Home Tamilmanigal வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

by Dr.K.Subashini
0 comment

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

முனைவர் மலையமான்

 

திரிசூலத்தின் மூன்று கூர் முனைகளைப் போல், 19ஆம் நூற்றாண்டில், மூன்று மாபெரும் துறவிகள் தமிழ் மண்ணில் திகழ்ந்தார்கள்.

அவர்கள்,

  • இராமலிங்க வள்ளலார் (1823 -1874)
  • தண்டபாணி சுவாமிகள் (1839 -1898)
  • பாம்பன் சுவாமிகள் (1850 -1929)

இராமலிங்க வள்ளலாரைப் பற்றித் தமிழகம் பரவலாக உணர்ந்திருந்தது. மற்ற இருவரும் அந்த அளவுக்குப் போற்றப்படவில்லை.

 

தண்டபாணி சுவாமிகளும், வள்ளலாரைப் போன்ற தெள்ளுதமிழ்ப் புலவர். பலவிதச் சிறப்புகளுக்கு உரியவர். திருநெல்வேலியில் செந்தில்நாயகம் பிள்ளை – பேச்சிமுத்து தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த மாதமும் தேதியும் அறிய முடியவில்லை. இவரது இயற்பெயர் சங்கரலிங்கம். தந்தையின் நண்பரான சீதாராம நாயுடு என்பவரால் இவருக்கு முருகன் மீது பக்தி உருவாயிற்று. ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமைப் பெற்றார். எட்டு வயதிலேயே கவிதை எழுதும் விழுமிய ஆற்றல் கைவரப் பெற்றார்.

 

அந்த வயதில், "பூமி காத்தாள்" என்ற அம்மனுக்கு அப்பெயர் எப்படி அமைந்தது என்ற காரணத்தைக் கூறி, பாடுதற்கு அரிய வெண்பாவில் அதைப் பாடினார். கவிதை பொழியும் இவருடைய ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராம நாயுடு இவருக்கு "ஓயா மாரி" என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். சங்கரலிங்கம், முருகனின் திருவடி தொழும் அடியவர் ஆனார். மனம் உருகிப் பாடினார். ஆகவே இவர் "முருகதாசர்" என்று அழைக்கப்பட்டார். இவர் முருகனின் திருப்புகழை விரும்பிப் பாடிக்கொண்டே இருந்ததால் "திருப்புகழ்ச் சுவாமிகள்" என்றும் சிறப்பிக்கப்பட்டார்.

 

 

உச்சி முதல் உள்ளங்கால் வரை திருநீறு பூசிக்கொண்டார். இடுப்பில் கல்லாடை அணிந்துகொண்டார். கையில் தண்டாயுதம் ஏந்திக் கொண்டார். இந்தக் கோலத்தில் விளங்கிய இவரை மக்கள் "தண்டபாணி சுவாமிகள்" என்று போற்றினார்கள். பாடுதற்கு அரிய வண்ணம் பாடும் ஆற்றல் பெற்ற சரபம் (சிம்புள் பறவை) போன்று விளங்கியதால், இவர் "வண்ணச்சரபம் தண்டபாணி" சுவாமிகள் எனப்பட்டார். அப்பெயரே அவருக்கு நிலைத்து நின்றது.

சில துறவிகள் ஒரே தலத்தில் நிலைத்திருந்து, ஆலமரம் போல நலம் புரிவார்கள். ஒரு சில துறவிகள் பல ஊர்களுக்கும் சென்று வான்பறவை போல் உலவி, அருள் புரிவார்கள். இந்த வகையில் தண்டபாணி சுவாமிகள் தமிழ் நாடெங்கும் வலம் வந்தார்.

 

அவிநாசி முதல் வேளூர் வரையிலான 218 ஊர்களிலும், கேளர மாநிலம் மற்றும் இலங்கையிலும் அவரது பாதம் பதிந்தது. துறவிகள் பற்றற்றவர்கள். முற்றிலும் இறைவழிபாட்டிலேயே பொழுதைக் கழிப்பவர்கள். இராமலிங்க சுவாமிகளும், தண்டபாணி சுவாமிகளும் சற்று மாறுபட்ட நிலையில் வாழ்ந்து, வழிகாட்டியவர்கள். சமுதாய நலனிலும் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்கள்.  தாய்மொழித் தமிழ் மேல் தண்டபாணி சுவாமிகள் மிகுந்தப் பற்று கொண்டிருந்தார்.

"இளநகைச் சிறுமியர் சொல்மொழியினும் தித்தித்திருக்கின்ற தமிழ்" என்றும்"செந்தமிழே உயர்வென்று முன்னாள் சீட்டு எனக்குத் தந்தனன் கந்தன்" என்றும்
"தமிழ்மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதெனில் வெகுளியற்றிருப்பவன் வெறும் புலவோனே" என்றும் தண்டபாணி சுவாமிகள் பாடினார்.
தாய்மொழியின் பெருமையைத் தரணிக்கு அறிவிக்கும் முறையில்,

  • முத்தமிழ்ப் பாமாலை
  • தமிழ்த் துதிப் பதிகம்
  • தமிழலங்காரம்

ஆகிய நூல்களை இயற்றினார்.

 

முத்தமிழையும் வளர்த்தார்.

 

இயற்றமிழோடு முசுகுந்த நாடகம், இசைக் கீர்த்தனைகளையும் படைத்தார். சொல்லாய்வும் செய்தார்.தமிழ்ச்சொல் "புகல்" என்பது இந்தியில் "போல்" என்று மருவிவிட்டது என்றார். அதை, "புகல் எனும் சொல்லினைப் போல் எனச் சொல்லுதல் போல்இகல் இந்துத்தானியும் பலசொல செந்தமிழிற் கொண்டு இயம்புகின்றார்" என்று பாடினார். (இந்தியில் ஆயிரம் தமிழ் வேர்ச்சொற்கள் உள்ளன என்று அண்மையில் ஆய்வறிஞர் ஒருவர் கூறியுள்ளார்).

 

மேலும் ஒரு புதுமையை இவர் பதிவு செய்துள்ளார்.

  • எழுத்து
  • சொல்
  • பொருள்
  • யாப்பு
  • அணி

என்பவை பற்றிய ஐந்திலக்கணமே தமிழில் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், புலமைக்கு இலக்கணம் கூறும் ஆறாம் இலக்கணத்தை இவர் கற்பித்தார்.  பின்பு ஏழாம் இலக்கணத்தையும் தந்தார். சிற்றிலக்கியங்களிலும் புதுமையைக் கையாண்டார்.

  • முன்னிலை நாட்டம்
  • மஞ்சரி
  • ஆயிரம்
  • முறைமை
  • விஜயம்
  • நூல்
  • சூத்திரம்

என்ற புதுமை இலக்கிய வகைகளை வழங்கி, வழிகாட்டினார்.

 

திருக்குறளின் அடியொற்றி வருக்கக் குறள் என்ற நூலை உருவாக்கினார். சத்தியவாசகம் என்ற உரைநடைச் சுவடியையும் அருளினார். இவர் இலட்சம் பாடல்களைப் பாடியுள்ளார். "குருபர தத்துவம்" என்ற பெயர் கொண்ட தன் வரலாற்று நூலை எழுதினார். இது 1,240 விருத்தப்பாக்களால் ஆனது. 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் "புலவர் புராணம்" என்ற நூலில் நிலைபெறச் செய்துள்ளார். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாகும். அருணகிரிநாதர் வரலாற்றை, "அருணகிரிநாதர் புராணம்" என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். முருகனின் அடிமையாக ஒளிர்ந்த இவர், மற்ற கடவுளர்களையும் போற்றினார். வைணவப் பெரியார்களான பெரியாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள் முதலியவர்களை உயர்வாகப் பாடியுள்ளார். பழந்தமிழ்ப் புலவர்கள் மற்றும் ஒளவையாரையும், திருவள்ளுவரையும் பலவாறு போற்றியுள்ளார்.

 

"ஒளவையொடு, வள்ளுவனும் ஆராய்ந்துரைத்த நெறி
 செவ்வை யெனத் தேர்ந்தார் சிலர்”

என்று கூறிப் பாராட்டினார்.

 

தண்டபாணி சுவாமிகள் தம்காலத்துப் பெருமக்களாகிய,

  • ஆறுமுக நாவலர்
  • மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • சபாபதி முதலியார்
  • பூண்டி அரங்கநாத முதலியார்

போன்றவர்களுடன் பழகியவர்.

 

தனக்கு மூத்தவராகிய இராமலிங்க வள்ளலாரை மூன்று முறை சந்தித்துள்ளார்.

"அருமைத் தமிழ்த் தாயுமான பிள்ளை தாமே
 பெருமை இராமலிங்கம் பிள்ளை”

என்று பாடி, தாயுமானவரின் மறுபிறவியே இராமலிங்க வள்ளல் என்று புலப்படுத்தினார்.

 

இல்லறத்தை மேன்மையுடையது என்றார். பெண்மையை உயர்த்திக் கூறி, பெண் உரிமைக்குக் குரல் கொடுத்த இவர், பெண்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண் கல்வி மறுப்பவர்களை, "நாரியரும் கற்கை நலம் என்று உரைக்குநரைப் பாரில் இகழ்வார் பலர்" என்று கூறி மனம் வருந்தினார்.

 

கணவனை இழந்த பெண் மறுமணம் புரிந்து கொள்ளலாம் என்ற புரட்சிகரமான கருத்தை அன்றே கூறியுள்ளார் தண்டபாணி சுவாமிகள். துறவிகள் அரசியலின் அருகில் வருவதில்லை. ஆனால் தண்டபாணி சுவாமிகள், இம்மண்ணை ஆங்கிலேயர் ஆண்டு வருவதைக் கண்டு, அந்நியர் ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுத்து,

"நிரைபடப் பசு அனந்தம் கொன்று தினும்
 நீசர் குடை நிழலில் வெம்பித்
 தரைமகள் அழும் துயர் சகிக்கிலேன்”

என்று பாடினார்.

 

தனிப்பட "ஆங்கிலியர் அந்தாதி" என்ற நூலைப் பாடி அதன்மூலம் ஆங்கிலேயரைப் பலவாறு சாடினார்.

 

இறுதிக் காலத்தில் அரிசி உணவைத் தவிர்த்து பயறு உணவுகளை உட்கொண்டதாலும், கடும் தவத்தாலும் இவரது உடலில் வெப்பம் மிகுதியாகி, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் 1898ஆம் ஆண்டு சிவபதவி அடைந்தார். அவர் படைத்தளித்த இலட்சம் பாடல்களும் இன்றளவும் அவரது புகழைப் பாடிய வண்ணம் உள்ளன.

 

நன்றி:- தினமணி

You may also like

Leave a Comment