Home Tamilmanigal பி.ஸ்ரீ.ஆச்சார்யா

பி.ஸ்ரீ.ஆச்சார்யா

by Dr.K.Subashini
0 comment

ஒப்பிலக்கியச் செம்மல்!

இடைமருதூர் கி. மஞ்சுளா

 

  • பேச்சாளராக
  • எழுத்தாளராக
  • உரையாசிரியராக
  • பதிப்பாசிரியராக
  • விமர்சகராக
  • வரலாற்று ஆசிரியராக
  • பத்திரிகை ஆசிரியராக
  • சமயாச்சாரியராக
  • திறனாய்வாளராக

இப்படி பன்முக வித்தகராக விளங்கியவர் பி.ஸ்ரீ.. என்று இலக்கிய நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் பி.ஸ்ரீ.ஆச்சார்யா.

 

 

 

நூற்றியெட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான தென்திருப்பேரை என்னும் கிராமத்தில், 1886ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி, திருவாதிரை நட்சத்திர நன்நாளில், பிச்சு ஐயங்கார் – பிச்சு அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

 

பெற்றோர் இவருக்கு பி.ஸ்ரீநிவாச்சாரி எனப் பெயரிட்டனர். நாளடைவில் அவரது பெயர் சுருங்கி, பி.ஸ்ரீ. என ஆகிவிட்டது.நெல்லையில் உள்ள, தற்போது "மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி" என்று அழைக்கப்படும் இந்துக் கலாசாலையில் கல்வி பயின்றார்.

 

புரட்சி கவி பாரதியும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரும், சிறுகதை மன்னன் என்றழைக்கப்படும் புதுமைப்பித்தனும் படித்த சிறப்பு மிக்கது இக்கல்லூரி. பள்ளிப் பருவத்திலேயே ஆங்கிலத்தில் பேசுவதிலும், எழுதுவதிலும் நல்ல அறிவும் திறமையும் படைத்த பி.ஸ்ரீ., எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பாராம். அதிகம் விரும்பிப் படித்து, திளைத்து, மயங்குவது கம்பராமாயணம் மற்றும் பாரதியின் பாடல்களில்தான்.பி.ஸ்ரீ.க்கு, நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் வளரக் காரணமாய் இருந்தவர் மகாகவி பாரதியார்தான். பலமுறை பாரதியாரைச் சந்தித்து, பழகி மிகுந்த தோழமை பூண்டு, அவரைப் பாடச் சொல்லி, கேட்டு, மகிழ்ந்து பாராட்டிய பி.ஸ்ரீ., இரவீந்திரநாத் தாகூருக்குக் கிடைத்ததுபோல பாரதியாருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லையே என தனது ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளார்.

 

பாரதியின் தாக்கத்தால் அந்நாளைய "இன்ட்ர்மீடியட்" வகுப்புக்குப் பிறகு படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றார் பி.ஸ்ரீ. விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவதைக் கண்ட அவரது பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்து வைத்து அவரது கவனத்தைத் திசைதிருப்ப நினைத்தனர். அதன்படி தங்கம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்வித்தனர். இவருக்கு ஒரு மகனும், இரு மகளும் உண்டு.

 

தமிழ் இலக்கியத்தை அவ்வளவாக அறிந்திராத காலத்தில் இராஜாஜிதான் பி.ஸ்ரீ.யின் கவனத்தை தமிழின் பால் ஈர்த்துக்கொண்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

"தமிழில் படிக்க என்ன இருக்கிறது என்கிறாய், அது தாய்மொழியின் குறையோ குற்றமோ அன்று; உன் ஆசிரியர் கூறியபடி புல்லையும் தவிட்டையும் காளை மாட்டுக்குப் போட்டுவிட்டு, வீட்டுப்பசு பால் கறக்கவில்லை என்றால் அது பசுவின் குற்றமா?" என்று இராஜாஜி இடித்துரைத்ததைக் கேட்டு, தமிழ் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினார். அதுவே பிற்காலத்தில் திறனாய்வாகவும், ஆராய்ச்சியாகவும் உருப்பெற்றது. அதனால் தன்னைத் தமிழின் "ஆயுள் மாணாக்கன்" என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொண்டவர் பி.ஸ்ரீ.

 

இவரது ஆங்கில இலக்கியப் படிப்பு இவரது தமிழ்ப்பணிக்கு மெருகூட்டியது. பாமரரும் படித்துப் புரிந்து கொள்ளும் விதமாக பண்டித நடையில் இருந்தவற்றை பழகு தமிழுக்குக் கொண்டுவந்து 20ஆம் நூற்றாண்டு தமிழ் உரைநடை மறுமலர்ச்சிக்கும் திறனாய்வுத்துறைக்கும் வழிகாட்டியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் இவர்.

பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பி.ஸ்ரீ., திருக்கோயில்களிலும், தலபுராணங்களிலும் தம்மையறியாது ஓர் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார்.

 

  • செப்பேடுகள்
  • கல்வெட்டுகள்
  • சிற்பக்கலை

போன்றவற்றிலும் மிகுந்த புலமை பெற்றிருந்தார்.

 

சரித்திரத்தை விஞ்ஞான மனப்பான்மையுடன் இலக்கியச் சுவை குன்றாது ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பது பி.ஸ்ரீ.யின் விருப்பம். எனவே, "ஆனந்த விகடன்" பத்திரிகையில் "கிளைவ் முதல் இராஜாஜி வரை" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி பின் அதை நூலாக்கினார்.

 

உ.வே.சா.வைச் சந்தித்துப் பழகும் வாய்ப்புதான் தமிழ் மீது பற்று அதிகரிக்கும் அளவுக்கு பி.ஸ்ரீ.யை உயர்த்தியது. இவரது எழுத்தார்வம் "கிராம பரிபாலனம்" என்கிற வார இதழைத் தொடங்கி வைத்து நஷ்டமடையவும் வைத்தது. விளைவு?

 

வேலையில் சேர்வதுதான்.

 

செட்டிநாட்டில் மூன்றரை ஆண்டுகள் தங்கி, "குமரன்" பத்திரிகையின் ஆசிரியராக, எண்ணிலடங்காத கட்டுரைகளையும் கதைகளையும் தொடர்களையும் எழுதிக்குவித்தார்.

 

"ஆனந்தவிகடன் ஓர் இன்பப் படகு; அதை ஆனந்தமாய்ச் செலுத்துவதற்குத் துடுப்பு போடலாம் வாருங்கள்!" என்று கல்கி அடிக்கடி பி.ஸ்ரீ.யை உற்சாகமூட்டி எழுதத் தூண்டினார். அதனால் ஆனந்தவிகடனில் தொடர்ந்து எழுதிவந்தார் பி.ஸ்ரீ. கம்பனை ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்குவதற்கு வழிகாட்டியாகவும், குருவாகவும் இருந்தவர் பி.ஸ்ரீ.யின் கலாசாலை நண்பரான வையாபுரிப் பிள்ளையாவார்.

 

  • உ.வே.சா.
  • கா.சு.பிள்ளை
  • வையாபுரிப்பிள்ளை
  • சேதுப்பிள்ளை
  • மறைமலையடிகள்
  • பாரதியார்
  • வ.உ.சிதம்பரனார்
  • வ.வே.சு ஐயர்
  • இராஜாஜி
  • கல்கி
  • சோமசுந்தர பாரதி
  • இரசிகமணி டி.கே.சி.

மற்றும் பல இலக்கிய அன்பர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர் பி.ஸ்ரீ.

 

இவர் எழுதிய "ஸ்ரீஇராமானுஜர்" என்னும் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1964ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் பாராட்டும், பொன் முடிப்பும் வழங்கப்பட்டது.

 

  • தினமணி
  • தினமலர்
  • சுடர்
  • சுதேசமித்திரன்
  • போன்ற நாளிதழ்களுக்கும்,
  • கல்கி
  • ஆனந்த விகடன்
  • போன்ற வார இதழ்களுக்கும்,
  • கலைமகள்
  • அமுதசுரபி

போன்ற மாத இதழ்களுக்கும் கட்டுரைகளை எழுதிக் குவித்தார்.

 

"தினமணி" நாளிதழில் பதிப்பாசிரியராகப் பணியாற்றியபோது எண்ணற்ற நல்ல நூல்களைத் "தினமணி மலிவு வெளியீடாக" வெளியிட்ட பெருமை பி.ஸ்ரீ.க்கு உண்டு.

 

தமிழ்ப் பத்திரிகை உலகில் பி.ஸ்ரீ.யின் பங்களிப்பு என்பது "தினமணி"யில் வேலை பார்த்தபோது அவர் வெளியிட்ட பல மலிவு விலைப் பதிப்புகள் என்பதுதான். தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகளும், இலக்கிய ஆய்வுகளும், புத்தக மதிப்புரைகளும் எனலாம். பி.ஸ்ரீ.யின் பத்திரிகைப் பணியில் முழுப் பரிமாணமும் அவர் "தினமணி"யில் இருந்து ஓய்வுபெற்று, ஆனந்த விகடனில் பகுதிநேர எழுத்தாளராக மாறியபோதுதான் வெளிப்பட்டது.

 

இன்றளவும் பி.ஸ்ரீ.யின் சித்திர இராமாயணத்துக்கு நிகராக ஒரு எளிய படைப்பு வெளிவந்ததில்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்து.

 

தமிழில் ஒப்பிலக்கியம் என்பதற்கு அடித்தளம் இட்ட பெருமையும் பி.ஸ்ரீ.க்கு உண்டு.

 

  • கம்பனும் –  ஷெல்லியும்
  • பாரதியும் – ஷெல்லியும்

என்று தொடங்கி, இலக்கிய ஒப்புமைகள் பல பி.ஸ்ரீ.யால் வெளிவந்தன.  

 

கம்பன் கவிதையை இலக்கியத் திறனாய்வு செய்து கம்பனின் புகழை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய பெருமைக்குரியவர் பி.ஸ்ரீ.

 

உடல்நிலை குன்றி படுக்கையில் இருந்தபோதும் கூட, "நான் இரசித்த கம்பன்" என்ற இறுதி நூலை எழுதி முடித்தார் என்றால் அவருக்கிருந்த கம்ப தாகம் எப்படிப்பட்டது என்று உணரமுடிகிறது!

 

பி.ஸ்ரீ.யின் கட்டுரைகள் இல்லாமல் எந்தவொரு தீபாவளி மலரும் வெளிவராது என்கிற நிலைமை கடந்த நூற்றாண்டில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இருந்தது.

 

பி.ஸ்ரீ., தமது 96வது வயதில், 1981ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

 

நன்றி:- தினமணி

You may also like

Leave a Comment