27. எட்டயபுர அரச வம்சம் – 1

03-10-2010

 

27. எட்டயபுர அரச வம்சம் – 1

பாஞ்சாலங்குறிச்சி போர், அதன் சமயம் வீரபாண்டிய கட்டபொம்மனின் நிலை ஆகியவற்றைப் பற்றி முந்தைய பகுதிகளில் பார்த்தோம். எட்டயபுர மன்னர்களின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வதும் இந்தக் கட்டுரை தொடருக்கு அவசியமாகப் படுவதால் அதனைப் பற்றிய குறிப்புக்களையும் இங்கு வழங்க வேண்டியது அவசியமாகின்றது.
 
இந்த அரச பரம்பரையினரின் வம்சத்தைப் பற்றிய குறிப்புக்களை வழங்கும் நூலாக இருக்கின்ற வம்சமணி தீபீகை மற்றும் Etaiyapuram – Past and Present  இவை இரண்டில் வழங்கப்பட்டுள்ள குறிப்புக்களின் படி இந்த பட்டியலை உருவாக்க முனைந்துள்ளேன். அதிலும் குறிப்பாக வம்சமணி தீபிகை என்ற நூல் எட்டயபுர ஜமீன் அரசர் ஜெகவீரராம் குமார எட்டப்ப மஹாராஜா அவர்களின் முழு ஆதரவுடனும் அரச வம்சத்தின் பார்வைக்குட்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாலும் அரச குடும்பத்தினரைப் பற்றிய இதில் உள்ள தகவல்கள் உறுதியானவையாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளேன்.
 
எட்டயபுர அரச வம்சத்தின் காலம் கி.பி 803லிருந்து பதிவாகியிருகின்றது. இதனை Etaiyapuram – Past and Present நூலும் உறுதி செய்கின்றது. 
 
 
முதலாவது பட்டம்
பெயர்: பெரிய அப்பா நாயக்கர்
ஆட்சி செய்த காலம்: 53 ஆண்டுகள்
இறப்பு: கி.பி 856
 
 
இரண்டாம் பட்டம்
பெயர்: நல்லமநாயக்கர்
இவர் முதலாம்  பட்டம் பெரிய அப்பா நாயக்கரின் மகன்
ஆட்சி செய்த காலம்: 46 ஆண்டுகள்
இறப்பு: கி.பி 902
 
 
மூன்றாம் பட்டம்
பெயர்: நல்லசில்லமநாயக்கர்
இவர் இரண்டாம் பட்டம் நல்லமநாயக்கரின் மகன்
ஆட்சி செய்த காலம்: 50 ஆண்டுகள்
 
 
4ம் பட்டம்
பெயர்: நல்லகெச்சிலப்ப நாயக்கர்
இவர் மூன்றாம் பட்டம் நல்லசில்லமநாயக்கரின் மகன்
ஆட்சி செய்த காலம்: 48 ஆண்டுகள்
 
 
5ம் பட்டம்
பெயர்: நல்லசில்லமநாயக்கர்
இவர் நான்காம் பட்டமாகிய நல்லகெச்சிலப்ப நாயக்கரின் மகன்
ஆட்சி செய்த காலம்: 46 ஆண்டுகள்
 
 
6ம் பட்டம்
பெயர்: நல்லமநாயக்கர்
இவர் ஐந்தாம் பட்டமாகிய  நல்லசில்லமநாயக்கரின் மகன்.
ஆட்சி செய்த காலம்: 48 ஆண்டுகள்
 
 
7ம் பட்டம்
பெயர்: கெச்சிலப்ப நாயக்கர்
இவர் ஆறாம் பட்டமாகிய நல்லமநாயக்கரின் மகன்
ஆட்சி செய்த காலம்: 45 ஆண்டுகள்
 
 
8ம் பட்டம்
பெயர்: சின்ன அப்பா நாயக்கர்
இவர் ஏழாம் பட்டமாகிய கெச்சிலப்பநாயக்கரவர்கள் மகன்
ஆட்சி செய்த காலம்: 52 ஆண்டுகள்
 
 
9ம் பட்டம்
பெயர்: கெச்சிலப்ப நாயக்கர்
இவர் எட்டாம் பட்டமாகிய சின்ன அப்பா நாயக்கரின் மகன்
ஆட்சி செய்த காலம்: 64 ஆண்டுகள்
 
 
10ம் பட்டம்
பெயர்: குமாரமுத்து நாயகக்ர்
இவர் ஒன்பதாம் பட்டமாகிய கெச்சிலப்ப நாயக்கரின் மகன்
ஆட்சி செய்த காலம்: 49 ஆண்டுகள்
 
இந்த பத்து அரசர்களும் மொத்தம் 501 ஆண்டுகள் ஆண்டிருக்கின்றனர். 
 
 
11ம் பட்டம்
பெயர்: நல்லமநாயக்கர்
இவர் 10ம் பட்டமாகிய குமாரமுத்து நாயக்கர் அவர்களின் மகன்.
ஆட்சி செய்த காலம்: 43 ஆண்டுகள்.

இவர் ஆட்சியை ஆங்கில வருடம் 1304ல் தொடங்குகின்றார்.
 
 

இவரது காலத்திலிருந்து தான் இந்த அரசர்களுக்கு எட்டப்பன் என்ற அடைமொழி கிடைக்கின்றது. ஆக இவரது பெயர் நல்லம எட்டப்ப நாயக்கர் என மாற்றம் பெருகின்றது. 
 
 
12ம் பட்டம்
பெயர்: நல்லம எட்டப்ப நாயக்கர்
இவர் 11ம் பட்டமாகிய நல்லம எட்டப்ப நாயக்கரின் மகன்.
ஆட்சி செய்த காலம்: 35 ஆண்டுகள்
 
 
13ம் பட்டம்
பெயர் நல்லசில்லம எட்டப்ப நாயக்கர்
இவர் 12ம் பட்டமாகிய நல்லம எட்டப்ப நாயக்கரின் மகன்.
ஆட்சி செய்த காலம் 41 ஆண்டுகள்
இதுவரையில் இவர்களது ஆட்சி சந்திரகிரி என்னும் பெயர் கொண்ட பகுதியை மையமாகக் கொண்டு அமைந்திருந்திருக்கின்றது.
 
 
14வது பட்டம்
பெயர்: குமார முத்து எட்டப்ப நாயக்கர்
இவர் 13வது பட்டமாகிய நல்லசில்லம எட்டப்ப நாயக்கரின் மகன்
ஆட்சி செய்த காலம்: 20 ஆண்டுகள்

இவரது காலத்தில் இந்த அரச ராஜ்யம் சந்திரகிரியிலிருந்து மதுரைக்கு மாறுகின்றது.
 
 
15வது பட்டம்
பெயர்: குமார எட்டப்ப நாயக்கர்
இவர் 14வது பட்டமாகிய குமார முத்து எட்டப்ப நாயக்கரின் மகன்.
ஆட்சி செய்த காலம்: 29 ஆண்டுகள்.
 
ஆங்கில வருடம் 1443 தொடங்கி 1472 வரை இவரது ஆட்சிக் காலம் இருந்திருக்கின்றது. இவரது ஆட்சியின் போது மேலும் சில கிராமங்களையும் உள்ளடக்கி இவரது ஆட்சி பெருகியிருக்கின்றது.
 
இவரது ஆட்சிக் காலத்த்தில் தான் ஜெகவீரராம என்ற பெயரும் இவர்கள் அரச பரம்பரையினரின் பெயரோடு இணைகின்றது. இதனால் இந்த மன்னரின் பெயர் ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் என்று வழங்கப்பட்டு வந்துள்ளது.
 
 
16வது பட்டம்
பெயர்: ஜெகவீரராமசுந்தர எட்டப்ப நாயக்கர்
இவர் 15வது பட்டமாகிய ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கரின் மகன்.
ஆட்சி செய்த காலம்: 24 ஆண்டுகள்
 
 
17வது பட்டம்
பெயர்: ஜெகவீரராமகெச்சிலப்ப  எட்டப்ப நாயக்கர்
இவர் 17வது பட்டமாகிய ஜெகவீரராமசுந்தர எட்டப்ப நாயக்கரின் மகன்.
ஆட்சி செய்த காலம்: 20 ஆண்டுகள்
 
 
18வது பட்டம்
பெயர் ஜெகவீர ராமவெங்கடேசுர எட்டப்ப நாயகக்ர்
இவர் 17வது பட்டமாகிய ஜெகவீரராமகெச்சிலப்ப  எட்டப்ப நாயக்கரின் மகன்.
ஆட்சி செய்த காலம் 22 ஆண்டுகள்.

 

இவர் காலத்தில் அருங்குளங்கோட்டை, சித்தநாயக்கன் பட்டி, மாவேலி, ஓடைக்கோட்டை ஆகியவற்றைக் கைப்பற்றி இந்த இடங்களையும் தமது வசமாக்கிக் கொண்டு ராஜ்யத்தை விரிவாக்கியிருக்கின்றனர். இவர் 1516லிருந்து 1538 வரை  மன்னராக ஆட்சி செய்திருக்கின்றார்.
 
 
19வது பட்டம்
பெயர் ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர்
இவர் 18வது பட்டமாகிய ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்ப நாயக்கரின் மூத்த மகன்.
ஆட்சி செய்த காலம் 27 ஆண்டுகள், அதாவது 1538 முதல் 1565 வரை.

 

ஜெகவீர ராமவெங்கடேசுர எட்டப்ப நாயஜக்கரின் மூன்றாம் மகன் வெங்கடேசுர எட்டு நாயக்கரை நத்தஞ்சீமையில் ஆண்டு வந்த முடிலிங்கம நாயக்கர் என்னும் அரசர் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டார்கள் என்றும் வம்சமணிதீபிகை குறிப்பிடுகின்றது.(பக்கம் 33)
 

20வது பட்டம்
பெயர் ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர்
இவர் 19வது பட்டமாகிய ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கரின் மகன்.
ஆட்சி செய்த காலம் 19 ஆண்டுகள். 

 

இவரது ஆட்சிக் காலத்தில் மதுரையில் ஆட்சி செய்துகொண்டிருந்த கிருஷ்ணப்ப நாயக்கர் அய்யனவர்களுக்கு கேரளாவிலுள்ள இரண்ணியலென்ற ஒரு கோட்டையை போரிட்டு பிடிப்பதில் உதவி செய்திருக்கின்றார்.

 

இந்த மன்னரிலிருந்து தொடங்கி இவர்கள் பெயரில் அய்யன் என்ற பெயரும் இணைந்து வருகின்றது. ஆக இந்த அரசர் ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன் என அழைக்கப்படுகின்றார்.

 

இவர் தான் எட்டயபுரம் என்னும் நகரை உண்டாக்கியர்.  நகரை உருவாக்கி அந்த நகரில் சிவாலயம் ஒன்றினைக் கட்டி அங்கே சிவனை பிரதிஷ்டை செய்து வைத்து இன்று எட்டயபுரம் என்றழைக்கப்படும் நகருக்கு வித்திட்டவர்.
 
தொடரும்…
 
 
அன்புடன்
சுபா


 

மதுரையில்  நாயக்கர் ஆட்சி நாகம நாயக்கர் என்பவரிலிருந்து தொடங்குகிறது.

இவர் மொகலாயர் கலவரத்துக்குப்பின்  அமைதியை நிலைநாட்டுவதற்காக விஜயநகரப்
பேரரசால்  அனுப்பப்பட்டவர். அரசுக்கு எதிராகத் தாமே
முடிசூட்டிக்கொண்டார். ராஜ விசுவாசியான அவர்தம் மகன் விசுவநாத நாயக்கர்
விஜய நகரத்திலிருந்து மதுரை வந்து தந்தையைச் சிறைப் படுத்துகிறார். அதன்
பின் தெலுகு வம்சாவளியினர்  மதுரையை ஆள்கின்றனர். பாளையப் பகுப்புமுறை
அப்போது தோன்றியதுதான்.

விசுவநாத நாயக்கர் (1529 – 1564)

  1. கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 – 1572)
  2. வீரப்ப நாயக்கர் (1572 – 1595)
  3. கிருஷ்ணப்ப நாயக்கர் II (1595 – 1601)
  4. விசுவப்பர்
  5. முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 – 1609)
  6. முத்து வீரப்ப நாயக்கர் I (1595 – 1601)
  7. திருமலை நாயக்கர் (1623 – 1659)
  8. முத்து வீரப்ப நாயக்கர் II (1659)
  9. சொக்கநாத நாயக்கர்
 10. முத்து வீரப்ப நாயக்கர் III (1662 – 1689)
 11. ராணி மங்கம்மாள் (1689 – 1706)
 12. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1706 – 1731)
 13. மீனாக்ஷி (1731 – 1739)

மன்னர் திருமலை நாயக்கரின் காலம் மதுரையின் பொற்காலம் எனலாம்.

நாயக்கர்களின் ஒரு கிளை தஞ்சையிலும் அரசாள்கிறது. இவர்களைத் தொடர்ந்து
மராட்டியர் தஞ்சையை ஆண்டனர்

தேவ் rdev97@gmail.com

 

சுபா!

எட்டயபுரத்து மன்னர்கள் பேசும் மொழி தெலுங்கு.

தெலுங்கு போர்வீரர்களின் தலைவர்களில் ஏராளமானோர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலமான திட்டங்களின் அடிப்படையில் தெற்கு தமிழ்நாட்டில் குடியேறினார்கள். செஞ்சி (வட தமிழ்நாடு), மதுரை, தஞ்சை ஆகிய நாடுகளில் இவர்கள் துணைத்தலைமை பீடங்கள். மத்திய தலைமை பீடம் விஜயநகரம். முதலில் அதாவது1450 இலிருந்து 1500 வரை இவர்களுக்கு சந்திரகிரி மன்னர்தான் தலைவர். சந்திரகிரி மன்னர் செல்லப்பா என்கிற நரசிம்மர் மிகப் பெரிய அரசராக இருந்து வந்தார். இவர் ஆணையின் பெயரில் கட்டியதுதான் இன்றைய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். சந்திரகிரி திருப்பதிக்கு தென்மேற்கே சில மைல் தொலைவில் இருக்கிறது. இங்கு தெலுங்குதான் அப்போதும். 1509-1530 (ஸ்ரீகிருஷ்ணதேவராயர்) ஆம் ஆண்டுக்குப் பிறகு நாயக்கர்கள் தமிழ்நாட்டில் வலுப்பெற்றனர்.

 

ராயலசீமா என்றொரு பகுதி ஆந்திராவில் உண்டு. இந்த ராயலசீமா தற்போதைய திருப்பதியிலிருந்து க்ர்நூல் வரை வடக்கே வியாபித்துள்ளது. இங்கு உள்ள சிற்றரசர்கள் (சிற்றரசர்கள் என்றால் அவர்களின் அண்ணன், தம்பிகள் என) பலர் விஜயநகரப்படையின் பாதுகாப்பு அதிகாரிகள். இவர்களே தெற்கே சென்று விஜயநகரம் சார்பில் ஒவ்வொரு இடங்களில் பணியாற்றும்போது பின்னாளில் விஜயநகர மத்திய ஆட்சி வீழ்ச்சியடைந்தபோது தாங்கள் இருந்த பகுதிகளை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள். இது ஆரம்பித்த காலம் 1450 லிருந்து 1600 வரை. இந்த 1400ம் ஆண்டுக்கு முற்பட்ட காலகட்டத்தில் பாண்டியர்கள் ஆண்டுவந்தனர்.
தமிழ்தான் எங்கும் ஆட்சி மொழி. தெலுங்கர்கள் அறவே கிடையாது.

 

நாயக்கர் எனும் வார்த்தையும் தெலுங்குதான். நாயக – தலைவர்.. தமிழில் ’கர்’ சேர்த்துக் கொண்டார்கள். 1400 ஆம் ஆண்டு பிற்பட்டகால பாண்டிய மன்னனின் செந்தமிழ்க் கல்வெட்டு ஒன்று தென்காசி விஸ்வநாதர் கோயில் சம்பந்தப்பட்டது மின் தமிழில் ஏற்கனவே உரையாடப்பட்டது நினைவிருக்கலாம்.

 

ராயலசீமா ஒரு வரட்சிப் பிரதேசம். அந்தக் காலத்திலேயே 200 அடிக்குக் கீழே தோண்டி நீர் எடுப்பது வழக்கம். இந்த மக்கள் நீர்ப்பாசன முறையில் ஒரு முக்கியமான முறையை கண்டுபிடித்தார்கள். ஆழ்கிணறு என்ச் சொல்லப்படும் தற்போதைய  போரிங் முறையை சாதாரண மூங்கில் மூலமாக நிலத்துள் கொண்டுசெல்வார்கள், அதாவது மூங்கில் மரங்களை அப்படியே நீளமாக வைத்து ‘குழாய்’ போல பயன்படுத்துவார்கள். முதலில் நிலத்துள் அனுப்பப்படும் மூங்கிலின் அடிப்பாகத்தினை கூராக்கி அந்த கூர்ப்பகுதியின் மூலம் நிலத்துள் நாட்டிக் கொண்டே செல்வார்கள். ஒரு கட்டத்துள் மேலே உள்ள மூங்கில் குழாயின் வாய்ப்பகுதியில் தங்கள் வாயை வைத்து மிக வேகமாக உறிஞ்சுவார்கள். ஆழ்கிணற்றுத் தண்ணீர் பம்பிங் செய்யப்படுவது போல) உறிய உறிய தண்ணீர் வரும். மிகவும் கடினமான செயல்தான். ஆனால் இதற்காகவே இவர்கள் பயிற்றுவிக்கப்படுவது உண்டு. (ஆதாரம் ‘விஜயநகரம்’ எழுதியது பர்டன் ஸ்டெயின்.)

பின்னாளில் தென் தமிழ்நாட்டில் நீர்ப்பாசன வசதிக்காக ஏராளமான அளவில் இந்த ராயலசீமா குடும்பங்கள் இடம் பெயர்ந்தார்கள். (இதுவும் மேற்கண்ட புத்தகத்து செய்திதான்). படைகளும் குடும்பங்களும் ஒருகால கட்டத்தில் தமிழகத்தையே தன் சொந்த இருப்பிடமாகக் கொண்டுவிட்டது.

 

இதில் தெற்கே ராஜபாளையம் ராஜாக்கள் மட்டுமே வடக்கு ஆந்திரப்பகுதியான பொப்பிலியை பூர்வீகப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.

venkdhivakar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *