ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் சிவன் ஆலயம்

  

ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் சிவன் ஆலயம்

Sir Manmatha Karuneshvarar Sivan Temple 
கிருஷ்ணன், சிங்கை.

 
காசியப முனிவருக்கு மாயை மூலமாக சூரபத்மன் என்ற அசுரன் பிறந்தான். கடுந்தவம் புரிந்து பரமேசுவரனிடம் அளப்பரிய வரங்களைப் பெற்ற சூரன், முவுலகையும் வென்றான். வானவர்களை அடக்கிக் கொடுமைப்படுத்தி வந்தான்.  இந்திரன் மைந்தனாகிய ஜயந்தனும், தேவர்களும், தேவமாதர்களும் சிறையில் அடைபட்டுத் துன்புற்றனர்.
 
சூரபத்மனின் கொடுமை தாங்காமல்  இந்திரன் மேருமலையில் பெருந்தவம் செய்தான்.ஈசனார் தரிசனம் தந்து
"தவத்தின் நோக்கமென்ன? ”என்று வினவினார். ”அசுரன் சூரபத்மனின் தொல்லைகள் எல்லை மீறிவிட்டன.  எதிர்த்துப் போரிட எங்களுக்குப் போதிய வலுவில்லை. ஐயனே! இதற்கொரு முடிவைக் காட்ட வேண்டும்”  என வேண்டி நின்றான். ‘இந்திரா! கவலையை விடு. நம்மால் தோற்றுவிக்கப்படும் குமாரனால் சூராதி அவுணர்கள் வேரோடு சாய்வர்’ ‘எனப் பெருமான் அருள்பாலித்தார்.

 

இந்திரன் ஆறுதல் கொண்டாலும் பரமன் இந்த அற்புதத்தை எப்போது நிகழ்த்துவார்?  எப்போது நம்துயர் விலகும் என்ற நெருடலோடு, பிரமதேவரை அணுகினான். 

பிரமதேவர் திருமாலை நாடினார். ‘சிவமூர்த்தியின் யோகநிலை கலைந்தால்தான் பார்வதி திருமணம் நடந்தேறும்;பின்னர் குமாரர் தோன்றுவர்; சூரசம்ஹாரம் நிகழும்’ என்றார் நாராயணர்.  நான்முகனார் ” பிரபோ! ஈசனை நெருங்கி அவருடைய யோகநிலையைக் கலைப்பதென்பது நிகழக்கூடிய காரியமா? அது சாத்தியமாகுமா?” எனக் கேட்டார்.

"அது மன்மதன் ஒருவனால் மட்டுமே முடியும். எல்லா வில்லாளிகளும் அம்பு தொடுத்து ஒன்றை இரண்டாக்குவார்கள்.  மன்மதன் மட்டுமே இரண்டை ஒன்றாக்கும் ஆற்றல் பெற்றவன். எனவே அவனை ஐயனிடம் அனுப்பி வையுங்கள்” என்றார் விஷ்ணு.

 

பிரமதேவரும் மன்மதனை அழைத்து, ”சூரனின் கொடுமைகள் பற்றியும், தேவலோகம் படும் அவதி பற்றியும் எடுத்துரைத்து, இறைவன் அருள்பாலித்தபடி குமரக் கடவுள் தோன்ற வேண்டுமாகில் சிவத்தின் தவத்தைக் கலைப்பதைத்  தவிர வேறு மார்க்கமில்லை.” என அவனிடம் கூறினார். இதைக் கேள்விப்பட்ட மறுகணமே,  மன்மதன் தீயை மிதித்தவன் போலாகி, ”ஈசனார் மகிமையை நன்கு உணர்ந்த தாங்களா இந்த விபரீத விளையாட்டில் இறங்க என்னைத் தூண்டுகிறீர்கள்? நான் அற்புத விளையாட்டுகளைச் செய்தவன்தான்.

என்னுடைய பாணங்களுக்குக்குத் தப்பியவர் யாருமில்லைதான். ஆனால், பரமனை என்னால் இவ்விஷயத்தில் நெருங்க முடியுமா?” எனப் பலவாறு மறுத்துரைத்து மன்றாடினான். மறுப்புரை செய்த மன்மதனிடம்  கடைசிக் கட்டமாக, ”மீண்டும் மறுத்தால், எனது கொடிய சாபத்திற்கு ஆளாக நேரிடும்”  எனக் கோபத்தோடு சொன்னார் பிரமன்.எந்த வகையில் பார்த்தாலும் ஏதோ ஒரு சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதையுணர்ந்த மன்மதன், பரமனிடம் சாபம் பெற்று மடிவதே மேல் என்ற முடிவோடு சம்மதித்தான். இதனை மனையாள் இரதிதேவியிடம்  விவரித்தான்.

 

இரதியையும் அழைத்துக்கொண்டு கரும்பு வில், சுரும்பு (வண்டுகள்) நாண், அரும்பு பாணம் என்ற ஐம்மலரம்புகளோடு தென்றலாகிய தேரில் ஏறிக் கயிலாயம் நோக்கிப் பயணமானான்.

மன்மதன் தேரேறி மேலை வாயிலில் நுழைந்தான்.

 

கல்லால மரத்தினடியில் சனகாதியர் சூழ எம்பெருமான் அமர்ந்திருந்த திருக்கோலத்தைக் கண்டான். ”சகல லோகங்களையும் இமைப்பொழுதில் சாம்பலாக்கி, நீறு செய்ய வல்ல நிமலனைப் பூமலர்க்கணை கொண்டா போர் புரிவது” என்று கலங்கி விதி வலியது என்ற முடிவோடு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு, கரும்புவில்லை வளைத்து நாணேற்றி, தண்மலர்க் கணைகளைப் பூட்டி,மதிசடை நாயகன் முன் சென்று, மேனி நடுங்க இறைவன் திருமேனி நோக்கிப் பிரயோகம் செய்தான். விரைந்து சென்ற பாணங்கள் ஈசனின் மேனியைத் தாக்கிய மறுகணமே அவரது நிஷ்டை கலைந்தது.

கோபத்தில் கண்கள் சிவக்க, எய்தவனை நோக்கினார் ஈசனார். நெற்றிக்கண் திறந்ததும் அதிலிருந்து பாய்ந்த தீப்பொறிகள் இமைப்பொழுதில் மன்மதனைச் சாம்பலாக்கிவிட்டது. இதனைக் கண்ணுற்ற இரதிதேவி தலைவிரி கோலமாக  இறைவனிடம் ஓடி வந்து புலம்பினாள். ”தேவர்களின் துயரத்தைப் போக்கத்தான் என் மணாளன் இச் செயலில் இறங்கினார். காரணகர்த்தாவாகிய அவர்களை மன்னித்த பிரபு, என்னவருக்கு உயிர்ப்பிச்சை அளித்து எனக்கு மீண்டும் வாழ்வளிக்க வேண்டும்” என முறையிட்டாள்.

ஈசனும் ”பெண்ணே! கவலைப்படாதே! உன் கணவனை உயிர்ப்பித்துத் தருவேன். ஆனால்,  உன் கணவன் உன் கண்ணுக்கு மட்டுமே தெரிவான்” என உரைத்தார்.பிறர் கண்களுக்குப் புலப்படாமையால் மன்மதனுக்கு அநங்கன் (உறுப்பற்றவன்) என்று பெயர்.மிகுந்த கருணை கொண்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்துத் தந்தததால் ஈசனுக்கு ”காருணீஸ்வரர்” என்று பெயர் வந்தது. மன்மதனுக்குக் கருணை புரிந்ததால் ”மன்மத காருணீஸ்வரர்” ஆனார். 
 

வரலாறு

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ மன்மத காருணீஸ்வர சிவ ஆலயம் தோற்றம் கண்டது. காலாங் காஸ் வொர்க்ஸ் (Kallang Gas Works) சிவன் கோயில் என்று பெரும்பாலான பக்தர்களால் அழைக்கப்பட்ட  இவ்வாலயத்திற்கு ஒரு வளமான பாரம்பரியம் உண்டு. 

போக்குவரத்து அதிகம் நிரம்பிய காலாங் சாலையில் சிங்கப்பூர் குடியேற்ற (இமிகிரேஷன்) கட்டடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில், அமைதியான, பசுமையான சுற்றுப்புறம்,  ஆலயத்தின் பின்புறத்தில் நெளிந்தோடும் அழகான காலாங் நதி – இந்தச் சுழ்நிலையில் அமைந்துள்ளது ஆலயம்.

 

 

தமிழ் மக்கள் வழிபாட்டுக்கு ஒரு தலம் அமைத்துக்கொள்ள ஸ்ட்ரெயிட்ஸ் செட்டில்மெண்ட்  கவர்னரால்  (Governor of Straits Settlement)  வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் 1888 ம் ஆண்டு சனவரி 1ம் தேதி  கோயில் ஸ்தாபிக்கப்பட்டது. இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பின் 1909 ம் ஆண்டு மார்ச் மாதம் பழைய பட்டாவுக்கு பதில் புதிய பட்டா 99 ஆண்டு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. 

இடைப்பட்ட  இருபத்திரண்டு ஆண்டு காலத்தில், 1909 ல் பட்டாவில் கையெழுதிட்ட அனைவரும் இயற்கை எய்தி விட்டதால், 1931ல் காஸ் வொர்க்ஸில் தலைமை போர்மேனாகப் பணியாற்றிய  திரு.ஏ.வி.இருளப்ப பிள்ளை ஆலய மேலாண்மையை மேற்கொண்டார். அவரும் அவருடைய நண்பர்களும் ஆலயத்தைக் காரை, காங்கிரீட் கட்டிடமாக மாற்றினார்கள்.

ஆனாலும் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டனர். 1934-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி திரு.ஏ.வி. இருளப்ப பிள்ளை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மறைந்த தங்களின் தந்தையார் கு.வேலுப்பிள்ளை நினைவாகக் கோயிலைக் கட்ட திரு.பக்கிரிசாமி பிள்ளையும்,  அவர்தம் சகோதரர் திரு.வி.நாராயணசாமி பிள்ளையும் ஒப்புக்கொண்டனர்.

 

 

சுவான் அண்ட் மெக்லரன் (Swan & Mclaren) எனும் கட்டடக் கலை நிறுவனம் கோயில்  வரைபடங்களைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டது. 1934 ம் ஆண்டு டிசம்பர் 27 ம் தேதி புதிய வரைபடம் தயாரானது. விமானம் மற்றும் அலங்கார வேலைகளுக்கு திரு.கந்தசாமி, திரு.எஸ்.ராஜாமணி ஆகிய ஸ்தபதிகள் 1935 ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி தமிழ்நாட்டிலிருந்து  வரவழைக்கப்பட்டனர். 1937 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இருளப்ப பிள்ளையும் அவரது குழுவினரும்  தொடர்ந்து நிதிப்பற்றாக்குறையை எதிர்நோக்கியதால் 1939 ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி திரு.வி.பக்கிரிசாமி பிள்ளை கோயில் தலைவராக நியமிக்கப்பட்டதுடன் ஆலய மேலாண்மையை  ஏற்கவும், மிகுதியாக ஏற்படும் செலவுகளை ஏற்றுக்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

அவரது தலைமையின் கீழ் 1951-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதியும், 1974 நவம்பர் 29-ம் தேதியும் ஆலயத் திருப்பணிகள் நிறைவு பெற்றுக் கும்பாபிஷேகம்  நடைபெற்றது.
 
1993-ம் ஆண்டிலிருந்து நிர்வாக அறங்காவலரான திரு.பி சிவராமனும் நிர்வாகக் குழுவினரும் சிறுசிறு புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்டனர். கடைசி புனரமைப்புப் பணி 1997-ம்  (ஈசுவர)  ஆண்டு ஜனவரி 27-ம் தேதி, அதாவது அதற்குச் சரியான 1937 ம் ஆண்டில் அதே ஈசுவர ஆண்டின் 60 ஆண்டு சுழற்சிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுக் கும்பாபிஷேகம் நடந்தேறியது.
 
ஆலயத்தின் அமைப்பு

முதலில் நம்மை வரவேற்பவர் நந்திகேசுவரர். சிவபெருமானின்  வாகனம் ரிஷபம்.  அவர் எப்போதும் ஈசனாருக்கு மிகவும் அருகில் இருப்பவர். நந்தியம்பெருமான் எப்போதுமே சிவனை நோக்கி அமர்ந்திருப்பார்.பரமாத்மாவுடன் ஆத்மா இணைய வேண்டும் என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் நந்திகேசுவரர் சிவபெருமானை வணங்கும் நிலையில் இருக்கிறார். ஆலயத்தில் நுழைந்தவுடன் நமக்கு நேராகக் காட்சியளிப்பர் ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர்.

 

 

 

இவ்வாலயத்தின் மூல மூர்த்தியான சிவலிங்கம் ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் என்று அழைப்படுகிறது.  நம் கண்ணுக்கு புலப்படும் சிவலிங்கத்தின் மூன்று பிரிவுகள் முத் தேவர்களையும் பிரதிபலிக்கின்றன.  சதுர அடிப்பாகம் பிரம்மா, எண் கோண தூண்வடிவம் விஷ்ணு, வட்டமான மேற்பகுதி ருத்ரர். சுத்த வித்யா தத்துவம் எனும் பிரிவில் ஒருபெரும் பகுதியாக இந்த முத்தேவர்கள் அமைந்துள்ளனர். வட்டமான மேற்பகுதியில் சிவதத்துவத்தின் ஐந்து கூறுகள் அமைந்துள்ளன. அதைப் போலவே விஷ்ணுவிற்கு ஏழு வித தத்துவமும், பிரம்மாவிற்கு 24 ஆத்ம தத்துவமும் உள்ளன.

 

 

சிவனாருக்கான ஐந்து முகங்கள் – உச்சிமுகம் ஈசானம், கிழக்கு முகம் தற்புருடம், தெற்கு முகம் அகோரம், வடக்கு முகம் வாமதேவம், மேற்கு முகம் சத்தியோசாதம். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐம் பெருஞ்செயல்களையும் சிவலிங்கம் பிரதிபலிப்பதாகக் கூறுவதுண்டு.

 

”அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள
அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.”

என்பார் திருமூலர் ஏழாம் தந்திரத்தில்.
 
இலிங்கத் திருமேனியின் இடப்புறம் வெற்றிகரமாக எல்லாக் காரியங்களும் நிறைவேறவும், தடைகள் நீங்கவும் அருள்புரியும் விக்ன விநாயகர்.

 

ஐயனின் வலப்புறம் எளிமையான வாழ்வு வாழவேண்டும் என்பதை உணர்த்துமுகமாக முருகன் தண்டாயுதபாணி உருவத்தில் உள்ளார்.

 

எல்லா உயிரினங்களுக்கும் கருணை கொண்டு காக்கும் அன்னையாக பர்வதவர்த்தினியம்பாள் (பார்வதி) அருள்பாலிக்கிறாள்.
 
மூலவருக்கு வலப்புறம் சிவனின் மறு உருவமான தட்சிணாமூர்த்தி பேருண்மையை போதிக்கும் குருவாக இங்கும் அருள்புரிகிறார்.
 
சிவபெருமானையே சதாகாலமும் தியானித்துக்கொண்டு இருக்கும் சண்டிகேசுவரர் இலிங்கத் திருமேனிக்கு இடப்புறத்தில்.சிவதரிசனத்தின் முழுப்பயனும் இவர்தம் அருளாலேயே கிடைக்கப் பெறுகிறோம்.
 
கோள்களின் தாக்கத்தால் ஏற்படும் தீங்குகள் குறைய நவக்ரஹங்கள் தனி மண்டபத்தில் ஒரு பீடத்தின் மீது நிறுவப்பட்டுள்ளனர்.
 
ஆலயத்தின் காவல் தெய்வமாக இருப்பவர் பைரவர்.ஆலய நிறைவு பூஜையான அர்த்தஜாம பூஜையை இவர் சன்னிதியில் பூர்த்தி செய்து விடைபெறுவது சிவாகம மரபில் இருந்து வருகிறது. இந்த பைரவரே ஆலயத்தையும் நகரத்தையும் காவல் தெய்வமாக இருந்து காத்து அருள் புரிகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *