"ஆவணக் காப்பகத் தந்தை" பி.எஸ்.பாலிகா
முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி
முதியவர் வேடத்தில் இறைவனே வந்து, ஆவணங்களைத் துணைக்கழைத்துத் தன் பக்தர்களிடத்தில் பாசத்தையும், பரிவையும் காட்டிய வரலாற்றைச் (சுந்தரர்) சேக்கிழார் தம்முடைய பெரியபுராணக் காப்பியத்தில் கூறிச் சென்றுள்ளார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இவ்வரலாற்று நிகழ்வை அப்படியே கண்ணில் காட்டுவது போன்று ஓவியம் வரையப்பட்டுள்ளது.
இதிலிருந்து எந்தவொரு நிகழ்ச்சியையும் மெய்ப்பிப்பதற்கு
- ஆட்சி
- ஆவணம்
- காட்சி
என்ற மூன்றும் தேவைப்படுவதை அறிந்துகொள்ள முடிகிறது.
சீனப் பயணி யுவான் சுவாங் எழுதிய பயணக் குறிப்புகளில், "நம் நாட்டு அரசுகள் பற்றிய உண்மைகளை ஆவணங்களிலிருந்து தெரிந்து கொண்ட"தாகக் குறிப்பிடுகிறார்.
இந்திய நாட்டைப் பொறுத்த அளவில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஆவணக் காப்பகங்களை முதன் முதல் உருவாக்கினர்.
விஜய நகர ஆட்சிக் காலத்தில் "இராயல் ரெக்கார்டு ஆபீஸ்" உருவாக்கப்பட்டது.
இதில்,
- ஓலைச் சுவடிகள்
- செப்புப் பட்டயங்கள்
- இலைப் புத்தகங்கள்
- தாள் ஆவணங்கள்
தொகுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முக்கியத் தலைநகரங்களான
- மும்பை
- சென்னை
- கொல்கத்தா
ஆகிய நகரங்களில் தொடங்கப்பட்ட ஆவணக் காப்பகங்களில் கடிதப் போக்குவரத்துகள், அன்றாட நிர்வாகக் குறிப்புகள் போன்றவை சேகரிக்கப்பட்டன.
காலத்தால் முந்தைய ஆவணக் காப்பகமாகச் சென்னையிலுள்ள ஆவணக் காப்பகம் திகழ்கிறது.
"மதராஸ் ரெக்கார்டு ஆபீஸ்" என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த ஆவணக் காப்பகம் எழும்பூரில் 1909 முதல் "ஆவணக் காப்பகம்"
( www.tanap.net/content/archives/archives.cfm?ArticleID=202 ) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
இதில் 1670ஆம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இங்குள்ள பல்வேறு ஆவணங்களுள் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக ஆவணங்களை "உலகத்தின் தலைசிறந்த வரலாற்று மூலங்கள்" என்று கிராண்ட் துவ் ( Sir Mountstuart Grant Duff – http://en.wikipedia.org/wiki/M._E._Grant_Duff ) என்பார் குறிப்பிட்டுள்ளார்.
வசதி படைத்த நிலச்சுவான்தார் குடும்பப் பாரம்பரியத்தில் "பந்தவல்" என்ற கிராமத்தில் 1908ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பிறந்தவர் பந்தவல் சுரேந்திரநாத் பாலிகா.
இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஏ., பட்டம் பெற்றார். தம்முடைய 25ஆம் வயதில் முனைவர் பட்டம் பெற்றார்.
21ஆம் வயதில் இராமாபாய் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
- இலண்டன் பொது ஆவண அலுவலகம்
- இலாகூர் பஞ்சாப் ஆவணக் காப்பகம்
ஆகியவற்றில் ஆவணங்கள் பராமரிப்புத் தொடர்பான பயிற்சியைப் பெற்றார்.
கொங்கணியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், தாம் படிக்கும் காலத்தில் பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
சிறந்த வரலாற்றாசிரியராகவும், படிப்பாளியாகவும், சிந்தனையாளராகவும், நேர்மையான நிர்வாகியாகவும் திகழ்ந்த இவரது பணிகளைப் பாராட்டி அன்றைய பிரிட்டிஷ் அரசு இவருக்கு "இராவ்பகதூர்" பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது.
தம் பணிக்காலத்தில் விடுப்பு எடுத்துக்கொள்ளவில்லை. தம் தந்தை இறந்தபோது 14 நாள்கள் மட்டுமே விடுப்பில் சென்றார்.
ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
அமானி முறை வரிவிதிப்பு
- புகையிலை வருவாய் மற்றும் நிஜாமின் சுங்க வரிவிதிப்பு
- புகையிலை வருவாய் மற்றும் நிஜாமின் சுங்கவரி விதிவிலக்கு
என்ற கட்டுரைகளையும்,
ஆங்கிலத்தில்,
- Literacy in Madras (1822 – 1931)
- Permission Ceritficate
- The excluded and partially excluded area factual memorandum
- The notes on Riparian rights in Madras
- Cannanore Fort and Contonment
- Interprovincial or inter state agreement relating in the use of river waters
- Nationalism in South India
ஆகிய கட்டுரைகள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 23 – 08 – 1934இல் சென்னை ஆவணக் காப்பகத்தில் தம் பணியைத் தொடங்கி, ஏறத்தாழ 22 ஆண்டுகள் இயக்குநர் பொறுப்பில் இருந்துள்ளார்.
தாம் பணியாற்றிய காலத்தில் மிகவும் திறம்படப் பணியாற்றி "ஆவணக் காப்பகத் தந்தை" என்ற பெயரை ஆவணக் காப்பியல் வரலாற்றில் பெற்றார்.
கவிதைகள் புனைவதிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. பளு தூக்குவதிலும் வல்லவராக இருந்துள்ளார்.
ஏறத்தாழ 8,000 வரைபடங்களைப் பூகோள ரீதியாக அரசியல் மற்றும் கடல் வாணிபம் தொடர்புடையவற்றைத் தொகுத்து அதற்கு விளக்கங்களுடன் கூடிய அட்டவணையையும் தயாரித்தார்.
தஞ்சை மாவட்ட ஆவணங்களுக்கான வழிகாட்டியை (6 தொகுதிகளில்) வெளியிட்டார்.
டச்சு, டேனிஸ் ஆவணங்களுக்கான அட்டவணையைத் தயாரித்து 1952இல் வெளியிட்டார்.
டி.வி. போத்தார் உதவியுடன் புதுக்கோட்டை சமஸ்தானத்து மராட்டிய ஆவண விவரப் பட்டியலையும் தயாரித்தார்.
சென்னை ஆவணக் காப்பகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் பராமரிப்புக்காகப் பல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.
கொல்கத்தாவிலிருந்து புதுதில்லிக்கு இந்திய அரசு ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டு தேசிய ஆவணக் காப்பகமாக உருவாகத் தொடங்கிய காலத்தில், மத்திய அரசால் இவர் அழைக்கப்பட்டார்.
ஆனால், சென்னை ஆவணக் காப்பகத்திலேயே தம் பணிகளை மனநிறைவுடன் மேலும் செய்ய வேண்டிய நிலையில், பதவி உயர்வுடன் கூடித் தம்மை நாடிவந்த இப்பொறுப்பை பாலிகா ஏற்க மறுத்துவிட்டார்.
இவருடைய பணிகளை டாக்டர் இராஜேந்திர பிரசாத் 1955இல் பாராட்டியுள்ளார்.
பண்டித ஜவாஹர்லால் நேரு, மூதறிஞர் இராஜாஜி, மேதகு சங்கர்தயாள் சர்மா போன்றவர்கள் இவர் ஆற்றிய பணிகளை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
"……….அவரது முயற்சியால் தான் இன்றைக்கு மதராஸ் ரெக்கார்டு ஆபீஸ் ஆசியாவில் சிறந்த ஆவணக் காப்பகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது" என்று அந்நாளைய இந்தியக் கல்வி அமைச்சர் டாக்டர் கே.எல்.ஸ்ரீமாலி பாராட்டியுள்ளார்.
"தென்னகத்தில் தேசிய விடுதலைப் போர்" என்ற தலைப்பில் 1957இல் பாலிகா "இந்து" நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
இதைப் படித்த பேரறிஞர் அண்ணா தமது ஹோம்லாண்ட் இதழில், "Truth Triumphant" என்ற தலைப்பில் பாலிகாவைச் சிறப்பாகப் பாராட்டி எழுதினார்.
இவர் ஆற்றிய பணிகளுள் ஒருசிலவற்றை நினைவு கூர்வது பொருந்தும்.
"காலத்தால் பழைய ஆவணங்கள் அழிய நேரிடும் போது, அவைகளின் அச்சுப் பிரதிகளில் பொதிந்துள்ள பழைய நினைவுகள் அழியாமல் பாதுகாக்க வாய்ப்பாகும்" என்று குறிப்பிட்டு 1938இல் 1755-1765ஆம் ஆண்டுக்கான ஆவணங்களை மறுபதிப்பாக்கி வெளியிட வேண்டுமென்று அரசுக்குக் கருத்துருக்களை அனுப்பினார்.
ஆவணக் காப்பாளர் பாலிகா, 13.2.1947 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஒத்துழைப்புடன் அரசின் அனுமதி பெற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க மோடி ஆவணங்களைப் பார்வையிட்டு 5.3.1947 அன்று அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் சென்னை ஆவணக் காப்பகத்தில் தஞ்சை அரசு மோடி ஆவணங்கள் சேகரித்துப் பாதுகாக்கப்பட்டன.
முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் ஜெ.சிவசண்முகம் பிள்ளை "மதராஸ் லோகல் ஷெல்ப் கவர்ன்மெண்ட்" என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்கான தகவல்கள் மற்றும்
- ச.வையாபுரிப் பிள்ளை
- கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார்
- எஸ்.கே.ஐயங்கார்
- கே.ஆர்.சீனிவாசய்யங்கார்
போன்ற அறிஞர்களுக்கு ஆவணக் காப்பகத்திலிருந்து பல்வேறு தகவல்களையும் திரட்டித் தந்துள்ளார் பாலிகா.
பாலிகாவால் எழுதப்பட்ட "Studies in Madras Administration (2 volumes) G என்ற நூல் ஏறத்தாழ 40 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியதாகும்.அவ்வப்போது நூற்றுக்கணக்கான மூல ஆவணங்களைப் படித்துப் பார்த்து அதன் சாறாக இக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.இன்றைக்கு வரை இவர் எழுதிய இக்கட்டுரைகள் ஆய்வாளர்களால் அரிய கருவூலமாகப் போற்றப்பட்டு வருகின்றன.
இவரது முயற்சியால், சென்னை ஆவணக் காப்பக நூலகத்தில் சேகரிக்கப்பட்டிருந்த நூல்களுக்கான அட்டவணைப் பட்டியல், புத்தக வடிவில் தயாரிக்கப்பட்டது.
இது பின்னர் "பாலிகா கேட்லாக் ஆப் புக்ஸ்" என்று அழைக்கப்பட்டது.
தேசியக்கவி பாரதியாரின் கவிதை மூலங்களை அறிவியல் முறையில் பாதுகாப்பது தொடர்பாக, பாலிகாவின் அறிவுரை அரசால் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மங்களூரில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து, சென்னையில் பணியாற்றி, தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் பெருமை தேடித்தந்த பாலிகா, 1958ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.
வரலாறு மற்றும் தமிழியல் துறை சார்ந்த இளம் ஆய்வாளர்கள் இவரது பணிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
நன்றி:- தினமணி