Home First Tamil Novel ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1

ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1

by Dr.K.Subashini
0 comment

ஸ்ரீ
கருணாநிதியே நம:

ஆதியூரவதானி சரிதம்

 

ஆதிபகவன் அடித்தலங்கள்தாம் போற்றி
சோதிச் சொரூபன் சுடர்ப்பதங்கள்தாம் போற்றி
வேதங்கட்கெட்டா விமலன்கழல் போற்றி
பூதங்கள் பூக்கும் புனிதனடி போற்றி
அண்டங்களாளும் அழகர் பதம் போற்றி
பிண்டங்கள் கூட்டும் பிரமனிரு தாள் போற்றி

எத்திறத்தோரும் இலங்குசமயிகளும்
முத்திறத்தோரும் முனைந்து படித்துவர
ஆணுடனே பெண்ணு மறிந்து களிகூர
ஆணுடனே பெண்ணும் அகமகிழ்ந்து கொண்டாட
காலத் தியற்கைதனைக் கண்டறியா மாந்தருக்குக்
கோலக் குறிவிளக்கும் கொள்கையுள்ள வொண்சரிதம்
ஆதியூர் வாழும் அவதானிதன் கதையை
வேதியன் நல்ல வினையாளன் தன்கதையை
வழக்கத் தமிழாலே மாந்தர் படித்தறிய
பழக்கத்தாலம்மானைப் பாட்டாகத்தாம்பகர
எழுதி முடிப்பதற்கே யீசனே முன்னடவாய்
பழுதில் கதைபாடப் பரமனே முன்னடவாய்.

சீர்மேவு சோழத் திருநாட்டிடைச் செழிக்கும்
ஏர்மேவு மூர்க ளெதிலுந் தனித்தோங்கும்
அத்தியூ ரென்னும் அழகு தலந்தனிலே
வித்தைகள் தாமோதி மெய்யறிவு மேல்வளர
எல்லோரும் போற்றி யிறைவனெனக் கொண்டாட
அல்லாதார் கூட அவன்பெருமை தாம்புகழ
உத்தமனென்பா னொருவன் குடியிருந்தான்
தத்துவமெல்லாந் தனியறிந்த புண்ணியவான்

ஆங்கவன் பெற்ற அருமைத் திருமகனாம்
வீங்கு புகழான் வினையாளன் தேசுடையோன்
பிறந்து மூவாண்டு பெருகி வளர்கையிலே
துறந்து பதமடைந்தார் சொல்லரிய தந்தையரும்.

வினையாளன் அன்னையவள் வீரமனமுடையாள்
நினைவாப் பிழைப்பதற்கு நேரும் சமர்த்துடையாள்
தாயாதி வீட்டிலவள் தாணிணங்கிப் பாடுபட்டு
ஓயாமுயற்சியுடன் ஓர்மகனைத் தான்வளர்த்தாள்
மாதாவின் மாலுமையால் வான்மகனுந் தான்வளர்ந்தான்
தீதில் குணமுடையாள் சீராட்டித் தான்வளர்த்தாள்.
கருமை நிறமுடையான் கண்ணழகு தானுடையான்
பரந்த முகமுடையான் பால்வடியும் புன்னகையான்
விரிந்த வுரமுடையான் மெத்தென்ற மேனியுளான்
திருந்து முரையுடையான் செல்வன் வினையாளன்
கிட்டிய னோக்குடையான் கேள்வித் திறமுடையான்
மட்டிகள் வீட்டில் வருந்தியவன் வளர்ந்தான்.
பாழும் பிணிகளினால் பட்டதவன் கோடியுண்டு
சூழும் மதிகலங்கித் துன்புற்றாள் அன்புளதாய்
கரப்பான் குளிதோஷம் கண்ணழிவு மெண்ணவின்னம்
இரைக்குஞ் சுழிமாந்த மீடழிக்கும் பீடைகளால்
நித்தயங் கண்டமுண்டாம் நித்தியம் தான்பிழைப்பாம்
உத்தமி தாய்வயிற்றி லோயாமற் செந்தழலாம்.

பிள்ளை தனக்காகப் பீடழிந்து தாயவளும்
மெல்லவே கால மெலிவுற்றுத் தள்ளிவந்தாள்
கைப்பாடு பட்டுக் கனங்குறைந்து தாயவளும்
தப்பாமல் மைத்துனற்கு தங்கைதனை மணந்து
தங்கை உறவாலே தன்காலந் தள்ளிவந்தாள்.
மங்கை உழைத்திருந்தாள் மைத்துனன் வாழ்குடியில்.

காலத்தா லாங்கவருங் கரியனொரு தம்பியுடன்
கோலக் குடிபெயர்ந்து கூழுக்கு மன்றாடி
ஆங்காங்கு பிச்சைக் கலைந்து மிகவருந்தி
வாங்காச் சமுசார வன்பிணியால் தாதுகெட்டுப்
புதுவை நகரணுகிப் புல்லையன் சத்திரத்தில்
வதிய விடமடைந்து வந்தவர்க்கும் போனவர்க்கும்
ஏச்சோறு பொங்கியிட்டேயேங்கும் வயிறலம்பி
மூச்சுண்டை விற்று முனைந்தொத்துப் பாடுபட்டுப்
பெரியம்மா சின்னம்மா பேசரிய தம்பியுடன்
பெரியய்யர் மெய்வருந்திப் பீடழியும் நாளையிலே
வினையாள னந்தவெறுங்குடி யில் தான்வளர்ந்தான்

வினையாள னங்கு மெலுவுற்றுத் தானிருந்தான்
சீறுமாறாக வந்தச் சிற்றப்பன் மார்நடத்த
ஊறுகள் தப்பி யொருபிள்ளை தான்வளர்ந்தான்

அப்பிள்ளை யென்றால் அருமைக் குணமுடையான்
ஓப்பாதவன் மனந்தா னூற்றைப் பணிகள்செய்ய
பிச்சைக்குப் போகவென்றால் பின்னிட் டவனழுவான்
எச்சிலெடுக்க வென்றா லேமாறித் தானழுவான்
ஓருவேலை செய்யவென்றால் ஒப்பாது பிள்ளைமனம்
இருகண்ணி னீர்சொரிய வேங்கித் திகைத்தழுவான்
கூழென்று சொன்னால் குமட்டி யருவருப்பான்
பாழும் வயிறதனை பட்டினி யாகவைப்பான்
என்னம்மா வென்பான் இதற்கென்ன செய்வதென்பான்
சின்னம்மா வென்றழுவான் சீவனினி வையேனென்பான்
தாயுங் கரைந்தழுவாள் தங்கையருந் தானழுவார்
தீய ரிருவர்களுஞ் சீற்றத்தால் கண்சிவப்பார்
வினையாளா நீயென்ன மேட்டி மகனோடா
கனவானாய்ப் போகிறையோ கட்டிவரு மெங்குடிக்கும்
காலனாய் வந்தாய் கரிக்காலா நீயுமிப்போ
பாலனோ பேச்சுப் படித்து வடித்துரைப்பாய்
கூடநீ வந்தால் கொடுப்பாரே தக்ஷணைதான்
ஓடிவா யென்றே யுறுமிப் பிடித்திழுப்பார்
இப்படி யாகவிவன் வருந்து நாளையிலே
துப்பான பெண்ணுக்குத் துன்வயது மேழாச்சு
வியை஡ளனுக்கு விரிபருவம் பத்தாச்சு
கனமாக பூணூல் கழுத்தில்விழ நாளாச்சு.
அன்னை பெயரும் அவள்தங்கை தன்பெயரும்
பின்னை அவள்கொழுனன் பேருமவர் தம்பிபெயர்
பெண்ணின் பெயரும் பெருங்குணமும் போசாக்கால்
எண்ணி வருங்காதை யினிது விளங்காது
தாய்பெயரோ காந்தாரி தாங்காச் சினமுடையாள்
வாய்வந்த பேசிடுவாள் வன்சாபந் தந்திடுவாள்
முன்கோபந் தநனுடையாள் மூர்க்க மதியுடையாள்
தன்னைப் புகழ்ந்தவரைத் தாங்கச் சலியாதாள்
துட்டர்கள் தம்மைத் துணிந்து துறக்கறியாள்

கட்டியே வீண்டோ ரைத் தானே தழுவிநிற்பாள்
தன்மனங் கோணிற் ரறியாமற் றானழுவாள்
பின்வருவ தோராள் பிடாரி யெனப்படுவாள்.
ஈவிரக்கந் தானுடையாள் இட்டதனை விட்டுரைப்பாள்
சீவனுக்குத் தீங்கிழையாள் சீற்ற மிகவுடையாள்
உபகார மொன்றிழைதா லுள்ளவுஞ் சொல்லிடுவாள்
அபகாரஞ் செய்தவரை யாற்றாமல் தூற்றிடுவாள்
அணுவளவு செய்தாலும் ஆற்றா தலப்பிடுவாள்
பணிவான சூதர்மனம் பாராமல் தான்பரிவாள்
மாடுபோல் தானுழைப்பாள் மற்றவரைத் தான்கடுப்பாள்
கூடுங் குணங்களிவை கொம்மனைக்குத் தானுமுண்டு

மற்ற வணற்றங்கை மானாவதி யென்பாள்
சித்தம் புறத்துவிடாள் சீறுமாறொன்று செய்யாள்
எத்தாலுந் தாங்கலங்காள் ஏற்றவரை யாதரிப்பாள்
பத்தாசொற் றள்ளாத பத்தினி யாங்கவளும்
ஆங்வளின் கொழுனர் அடங்காத வன்சினத்தர்
பாங்கறியா மாக்கள் பணித்தவண்ணம் தாம்புரிவர்
தாங்குந் பலமுடையார் தையிரமுந் தானுடையார்
ஓங்குந் துணிவுடையார் உள்ளத்தில் கள்ளமில்லார்
சாகசஞ் செய்யத் தணியாத் திடமுடையார்
யோகம் பழுத்தாலோ வோயாச் செலவுசெய்வார்
வாங்கச் சலியார் மனதில் விசாரம்வையார்
ஆங்காரங் கொண்டா லடமாடித் தான்விடுவார்
தானங் கொடுத்தாலோ தன்னுடையுந் தான்கொடுப்பார்
மானங் கெடுத்தாலும் மற்றொன்றும் மிஞ்சவையார்
வெட்டுணி யென்றுரைக்கும் வீரப்பெயருடையார்
மட்டி லடங்காத மாதர் மயக்குடையார்
அன்னவர்தம்பி யழியாக்கறுவுடையார்
இன்னல் விளைவிக்க வெடுக்கும் விரகுடையார்
இளைத்த வெறுமேனி யிருளடைந்த பாழுமுகம்
சளைத்த முதுகெலும்பில் தானொடுங்கும் தாழ்வயிறு
சுட்டெரிக்கும் கண்களுடன் தோன்றுமவர் நின்றவிடம்
வெட்டி நிலம்பார்த்தால் வெந்திருக்கு மேழடிதான்
குடும்பங் கலைக்கவல்லார் குண்டுணி யாமவர்பேர்
படுபாவமெல்லாம் பலித்த வுருவமன்னார்.

வெட்டுனி தன்மகள்தான் வீரப் பிடாரியென்பாள்
பட்டணம் போதாது பட்டாங் கடிப்பதற்கு
நங்கு தெறிப்பதற்கு நாடெங்கும் போதாது
உங்காரஞ் செய்தா லுலக நடுங்கிடுமே
உன்னிக் கருவறுக்க வுள்வயணங் கோடியுண்டு
பின்னை வினையாளன் பெண்டாட்டிக் கெண்மடங்கு
கொண்டசமர்த்துடையாள் கொம்பரக்குப்பல்லுடையாள்
சண்டைக்கு முன்வருவாள் தாய்க்கும் வெறுப்புடையாள்
தகப்பன் குணம்பொருந்தித் தானடக்குஞ் சண்டியவள்
இமைப் பொழுதுந்தீமை யிழைக்கா திருப்பதில்லை.

வீரப் பிடாரி விவாக நடக்கவேண்டும்
ஓரி மகன்றனக்கு மோர்சரடு போடவேண்டும்
என்றே நினைவுகொண்டார் ஏற்றமுள்ள வெட்டுணியும்
நன்றிது காலம் நமக்குப் பணம்பொறுக்க
உபாயந் தானென்றார் ஒருகொடிய குண்டுணியும்
உபாய மெதுதம்பீ யுரையென்றார் மூத்தவரும்
தம்பி யுரைப்பாராஞ் சாதுரியத் தோடெழுந்து
அம்பு வியில்மேலா மதிகாரி வீடுகளில்
பிள்ளை பிறந்தாலும் பெண் பெரியளானாலும்
சுள்ளி விழுந்தாலும் சூழ்விருந்து செய்தாலும்
ஒன்றுக்கு நூறாக வூர்க்குடிகள் கொட்டிடுவார்
கன்று மனத்தார் கடனுக்குக் கொட்டிடுவார்
காரறுப்புக்கம்பறுப்புக் கண்டுமுதல்கொள்பவர்போல்
பேர்பெரிய பட்டிமக்கள் பேசாமற் கொண்டிடுவார்
கைக்கடகம் நற்கொலுசு கண்டசர மோதிரங்கள்
மெய்க்குளிகை கழுத்துவடம் மேலாஞ் சரப்பளியும்
துப்பட்டா சாலுவைகள் சொக்கவெள்ளிக் கிண்ணிகளும்

செப்புக் கடாரமுதல் சேரும் தினுசுகளும்
வராகனுடன் மோராவும் வண்ணப் பதுமைகளும்
தராதரங்கள் பார்த்துச் சரியாகத் தண்டுவார்கள்
ஓரேர்ப் பயிராளி யொன்பது பொன்றருவான்
ஈரேர்ப் பயிராளி யீரெட்டு மூன்றழுவான்
மூன்றேர்ப் பயிராளி முப்பது பொன்னழுவான்
நான்கேர்ப் பயிராளி நாற்பது பொன்னழுவான்
பத்தேர்ப் பயிராளி பாங்காக நூறழுவான்
இத் திறமாக விருந்தனந் தாமழுவார்
கண்மூடி வாங்குங் கணக்கர்கள் நூறளிப்பார்

மண்ணோரஞ் சொல்லி வழக்கிடுவோர் நூறளிப்பார்
பொய்ச்சாக்ஷிசொல்லும் புரட்டர்கள் நூறளிப்பார்
பொய்ச்சீட்டெழுதும் புளுகுணிகள் நூறளிப்பார்
காவற் றிருடர் கணக்காக நூறளிப்பார்
பாவம் புரியும் பதடர்கள் நூறளிப்பார்
சதிகார ரெல்லாம் தலைக்கொரு நூறளிப்பார்
அதிகப் பணமுடையார் ஆயிரந் தாமழுவார்
வட்ட ஜமீன்கள் வரிசைகள் தாமெடுப்பார்
மிட்டாதா ரெல்லாரும் வேண்டுந் தனங் கொடுப்பார்

அப்படியாக வதிகாரம்ஒன்று மில்லை
செப்படு வித்தையில்லை தேடித்தனங் குவிக்க
ஒன்றே யுபாயமுண்டிங் குற்றதனைப் பற்றிடுவாய்
நன்றாய்ப் பணம்பறியும் நாணமுற்ற வாண்பயலால்
இச்சமயம் போனாலினிச் சமயம் நேராது
எச்சிற் பொறுக்கிசும்மா வேன்றா னிருக்கவேண்டும்
கையிற் பிடித்தவனைக் காசுள்ளோர் தம்மிடத்தே
ஐயா வுபனயன மாவதற்கு நீங்கள்துணை
செய்வீரென விரந்தால் செல்வர் தனங்கொடுப்பார்
பையப் பணஞ்சேர்த்துப் பண்பாக நீபயந்த
கன்னி மணமுங் கடன்காரப் பையனுக்குப்
பின்னை யொருசரடு போட்டாற் பெயரிக்கும்
குண்டுணியுஞ் சொன்னார் குணமென்றார் வெட்டுணியும்
அண்டி வினையாளன் றன்னையழைத் தழகாய்
நாமமது பூண்டுநல்ல துணிதா னுடுத்தி
யோமெனு முன்னேநீ யோடிவா வென்றுரைத்தார்
நோக்க மறியாத நோஞ்சற் சிறுவனுடன்
போக்கில் மனமுவந்து போயினா னாங்கவர்பின்
பயமிலிளங் கன்றுபோலப் பாலனும்பின்றொடர்ந்தான்
நயமா யிரண்டுணியும் நற்சகுனங் கண்டுகொண்டு
குப்புசெட்டி யப்புசெட்டி குண்டுபிள்ளை நாகலிங்கம்
சுப்புபிள்ளை ரங்கராயன் சோமாசிப் பட்டன்முதல்
உண்டான பேர்களிடம் ஓயாமற்றா னடந்து
கண்டு கெஞ்சிக்கூத்தாடிக் காலரைகள் தாம்பிடுங்கி
குண்டுணி யுமண்ணனுமாய்க் கூடை பணங்குவித்தார்
கண்டுள்ளே காந்தாரி கண்கலக்கங் கொண்டிருந்தாள்

அக்காள் மகனான அழிகண்ட னென்பவற்குத்
தக்கவொரு மகளைத் தாரைவிட்டுத் தான்கொடுத்தார்

வெட்டுணி தந்தமையன் வெங்கண்ணன் கையாலே
திட்டமாய்க் காந்தாரி செல்வனுக்கு நூல்புனைந்தார்.

தான்கற்ற வித்தையினால் சாதுரியப் பேச்சதனால்
மேன்மக்கள் பாலடைந்து வேண்டும் பணிகள்செய்து
நேராக வெட்டுணியும் நீண்ட புகழுடைய
பேராளூரென்னுங் கிராமப் பிரபுவிடத்துக்
காரியம் பார்க்குங் கணக்கராய்த் தானமர்ந்து
வீரியமாக மெலிவற்று வாழ்ந் திருந்தார்
நிலமுழுது வேளாண்மை நேர்தொழிலுஞ் செய்துவந்தார்
சோறென்று கண்டு சொகுசுமேற் காட்டலுற்றார்.
தேறு மனத்தவற்கோர் செல்வமகன் பிறந்தான்
தான்றோன்றி யென்றே தனையனுக்குப் பேருமிட்டார்
ஈன்ற வரம்மகனை ஏற்றமுடன் வளர்த்தார்
காந்தாரி யம்மகனைக் கண்ணாகத் தான்வளர்த்தாள்
தான்றந்த மைந்தனிலுந் தாட்டிகமாய் வளர்த்தாள்
வீரப் பிடாரியையு மேன்மையாய்த் தான்வளர்த்தாள்.

கோர மனமுடைய குண்டுணி கண்ணெரிந்து
கன்னி கழியாமற் காத்துநாம் நிற்கையிலே
சின்ன வினையாளன் சீராகத் தான்வளர்ந்து
காந்தாரி முண்டை கரவளத்தாற் பொச்சையிட்டு
பாந்த மதாகவவன் பள்ளியில் தான்படித்து
விழுவாள் மகன்றானு மேலவனாவ னென்றே
அழிகண்ட னோடே யடுத்துள்ளே யோசனைகள்
நூறு விதமாக நொய்யவர்கள் செய்துவந்தார்
தேறும் துணிவுகெண்டு தீமை புரியலுற்றார்
கொல்லைக் களைபிடுங்கக் கோட்டெருமை மேய்த்துவர
நெல்லுக் களங்காக்க நீரின் மடைமாற
பிள்ளை வினையாளன் தன்னைப் பிடித்திழுத்து
நொள்ளைப்பயலுனக்கு நோப்பாளமென்னவென்றே
அழிகண்டன் குண்டுணிகள் அச்சிறுவன் றான்வருந்தப்
பழிகாரர் வேலையிட்டுப் பார்த்து மகிழ்ந்திருந்தார்
அம்மை பொறுக்காளாம் ஆவி தரியாளாம்
விம்மி யழுவாளாம் மேல்விதியை நோவாளாம்
வெட்டுணி முன்னே விழுந்து முறைப்படுவாள்
பட்டேனே நானுமக்குப் பாரிமணஞ் செய்துவைத்தேன்

கனியுமென் நன்மகனைக் கைத்தூக்கி நீர்விடுவீர்
இனிக்குறை யில்லையென்று மெண்ணமிட்டு நானிருக்க
அழிகண்ட னுன்மருகன் ஆகாத குண்டுணியும்
பழிகார ரென்மகனைப் பார்க்கச் சகியாரே
பாலனைவேலையிட்டுப் பாடுகள் தாம்படுத்தி
ஆலைக் கரும்பெனவே யாட்டநீர் பார்க்கலாமோ
என்றழுது வாட விரங்கியந்த வெட்டுணியும்
ஒன்றுக்கு மஞ்சாதே வுன்மகனை யின்கலைகள்
படிக்கநான் வைத்திடுவேன் பள்ளியிலே யென்றுரைத்து
திடப்படச் சொல்லித் திருகுசினங் கொண்டதம்பி
மருகனையுங் கூட்டி மறைவாகத் தானிருத்திப்
பருவமிலாப் பையன வன்பாடுபடத் தக்கவனோ
பார்த்தோர் பரியாசம் பண்ணுவரே யெண்ணிநீங்கள்
வேர்த்தொன்றுஞ் செய்வதினி வேண்டா மெனவுரைத்தார்.
ஆங்கது கேட்டே யழிகண்ட குண்டுணிகள்
உள்ளுக்குள் ளாங்கவரும் ஓயாத் திருக்கிழைத்துக்
கள்ள மறியாத காந்தாரி மேற்கலகம்
தான்விளைத்துக்குண்டுணியும்கற்பனைகள்செய்துவந்தார்
ஈனம தியுடையார் ஏதேதோ செய்துவந்தார்
கோள்க ளொருகோடி கூசாமற் சொல்லிவந்தர்

நாளும் பகைவிளைத்து நல்லவர் போலிருந்தார்
வெட்டுணி தன்மனதை வேறாக்கித் தாம் கலைத்தார்
கட்டாகப் போதனைகள் காலமறிந் துரைப்பார்.
குண்டுணி யோர்நாள் குணமறியா வெட்டுணியைக்
கண்டே யொருவசனங் கற்பனையாய்ப் பேசலுற்றார்
நினையாய் நீயென்னுரையை நீசாகத் தான்மருந்து
வினையாள னென்றறிவாய் மெய்க்குடியில் கொண்டிருந்தால்
காந்தாரி கற்பனையால் கல்வி பயிற்றவேண்டும்
ஆந்தாரங் கொள்ளவேண்டும் ஆனகுடி யாக்கவேண்டும்
ஆனகுடியாக்கவேண்டும் ஆங்கதனைக்காக்கவேண்டும்
மான மழித்திடுவாள் மாரா சியன்னையவள்
பழிபோட்டு மூக்கறுப்பாள் பட்டேனே பாவியென்பாள்
வழியொன்று கண்டால் மடிபிடிச் சண்டைசெய்வாள்
ஆகை யினாலே யவளுந்தன் மைந்தனுடன்
போக வழிதேடு புத்திகெட்ட வெட்டுணிநீ
நகத்தாலே கிள்வதை நல்ல கோடாலிதன்னால்
அகழ்த் தல்லோ வெட்டவேண்டு மாங்கது வேர்பிடித்தால்

உரைகேட்டு வெட்டுணியு மோடிவந்துவீடணுகி
விரைவிலே காந்தாரி! வீட்டைவிட்டுப்போடியென்றார்
உந்தன் மகனாலும் உன்னாலு மென்குடிக்கு
வந்த வெந்தீமைகளை மட்டிட்டுச் சொல்லலாமோ
கரிய னுனதுமகன் கால்வைத்த நாள்முதலாய்ப்
பெரிய குடிபெயர்ந்து பிக்காரி யானேனே
கூழுக் கழுதுங் குலைந்துநான் போனேனே
வாழுமனைக்கு வங்காய் வந்தாயே நிர்மூடி.
அவ்வுரை கேட்டே யவள்பதறி வாய்புலர்ந்து
வெவ்வுரை சொன்ன விதமேது மைத்துனரே
என்னாலே யல்லோ வினயகுடி நீரானீர்
என்னாலேயல்லோ நீரிந்தநிலையடைந்தீர்
பறக்கு மிலைதனிலே பாரக்கல் தூக்கிவைத்தேன்
நிறைக்கவேகல்யாணம் நேராகப்பண்ணி வைத்தேன்
துட்டர் மதிகேட்டுத் துர்க்குண மேலாடி
வெட்டுணி யென்பதனை மெய்யாகச் செய்துவிட்டீர்
தங்கை யுறவால் தரிக்கலாம் பார்தனிலே
எங்குறை தீருமிளை ஞன்தலை யெடுப்பான்
என்றே யிருந்தே னிளக்காரங் கண்டீரே
நன்றியைச் சுட்டுண்ணும் நாணயத்தைக் கொண்டீரே.
சொன்ன வுரைகேட்டுச் சுறுக்கொன்று வெட்டுணியும்
என்னடி வீணிடும்புகள் பேசலுற்றாய்
ஏழாண்டு காலமதாய் என்வளவில் நீயிருந்தே
ஏழாண்டு காலமதாய் இன்பமுறத் தின்கிலையோ
பிள்ளையும் நீயும் பிழைக்கவழி தேடினக்கால்
வள்ளல் தெரியுமடி வாய்ப்பட்டி யென்றுரைத்தார்.
வாய்ப்பட்டி யென்னலுமே வாராத துக்கம்வர
நாக்குமுறிக் கைகால் நடுங்க மனம்பதறி
ஓகெடுவாய் பாவி யுனக்குநான் பட்டதெல்லாம்
வாகு கெடலாச்சே வஞ்சனையே மேலாச்சே
பிள்ளைக்கு நல்ல பிடிப்பென் றிருந்தேனே
கள்ளத் தனத்தையிப்போ காட்டினையே சண்டாளா
என்ன கதியடைவாய் ஈசனா ரில்லையோடா
பின்னைத் தெரியுமடா பேதையென் சாபமென்று
சாபமிட் டன்னை தனையனோடு வீடுவிட்டுத்
தூபமிட்ட பேய்போலத் தூரவழி தானடந்தாள்
அழுது மனங்கலங்க யாங்கவள் தானடந்தாள்
தொழுது பகவானைச்சோர்ந்தவள் தானடந்தாள்

சும்மாடு கோலிச் சுமைதூக்கித் தானடந்தாள்
அம்மை தளர்ந்தே யகநொந்து தானடந்தாள்
பிள்ளையைக் கையிற் பிடித்தவள் தானடந்தாள்
வெள்ளமாய்க் கண்ணீர் விடுத்தவள் தானடந்தாள்
வினையாள னப்போது வேண்டுந் துணிவுரைப்பான்
கனமான தாயே கடுவருத்தங் கொள்ளாதே
ஈசனா ருண்டே யெவர்க்கும் படியளக்க
நேசத்தவன் பதத்தை நெஞ்சிலே நீநிறுத்து
சென்னை நகரணுகிச் சேமமடைவோ மென்றான்.
அன்னையு மவ்வா றழைத்து வருகையிலே
பொல்லாத பேதிகண்டு புத்திரனு மெய்மயங்கி
கல்லா லெறிந்தலைக்குங் கள்ளர்வதி காட்டில்
சூணாம் பேடென்னவுரை சொல்லுந் தனிக்காட்டில்
வாணா ளுலைக்கு மறவருறை நாட்டில்
களைத்து விறுவிறுத்துக் கைகால்கள் தாம்மடிந்து
இளைத்துக் கண்பஞ்சடைந் தேதில்லை யென்னும் வண்ணம்
பாலன் படுத்ததனைப் பாவையருந் தானறிந்து
சாலைப் புறந்தனிலே தள்ளாடித் தான்பதறி
மூட்டை முடிச்சுகளை மூலைக்கு மூலைவீசி
சாட்டாங்க மாகத்தெய்வந் தன்னை மிகத்தொழுவாள்
ஆருமற்ற பாவி யடியேனைக் காத்தளிக்க
நேராதோ வென்றே யிருகண்ணி னீர்சொரிய
பதறுங் குரலுடனே பாழும்வன மொலிப்பக்
கதறி யழுதாளே கற்புடை மெல்லியரும்

வழியில் வருமொருத்தி வாய்முறை கேட்டுருகி
அழியாதே நெஞ்சம்நீ யம்மணி யென்றுரைத்து
மைந்தன் றனையெடுத்து மார்பிலே கொண்டணைத்து
சுந்தரி வாவென்று சொல்லியே முன்னடந்தாள்

அடுத்த கிராமத்திலே யாங்கவள் வீடதனில்
கிடத்திச் சிறுவனையுங் கிட்டியவ ளேதுசெய்தாள்
வயித்திய நூலறிந்த மாராசி யேதுசெய்தாள்
சயித்தியம் போக்குநல்ல சாரமுள்ள பச்சிலைகள்
பேதியைக் கட்டுநல்ல பேர்போன வேர்கொடிகள்
வாதத்தைத் தூக்குதற்கு வாய்ந்தநல்ல மூலிகைகள்
கொண்டு பெரும்பானை கொள்ளுஞ் சலத்திலிட்டு

மண்டு மழல்காட்டி வடித்த கஷாயமதைக்
கொடுத்தாளே யம்மன் குளிர்ந்த மனதோட
கொடுத்தாள் பகவானைக் கும்பிட்டுக்கொம்பனையாள்.

பால னுயிர்த்துப் பசிதாக மென்றழுதான்
கோல மனதுடையாள் கூட்டினாள் பத்தியமும்
பத்தியங்கூட்டியாங்கு பத்துனாள் தானிருத்திப்
பத்து னாட்குள்ளே யந்தப் பாலன்சுகமடைய
பாலன் சுகமடையச் சீலமன துடையாள்
சாலவு பசரித்துத் தாயுடன் நன்மகனைப்
போக விடையளிக்கப் புந்தியுள்ள காந்தாரி
தேக பரவசமாய்ச் செங்கைகள் மேலெடுத்துத்
தெய்வத்தைப் போலவெண்ணிச் சீமாட்டியம்மையைத்தான்
கையெடுத்துக் கும்பிட்டுக் கண்ணீரது ததும்பப்
போய்வருவோ மென்றே புதல்வனுடன்றான் நடந்தாள்
நேயம் மறவாமல் நீங்கிப் புறநடந்தாள்.

You may also like

Leave a Comment