பேராசிரியர் மா. இளையபெருமாள்
முனைவர். சு.அழகேசன்
கேரளத்திலிருந்து தமிழுக்குத் தொண்டு செய்தோர் பலர். படைப்புகள் வழியும், ஆய்வுகள் வழியும் தமிழுக்குப் பெரிதும் பங்காற்றியவர்களுள் பேராசிரியர் மா.இளையபெருமாளும் ஒருவர்.
- நீல.பத்மநாபன்,
- ஆ.மாதவன்
- நகுலன்
என்ற படைப்பாளர்கள் வரிசையிலும்,
- பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை
- பேரா.வ.அய்.சுப்பிரமணியம்
போன்ற அறிஞர்கள் வரிசையிலும் வைத்து எண்ணத்தக்கவர் மா.இளையபெருமாள்.
ஏறத்தாழ 30 ஆண்டுகள் (1954 முதல் 1984 வரை) கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி, தமிழுக்கும் – மலையாளத்துக்கும் அரும்பணி ஆற்றியவர்.
குமரி மாவட்டத்தில், தாழக்குடி என்னும் சிற்றூரில் 1924ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி, இ.மாணிக்கவாசகம் பிள்ளை – மாரியம்மாள் தம்பதிக்குப் பிறந்தார்.
"எமக்குத் தொழில் எழுத்து; இமைப்பொழுதும் சோராதிருத்தல்"என்ற இலட்சிய வேட்கையோடு பணியில் ஈடுபட்டு, தனது புகழை நிலைநிறுத்தியவர். தனது அரிய முயற்சியால் பி.எச்டி. பட்டம் பெற்றவர்.
"இறவாத புது தமிழ் நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்" என்ற கொள்கைவழி வாழ்ந்தவர்.
"செந்தமிழ் நூற்களில் சிந்தனைச் செல்வம் சேர்ந்து பெருகுதல் எனக்கின்பம்" எனக் கவிதை முழக்கம் செய்த இவர்,
- படைப்பு
- ஆய்வு
- மொழிபெயர்ப்பு
- இலக்கணம்
முதலிய பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார்.
இவரது புலமையை வெளிச்சப்படுத்துவதாக 13 நூல்களும் சுமார் 25 கட்டுரைகளும் காணக்கிடைக்கின்றன. படைப்பிலக்கியத் துறையில், குறிப்பாகக் கவிதைத் துறையில் இறவாத புகழ் பெற்று விளங்குபவர். சிறந்த கவிஞரான பேராசிரியர், சுமார் 150 கவிதைகளுக்கும் மேலாக, தனிக் கவிதைகளை இயற்றியுள்ளார். இக்கவிதைகளுள் பெரும்பாலானவை புதுக்கவிதைகளேயாகும். புதுக்கவிதைகள் வளர்ச்சியுறாத காலத்திலேயே, "புதுக்கவிதைகளும் கவிதைகளே" என்ற கொள்கையில் வழுவற நின்று, இவர் பல புதுக்கவிதைகள் எழுதிப் புகழ் பெற்றார்.
இவை, "புதுக்குரல்கள்" என்ற நூலிலும், பல இலக்கியவட்டம், எழுத்து, கலைமகள், கன்னியாகுமரி, வஞ்சிநாடு போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது 40 கவிதைகளின் தொகுப்பாக "வாழ்க்கை வண்ணம்" என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
அச்சில் ஏறாத இவரது "இராம சரிதமும்", "கலிங்கப் போர்" என்ற கவிதை நாடகமும் நம்மைப் பிரமிக்க வைக்கும். கவிதைகளிலும் கூடத் தமது இலக்கணச் சிந்தனைகளை வெளியிட்டு இன்பம் கண்டவர். "சங்கிலி" என்ற தலைப்பில் அமையும் கவிதையும் இவ்வகையதே.
பேராசிரியரின் இலக்கண, மொழிபெயர்ப்புப் பணி பெரிதும் சுட்டத் தகுந்தது. "சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்ற விழுமிய எண்ணத்தால் தமிழ் – மலையாள மொழிகளின் இலக்கண நூல்களை மொழிபெயர்த்து, இரு மொழிகளுக்கும் சேவை செய்துள்ளார்.
1953ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி சொர்ணம்மாள் என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். இவருக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
தமிழிலிருந்து தொல்காப்பியம் (1961), நன்னூல் (1967), வீரசோழியம் (1967), நேமிநாதம் (1984) ஆகிய தமிழ் இலக்கண நூல்களை மலையாளத்திலும், மலையாள மொழியிலிருந்து லீலா திலகம் (1971), கேரள பாணினீயம் (1977), டாக்டர் ஹெர்மன் குண்டர்ட் எழுதிய மலையாள மொழி இலக்கணம் (1979), சொற்றொடர்க் காண்டம் ஆகிய நூல்களை மலையாளத்திலிருந்து தமிழிலும் மொழிபெயர்த்து அரும்பணியாற்றியவர்.
இம்மொழிபெயர்ப்பு நூல்கள் இவரது இரு மொழிப்புலமையைப் பறைசாற்றுவதாக அமைகின்றன. இம்மொழிபெயர்ப்பு நூல்களில் இடம்பெற்றுள்ள முன்னுரைகள், இவரது புலமையாற்றலை, ஆழந்த இலக்கணப் புலமையை வெளிச்சமிடுகின்றன.
இலக்கண நூல்கள் மட்டுமன்றி, "வள்ளத்தோள்" (1979) என்ற நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் இலக்கணத் துறையில் இவர் செய்த ஆய்வுகள் இவரை, இலக்கணப் பேராசனாக உலகுக்கு அடையாளப்படுத்தின. பொதுவாக இலக்கண விதிகளை நிறுவ, சங்க இலக்கியச் சான்றுகள், உரைகாரர்களின் மேற்கோள்கள், மலையாள இலக்கண நூல்களின் கருத்துகள் போன்றன கொண்டு நிறுவுதல் இவருக்குக் கைவந்த இலக்கணக் கலையாகும்.
இவரது "சங்க இலக்கியம் குறித்த இலக்கண ஆய்வே" இவருக்கு முனைவர் பட்டத்தைப் பெற்றுத்தந்ததோடு, இன்றுவரை பேசப்படுகிற மிகச் சிறந்த இலக்கண ஆய்வேடுகளுள் ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் இவரது "தமிழ்மொழிச் சிந்தனைகள்" (1964) என்ற நூலும் இவரது இலக்கணப் புலமை சார்ந்த சிறந்த ஆய்வு நூல்களாகும். சங்க இலக்கியங்களுக்குச் சொல்லடைவுகள் தயாரித்தது தான் இவரது சிறந்த பணியாகும். இவ்வகையில், அவர் சங்க இலக்கியங்கள் முழுமைக்கும் சொல்லடைவுகள் தயாரித்துள்ளார். சங்க இலக்கியங்களின் சொற்களை ஈறுகள் அடிப்படையில், அடிகளின் அடிப்படையில், தொகைகளின் அடிப்படையில் எனப் பலவகைகளில் சொல்லடைவுகள் தயாரித்துள்ளார். அவை இன்றுவரை அச்சில் ஏறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக ஸ்ரீதர மேனனின் ஆங்கில நூலான, A Survey of Kerala History என்ற நூலைத் தமிழில் "கேரள சரித்திரம்" என்ற நூலாகவும், "கலிங்கப் போர்" என்ற கவிதை நாடகம், "எது இன்பம்?" என்ற கவிதைத் தொடர், "இராம சரிதம்" (மலையாள இராமசரிதத்தைத் தமிழ் வரி வடிவில் கூறுவது) போன்ற நூல்கள், மலையாளக் கவிதைகளைத் தமிழிலும், தமிழ் மொழிக் கவிதைகள் பலவற்றை மலையாளத்திலும் மொழிபெயர்த்தவை இன்றுவரை அச்சில் ஏறாதது பெரிதும் கருத்தில் கொள்ளத்தக்கது.
வாழ்நாள் முழுவதும் தமிழ் இலக்கணம் படித்தல், கற்பித்தல், ஆய்வு செய்தல், மொழிபெயர்த்தல் என வாழ்ந்து, இலக்கணத் துறையில் பலருக்கும் வழிகாட்டியாகவும், நல்லாசிரியராகவும் வாழ்வாங்கு வாழ்ந்தவர் பேராசிரியர் இளையபெருமாள். இவரது அரும்பணியைப் பாராட்டி, தமிழகப் புலவர் குழு இவருக்குத் "தமிழ்ச் சான்றோர்" விருது அளித்து கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.
1984ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி இளையபெருமாள், மண்ணுலக வாழ்வை நீத்தார்.
இவரது படைப்புகள் என்றென்றும் நினைக்கத்தக்கவை; போற்றத்தக்கவை; ஏற்கத்தக்கவை; அவரது சமூகம் சார்ந்த படைப்புகள் என்றென்றும் அவரை நினைக்கச் செய்யும்; நிலைத்து நிற்கும்.
நன்றி:- தினமணி