May 9
தயாரிப்பு ஏற்பாடுகள்.
எனக்கு முதலில் எட்டயபுரம் தமிழகத்தில் எங்கு உள்ளது என்றே அறியாத நிலை. சென்னையிலிருந்து எட்டயபுரம் எப்படி செல்வது என்று சீதாம்மாவை கேட்டு தகவல் சேகரிக்க ஆரம்பித்தேன்.
எட்டயபுரம் அரசர்
எனது தமிழக பயணத்தைப் பற்றி எனது நெடுநாள் நண்பர் திரு. மாலன் அவர்களிடம் மின்னஞ்சலில் குறிப்பிட்ட போது அவர் எட்டயபுரம் செல்லும் போது அருகாமையிலேயே இருக்கும் ஒட்டப்பிடாரமும் சென்று வரலாமே என ஆர்வத்தைத் தூண்டினார். உண்மையில் ஒட்டப்பிடாரம் என்ற பெயரையே முதன் முதலாக அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அடிப்படையில் எட்டயபுரமே அறிமுகமில்லை. இதில் ஒட்டப்பிடாரம் செல்வதென்றால் அங்கு எப்படி செல்வது என குழப்பம் தோன்றி விசாரிக்க ஆரம்பித்த போது திரு.மாலன் வ.உ.சிதம்பரனார் பற்றிய சில தகவல்களை வழங்கினார். google map பார்த்து இவை அருகில் இருக்கும் சிறு நகரங்கள் என்றும் தெரிந்து கொண்டேன். அத்தோடு திருநெல்வேலியை அடிப்படையாகக் கொண்ட திரு.மாலன் தானும் என்னுடம் இந்த 4 நாட்கள் வந்து எனக்குத் தேவைப்படும் தகவல்களைப் பெற்றுத்தர உதவ முன்வந்தார். இது எனக்கு மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் அமைந்தது.
திரு.மாலனின் உதவியுடன் இந்தத் திட்டம் மேலும் சற்று விரிவடைந்தது. எட்டயபுரம் மட்டுமல்லாமல், ஒட்டப்பிடாரம், திருநெல்வேலி, கயத்தார் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வதோடு எட்டயபுரத்தில் பாரதி நினைவு இல்லமும் சென்று அங்கு பதிவு செய்யவும் ஏற்பாடுகளை ஆரம்பித்தோம்.
இதன் அடிப்படையில் அக்டோபர் மாதமே சென்னையில் திரு.ஆண்டோ பீட்டரைத் தொடர்பு கொண்டு எனது பயணத்துக்கான இரயில் டிக்கட் புக்கிங் செய்து கொண்டேன். திரு. மாலன் குறிப்பிட்ட விஷயங்களை இணையத்தில் தேடி சில தகவல்களையும் தொகுத்து வைத்துக் கொண்டேன். சீதாம்மா எனக்கு எட்டயபுரத்தில் நான் பார்க்க வேண்டிய, பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் என ஒரு பட்டியலை அனுப்பியிருந்தார். அந்தப் பட்டியலில் உள்ள விஷயங்களெல்லாம் எனக்கு புதியவை. அவற்றை பற்றி தெரிந்து கொள்ள தீதாம்மாவுடன் அவ்வப்போது அலுவலகத்திலிருந்து இல்லம் திரும்பியதும் இரவு வேளைகளில் gtalk மூலமாக பேசி தகவல் பெற்று வந்தேன்.
அப்போது எதிர்பாராத விதமாக நவம்பர் மாதம் மத்தியில் திரு.மாலனின் தந்தையார் காலமானார். இது சற்றும் எதிர்பாராத செய்தி. ஆக இந்த எதிர்பாராத நிகழ்வின் காரணமாக திரு.மாலன் திருநெல்வேலிக்கு பயணமாகி அங்கேயே இருக்க வேண்டிய கட்டாயம். இதன் விளைவாக அவரது அலுவலக வேலைகள் பல தங்கிப் போக, என்னுடன் இந்தப் பயணத்தில் துணையாக வர அவர் வைத்திருந்த திட்டத்தை மாற்றம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் எனக்கு அவ்வப்போது பல முக்கிய தகவல்களை மின்னஞ்சலில் வழங்கி வந்த்தார். அதோடு சென்னையிலிருந்து நான் திருநெல்வேலிக்குச் சென்று இறங்கியதும் என்னை அழைத்துச் செல்ல அவர் சகோதரரையும் ஏற்பாடு செய்து விட்டார்.
எனது தமிழக வருகைக்கு முன்னரே சென்னையில் ஒரு முறை திரு.மாலன் அவர்கள் எட்டயபுர ஜமீந்தாரின் மூத்தமகன் துரைப்பாண்டியன் அவர்களை நேரில் சந்தித்து இந்த பேட்டிக்காக அனுமதியும் பெற்று எனக்கு தகவல் அனுப்பினார். ஆக நான் எட்டயபுரம் செல்லும் போது அரண்மனையைத் திறந்து காட்டவும் தகவல்களை வழங்கவும் அரண்மனை மேலாளர் அங்கு டிசம்பர் 15ம் தேதி ஒரு நாள் முழுவதும் இருப்பதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார் திரு.துரைப்பாண்டியன். நான் தமிழகம் சென்ற தினமே திரு. கருணாகர பாண்டியனையும் தொடர்பு கொண்டு அவரை எட்டயபுரத்தில் 15ம் நாள் சந்திக்க ஏற்பாடு உறுதி செய்து கொண்டேன்.
அரண்மனை வாசலில், சுபா, திரு.கருணாகர பாண்டியன், அரண்மனை மேலாளர்
நான் எட்டயபுரத்தில் ஒரு நாள் திருமதி.சாவித்ரி துரைராஜ் அவர்கள் இல்லத்தில் தங்குவதாக ஏற்பாடும் செய்திருந்தார் சீதாம்மா. இந்த தயாரிப்புகளோடு எட்டயபுரம் நோக்கிய எனது பயணமும் தொடங்கியது!
அன்புடன்
சுபா