34. எட்டயபுர அரண்மனையில் மேலும் சில நிமிடங்கள்

18-Nov-2010

 

34. எட்டயபுர அரண்மனையில் மேலும் சில நிமிடங்கள்

 

அரண்மனை முழுதையும் நாங்கள் சுற்றிப் பார்த்து முடிக்க ஏறக்குறைய இரண்டரை மணி நேரங்கள் தேவைப்பட்டது. எல்லா பகுதிகளையும் பார்த்து அப்பகுதிகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அந்த பகுதிகளின் சிறப்புக்களைத் திரு.கருணாகர பாண்டியன் மற்றும்  அரண்மனை மேலாளர் வழி தெரிந்து கொண்டேன். சில அறைகள் பூட்டப்பட்டே இருக்கின்றன. அப்பகுதிகளுக்குள் நாங்கள் செல்லவில்லை.
 
அரண்மனையின் அழகு அன்றைய காலை நேரத்தின் இதமான காற்று ஆகியவை அங்கேயே மேலும் சிறிது நேரம் இருக்கலாம் என தோன்ற அரண்மனை வாசல் பகுதியில் அமர்ந்தோம். இதமான காற்றை ரசித்தபடி மேலும் பல செய்திகளைத் திரு.கருணாகர பாண்டியன் விவரித்த போது அவற்றை பதிவு செய்து கொண்டேன்.

 

 

அரண்மனையின் முகப்பில் உள்ள சிறிய பூந்தோட்டம் கண்களுக்குக் குளிர்ச்சியாக பசுமையாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

 
 

 
 
அரண்மனை வாசலில் அமைந்துள்ள பூந்தோட்டத்திற்கு மத்தியில் ஒரு அழகிய நீர் தொட்டி ஒன்று இருக்கின்றது. தற்சமயம் அதில் நீர் இல்லை மிகவும் கோலாகலத்துடன் பல்வேறு நிகழ்வுகளை இந்த அரண்மனை பார்த்திருக்கும். இப்போது வரலாற்று ஞாபகார்த்தமாக மட்டுமே இந்த அரண்மனை காட்சியளிப்பது மிகுந்த வருத்தமளிப்பதாக இருந்தது.  எங்கள் மூவருக்கும் ஏதோ ஒரு வகையில் கலையிழந்து காணும் இந்த மண்டபம் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் என்றே மனதில் தோன்றியது. அதனைப் பேசி பகிர்ந்து கொண்டோம்.
 
 

 

 

 

 
சில நூற்றாண்டுகள் பற்பல ஆடம்பரமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை சந்தித்த அரண்மனை இது. அரசர்கள் வழி வழியாக ஆட்சி செய்திருக்கின்றனர்.  இந்த பரம்பரையினரின் வாரிசுகள் இன்னமும் ராஜா என்ற மரியாதையுடன் அழைக்கப்படுவதும் இன்றும் வழக்கில் இருக்கின்றது. இப்பரம்பரையினரின் தொடர்ச்சியை இன்னமும் நாம் காணமுடிகின்றது. இதுவும் ஒரு சிறப்பல்லவா!
 
 

 
வம்சமணி தீபிகை எழுதிய கவிகேசரி. சாமிதீஷிதர் தனது நூலின் இறுதிப் பகுதியில் இப்பரம்பரையினரை .
"இவர்கள் வாக்கிலே சரஸ்வதியையும் ஸத்தியத்தையும் முகத்தில் சௌபாக்கியலெஷிமியையும்  புஜத்தில் வீரலெஷிமியையும்  கரங்களில் தரனலெஷிமியையும் மனசில் தைரியலெஷிமியையும் பூதகாருண்ணியலெஷிமியையும் இவற்றோடுங்கூட மாலெஷிமியயும் வகித்துக் கொண்டு இராஜ்ஜியப் பரிபாலனஞ் செய்து வருகின்றார்கள் " என்று வாழ்த்தி இந்த நூலை நிறைவு செய்கின்றார்.
 
இந்த நினைவுகளோடு அரண்மனையை விட்டு நாங்கள் வெளிவர, அரண்மனை மேலாளர் கதவுகளைப் பூட்டி வெளி வாசல் இரும்புக் கம்பிகளையும் பூட்டி மூடிவிட்டு எங்களை வழி அனுப்பி வைத்தார். அவரது உதவிக்கு நன்றி கூறி விட்டு அரசருக்கும் எனது வணக்கத்தையும் தெரிவிக்குமாறு கூறி நாங்கள் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
 
அடுத்து எங்கள் இலக்கு  உமறு புலவர் சமாதி. எங்கள் வாகனம் அந்த இடததை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
 
தொடரும்…!
 

அன்புடன்
சுபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *