Home sudanandar கவியோகியார் பாடல்கள்

கவியோகியார் பாடல்கள்

by Dr.K.Subashini
0 comment

கவியோகியார் எழுதிய பாடல்கள்

 

கவியோகியார் எழுதிய பாடல்கள் அனைத்துமே அருட்கவிகள். வார்த்தைப்ரயோகமாகட்டும், நடையாகட்டும், சாமானியன் பேனா எடுத்து தீட்டும் வரிகள் அல்ல அவை. அருள் சித்தம் ஒளிர, வார்த்தைகள் வந்து விழ, அவை பாடலாய், அவர் வாயாலேயே கணீர் குரலில் கேட்பது ஒரு ஆனந்தம். நான் கண்ட பல பெரியோர்கள், அவர் பாடலை அப்படியே மேடைகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ உடனுக்குடன் வடித்து, பாடி குடுத்த கதைகள் பல கூறக் கேட்டுள்ளேன்.

கீர்த்தனாஞ்சலி அவர் பாடல்களைத் தொகுத்து எழுதப்பட்டது. ராகம், தாளம் போன்றவை பாடலின் முகப்பில் போட்டு எழுதியுள்ளார். அவற்றுள் பல பாடல்கள் பலரால் பாடப்பெற்று பாட்டால் பாடகரும், அந்தப் பாடகரால் பாட்டும் உயர்வுற்றன.  – சந்திரசேகரன் (Fri, Apr 17, 2009)

 


கவியோகியார் பாடல்கள்  சில இங்கு இணைக்கப்பட்டுள்ளன.  – சுபா 06.06.2009

 

பாடல் 1. எப்படிப் பாடினாரோ

 

எப்படிப் பாடினரோ என்று அருளாளர் திறம் வியந்து கவியோகியார் பாடிய
இன்னொரு பாடல் இங்கே. படிக்கிறவர்களுக்கும், பாடுகிறவர்களுக்கும் கவியோகியின் ஆசி துணை இருக்கட்டும்!
அன்புடன் கிருஷ்ணமூர்த்தி [email protected] (Sat, Apr 18, 2009)

பல்லவி

எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

அனுபல்லவி

அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே

சரணம்

குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படிப் பாடினாரோ!)

 


தமிழ்த்தேனீயார் தட்ட்ச்சு செய்து மின்தமிழில் வெளிவந்த கவியோகியார்  பாடல்கள்:
Tthamizth Tthenee <[email protected]> (Sat, Apr 18, 2009)

 

பாடல் 2: சகல கலா வாணியே
 

ராகம்:  கேதாரம்        தாளம்: ஆதிதாளம்
 
 
பல்லவி:
 
சகல கலா வாணியே- சரணம் தாயே
சங்கீத வீணா பாணியே —சகலகலாவாணியே
 
அனுபல்லவி:
 
இகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி
எங்களுக் கருள்வாய்- மங்களச் செல்வியே
–சகல கலாவாணியே
 
சரணம்:
அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும்
ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே
திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய்
தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்  
—சகல கலாவாணியே

முதுபெரும் புலவரும் முனிவரும் போற்றிய
முப்பெரும்  அறிவுடன் இப்பொது விளங்கிடும்
புதுப்புதுக் கலைகளும் பொருள்களும் அறிந்திங்கே
பூரணராக வாழும் புண்ணியம் அருளுவாய்
–சகலகலாவாணியே
 

பாடல் 3 –  "கருணை செய்வாய்"

 

ராகம்:  ஹம்ஸத்வனி           தாளம்: ஆதிதாளம்
 
 
பல்லவி:
கருணை செய்வாய் -கஜவதனா
கானரசம் பொங்கும் ஞான வரம் தந்தே
—கருணை செய்வாய்

அனுபல்லவி :
அருளோங்கும் சுத்த சக்தி சிவகாமி
அம்பிகை சுதனே நம்பினேன் உனையே
—கருணை செய்வாய்

சரணம்:
தீங்கனி பாகு தேன்சே ரமுதம்
திருமுன் படைத்து சரணம் புகுந்தேன்
ஓங்கார விநாயக விக்ன ராஜா…..
உயர்வான வெற்றி அருளும் கணேசா!
—கருணை செய்வாய்
 

பாடல் 4 – அருள் புரிவாய்
 
ராகம்:   ஹம்ஸத்வனி          தாளம்:    ஆதி

 

 

அருள் புரிவாய் கருணைக் கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே
–அருள் புரிவாய்
 
பரிபூர்ண ஸதானந்த வாரியே
பக்த ரக்ஷகனே பரமாத்மனே
—-அருள் புரிவாய்

 

அருணோதயம் போல் ஆத்ம சாந்தியும்
அறிவுண்மை யின்பும் திருவுந் தருவாய்
தருமப் பயிர் வாழுந் தருணமா மழையே
தங்குல கெங்கிலும் மங்களம் பொங்கவே
–அருள் புரிவாய் 
 

 

 

பாடல் 5  – "ஜங்கார ஸ்ருதி செய்குவாய்"
 
ராகம் :பூர்வகல்யாணி         தாளம் ஆதி

 
பல்லவி:
ஜங்கார ஸ்ருதி செய்குவாய் -ஜீவ வீணையில்
சங்கீதா மிருதம் பெய்குவாய்- ஜகதீஸ்வரனே
–ஜங்கார ஸ்ருதி செய்குவாய்
 
அனுபல்லவி

சங்கர சாம்ப சதாசிவ ஓம்ஹர
சம்புவெனச் சொல்லியென் ஜென்மங் கடைத்தேற

—ஜங்கார ஸ்ருதி செய்குவாய்

 

சரணம்

பலபல வெனுங் காலை பாடும் புள்ளோசை போலும்
பாற்கடல்  உளம் விம்மி ஆர்க்கும் கர்ஜனை போலும்
மலர்களைக் கொஞ்சி வரும்  மந்தமாருதம் போலும்
மதுவுண்ட வண்டினம்  வளர்க்கும் ரீங்காரம் போலும்
—ஜங்கார ஸ்ருதி செய்குவாய்
 
தடதட வெனப்பொழி சப்த மேகங்கள் போலும்
மடமட வெனவரும் மலையருவியைப் போலும்
கடகட வெனச் செல்லும் ககன லோகங்கள் போலும்
நடமிடும் சிலம்புடன் நர்த்தனம் செய்ய நானும்
—ஜங்கார ஸ்ருதி செய்குவாய்
 

 
பாடல் 6  – "அருவியைப் போலும்"

 

ராகம் :அசாவேரி     தாளம்  : சாபு 
 

 

பல்லவி.
 
அருவியைப் போலும் காலைக் குருவியைப் போலும்
அருளை நான் பாடுகின்றேன்
–அருவியைப் போலும்
 
அனுபல்லவி
 
தெருவில் இருந்து ஜெய பேரிகை முழங்கவில்லை
திசையெல்லாம் புகழ்பெறும் நசையும் எனக்கில்லை
–அருவியைப் போலும்
 
சரணம்
 
காற்றிலும்  கதிரிலும்  கடலிலும் உன்கலைக்
காட்சிகள் காட்டுகின்றாய்
ஊற்றியென் உள்ளத்தில் உன்னிசை யமுதினை
உயிரின்பம் ஊட்டுகின்றாய்
 
போற்றினும் உலககென்னைத் தூற்றினும் உன்புகழ்
போற்றா திருக்க வியலேன்
ஆற்றுவ தெல்லாமுன் ஆராதனையின்றி
ஆடம்பரமும் அறியேன்
 —அருவியைப் போலும்
 
அன்பு மலர்களளெல்லாம் உன் பாதம் வைத்திட்டேன்
அரனே – என் குரு
பரனே- உனது சரண்
                                                                              —அருவியைப் போலும்
 
 

 
பாடல் 7 – ஆசை கொண்டேன்

 

ராகம் :கோபிகாதிலகம்/கேதார கௌளம்     தாளம் :  சாய்ப்பு 
 
பல்லவி.’
 
ஆசை கொண்டேன்  வண்டே-உன்னுடனே நான்
ஈசன் புகழ் பாடவே
–ஆசை கொண்டேன்

அனுபல்லவி
 
வாச மலரடித் தேன் வாரி வாரி யுண்டு
வலம் வந்து வலம் வந்து
நலம் பெறவே தினம்-
—ஆசை கொண்டேன்
 
சரணம்
 
வானச் சுடர் மணியே ஞானக் கண்மணியே
வசந்த மலரழகே வன்னக் குயிலிசையே
மோன மலையருவி கானம் செய்யும் வேதமே
முத்தொழில் புரிந்திடும் சித்தனே யென்றோத
–ஆசை கொண்டேன்

 

You may also like

Leave a Comment