குடித்தனப் பாங்கறிந்தால் கூறாக் குறைவருமோ?
வடித்தவென் சொற்கேட்டால் வாழ்வுக்கு மானியுண்டோ ?
என்னலுமே காந்தாரி யேற்றபடி யுரைப்பாள்
பன்னிநீர் சும்மாய்ப் பலுக்கீறீர் தாறுமாறாய்
அசடானாலென்ன பெண்டாளாரோ பூமியிலே
பிசகென்ன வந்ததிப்போ பேயீர் நீர்தேடியதை
ஆர்க்குக் கொடுத்தே யனியாயஞ் செய்துவிட்டாள்
பார்க்கும் வகையறிந்த பர்த்தா நீரல்லவோதான்.
இவ்வார்த்தைகேட்டவரும் மிங்கேவா அம்மணிநீ
ஒவ்வாத முண்டமிவள் உள்வயணம் நீயறியாய்
கழுநீ ரிறுக்குமிடம் கண்ணுற்றுப் பார்ப்பாயேல்
விழுவாட்கு வாய்க்கரிசி வேண்டியது சிந்திநிற்கும்
கொல்லையிலே குவியுங் குப்பைதானப் பார்ப்பாயேல்
நல்ல விளைச்சலின்ன நான்குநாள் தானிருந்தால்
கடுகு பதக்காகும் கண்டுமுதல் வெந்தயந்தான்
முடுகியாம் முக்குறுணி முக்கலமாஞ் செந்துவரை
இம்மட் டுடன்போச்சோ வின்னங்கே ளென்னுரையைப்
பம்மியவள் நடத்தும் பம்பரைக் காரியத்தை
முத்தது தோற்கு முளகுசம்பா நல்லரிசி
புத்த மணக்கும் புனுகுசம்பா பச்சரிசி
கண்ணுக்கு ளோட்டுங் கடுகுசம்பா சிற்றரிசி
மண்ணிய கெம்பின் மலைநாட்டுச் செந்துவரை
நீல மணிபோல நின்றொளிரு நல்லுளுந்து
கோலப் பசுமைக் குணமா மணிப்பயறு
கொவ்வைக் கனிபோல் குவியும் மிளகாயும்
செவ்வையாய்க் கொட்டைவாங்கிச் சேர்த்த பிளியடையும்
என்னம்மா வென்னசொல்வேன் ஏழைநான் தேடிவைக்கத்
தன்னை யறியாமல் தானழித்துப் பாழுசெய்வாள்.
பேமால மென்று பிடிங்குணிப் பட்டிமக்கள்
தாமாக வந்து சரச வுரையாடி
அரிசிகடன்கொடுப்பாய் அம்மணிநான்றருவேன்
பருப்புக்கடன்கொடுப்பாய்ப் பாங்காகநான்றருவேன்
இந்த விதமா விரக்கவரும் வம்பிகட்குப்
பந்தமுடன்கொடுத்துப் பண்டங்களுள்ளவெல்லாம்
ஆழும்பாழாக்கியழித்தாள்குடித்தனத்தை
தாழும்படியானேன் தையலேயென்னசெய்வேன்.
சொல்லதற்கு நேராகச் சொல்லுவளாங் காந்தாரி
நல்லநல்ல பேச்சுரைத்தீர் நாட்டிலிளைத்தவர்கள்
கடன்வாங்கிப் போகாரோ காலத்தில் முட்டினவர்
கடன்கொடுக்க மாட்டாரோ கட்டா யிருப்பவர்கள்
உபகாரஞ் செய்யும் உடம்பல்லோ நல்லுடம்பு
உபகாரஞ் செய்யா வுடம்பைச் சுடவேண்டும்
தான்வாழப் போதுமென்னுந் தாழ்ந்த குணமுடையான்
ஏன்வாழ வேண்டு மிரும்புவியி லென்றுரைத்தாள்.
வார்த்தை யதுகேட்டு வளமா யவருரைப்பார்
பார்த்ததிலை நீயுமிந்தப் பாவி குடித்தனத்தை
படியாலளந்துகொள்வார் பாதியால்தாங்கொடுப்பார்
இடியாவரிசிக்கிடடிந்தநொய் கொண்டளிப்பார்
நல்லதைத்தாங்கள்கொண்டு பொல்லாதுதந்திடுவார்
சில்லறை தன்னைத் தெரியா திவளிருப்பாள்
கையார வாங்கினபேர் கம்மென்று தாமிருப்பார்
தையல் தலையில் சடகோபந் தாங்கவிப்பார்,
இத்தனை நற்சமர்த்தி யென்னம்மா வீங்கிவளும்
தத்துவஞ் சொன்னேன் தலைவிதி யென்னசெய்வேன்
எல்லா ரிழியுந்துறை யேற்றமுள்ள நல்லதுறை
பொல்லாத நான்பாவி பூந்துறை நீச்சாமே
அந்தவுரை கேட்ட ஆகா வழியெழுந்து
பந்த முரைக்குமிவர் பாங்கதனை நீகேளாய்
அறுந்த விரலாற்ற வங்கைச் சுண்ணாம்புகொடார்
பிறந்த சகோதரரைப் பிண்டத்துக் கின்றிவிட்டார்
பேராசைக் கொண்டு பெரும்வட்டிக் கிச்சைப்பட்டு
நேரும் பணங்களெல்லாம் நிர்மூல மாக்கிவிட்டார்
கடன்கொண்ட பேர்களெல்லாங் கையை விரித்துவிட்டார்
மடையார் நினைவுகெட்டு வைகிறார் என்னையிப்போ
உண்டபின் வீட்டில் ஒருவ னிருப்பானோ
பெண்டுகள் கீழே பிரிமணை யாவானோ
பானைகள் நோண்டிப் பரிக்ஷைகள் செய்வானோ
நானல்லால் வேறொருத்தி நாடியிருப்பாளோ
இவ்வண்ண மாக விருவழியும் வாதிழைக்க
அவ்வண்ணப்பெண்ணும்அருகில் நகைத்திருக்க
கலுழ்ந்து பகர்மொழியைக் காந்தாரி கேட்டுரைப்பாள்
எலிபூனை போல விருக்கிறீர் நீங்களிப்போ
உள்ளபடி யாகு முங்கள் விதவசந்தான்
மெல்லவே காலம் விளங்கக் கழியுமென்றாள்
அப்போ தவர்களுக்கு மான சினேகிதராம்
தொப்பை முதலியென்பார் தோராத பேச்சுடையார்
பெண்ணைக் கொடுப்பதற்குப் பேசி முடிவுசெய்தார்
கண்ணிய மாகவந்தக் காந்தாரி தானடைந்து
அவதானி தன்னுடனே யாங்கு நடந்ததெல்லாம்
விவராக சொல்லியவள் மெல்ல நகைத்திருந்தாள்(32)
அச்சொல்லைக் கேட்டே அவதானி நெஞ்சழிந்து
கொச்சை மனிதரிந்தக் கூட்டத்தி லுள்ளவர்கள்
மானங் கிடையாது மரியாதை யேதுமில்லை
ஈன வழக்கிடுவார் ஏசாத பேச்சுரைப்பார்
பிடிவாதங் கொண்டவொரு பேய்மகளைக் கட்டினக்கால்
தடுமாற்றங் கொண்டல்லவோ சாமளவு நிற்கவேண்டும்
தகப்ப னொருபேயன் தாயுமொரு பேமாலம்
சுகத்திற் குரியபெண்ணோ சொல்லும் பலாமுருடு
பசிக்குப் பனம்பழத்தைப் பாராமற் றின்றிட்டபின்
மசக்கித் தலைசுழற்றும் வன்பித்தம் வாங்குமோதான்
மனதிற் கிசைந்தவொரு மங்கையவள் கிட்டினக்கால்
கனிவா யிருந்தெனது காலத்தைப் பின்னிடுவேன்
வீணான கல்யாணம் வேண்டாமேன னம்மணிநீ
கோண வழியிலென்னை கூட்டாதே யிப்பொழுது
கைப் பணமில்லை கடனும் பெயராது
ஒப்பித மாகவொரு லாபந் தோன்றவில்லை
மனது கனியவில்லை மாதாநீசெய்யு மணம்
இனிதாகத் தோன்றவில்லை யென்றார் அவதானி
உரைத்த வுரைகேட்டே யுண்ணொந்து காந்தாரி
சிரித்து வெடிப்புடனே சீக்கொட்டி வார்த்தைசொல்வாள்
தாய்வார்த்தை கேளாத நாயின்வாய்ச் சீரைநீயும்
பேய்ஞானம் பேசுகிறாய் பித்துப்பிடித்த தோடா
சாதியிற் கொள்ளாமல் சந்ததி நீளாமல்
பேதைப் படுவாய் பிழைத்தென்ன லாபமோடா
நீசக் குலந்தனிலே நெஞ்சிற் கமைந்தவளாய்
ஆசைக்கண்ணாட்டிவந்தால் ஆய்ந்து மணப்பையோடா
பரங்கி வழக்கமது பார்த்துப் பரிக்ஷையிட்டுத்
தரங் கண்டுகொள்ளுந் தறிதலை நீயோடா
பட்டுப் பதைத்துப் பரிந்து வளர்த்தேனே
கெட்டுப் படுவாயோ கீழான புத்தியினால்
தாயென்று பாராயோ தத்திக் குதிப்பாயோ
வாயிற் படிப்பறிந்த வண்மையோ வீங்கிதென்றாள்
அம்மை மனநோக ஆற்றா ரவதானி
செம்மை மொழிகேட்குந் தேற்றமில்லை யன்னையார்க்கும்
இதுவென்ன கர்மமேன்றே யேங்கி மனம்புழுங்கி
மெதுவாக வம்மையுளம் வேக்காடு தானடங்கப்
பயந்து சிலவார்த்தை பார்த்தவர் தாமுரைப்பார்
நயந்து செவிகொடென்று நன்றாகச் சொல்லிடுவார்
பின்வருந் தீமையெண்ணி முன்பாக நன்குரைத்தால்
என்மேலே கோபமுற வேற்குமோ யுன்றனக்கு
மெள்ள நினையாமல் மேல்வரவு நோக்காமல்
உள்ள நாள்தோறும் உறுப்பில் மடிந்தழியச்
சங்கட மென்றே தழுதழுத்துத் தானுரைத்தார்
மங்கையது கேட்டு மறுகாமலே துரைப்பாள்
சங்கடமொன்றுமில்லை சற்குலம் நல்லகுடி
வாயறுத லானாலும் வண்மை குறையாது
தாயுறை கேளாய்நீ தப்பித மொன்றுமில்லை
என்றே யவளுறைத்தங் கேற்றமுள்ள மாணாக்கர்
அன்றுவர வொண்ணிதியம் ஆங்கவரைச் சேர்க்கவேன்றாள்
சொன்ன வுடனவர்கள் தூய மனதுடனே
முந்நூறு ருபாயு முன்வைத்துத் தண்டநிட்டார்
ஓபுலு செட்டியிடம் ஓதுகட னூறாகச்
சாபுலு சேனிடத்துத் தண்டியதீ ரைம்பதுடன்
கையிற் பணஞ்சமையக்கல்யாணக் காரியங்கள்
மெய்யாகச் செய்து வந்தாள் மேன்மையுள்ள காந்தாரி
தொப்பை முதலிகையில் சொல்லுந் தொகைகொடுத்தாள்
ஒப்பி யவருமங்கே ஓங்கு களிப்புடனே
போகா வழிகையிலே போட்டாரொரு நூறு
ஆகா வழிதனக் கீரைம்பது தான்கொடுத்தார்
ஆங்கவ ளப்பணத்தை யவர்வச மாகவைத்தாள்
தாங்கு நகைக்கே தனியிரு நூறுவைத்தார்
மற்றொரு நூற்றால் வருஞ்செலவு தானடத்தச்
சித்தம தாகித் தொரிந்தவர் தாமிருந்தார்
ஈறல் மனத்தார் இருவழியு மேலுரைப்பார்
கூறை விளையாடல் கோமளப் பட்டிலிப்போ
தாரு மிலையேல் தரமாட்டோ ம் பெண்ணையென்றார்
பாரம் பொறுத்தாள் பதமறியாக் காந்தாரி
முதலியா ருள்ளிருந்து மூக்குக் கொடுத்துவந்தார்
பதமாய் நகைக்குவைத்த பத்தி லறுவுசெய்தார்
முதலியார் சத்திரத்தில் முர்த்தம் நடக்கவென்றே
இதமாக சொல்லவிரு வழியுஞ் சம்மதித்தார்
நாளிட்டு மூர்த்தம்வைத்தார் நல்ல புரோகிதர்கள்
காளை யவதானி கல்யாணங் காணுதற்கு
மாட்சிமை யுள்ளவொரு மானாவதியும் வந்தாள்
கோட்சொலிக் குண்டுணியுங் கொள்ளியழி கண்டனுடன்
வீரப்பிடாரி வந்தாள் வெட்டுணி தங்கைவந்தாள்
போரிட்டு வம்பிழைக்கும் பொல்லாவெங் கண்ணன்வந்தான்
போகா வழியின்றம்பி பொல்லாப் புளுகுணியும்
ஆகா வழியன்றம்பி ஆங்காரப் பட்டன்வந்தான்
ஆங்கவரைச் சேர்ந்தோ ரடங்கலும் வந்தார்கள்
தீங்குவிளைக் கத்தெரிந்த மகான்கள் வந்தார்
அழிகண்ட குண்டுணிகள் ஆங்காரப் பட்டரின்னம்
விழுவா ளுணியின்தங்கை வீரப் பிடாரியுமாய்
ஓசனைசெய்தார் ஒருமிக்கத் தாங்கூடி
நேசமே பாராட்டி நின்றுசதி விளைத்தார்
அழுக்கா றடைந்தே யகங்கார மேல்முதிரப்
புழுக்கைப் பயல்தனக்குப் பெண்ணெரன்றோ வென்றெழுந்து
பெண்னுக்குத் தாய்மனதைப் பித்தென்பா ரோர்புறத்தில்
புளுகுணி ஐயோ பொருத்தமில்லை யென்றுரைப்பார்
அழிகண்டன் பிள்ளைதனக் கண்டம் பெருத்ததென்பார்
குண்டுணி யீங்கிவற்குக் கோடி வியாதியென்பார்
சண்டாளர் செய்யாத தாழ்தொழில் செய்வனென்பார்
வீரப்பிடாரி யிப்பெண் மெல்லிய லல்லளென்பாள்
சேர் குறிகளில்லை சிரிப்பாணிக் கோலமென்பார்
வெங்கண்ணர் மூக்கில் விரல்விட்டுத் தும்மிநிற்பார்
அங்கவர் தம்பி படுத்து விளக்கணைப்பார்
விட்டுணி தங்கையிது கெட்ட சகுனமென்பாள்
கட்டா யிவ்வாறு கலகங்கள் தாம்விளைத்தார்
காந்தாரி யப்போ கதிகலங்கித் தானிருந்தாள்
தேர்ந்த மகனுரையைத் தேராமற் செய்ததற்கு
மக்கி மடிவாள் மனம்புழுங்கித் தானழுவாள்
வெட்கத்துக் காற்றாளாம் மெல்லிய ளென்னசெய்வாள்
அப்போ திளையா தவதானி யென்ன செய்தார்
தொப்பை முதலியுடன் சூழ்ந்து விரகறிந்தே
ஊரதிகாரி தன்னை யொய்யெனத் தானழைத்து
நேராவழிகள் தம்மை நேரிலே நிற்கவைக்க
அதிகாரி யப்போ தவர்முகம் பார்த்துரைப்பார்
சதிகாரர் செய்யுமொரு சர்ப்பனைக்குள் ளானீர்கள்
முன்னம் பணம்வாங்கி மோசம்பின் செய்வாரோ
சின்னத் தனமல்லோ சீக்கொட்டி யேசாரோ
மானி யவதானி மட்டில் விடுவாரோ
ஈனர் மொழிகேட்டே யேனோ கெடுவீர்கள்
கொடுத்த பணம்தனக்கு கோட்டிலே போட்டிழுப்பார்
பிடித்த செலவுடனே பின்மான நஷ்டமுமாய்த்
தெண்ட மிறுத்துச் சிரிப்பாணி நீர்படுவீர்
மிண்டர் வுரை கேட்டு வீணாய்க் கலங்காமல்
உங்கள் மனக்கருத்தை யோசித துரையுமென்றார்
எங்கள் கருத்தென்ன விந்த முகூர்த்தமதில்
பெண்ணைக் கொடுக்கத் தடைபேச வில்லையென்றுரைத்தார்
நண்ணுமதிகாரி நல்லதென்று தானெழுந்து
துச்சராய் நின்று துடுக்குகுள் செய்யுமந்த
கொச்சை மனிதர்தம்மை கொண்டுவந் தான்வெளியில்
காலிற் றொழுவடித்துக் கண்டவர் காறிமுய
காலைத்தெருவினிலே சட்டமாய் நிற்கவைப்பேன்
என்றே யவரும் இரைச்சலது போட்டு
நன்றாய் தலையாரிக் காவல் நாலெங்கு மிட்டார்
பெட்டியிற் பாம்புகள்போல் துட்டர்கள் போயடங்கச்
சட்டமாயுள்ள சடங்குகுள் தாமியற்றி
அதிகாரி போட்ட அதர்வேட்டில் தாம்பயந்த
சதிகார ருள்ளந் தைரியங் கொள்ளுமுன்னே
மும்முடியும் போட்டு முழுங்கினார் வாத்தியங்கள்
மும்முடி யும்போட முடிந்தது கல்யாணம்
என்ன கலியாண மேது மனக்களிப்பு
என்ன கலியாண மெங்குங் கலசமிட
உற்றா ருளங்கசந்து போனார்கள் பெண்ணதனைப்
பெற்றார் இருவர் பிளந்துமனம் புண்ணானார்
தப்பா முகூர்த்தமது தானடந்த பின்னணுகித்
தொப்பை முதலி யவதானியுடன் சொல்லுரைப்பார்
செலவுக்கு நீகொடுத்த சின்னததொகை நூறும்
குலவுநகையாய் கொடுத்த விருநூறும்
முந்நூறு ரூபாய் முழுதுஞ் செலவாச்சு
இன்ன மிருநூறு மேறுமெனத் தானுரைத்தார்.
மூக்கில் விரல்வைத்து மோகித் தவதானி
நாக்குளரித் தானும் நடுங்கி யுரைப்பாராம்
என்னண்ணே நீங்கள் யிருந்தபணம் முந்நூறும்
பின்னெண்ண மில்லாமற் பேய்செலவு பண்ணலாமோ
எளியவனாச்சே வென்னதைச் செய்வதினி
விளையும் பொருளிலையே மேற்செலவுக் கென்றுரைத்தார்
பதறாதே தம்பி பரிவாக நானுனக்கும்
உதவினே னல்லாமல் ஓர்தீங்கு செய்யவில்லை
உன்பளுவுக்கேற்றபடி யோர்ந்து செலவுசெய்தேன்
என்மீ தலுக்காதே விந்தா கணக்குமென்று
திருமணப் பந்தலிலே சிங்கார மாயிருந்து
மருவூம் சனங்கலுழை மத்தியில் தானிருந்து
ஊங்காரஞ் செய்தே உரத்த தொனியுடனே
பாங்காம் முதலியாரும் பட்டோ லை தாம்படித்தார்.