குன்றக்குடி ஆதீன வரலாறு
குரு அருள்
அருள்தரு சண்முகநாதப் பெருமான் துணை
குன்றக்குடி
திருக்கயிலாய பரம்பரைத்
திருவண்ணாமலை ஆதீன வரலாறு
45-ஆவது குரு மகாநந்நிதானம்
திருவருள் திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக
பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின்
அருளாணையின் வண்ணம் எழுதப் பெற்று,
திருவண்ணாமலை
குருமுதல்வர் திருக்கோயில்
2-9-1990 திருக்குட நீராட்டு விழாவையொட்டி
1-9-1990 இல்
மாண்புமிகு ப.உ.சண்முகம் அவர்கள் தலைமையில்
தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்
திருமிகு, டாக்டர்.சி.பாலசுப்ரமணியம் அவர்களால்
வெளியிடப் பெற்றது.
வெளியீடு:
திருவண்ணாமலை ஆதீனம்
குன்றக்குடி- 623 206
பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம்.
தமிழ்நாடு.
தொகுத்து எழுதியவர்: மரு. பரமகுரு
பதிப்புரை
திருக்கயிலாயப் பரம்பரையில் வந்த சுத்த சைவ ஆதீனங்கள் பதினெட்டு. அவற்றுள் தொன்மையான ஆதீனங்கள் சிலவற்றில் ஒன்று நமது திருவண்ணாமலை ஆதீனமாகும்.
இந்த ஆதீனத்தின் சுருக்கவரலாறு இது. இந்த ஆதீன வரலாறு பேராசிரியர் திரு. சுவர்ண காளீச்சுரன் அவர்களால் எழுதப் பெற்று 1960 இல் (சார்வரி—ஆவணி—பூரட்டாதி நாளில்) வெளிவந்துள்ளது. பெரும்பாலும் அதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றது இது. எனினும் இது காலக் குறிப்புக்களுடனும் சில மாறுதல்களுடனும் மேலும் கிடைத்த சில செய்திகளுடனும் எழுதப் பெற்றுள்ளது.
அடியேனுக்கு இப்பணியை அருளிய திருவருள் திரு குருமகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் பொன்னார் திருவடிக் கமலங்களைப் போற்றி வணங்குகின்றேன்.
இந்தப் பணியில் பல்லாற்றானும் உதவிய என் இனிய நண்பர் வித்துவான் திரு க.கதிரேசன் எம்.ஏ.பி.எட்., அவர்களுக்கு என் நன்றி.
மிகக்குறைந்த காலத்தில் இதனை விரைந்து அச்சிட்டு உதவிய குன்றக்குடி சண்முகநாதன் அச்சகத்தார்க்கு நன்றி.
தொன்று தொட்டு இன்று வரை எவரெல்லாம் இந்த ஆதீனச் சிறப்புக்குப் பணி செய்தார்களோ, எவரெல்லாம் இனி வருங்காலத்திலும் பணி செய்யவிருக்கிறார்களோ அவர்களுக்கு, இந்த நூல் காணிக்கையாக்கப் பெறுகின்றது.
ஆதீன அடியவன்
மரு. பரமகுரு
குன்றக்குடி
27-8-1990.
செய்ய தமிழும் சிவநெறியும்
சிறக்கத் தொண்டு புரிந்திடுவோன்
ஐயன் குன்றக்குடி அடிகள்
அருணா சலதே சிசுநாதன்
தையல் பாகன் தண்ணருளால்
சமயச் செங்கோல் இனிதோச்சி
வையம் புகழப் பல்லாண்டு
வாழ்க! வாழ்க! வாழ்கவே!
–கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
குரு அருள்
அருள்தரு சண்முகநாதப் பெருமான் துணை
குன்றக்குடி திருகயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீன வரலாறு
தெய்வசிகாமணி தேசிகர் வணக்கம்
இருபதின் மேல் இரு நான்காக மங்களும் ஈரிரண்டு
சுருதியின் வாக்கியமும் தவறாது மெய்த் தொண்டர்மனத்து
இருள்மல பாசத்தை நீக்கி மெய்ஞ் ஞான இயற்கைதரும்
திருவருணாசலத் தேவ சிகாமணிச் சிற்குருவே!
–சிற்குருமாலை
திருவண்ணாமலை ஞானமலை; இறைவன் பேரொளிப் பிழம்பாய்த் தோன்றிக் காரிருள் ஆணவக் கட்டறுத்த ஒளிமலை; தொன்று தொட்டு இன்று வரை எண்ணற்ற தவசீலர்களுக்கும் ஞானிகளுக்கும் மோனிகளுக்கும் முனிவர்களுக்கும் யோகிகளுக்கும் ஞானத்தொட்டிலாக விளங்கி வரும் அருள்மலை; சக்திக்கு ஒரு பாகம் தான் கொடுத்து நின்ற மலை; முத்திக்கு வித்தாய் முளைத்த மலை; சிந்திப்பார் முன்னின்று முத்தி வழங்கு மலை; உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய இறைவன் அமர்ந்து அருள் சுரக்கும் தெய்வமலை; திருமாமணி மண்ணார்ந்த அருவித்திரன் மழலை முழவு அதிரும் அழகு மலை; அருளாளர் பலரின் திருப்பாடல்கள் பெற்றுப் பொன்றாப் புகழுடன் திகழும் புண்ணியமலை.
இத்தகு பெருமையெல்லாம் வாய்ந்த திருவண்ணாமலைத் திருத்தலம் ஆறு ஆதாரத் தலங்களுள் மணிபூரகத்தலமாகவும் ஐம்பெரும் பூதத்தலங்களுள் ஒன்றாகவும் திகழும் திருத்தலம். பிறக்க முத்தியளிப்பது திருவாரூர்; தரிசிக்க முத்தி தருவது தில்லையம்பதி; இறக்க முத்தி வழங்குவது காசி; ஆனால் நினைத்த அளவிலேயே முத்தி முந்தித் தருவது திருவண்ணாமலை திருத்தலம் என்பது ஆன்றோர் திருவாக்காகும்.
இந்தத் திருவண்ணாமலைத் திருத்தலத்தில் இற்றைக்கு 740 ஆண்டுகளுக்கு முன் திருவவதாரம் செய்தருளியவர் திருவருள் திரு தெய்வசிகாமணி தேசிக குருமூர்த்திகள். அவர்கள் திருவண்ணாமலைப்பதியில் 680 ஆண்டுகளுக்கு முன் ஞாலமுய்ய, நாமுய்ய, சைவ நன்னெறியின் சீலமுய்ய வேண்டி, திருவண்ணாமலை ஆதீனத்திருமடத்தை நிறுவியருளினார்கள். அந்த ஆதீனத்திருமடம் இக்காலத்தில் பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டத்தில் குன்றக்குடியில் அமைந்து அருள் சுரந்து வருகிறது. குன்றக்குடி, காரைக்குடியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் திருப்புத்தூரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் மதுரை—காரைக்குடி (குன்றக்குடி வழி) பேருந்துச் சாலையில் உள்ளது.
திருக்கயிலாய பரம்பரை
திருக்கயிலாய மலையில் கல்லாலின் நீழலிலே தென்முகப் பரமனாய் எழுந்தருளியுள்ள ஶ்ரீகண்டபரமசிவம் சிவஞான போதத்தை, திருநந்தி தேவருக்கு உணர்த்தியருளினார். முப்பொருளுண்மையை உணர்த்தி எப்பாலவரையும் உய்விக்கும் அந்தச் சிவஞானச் செல்வத்தைத் தம் அருமை மாணாக்கராகிய சனற்குமார முனிவருக்கு அருளிச் செய்தார் திருநந்தி தேவர். சனற்குமார முனிவர் அதனைத் தன் மாணாக்கருள் சிறந்த சத்தியஞானதரிசினிக்கு அருளினார். அவர் அதனைத் தம் மாணாக்கருள் சிறந்த பரஞ்சோதி முனிவருக்கு அருளிச் செய்தார். இது திருக்கயிலாயத்தில் நிகழ்ந்தது. ஆதலின் திருநந்திதேவர் முதலிய நால்வரும் இந்தப் பரம்பரையிலே “தேவசந்தானத்தார்” எனவும் “அகச் சந்தானத்தார்” எனவும் வழங்கப் பெறுவர்.
மெய்கண்ட தேவர்
தெய்வமணங்கமழும் தமிழகத்தில் நடுநாட்டிலே உள்ள திருப்பெண்ணாகடத்தில் சைவவேளாள மரபில் அச்சுத களப்பாளர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பெருஞ்செல்வர். அவருக்கு நெடுநாள் வரை மகப்பேறு வாய்க்கவில்லை. அதனால் அவர் மிகவும் வருந்தினார். திருத்துறையூரிலே அக்காலத்தில் எழுந்தருளியிருந்த தமது குலகுருவாகிய சகலாகம பண்டிதரிடம் சென்று தமது கவலையைத் தெரிவித்தார். சகலாகம பண்டிதர் தம் சீடராகிய அச்சுத களப்பாளரின் குறையைத் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டார். செந்தமிழ்மறையாகிய தேவாரத் திருமுறையை வழிபட்டுக் கயிறு சாத்தினார். அதுபோது, திருநெறிய தமிழாகிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரத்தில், திருவெண்காட்டுத் திருப்பதிகத்திலுள்ள,
“பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடுள்ள நினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயன தோன் உமைபங்கள் வெண்காட்டு முக்குள நீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே”
என்னும் திருப்பாடல் காட்சியளித்தது. அதுகண்ட அச்சுத களப்பாளர் அத்திருப்பாடலில் சொல்லியவண்ணம் தமது அருமை வாழ்க்கைத் துணைவியாரோடு புறப்பட்டுத் திருவெண்காடு சென்றடைந்தார். அங்குள்ள முக்குளத் தீர்த்தத்தில் முறைப்படி நீராடினார். அருள் தரு சுவேதவனப் பெருமானையும் அருள் தரு பிரமவித்தியா நாயகியையும் நியமத்துடன் வழிபட்டு வந்தார். அந்த நாளில் அவர் தம் வாழ்க்கைத் துணைவியார் திருவயிறு வாய்க்கப் பெற்றார். அச்சுத களப்பாளர் அளவிலா மகிழ்வடைந்தார்; பத்து மாதங்களிலும் சிவாகம விதிப்படி செய்ய வேண்டிய சடங்குகளையும் செய்வித்தார். ஒரு நல்ல நாளில் தமிழகம் செய்த தவப்பயனாய்த் திருவவதாரம் செய்தார் ஒரு ஞானப் புதல்வர். அச்சுத களப்பாளர் அகம் மிக மகிழ்ந்தார். சுவேதவனப் பெருமானின் திருவருளை எண்ணி, தமது திருமகனார்க்கு சுவேதவனப் பெருமாள் என்று பிள்ளைத் திருநாமம் சாத்தினார்; பின் தமது வாழ்க்கைத் துணைவியாரையும் தெய்வத் திருக்குழந்தையையும் அழைத்துக்கொண்டு திருப்பெண்ணாகடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.
அச்சுத களப்பாளரின் அருமைத் துணைவியாரின் சகோதரர் காங்கேய பூபதி என்பவர். அவர் திருவெண்ணெய்நல்லூரில் வசித்து வந்தார். அவர், தம் சகோதரியின் புதல்வராகிய சுவேதவனப் பெருமாளைக் காண்பதற்குத் திருப்பெண்ணாகடத்துக்குச் சென்றார். சென்றவர் சுவேதவனப் பெருமாளை, திருவெண்ணெய்நல்லூருக்கு அழைத்துச் சென்று தமது இல்லத்தில் வளர்த்து வந்தார்; குழந்தைக்கு இரண்டு வயதானது.
அந்த நாளில் முன்பு திருநந்திதேவர் மரபிலே சிவஞான உபதேசம் பெற்றப் பரஞ்சோதி முனிவர் மாட்சிமை மிக்க அகத்தியரைக் காணும் பொருட்டுப் பொதிய மலைக்குச் சென்று கொண்டிருந்தார். செல்லும்போது வழியிலே திருவெண்ணெய் நல்லூர்த் திருவீதியில் இரண்டு வயதுக் குழந்தையாய் விளையாடிக் கொண்டிருக்கும் சுவேதவனப் பெருமாளைக் கண்டார்; அவருடைய பக்குவ நிலையைத் தெரிந்தார். சுவேதவனப் பெருமாளை அணுகி அவருக்குச் சிவதீக்கை செய்து தமது ஆசிரியர் திருப்பெயருக்கேற்ப “மெய்கண்டான்” என்னும் திருப்பெயர் சாத்தினார்; தாம் மரபுவழிக் கேட்டுணர்ந்த சிவஞான போதத்தை அவருக்கு உபதேசித்தார்; பின் பொதியமலைக்குப் புறப்பட்டுச் சென்றார். மெய்கண்டதேவர் தாம் கேட்ட சிவஞான போதப் பொருள்களைச் சிந்தித்துத் தெளிவு பெற்றார்; சிவஞான போதத்தைத் தெய்வத் தமிழ் மொழியில் அருளிச் செய்து உலகிற்கு வழங்கினார்.
சகலாகம பண்டிதர் என்னும் அருணந்தி தேவர்
மெய்கண்ட தேவரின் குலகுருவாகத் திருத்துறையூரிலே எழுந்தருளியிருந்த சகலாகம பண்டிதருக்கு இச்செய்தி எட்டியது. அவர் திருவெண்ணெய்நல்லூருக்குச் சென்று மெய்கண்ட தேவரைக் கண்டார்; தம்மை ஆட்கொண்டருளுமாறு வேண்டினார். அவரது பக்குவ நிலை கண்டு மெய்கண்டதேவர் அவருக்குத் தீக்கை செய்து தாம் அருளிச் செய்த சிவஞானபோதத்தை உபதேசித்தார். “அருள் நந்தி” எனத் தீட்சாநாமமும் சூட்டினார். அதன் பின் அருள் நந்தி தேவர், மெய்கண்டார் அருளிய சிஞான போத நூற்பொருளை விரித்துச் சிவஞான சித்தியார் என்னும் பெருநூலை இயற்றினார்.
இத்தகைய அருள்நந்தி தேவரின் அருமைச் சீடர்களுள் ஒருவரே நமது திருவண்ணாமலை ஆதீனக் குரு முதல்வர் திருவருள் திரு தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆவார்கள்.
ஆதீனக் குரு முதல்வர்
திருவண்ணாமலையில் மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் பெருமையுடைய ஆதிசைவ மரபிலே திருவவதாரம் செய்தவர் நமது ஆதீனக் குரு முதல்வர். இவர்களைப் பெற்ற பேற்றினையுடைய தாயாரும் தந்தையாரும் இத்தெய்வக் குழந்தையை நன்முறையில் வளர்த்துவந்தனர். இத்தவப் புதல்வர் வளர்ந்து பதினாறு வயதுக்குக் கற்பன கற்றும், கேட்பன கேட்டும், உணர்வன உணர்ந்தும் பக்குவ நிலையடைந்தார். தம் தெய்வத் திருமகனாரின் வளர்ச்சி நிலை கண்டு பெற்றோர் இருவரும் அளவிலா மகிழ்வு கொண்டனர்.
இறைவன் அருட்காட்சி
முப்போதும் திருமேனி தீண்டிப் பூசனை செய்யும் முறைமையுடைய இவரது தந்தையார் ஒரு நாள் மாலைப் பொழுதில் அண்ணாமலை அண்ணலின் திருக்கோயிலுக்குப் பதினாறு வயது நிரம்பிய தெய்வசிகாமணியை உடன் அழைத்துச் சென்றார். அழைத்துச் சென்ற தந்தையார் கருவறைக்குள் சென்றார். அங்குச் சென்று அருணாசலேசுவரப் பெருமான் திருமேனிக்குத் திருமுழுக்குச் செய்து பூசனை செய்து கொண்டிருந்தார்.
தம் தந்தையாருடன் பின் சென்ற தெய்வசிகாமணி ஆலயத்தின் திருக்கொடி மரத்தை அடைந்ததுமே தன்னை மறந்தார்; தலைவன் தாளை நினைத்தார்; செங்கண் நெடுமாலும் சென்றிடந்தும் காண்பரிய பொங்குமலர்ப் பாதத்தைப் போற்றி உளமுருகினார்; கைகளைத் தலையில் வைத்துக் கண்ணீர் ததும்பினார்; கல்லும் கரையும் வண்ணம் கானம் எழுப்பிக் கசிந்துருகினார். கொடிமரம் மின்னிற்று! எங்கும் அமைதி நிலவிற்று! எங்கும் அருளாட்சி! அண்ணாமலை அண்ணல் வெள்விடைமேல் தோன்றிக் காட்சியளித்தார் தெய்வசிகாமணிக்கு! சில விநாடியில் கொடிமரத்தின் அருகில் மறை ஆயிரம் மொழிந்த திருவாயான் அந்தண வடிவாய்த் திருமேனி கொண்டு நின்றார். இவ்வரிய காட்சியைக் கண்ட தவப் புதல்வர், அவ்வந்தணர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்; ஆடினார்; பாடினார்; ஆனந்தக் கூத்தாடினார்; இறைவன், :அன்பனே, நீ, திருத்துறையூரிலுள்ள அருள்நந்தியிடம் சென்று சேர்வாயாக!” எனத் திருவாய் மலர்ந்து மறைந்தருளினார். அந்தணனாகி வந்து ஆட்கொண்ட எம்பெருமானைக் காணாது திகைத்தார் தெய்வசிகாமணி. அப்பொழுது தந்தையார் வழிபாட்டை முடித்துக்கொண்டு வந்தார்; தம் மைந்தரைக் கண்டு வீட்டிற்கு அழைத்தார். எல்லாருக்கும் தந்தையான இறைவன் ஆணையைக் கூறி தம் தந்தையுடன் செல்ல மறுத்துவிட்டார் அருள்ஞான வள்ளல்; இறைவன் ஆணை வழி ஞானாசிரியரைத் தேடித் திருத்துறையூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
திருத்துறையூரிலிருந்த அருள்நந்தி சிவாச்சாரியாரின் கனவில் இறைவன் தோன்றினான். “நமது அன்பன் தெய்வசிகாமணி, திருவண்ணாமலயிலிருந்து உன்னை நாடி வருகின்றான். அவனுக்கு ஞானோபதேசம் செய்வாயாக!” என்று அவரிடம் கூறி மறைந்தருளினான். அருள்நந்தி சிவாச்சாரியார் துயில் நீங்கி, இறைவன் அருளைச் சிந்தித்து வாழ்த்தி தெய்வசிகாமணியின் வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார். தெய்வசிகாமணி விரைந்து சென்று திருத்துறையூரை அடைந்தார். இறைவன் உணர்த்தியருளிய ஞானாசிரியரைக் கண்டார்; அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். அருள்நந்தி சிவாச்சாரியாரும் தம் சீடர்களில் ஒருவராகத் தெய்வசிகாமணியை ஏற்றருளினார்; சிவஞான போதத்தை உபதேசித்தருளினார்.
இவ்வாறிருக்கும் நாளில் ஒரு நாள் நமது ஞானப் பெருங்குரவர் இறைவனே சுயம்புவாகத் தமது ஆன்மார்த்த மூர்த்தியாகப் பூசைக்கு எழுந்தருள வேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டார்; இவ்விருப்பத்தினைத் தம் ஞானாசிரியரிடம் விண்ணப்பித்துக்கொண்டார். ஞானாசிரியர் இறையருளைச் சிந்தித்து, திருக்காளத்திக்குச் செல்லுமாறு பணித்தார். அவர் பணித்தவண்ணம் தெய்வசிகாமணி திருக்காளத்தியைச் சென்றடைந்தார். திருக்காளத்தி எழுகொழுந்தாய் உள்ள ஏகநாயகரைக் கண்டார். எழுந்த பேருவகை அன்பின் வேகமானது மேற்செல்ல, மிக்க விரைவோடு ஓடிச் சென்றார். இருகரம் தலைமேல் கூப்பி ஆனந்த பரவசமானார்; அடியற்ற மரம் போல் ஐயன் திருமுன்பில் வீழ்ந்தார்; தன்னை மறந்தார்; அந்நிலையில் நித்திரையானார். அப்பொழுது திருக்காளத்தியப்பர் அருட்பெருங்குரவர் கனவில் தோன்றி, “அன்பனே! நாம் உனக்காகத் திருக்கோயில் அருகேயுள்ள புற்றிலே சிவலிங்க உருவாய்த் திகழ்கின்றோம்; அங்கு வருக!” எனக்கூறி மறைந்தான். அத்திருமொழி உணர்ந்து விழித்த ஞானப் பெருங்குரவர் ஆராக்காதல் பெருக, எழுந்தோடிப் புற்றருகே சென்றார்; அங்குக் காளத்தியப்பராம் புனித வாழ்வைச் சிவலிங்க வடிவில் கண்டு, எடுத்து , மார்புறத் தழுவினார்; மட்டிலா மகிழ்வு கொண்டார். தமது ஆன்மார்த்த வழிபாட்டு மூர்த்தியாகிய அப்பெருமானை ஏந்திக் கொண்டு காளத்தியை விட்டுத் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டுச் சென்று அங்கிருந்து வழிபட்டு வருவாராயினார்.
இவ்வாறு நமது குருமுதல்வருக்காகச் சிவலிங்க வடிவாய் எழுந்தருளிய காளத்தியப்பர், திருவண்ணாமலையில் அமைந்த ஆதீனத் திருமடத்திலும் பின் ஆதீனத் திருமடம் பிரான் மலை (பறம்பு மலை)யில் அமைந்த போது அங்கும், அதன் பின் குன்றக்குடியில் ஆதீனம் அமைந்த போது குன்றக்குடித் திருமடத்திலும் எழுந்தருள்விக்கப்பெற்று வழிவழி நம் ஆதீனக்குருமூர்த்திகளால் வழிபாடு செய்யப் பெற்று வருகிறார்.
குதிரையை உயிர்ப்பித்த குருநாதர்
நமது குரு முதல்வர் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருந்த காலத்தில் விளைந்த அற்புதங்கள் பல. அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கே காண்போம்.
வீரவல்லாள தேவன் திருவண்ணாமலையைத் தலைநகராகக் கொண்டு (கி.பி. 1291—-1342) ஆட்சி செய்து வந்தான். அக்காலத்தில் ஒருநாள் அவன், குதிரை வீரர்கள் புடைசூழப் பவனி வந்தான். அப்போது அவனுடைய பட்டத்துப் புரவி பதறி வீழ்ந்தது. வாயால் நுரை கக்கிற்று; சிறிது நேரத்தில் உயிரிழந்தது; இதனால் எங்கும் பரபரப்பானது. அரசன் மிகுந்த கவலையுற்றான், மக்கள் வருந்தினர். இந்த நேரத்தில் நமது அருட்பெருங்குரவர் அங்கே தோன்றினார். அரசன் தவமுனிவரின் திருவடியை வணங்கினான்; குறை நீக்க வேண்டினான். குறுநகை புரிந்தார் குருமுனிவர். திருநீறெடுத்துத் திருமந்திரமாம் திருவைந்தெழுத்தை ஓதித் திருவருளைச் சிந்தித்தார்; திருநீற்றினைப் புரவி மீது தெளித்தார். புரவி படுத்துறங்கி விழித்தெழுந்தது போல் எழுந்தது. மன்னன் மனமகிழ்ந்து கரங்குவித்து அண்ணலை வணங்கினான். மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தழுந்தினர். குருமுனிவர் தம் திருக்கரத்தால் மன்னனையும் மக்களையும் வாழ்த்தியருளினார்.
கருணை நிறைந்த குருமுதல்வரின் இந்த அற்புத வரலாறு, திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலின் தெற்கு மதிற்சுவரில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளதை இன்றும் காணலாம். குரு முதல்வரின் திருவருளால் மேலும் பற்பல சித்துக்கள் நிகழ்ந்தன; கொடிய விலங்குகளும் தம் குணம் நீங்கி உறவு கலந்து வாழ்ந்தன; சிறுத்தையும், பசுவும் ஒன்று கூடி மகிழ்ந்து விளையாடின. இந்த உலகம் அறியாத புதுமை கண்டு, மக்கள் வியந்தனர்.
இவ்வாறு அனுபூதிச் செல்வராக விளங்கிய குரு முதல்வரை நாடிச் சீடர்கள் வந்தனர். அவர்களுக்குச் சிவஞானச் செல்வத்தை அருளிச் செய்தார் குருமுதல்வர். சீடர்கள் தொகை பெருகப் பெருக அவர்கள் தங்கியிருந்து உபதேசம் பெற்றுக்கொள்ளும் வகையில் தமது 60—ஆம் வயதுக் காலத்தில் (கி.பி. 1310 இல்) திருவண்ணாமலையில் ஆதீனத் திருமடம் தோற்றுவித்தருளினார் குருமுதல்வர். மேலும் சிலகாலம் அருளுபதேசம் செய்து கொண்டிருந்து தமது சீடருள் சிறந்தவராகிய தாண்டவராய தேசிக குருமூர்த்தியிடம் திருமடத்துப் பொறுப்பினை வழங்கி, ஒரு ஆவணி மாதம் பூரட்டாதி நாளன்று, திருவண்ணாமலைத் திருப்பதியில் வேட்டவலம் சாலையின் தென்புறத்தில் சிவயோக நிலையில் எழுந்தருளியுள்ளார்.
குரு முதல்வர் காலம்
நமது ஆதீனக் குரு முதல்வர் மண்ணுலகில் திருமேனி கொண்டுலவிய காலம் கி.பி. 1250—-1325. ஏறத்தாழ 75 ஆண்டுகள் என்று கொள்வது பொருந்தும்.
திருவண்ணாமலைக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ள திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்ட தேவனே சிவஞான போதம் செய்த மெய்கண்ட தேவராகலாம் என்பதும் அவர் கி.பி. 1232-இல் வாழ்ந்தவர் என்பதும் ஆராய்ச்சியாளர் முடிபு. அது மூன்றாம் இராசராசன் ஆட்சிக்காலத்து 15-ஆவது ஆண்டு ஆகும். மூன்றாம் இராசராசன் ஆட்சிக்காலம் கி.பி.1210—1256. இவற்றை அடிப்படையாகக் கொண்டு மெய்கண்டார் காலம் ஒருவாறு ஆராய்ச்சியாளர்களால் கி.பி.1223 எனத் துணியப் பட்டு நடைமுறையிலிருந்து வருகிறது. மெய்கண்டார் ஆண்டு கி.பி.1223 எனின், அவருக்கு மூத்தவராகிய அருள்நந்தி தேவர், “சகலாகம பண்டிதர்” எனப் புகழ் பெற்று விளங்கிய காலம் அது. ஆதலால் அருள் நந்தி தேவர், குறைந்தது 40 வயது மெய்கண்டாருக்கு மூத்தவராதல் வேண்டும். எனவே அருள் நந்தி தேவர் தமது 84-ஆம் வயதில் கி.பி. 1267-இல் தெய்வசிகாமணி தேசிகருக்கு ஞானோபதேசம் செய்து அருளினார் என்பது பொருந்தும்.
திருவண்ணாமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த வீரவல்லாளன் தேவன் III ஆட்சிக்காலம் கி.பி. 1291—1342. தனது ஆட்சித் தொடக்க காலத்தில் 40 வயது நிறைந்தவராக இருந்த தெய்வசிகாமணி தேசிகரின் பெருமையை உணர்ந்தவன் வல்லாள தேவன். இவனது ஆட்சி தொடங்கிய பின் 30—35 ஆண்டுகள் வரை நிலவுலகில் குருமுதல்வர் இருந்து தம் முதிர்ந்த வயதில் அதாவது 75 வயதில் (கி.பி. 1325—இல்) சிவயோகநிலை எய்தினார் எனலாம். தாம் சிவயோக நிட்டை கூடுவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன் கி.பி. 1310—இல் குருமுதல்வர் திருவண்ணாமலையில் ஆதீனத்திருமடத்தை நிறுவியிருத்தல் இயலும்.
2 ஆம் பட்டம் முதல் 17 ஆம் பட்டம் வரை (கி.பி.1325—1630)
நம் ஆதிகுருமுதல்வரால் கி.பி. 1310-இல் நிறுவப் பெற்ற திருமடத்தில் எழுந்தருளி அருளாட்சி புரிந்த குருமூர்த்திகள் வருமாறு:
2. திருவருள் திரு தாண்டவராய தேசிகர் I
3. திருவருள் திரு வினைதீர்த்த தேசிகர்
4. திருவருள் திரு கனகசபாபதி தேசிகர்
5. திருவருள் திரு வேலப்ப தேசிகர்
6. திருவருள் திரு சுப்பிரமணிய தேசிகர்
7. திருவருள் திரு உருத்திரகோடி தேசிகர்
8. திருவருள் திரு சதாசிவ தேசிகர்
9. திருவருள் திரு கண்ணப்ப தேசிகர்
10.திருவருள் திரு மாசிலாமணி தேசிகர்
11.திருவருள் திரு சந்திரசேகர தேசிகர்
12.திருவருள் திரு குமரகுரு தேசிகர்
13.திருவருள் திரு அம்பலவாண தேசிகர்
14.திருவருள் திரு அருணகிரி தேசிகர்
15.திருவருள் திரு கந்தப்ப தேசிகர்
16,திருவருள் திரு சுவாமிநாத தேசிகர்
இக்குருமூர்த்திகள் அனைவரும் திருவருள் பண்பாடு நிறைந்த அருளாளர்களாக விளங்கியவர்கள். குருவருள் ஒன்றே அவர்களது குறிக்கோளாக அமைந்தது. அருளார்ந்த நெஞ்சினராய், சிவஞானத் தெள்ளமுதினை மக்களுக்கு வழங்கியவர்கள்; பின் சிவஞான மேலீட்டால் தம்மை மறந்து தியான சமாதியில் அமர்ந்தவர்கள்.
17ஆம் பட்டம், நாகலிங்க தேசிக சுவாமிகள் (கி.பி.1680—1700)
திருவருள் திரு நாகலிங்க தேசிகர், ஆதீனத்தின் 17 ஆவது பட்டமாக எழுந்தருளியவர். இந்த அருளாளர் உலகம் வாழ்வதற்கென வாழ்ந்தவர்; நல்லனவற்றையே சிந்தித்துச் சிவநெறி பேணியவர்; சிவநெறியை எடுத்தியம்பி மக்களிடையே சைவப் பயிர் வளர்த்தவர்.
இராமேசுவர யாத்திரை
இத்தகு பெருமை வாய்ந்த நாகலிங்க தேசிக குருமூர்த்திகள் தென்னாட்டில் திருத்தல யாத்திரை செய்யத் திருவுள்ளம் கொண்டு எழுந்தருளினார். தீர்த்தமாடிச் சிவனார் உறையும் திருக்கோயில்கள் வலம் வந்து வழிபாடு செய்து மகிழ்ந்தார். ஆங்காங்கே அறிஞர்களும், சான்றோர்களும் மெய்யன்பர்களும் குருநாதரை வரவேற்றனர்; பக்திப் பரவசத்தால் கண்ணீர் மல்கினர்; குருநாதருக்குப் பணிவிடை செய்து பேறு பெற்றனர். குருமூர்த்தியும் தம்மை வந்தடைந்தவர்களுக்குச் சிவஞானத்தின் சிறப்பினை உபதேசித்து அருள் மழை பொழிந்து வந்தார். இங்ஙனம் திருவண்ணாமலையிலிருந்து எழுந்தருளிய குருமூர்த்திகள் திருமுதுகுன்றம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருப்பெருந்துறை, திருவாடானை, காளையார்கோயில் முதலிய திருத்தலங்களை வழிபட்டுத் திருச்சுழியலுக்கு எழுந்தருளினார்கள்.
திருச்சுழியலுக்குக் குருமூர்த்திகள் எழுந்தருளிய செய்தி கேட்ட இராமநாதபுரம் மன்னர் இரகுநாத சேதுபதி (கி.பி. 1675—1710) மட்டில்லா மகிழ்ச்சி கொண்டார். நமது குருமூர்த்திகளின் பெருமையை முன்பே தெரிந்தவர் சேதுபதி மன்னர். ஆதலால், உடனே திருச்சுழியலுக்கு வந்து குருமூர்த்திகளைக் கண்டு கொண்டு திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். இராமேசுவரத்திற்கு எழுந்தருள வேண்டும் என்ற குருமூர்த்திகளின் விருப்பத்தை உணர்ந்த மன்னர், உடனே அதற்கு ஆவன செய்தார். மன்னரும் ஏவலாளர்களும் புடைசூழ, குருமகாசந்நிதானம் இராமேசுவரம் சென்று, தீர்த்தமாடி இறை வழிபாடு செய்து திரும்பினார்கள். இவ்வாறு திரும்பி வருங்கால் மன்னர், இந்தச் சீமையிலேயே சுவாமிகள் தங்கி அருளாட்சி புரிய வேண்டும் என்று வேண்டினார்; பொன்னும் மணியும் காணிக்கையாகச் செலுத்தினார். மன்னரின் வேண்டுதலைக் குருநாதர் கருணையுடன் ஏற்று கி.பி. 1690 ஆம் ஆண்டளவில் பிரான்மலையில் காளத்திநாதரை எழுந்தருள்வித்து, அருளாட்சி புரியத் தொடங்கினார்கள். இவ்வாறு பிரான்மலையில் தொடங்கி நடந்து வந்த அருளாட்சியில் எழுந்தருளியிருந்த குருமூர்த்திகள் வருமாறு:
18. திருவருள் திரு குமரசாமி தேசிகர்
19. திருவருள் திரு திருச்சிற்றம்பல தேசிகர் I
20. திருவருள் திரு சிதம்பரநாத தேசிகர்
21. திருவருள் திரு சிவக்கொழுந்து தேசிகர்
22. திருவருள் திரு நமச்சிவாய தேசிகர்
23. திருவருள் திரு அகத்தீசுவர தேசிகர்
24. திருவருள் திரு பொன்னம்பல தேசிகர் I
25. திருவருள் திரு ஏகாம்பர தேசிகர்
26. திருவருள் திரு வைத்தியநாத தேசிகர்
27. திருவருள் திரு அண்ணாமலை தேசிகர் I
28. திருவருள் திரு ஞானப்பிரகாச தேசிகர்
29. திருவருள் திரு ஆறுமுக தேசிகர் I
30. திருவருள் திரு திருச்சிற்றம்பல தேசிகர் II
பிரான் மலையிலிருந்து அருளாட்சி புரிந்த குருமூர்த்திகளில் பலர் மிகக் குறைவான காலமே அருளாட்சி புரிந்தனர். அவர்கள் காலத்தில் பிரான்மலையில் ஆதீனத் திருமடம் நிறுவப் பெற்றது. பிரான்மலை, (பிரான்மலை உட்கிடைக்கோயில் சதுர்வேதி மங்கலம்) திருப்புத்தூர், திருக்கோளக்குடி, குன்றக்குடி, தேனாச்சியம்மன் கோயில் ஆகிய ஐந்து கோயில்களுக்கும் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து அருளாட்சி புரிந்தனர். அன்று முதல் இன்று வரை நமது ஆதீனத்தின் குருமூர்த்திகள் தொடர்ந்து பிரான்மலை வகை ஐந்து கோயில்களின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து அருளாட்சி செய்து வருகின்றனர். பிரான்மலையில் எழுந்தருளியிருந்த குருமூர்த்திகள் அனைவரும் அருளும் தவமும் அறமும் நிறைந்தவர்களாக விளங்கினர்.
பிரான்மலையிலிருந்து குன்றக்குடிக்கு வருதல்
28-ஆம் பட்டம் ஞானப் பிரகாச தேசிகர் அவர்கள் குன்றக்குடி அருள் தரு சண்முகநாதப் பெருமான் மீது மிகுந்த ஈடுபாடுள்ளவர்கள். இந்த ஈடுபாட்டின் காரணமாகவே 29-ஆம் பட்டம் குருமூர்த்திக்கு ஆறுமுகதேசிகரெனத் தீட்சாநாமம் சாத்தினார்கள். 28-ஆம் பட்டம் ஞானப்பிரகாச தேசிகர் அவர்கள் முதல் 30—ஆம் பட்டம் திருச்சிற்றம்பல தேசிகர் அவர்கள் வரை பிரான்மலையில் இருந்து கொண்டு அருளாட்சி புரிந்து வந்த போதிலும் அவர்கள் அனைவருக்கும் குன்றக்குடிப் பெருமான் மீது ஈடுபாடு மிகுந்து வரலாயிற்று. திருவருள் திரு மருதநாயக தேசிகர் காலம், சிவகங்கைச் சீமையையாண்ட மருது பாண்டியர் குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதன் திருக்கோயிலை இப்போதிருக்கும் பெரிய அளவில் திருப்பணி செய்து சாந்துப்புலவரைக் கொண்டு மயூரகிரிக்கோவையையும், (கி.பி. 1778) செய்வித்துத் தனிப்பெருமை சேர்த்திருந்த காலம். எனவே, மருதநாயக தேசிக குருமூர்த்திகளால் பிரான்மலையிலிருந்த காளத்தியப்பர் குன்றக்குடித் திருமடத்துக்கு எழுந்தருள்விக்கப் பெற்றார். அக்காலம் முதல் திருவண்ணாமலை ஆதீனமடாலயம் குன்றக்குடியில் திகழ்ந்து வருகிறது. 31—ஆம் பட்டம் திருவருள் திரு மருதநாயக தேசிகருக்குப் பின் கி.பி. 1860 வரை குன்றக்குடியிலிருந்து அருளாட்சி புரிந்து வந்த குருமூர்த்திகள் வருமாறு:
32. திருவருள் திரு தண்டவராய தேசிகர் II
33. திருவருள் திரு சிவசுப்பிரமணிய தேசிகர்
34. திருவருள் திரு சாம்பசிவ தேசிகர்
35. திருவருள் திரு ஆறுமுக தேசிகர் II
36. திருவருள் திரு அருணாசல தேசிகர் I
37. திருவருள் திரு பொன்னம்பல தேசிகர் II
இவர்கள் அனைவரும் மிகச் சிறந்த அருளாளர்களாக விளங்கினர். சைவமும், தமிழும் தழைத்தினிதோங்கப் பெரும்பணிகள் புரிந்தனர். சென்னையிலுள்ள மயிலாப்பூர் கட்டளை மடம், நாட்டுப் பிள்ளையார் கோயில் தெரு கட்டளை மடங்களில் தம்பிரான்களை நியமித்து நல்லாட்சி புரிந்து வந்தனர்.
திருவாவடுதுறைக்கு வந்து நாவலர் பட்டம் பெற்றவுடன் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் சென்னைக்குச் சென்றிருந்தார். அங்கு அவர் நமது ஆதீனச் சின்னப்பட்டமாகிய அருணாசல தேசிகரைச் சந்தித்தார். அப்போது அருணாசல தேசிகர் (36-ஆம் பட்டமாகப் பிற்காலத்தில் எழுந்தருளியவர்கள்) நாவலரை மிகவும் பாராட்டி, நமது மடத்தில் சில காலம் தங்கும்படி கேட்டுக் கொண்டார். நாவலர் அவர்கள் தமது இன்றியமையாத பணிகளின் காரணமாக யாழ்ப்பாணம் செல்லவேண்டியதிருந்ததால் பிறிதொரு சமயம் வருவதாகக் கூறி அவரிடம் விடை பெற்றுச் சென்றுவிட்டார். நாவலர் தாம்கூறியபடி மீண்டும் குன்றக்குடிக்கு வந்து சென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
அருள் நெறி மன்றம்
அருள் நெறிப் பணியில் ஒன்று கல்விப் பணி என்பது அடிகளார் அவர்கள் திருவுள்ளம். மடமை நீங்கினால் கடமை இன்னதெனத் தெரியும். கடமை தெரிந்தால் துன்பம் தானே நீங்கும்; எனவே கல்விப் பணியை மேற்கொள்ள 1955 இல் அருள்நெறித் திருப்பணி மன்றம் என்ற அமைப்பை நிறுவினார்கள். இந்த மன்றத்தின் வழி ஆதீனம் கல்வி அறக்கட்டளை நிறுவியுள்ளது. அதன்மூலம் பசும்பொன் தேவர் திருமகன், நெல்லை, தஞ்சை, காயிதே மில்லத், பெரியார் ஆகிய மாவட்டங்களிலுள்ள பல ஊர்களில் பல கல்வி நிலையங்களைத் தோற்றுவித்து நடத்தி வருகிறார்கள். 3, தொடக்கப் பள்ளிகளும், 4 நடுநிலைப் பள்ளிகளும், 2 உயர்நிலைப் பள்ளிகளும், 4 மேல்நிலைப் பள்ளிகளும் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் “திருவள்ளுவர் கல்லூரி” என்ற முதல்தரக் கல்லூரி ஒன்றும் ஆக 14 கல்வி நிறுவனங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தெய்விகப் பேரவை
தமிழ்நாடு தெய்விகப் பேரவை, தமிழகத் திருமடங்களின் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பேரமைப்பு. அருள்நெறித் தந்தை, இந்தப் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்று, 20-12-69 முதல் 10-5-76 வரை தலைவர் பொறுப்பில் இருந்து பணி செய்தார்கள். அந்தக் காலத்தில் பேரவை மூலம் இவர்கள் ஆற்றிய பணி வரலாற்றுச் சிறப்புடையதாகும். இப்பணி குறித்துச் சற்றுவிரிவாக எழுதுவதென்றால் அதுவே ஒரு பெரிய நூலாகி விடும்.
தமிழ்நாடு தெய்விகப் பேரவைத் தலைவராக இவர்கள் பணியாற்றிய ஆறு ஆண்டுக் காலத்தில் பேரவை மூலம் தமிழகத் திருக்கோயில்களிலெல்லாம் வார வழிபாடு, கூட்டு வழிபாடுகள் நிகழ்ந்தன; நாடெங்கும் தீண்டாமை விலக்குப் பணி நடந்தது; திருக்கோயில் தோறும் உழவாரத் திருத் தொண்டு நடை பெற்றது. திருக்கோயில்களின் தூய்மை பேணப் பெற்றது; சமுதாய நலப் பணிகள் நிகழ்ந்தன; பெரியதொரு அச்சகம் பேரவைக்குச் சொந்தமாக அமைக்கப் பெற்றது. அதன் மூலம் சமய நூல்கள், அறநூல்கள், இயக்க வெளியீடுகள் இலட்சக் கணக்கில் பதிப்பிக்கப் பெற்று நாடு முழுதும் வழங்கப் பெற்றன. ‘அருளோசை’ ‘செய்திக்கதிர்’ இதழ்கள் தரமான முறையில் வெளியிடப் பெற்றுத் தமிழகமெங்கும் பரவின. அப்பரடிகளும், இராமாநுஜரும் கண்ட பெருநெறி எங்கும் பரவியது; திருக்கோயில்கள் பல திருப்பணி செய்யப் பெற்றுத் திருக்குட நீராட்டு விழாக்கள் நடைபெற்றன; சமயப் பரப்புநர் பலர் நியமிக்கப் பெற்றுச் சமயச் சொற்பொழிவுகளும் தொண்டும் நிகழ்ந்தன; மாவட்ட மாநாடுகள் நடந்தன. மாநில மாநாடுகள் நடந்தன; குமரி மாவட்டம் நாகர்கோயிலில் 1975 இல் நடைபெற்ற மாநில மாநாடு, தமிழகச் சமய உலகச் சரித்திரம் கண்டிராத மாநாடு! 2606 கிளைப் பேரவைகளையும் 92669 உறுப்பினர்களையும் கொண்ட மாபெரும் இயக்கமாக இது வளர்ந்திருந்தது.
இப்படி வளர்ந்து சிறந்த தமிழ்நாடு தெய்விகப் பேரவை, தமிழகத்தின் நல்லூழின்மையால் 1976 சனவரியில் ஏற்பட்ட நெருக்கடி கால அரசைப் பயன்படுத்தி, சூதர்களால் முடக்கப் பெற்றது. எனினும் தமிழகமெங்கும் விரிந்து பரந்த நிலையில் வளர்ந்த இப்பேரவைக் கிளைகள் ஆங்காங்கே சிறந்த பணிகளைச் செய்து வருகின்றன.
“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்!”
திருக்குறள் பேரவை
தவத்திரு அருள்நெறித் தந்தை, திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடுடையவர்கள். திருக்குறள்நெறி உலகமனைத்தும் ஒப்புகின்ற—உலகனைத்தையும் வாழ்விக்கின்ற உயர்நெறி என்று கருதுபவர்கள். இனி எதிர்காலத்திற்கும் திருக்குறள் நெறி ஏற்றது என்று உறுதியாக நம்புபவர்கள். மாமேதை லெனின் கண்ட சமதர்மச் சமுதாயத்தைத் திருக்குறள் மூலம் படைத்துக் காட்டலாம் என்று கருதுபவர்கள். சம உரிமை, சம வாய்ப்பு, சமநிலைச் சமுதாயத்தை, சாதி, மத, இன பேதமற்ற பொதுமைச் சமுதாயத்தை—ஒப்புரவுச் சமுதாயத்தைப் படைக்க வல்லது திருக்குறள் என்பது இவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே திருக்குறள் நெறியை நடைமுறைப்படுத்தும் ஓர் இயக்கம் வேண்டுமென விழைந்தார்கள். இந்த விழைவு, 11—6—1973இல் திருக்குறள் பேரவையாக மலர்ந்தது.
இந்தத் திருக்குறள் பேரவை, ஆரவாரமின்றித் தமிழகம்முழுவதும் பரவிக்கால் கொண்டு இருநூறுக்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகின்றது. ஆயிரக் கணக்கான உறுப்பினர்கள் ஆழமாகப் பணி செய்து வருகின்றனர். பல்வேறு கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. திருக்குறளை நடைமுறைப் படுத்தும் இயக்கமாதலால் ‘செய்க பொருள்’ கருத்தரங்குகள் நடத்தி,கூட்டுறவு முறையில் தொழில்கள் தொடங்கிப் பலருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி வருகிறது; கிராம ஏற்புத் திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது; பழகும் பண்பியலைப் புகட்டி வருகிறது; கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தி மனித உறவையும் நேயத்தையும் வளர்த்து வருகிறது; திருக்குறள் உரையாய்வுக் கருத்தரங்குகளை நடத்தி, திருக்குறளின் உண்மைப் பொருளைக் கண்டுணரச் செய்து வருகிறது; உறவு கலந்து வாழும் ஒப்புரவு நெறியை வற்புறுத்தி வருகிறது. இப்பேரவை, பல மாவட்ட மாநாடுகளையும் மாநில மாநாடுகளையும் நடத்தி, தமிழக மக்களிடையே தனிச் சிறப்பினைப் பெற்று வருகிறது.
திருவருள் பேரவை
1982-இல் குமரி மாவட்டம், மண்டைக்காட்டில் நடந்த இனக்கலவரம் நாடறிந்தது. இந்தக் கலவரத்தின் போது இவர்கள் அங்குச் சென்று 17—3—82 முதல் 26—3—82 வரை தங்கி, தமது உயிருக்கும் அஞ்சாமல் செய்த அமைதிப் பணி வரலாற்றுப் புகழ் வாய்ந்தது; 1981 இல் இராமநாதபுரம் இனக்கலவரம் 1982இல் புளியங்குடி இனக்கலவரம் முதலியவற்றில் இவர்கள் மேற்கொண்ட அமைதிப் பணி மக்களிடையே நல்லுணர்வையும் பெரும்பயனையும் விளைவித்தது. இந்த அமைதிப் பணிகளைச் செய்த போது கிடைத்த பட்டறிவினால் 1982இல் நாகர் கோயிலில் “திருவருள் பேரவை” என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்கள். இந்த அமைப்பில் எல்லாச் சமயங்களையும் சார்ந்த மதிப்பு மிக்க பெரியோர்கள் உறுப்பினராகவுள்ளனர். அவ்வப்போது மதரீதியாக எழும் பிரச்சனைகளையும், பூசல்களையும் அப்போதைக்கப்போது அணுகி இப்பேரவை தீர்வு கண்டு வருகிறது. திண்டுக்கல்லில் இந்த ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது சர்வ கட்சியினரையும் அழைத்துப் பேசி, அவர்களுடன் தாமும் உண்ணா நோன்பிருந்து அமைதிப் பணி செய்தார்கள். இத்திருவருள் பேரவை இப்போது வேலூர், கோவை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை,இராமநாதபுரம், திண்டுக்கல்,மதுரை, நாகர்கோயில் முதலிய பெருநகரங்களில் அமைந்து பணியாற்றி வருகிறது.
கிராமத் திட்டக் குழு
“கோயிலைச் சார்ந்து குடிகளும் குடிகளைச் சார்ந்து கோயிலும்” வாழ வேண்டும் என்பது அடிகளார் அவர்களின் முழக்கம். மக்கள் வறுமைப் பிணி நீங்கினாலே உயிர்ப்பிணி நீக்கும் சமயப்பணி சிறக்கும் என்பது இவர்களின் கோட்பாடு. இதனடிப்படையில் குன்றக்குடியில் இவர்கள் அருளாட்சிக்கு வந்த காலத்திலிருந்து கூட்டுறவு முறையில் தொழில்களைத் தொடங்குவித்து நடத்தி வந்தார்கள். இந்த உணர்வு காலப் போக்கில் வளர்ந்து 1977 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் அண்ணல் காந்தியடிகளில் பிறந்த நாளன்று “குன்றக்குடித் திட்டக்குழு”வாக மலர்ந்தது. இத்திட்டக் குழுவுக்குக் காரைக்குடி மத்திய மின் வேதியியல் விஞ்ஞானிகள் அறிவுக் கொடை வழங்கி வருகின்றனர்; அரசுடமையாக்கப் பெற்ற வங்கிகள் நிதி உதவி செய்து வருகின்றன. அரசு அலுவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வழி நடத்தி ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் திட்டக்குழு உறுப்பினர்களாக இருந்து உழைப்புக் கொடை வழங்கி வருகிறார்கள். அடிகளார் அவர்கள் இத்திட்டக்குழுவின் நெறியாளராக இருந்து அல்லும் பகலும் உழைத்து வருகிறார்கள். குன்றக்குடியில் கூட்டுறவு முறையில் பல தொழில்கள் நிறுவப் பெற்றுள்ளன. தனியார் தொழில்கள் சிலவும் அமைக்கப் பெற்றுள்ளன. அரசுத் துறை நிறுவனங்கள் தோன்றியுள்ளன. எல்லா வகையாலும் குன்றக்குடியைத் தன்னிறைவுடைய கிராமமாக்குவது இவர்களது நோக்கமாக இருந்து வருகிறது. இதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். குன்றக்குடிக் கிராமத்தில் கூட்டுறவில் அங்கம் வகிக்காத குடும்பமே இல்லை என்பதும் வேலை வாய்ப்பில்லாத குடும்பம் குன்றக்குடியில் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தக் கிராமத் திட்டப் பணி பற்றி அறிந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த திருமதி இந்திரா காந்தி அவர்கள், “This is what I should like for all villages” என்று பாராட்டியுள்ளார். இந்திய அரசின் திட்டக்குழு, “Kundrakkudi Pattern” என்று ஏற்றுப் பாராட்டியுள்ளது. இந்தத் திட்டப் பணியை இப்போது பசும்பொன் மாவட்ட அளவிலும் அடிகளார் அவர்கள் செயற்படுத்தி வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் பல இடங்களில் தொழில் நிறுவனங்கள் அமைக்கப் பெற்று மக்கள் பலரை வாழ்வித்து வருகின்றன. நெல்லை, மதுரை, காயிதேமில்லத், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தஞ்சை, தென்னார்க்காடு முதலிய மாவட்டங்களிலும் இத்திட்டப்பணி விரிவடைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் திருநாளைப் போவார் தோன்றிய மேலாதனூர்க் கிராமத்தையும், மங்கையர்க்கரசியார் தோன்றிய கீழப் பழையாறைக்கிராமத்தையும் தன்னிறைவுக் கிராமங்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்விரு ஊர்களிலும் சில தொழில் நிறுவனங்களை இப்போது அமைத்துள்ளார்கள். இவ்வாறு கிராமத் திட்டக்குழுப் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
- தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர் (1969—76)
- இந்திய அரசு சமூகநலக்குழு உறுப்பினர் (1960)
- அகில இந்திய சமாதானக்குழு தலைமைக் குழு உறுப்பினர் (1971)
- தமிழ்நாடு அரசு திட்டக்குழு உறுப்பினர்
- தமிழ்நாடு அரசு சமூகப் பண்பாட்டுக் கல்வி மறுமலர்ச்சிக் குழு உறுப்பினர்
- தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர்
- தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை உயர் மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்
- தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை ஆலயங்கள் சீர்திருத்தக் குழு உறுப்பினர்
- இந்திய அரசு அமைச்சகம் அறிவியல் தொழில் நுட்பத் துறைக்குழு உறுப்பினர்
- தமிழ்நாடு அரசு மதுவிலக்குப் பிரச்சாரக் குழு உறுப்பினர்
- அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கிராம ஒருங்கிணைப்பு வளர்ச்சிக் குழு உறுப்பினர்
- தமிழ்நாடு அரசு தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தக்குழு உறுப்பினர்
- தமிழ்நாடு அரசு மாநில அஞ்சல்தலை வெளியீட்டு ஆலோசனைக் குழு உறுப்பினர்
- தஞ்சை, தமிழ் பல்கலைக் கழகம்—பாடத் திட்ட ஆய்வுக் குழு உறுப்பினர் (20—8—85——–19—8—88)
- பேரறிஞர் அண்ணா அவர்கள் (1956, 1962)
- ஆசாரிய விநோபாபாவே அவர்கள் (1956)
- இராசாசி அவர்கள் (1957)
- பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் (பலமுறை)
- திரு நம்பூதிரிபாட் அவர்கள்,
- திரு பி.இராமமூர்த்தி அவர்கள்
- திரு ப.ஜீவானந்தம் அவர்கள்,
- பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்,
- திரு ப.கக்கன் அவர்கள் ஆகியோர்
குறிப்பு: நூல் தட்டச்சு உதவி திருமதி.கீதா சாம்பசிவம்