Home Games தமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்

தமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்

by Dr.K.Subashini
0 comment

விளையாட்டுக்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது?

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விளையாடும் வகையில் பலதரப்பட்டவை. தமிழர் வாழ்வியலிலும் நாகரிகத்திலும் விளையாட்டுக்கள் முக்கிய பங்கு வகித்தன.

காலையிலிருந்து மாலை வரை உழைத்து விட்டு வரும் பெரியவர்கள் விளையாட சில விளையாட்டுக்கள்..

சிறார்கள் இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள்…

பெண்கள் ஒன்று கூடி விளையாடும் விளையாட்டுக்கள்…

இப்படி மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பிடித்திருந்தன தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள்.  ஆனால் இன்றோ தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றை கூட அறிந்திராத சமூகமாக நாம் இருக்கின்றோம்.  கம்பியூட்டர் விளையாட்டுக்கள் தான் இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவனத்தை ஈர்த்து திசை திருப்பியிருக்கின்றது.

பாரம்பரிய விளையாட்டுக்கள் உடலின் பல பாகங்களையும் இயங்க வைக்கும் தன்மை கொண்டவை. சிந்தனைக்கு மட்டும் தான் வேலை என்றில்லாது கைகள், கால்கள், முகம், தோள் என உடலின் எல்லா பாகங்களையும் அசைக்கும் நிலை பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடும் போது அமைகிறது.

உடலின் பல்வேறு பாகங்களில் அசைவுகள் ஏற்படும் போது உடலில் சீரான ரத்த ஓட்டத்தைத் தூண்டி  புத்துணர்ச்சி அளிக்கும் தன்மை  இவ்வகை பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடும் போது கிடைக்கின்றது. உடல் சுறுசுறுப்பாக இருக்க  இது உதவுவதோடு மனதில் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.

படிப்படியாக தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களை மறந்த சமூகமாக நாம் மாறியிருக்கும் வேளையில் நம் பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு நாம் மீள் அறிமுகம் செய்வது தேவையாகின்றது.

நாடு_பி(ரி)டித்தல்….
நால்வர்கூடி ஆடுமாட்டம்
நாடுபிரித்தல் என்பதுவாம்
நிலத்தில் சதுரக்கோடும்
வரைந்து அதை
சரிசமமாக நான்காய்
பிரித்து ஆடிடுவர்,
நான்கு பகுதிக்கும்
தனித்தனிநாட்டின் பெயரிடுவர்
நால்வர்கூடி கைச்சப்பளமிட்டு
மூவரொன்றா யொருவர்
தனிக்கத் தொடங்கிடுவர்
ஒருவர்கையில் கோலுமேந்த
நாட்டின் பெயர்சொல்லி
கோலைவீச மூவருடனே
விரைந்திடுவர் கோலெடுத்தவர்
தனியேக் காத்திடுவர்,
கோலைக்கையில் தானெடுத்து
நிற்கவென்றே உடனுறைக்க
விரைந்தவருடனே நின்றிடுவர்
கோலையெடுத்தவ ருடனே
முடிவெடுத்து தொலைவு
அருகுதான் நினைத்து
கோலைவீசித் தாக்கிடுவர்
முதுகில்வாங்கித் தாங்கிடுவர்,
கோலதுமெதிரியை தாக்கிவிடின்
எதிரியின்நாட்டை யிவர்பிடிப்பார்
தாக்கிடத்தவறி நழுவிவிடின்
தாக்கியநாட்டை யிவர்பிடிப்பார்
வென்றவர்கோலை மறுபடிவீச
நின்றவர்மீண்டும் எதிரியைத்தாக்க
தொடர்ந்திடுமாட்டம் தொடர்கதையாய்
விடையதுமின்றி விடுகதையாய்,
வெற்றியைநோக்கி ஓடிடுவர்
வென்றிட்டநாட்டை மீட்டிடுவர்
போர்களம்போலே விளையாட்டுமதும்
பொறாமைகளில்லா வெற்றியதும்,
ஊக்கத்தை உணர்த்திடும்
விளையாட்டு போராட்டத்தை
வளர்த்திடும் விளையாட்டு
நோக்கத்தைநோக்கி நடைபோட்டு
வென்றிடுஉலகை எடைபோட்டு!
-கவின்மொழிவர்மன்

தமிழ் மரபு அறக்கட்டளை நமது பாரம்பரிய விளையாட்டுக்களைத் தமிழர் மரபின் பெருமையாகக் கருதுகின்றோம். இதனை கருத்தில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்துத் தொகுக்கும் திட்டத்தை இன்று தொடங்குகின்றோம்.  இத்திட்டத்தில் தகவல்களைச் சேகரித்துத் தொகுத்து வழங்குபவர்கள் பட்டியல்:

 • திருமிகு.சிவரஞ்சனி சதாசிவம் (சென்னை)
 • திருமிகு.வலன்ரீனா இளங்கோவன் (யாழ்ப்பாணம்)
 • திரு.ப்ரின்ஸ் (ஆஸ்திரேலியா)
 • திரு.சசிக்குமார் (அரியலூர் – பெங்களூர்)
 • திரு.செழியன் (மதுரை)
 • டாக்டர்.பாலாஜி (நோர்வே)
 • திருமிகு.சுபாஷினி திருமலை (சென்னை)
 • திருமிகு.மலர்விழி பாஸ்கரன் (மலேசியா)
 • முனைவர்.தேமொழி
 • திருமிகு.மதுமிதா (ராஜபாளையம்)
 • முனைவர்.ராஜேஸ்வரி செல்லையா
 • திரு.மாரிராஜன்
 • முனைவர்.பாப்பா (மதுரை)
 • திரு.சரவணன் (நெல்லை)

 

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களை அறிந்து கொள்வோம்; விளையாடுவோம்;  சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெறுவோம்.

​எண்​​விளையாட்டின் பெயர்கள்​
1பல்லாங்குழி
2ஏழாங்கல்
3தலையாட்டி பொம்மை
4மரப்பாச்சி
5பனையோலை-காத்தாடி, கிளி, கிலுகிலுப்பை, படபடத்தாள், ஓலைக்கூடைகள்
6சொப்பு சாமான்கள்
7மர பொம்மைகள்
8பொம்மலாட்டம்
9புல்லாங்குழல்
10மர ஊர்திகள்-மாட்டுவண்டி, வில் வண்டி, தேர்
11அட்டைக்கத்தி
12உந்திவில்
13கிட்டு புள்
14பம்பரம்
15பரமபதம்
16தாயம்
17கோலி
18பட்டம்
19தென்னை-குருத்தோலை பொம்மைகள், தேங்காய் குரும்பை டிக் டிக் பொம்மை
20பனங்காய் /நுங்கு வண்டி
21நடவண்டி
22ஆடுபுலி ஆட்டம்
23சில்லுக்கோடு
24வளையல் விளையாட்டு
25குச்சி விளையாட்டு
26கோலாட்டம்
27கார்த்திகைப்பூ சுற்றுதல்
28பந்தாட்டம்
29மரக்குரங்கு
30பிள்ளையார் பந்து(எரி பந்து)
31தவளை பாய்ச்சல்
32கைச்சப்பளம்
33பேந்தாபுரூட்
34திருப்பிச்சி பந்து
35பாண்டியாட்டம்
36ஐந்தாங்காய்
37ஒருகுடம் தண்ணீர் ஊற்றி
38கபடி
39சோழி
40குச்சியாட்டம்
41அச்சுக்கல்
42திருடன் போலிஸ்
43கூட்டாஞ்சோறு
44காலாட்டுமணி
45கையாட்டுமணி
46அக்கா அக்கா சினுக்குவரி
47கல்லா மண்ணா
48கிச்சு கிச்சு தாம்பாளம்
49ஒத்தையா ரெட்டையா
50குலை குலையா முந்திரிக்காய்
51தீப்பெட்டி தொலைபேசி
52தத்தங்கி விளையாட்டு
53ஊஞ்சல்

 

அன்புடன்

முனைவர்.க.சுபாஷிணி

25.செப்ட்.2018

You may also like

Leave a Comment