சுதந்திரப் போராட்ட வீரர்
எக்காலத்திலும், உண்மைகள் உண்மையாகவே இருக்கும். வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? என்று சுப்பிரமணிய பாரதி பாடியது போல், சுத்தானந்தரும்,தமது பல பாடல்களில் சுதந்திர வீச்சைக் காட்டியுள்ளார். ஊர் ஊராய் சென்று, மக்களுள் சுதந்திர தாகம் ஏற்படுத்தியுள்ளார். இங்கே ஒரு பாடலைப் பாருங்கள்:
போற்றி செய்வோம் புதுமலர் தூவி
புண்ணியப் புகழ் பாடிப்பணிவோம்
நாற்றிசைக் கலைவாணரும் கூடி
நமது தாய்த் திருத் தொண்டுகள் செய்வோம்
வேத வாணியும் பாரததேவி
வீரதுர்க்கையும் பாரததேவி
மா தவக்கனல் பாரததேவி
மங்கலத் திரு பாரததேவி
சேதுதொட்(இ) மயம் வரை நீண்ட
தெய்வ நாட்டினள் பாரததேவி
மோதுதென்கடல் முன்வளர்ந்தோங்கும்
மூலசக்தியும் பாரத தேவி
வீரர் வீரமும் பாரததேவி
விஜயலட்சுமி பாரததேவி
பாரின் அன்னையும் பாரததேவி
பாதுகாவலும் பாரததேவி
கோடிக் கோடி சிரங்கள் வணங்க
கோடிக் கோடிக் கரந் தொழுதேத்த
கோடி தேவர்கள் ஆசிகள் கூற
கொலுவிருப்பவள் பாரத தேவி
என்று பாரதத் தாயின் புகழ் பாடி, கொடியையும் ஏற்றி வணங்குகிறார்:
ஒற்றுமையாய்ப் பணிவோம் – தாயின்
ஓங்கும் ஜயக் கொடியை
வெற்றிகள் கூடிடுவோம் – சுற்றி
வீர நடம் புரிவோம்
செம் பொன் வெண்கொடியே – ஆன்மச்
செல்வத் திருக்கொடியே
அன்பறம் உண்மை வளர் – சக்கரம்
அணிசெயும் கொடியே
சூரிய சந்திரர்க்கும் – நமதிசை
சொல்லிப் பறக்குது பார்
பாரிலிதன் பெருமை – எங்கும்
பரவத் தொண்டு செய்வோம்
இந்த உடலினிலே – ஒரு துளி
இரத்தம் உள்ள மட்டும்
எந்தாய் வாழ்க வென்றே – இதனை
ஏந்திப் பிடித்திடுவோம்.
நல்லதை ஆதரிப்போம் – தீமை
நலியப் போர் புரிவோம்
எல்லாரும் இன்புறவே மணிக்கொடி
ஏற்றிப் பணிந்திடுவோம்.
இந்தப் பாடலைப் பாடியதும், சுப்ரமணிய பாரதியின்,
”தாயின் மணிக் கொடி பாரீர் … பாடல் ஞாபகம் வருகிறதல்லவா?
ஆம் இரு பாரதிகளும் நண்பர்கள்; contemporaries! பெரும்பாலும் புதுவைக் குயில்தோப்பில் இருவரும் பாட்டும், பேச்சுமாய் பலமுறை சந்தித்து மகிழ்ந்துள்ளனர். சந்திரசேகரன் -Mon, Apr 20, 2009