Home History குன்றக்குடி ஞானியார் மலை சமணப்படுகை

குன்றக்குடி ஞானியார் மலை சமணப்படுகை

by Dr.K.Subashini
0 comment

குன்றக்குடி குடவரை கோயிலுக்கு அருகாமையிலேயே வடக்கு நோக்கிய பகுதியில் அமைந்துள்ள பாறைகள் உள்ள பகுதியில் சமணப்படுகைகள் உள்ள ஒரு குகை  உள்ளது. சற்றே குன்று போன்ற மலைப்பாங்கான பகுதி இது. இங்கே அமைந்துள்ள ஒரு குகையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதொரு சமணப் பள்ளி இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன. இப்பகுதி ஞானியார் மலை என பேச்சு வழக்கில் இன்று வழங்கப்படுகின்றது.

சமண முனிவர்கள் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ள குகைப்பகுதிகளில் தங்கி இருப்பர். பகல் வேளைகளில் நகருக்குள் சென்று வரும் இவர்கள் இரவில் தங்கிக் கொள்ள இவ்வகை குகைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தக் குகையில் அவர்கள் படுத்துறங்குவதற்காக அமைக்கப்பட்ட படுகைகள் அமைக்கப்பட்டிருப்பதை இன்றும் காண முடிகின்றது. இக்குகையில் மூன்று படுகைகள் வரிசையாகவும் ஐந்து படுகைகள் வரிசையாகவும் என அமைக்கப்பட்டுள்ளமையைக் காணமுடிகின்றது.
தற்சமயம் இங்கு வந்து செல்லும் சிலர் இந்தப் படுகைகளின் மேல்  தங்கள் பெயர்களைக் கீறி வைத்தும் பாறையின் மேல் படங்களை வரைந்து வைத்தும் இந்த புராதன  வரலாற்றுப் பகுதியை சேதப்படுத்தி வருகின்றனர். இதனை தடுத்து இப்பகுதியைப் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளில் ஒன்றாக அறிவித்து பாதுகாக்க வேண்டியது முக்கியம்.
இந்தப் பாறைகளைக் கவனிக்கும் போது மிகக் கவனமாகவும் நேர்த்தியாகவும் செதுக்கப்பட்ட காடி எனும் பகுதியை மேற்புறத்தில் காண முடிகின்றது. காடி என்பது பாறைகளில் மழை நீர் விழும் போது அம்மழை நீர் நேராகக் குடைக்குள் சென்று விழாத வண்ணம் தடுக்கச் செய்யப்படும் ஒரு ஏற்பாடு. இப்படி செய்வதனால் மழை நீர் தெரித்து சாரல் உள்ளே இருப்பவர்களின் மேல் விழாத வண்ணம் தடுக்க முடிகின்றது.
பாறைகளைச் செதுக்கவும் படுகைகளை ஏற்பாடு செய்யவும் ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொண்டு இப்படுகைகளை அமைத்துக் கொடுத்தவர்களின் பெயர்களைப் பாறைகளிலேயே குறித்து வைப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது. இந்த ஞானியார் மலை பாறையிலும் இதனை அமைக்க உதவிய ஆதன் சாத்தன் என்பவரின் பெயர் தமிழ் பிராமி எழுத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த எழுத்தின் வடிவத்தின் அடிப்படையில் இந்தப் பாறை கி.மு காலகட்டத்தில் அமைக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று டாக்டர்.வள்ளி குறிப்பிடுகின்றார்.
ஒலிப்பதிவினைக் கேட்க இங்கே மண்ணின் குரலில் இங்கே செல்க! http://voiceofthf.blogspot.de/2012/11/blog-post_17.html
படங்களும் ஒலிப்பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி

மேலும் சில படங்கள்
இப்பாறை அமைந்திருக்கும் பகுதி
பாறையின் முன்புறம்
வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் பைரவர் சிலை
வாசலில் சிறிய பிள்ளையார் கோயில்
குகைப்பகுதியின் முன் புறத்தில் சிறிய பிள்ளையாரும் பரிவார தெய்வங்களும்.
இது பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கோயில் பகுதியாக இருக்கலாம்.
குகையின் உள்ளே செல்லும் பகுதி
வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் 5 படுகைகள்
 பாறை அமைந்துள்ள பகுதி
காடி
தெளிவாகத் தெரியும் காடி
இது பிற்காலத்தில் அமைக்கபப்ட்ட சமையலறை போல தெரிகின்றது

You may also like

Leave a Comment