திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்
கட்டுரையும் படங்களும்: முனைவர்.க.சுபாஷிணி
நான் இந்த வருடம் (ஜனவரி 2012ல்) தமிழகம் சென்றிருந்த போது ஈரோட்டில் சில நாட்கள் இருந்ததைத் பற்றி வேறு சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். ஈரோட்டில் எனது திட்டப்படி ஒரு சில இடங்களைச் சென்று பார்த்து வர வேண்டும் என்ற ஒரு பட்டியல் இருந்தது. ஈரோட்டில் இருந்த சமயம் திரு.திவாகருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது ஈரோட்டில் இருந்தால் நிச்சம் திருச்செங்கோடு கோவிலைச் சென்று பார்த்து வாருங்கள் என்று குறிப்பிட்டார். திருமதி பவளா, திரு.ஆரூரன் இவர்கள் இருவருக்கும் இதனைத் தெரிவித்தபோது பயணத்தின் இறுதி நாள் காலையில் இக்கோவில் சென்று வரலாம் என்று ஏற்பாடு செய்தனர்.
ஈரோடு நகரிலிருந்து இந்தக் கோயில் ஏறக்குறைய 18 கி.மீ தொலைவில் உள்ளது. இம்மலையின் உச்சியில் இருப்பது செங்கோட்டு முருகன் ஆலயமும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலும் ஆகும். மலை அடிவாரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இத்தலத்தில் இறைவி தவம் செய்து இறைவனது திருமேனியில் ஒரு பகுதியைத் தம்முடையதாகப் பெற்றார் என்று புராணம் கூறுவதாகவும் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் இக்கோவில் பாடப்பட்டுள்ளதாகவும் அருணகிரிநாதர் செங்கோட்டு வேலவனிடம் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார் எனவும் V.கந்தசாமி அவர்கள் தமிழ் நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
- கொடிமாடச் செங்குன்றம்
- தெய்வத்திருமலை
- நாககிரி
- அரவாகிரி
- உரகவெற்பு
- கட்செவிக் குன்றூர்
- பணிமலை
- தந்தகிரி
- நகபூதரம்
- புசகபூதரம்
- நாகாசலம்
- நாகமலை
- முருகாசலம்
- தாருகாசலம்
- திருவேரகம்
- கோதமலை
- முத்தலை
- கடகமலை
- துர்க்கைமலை
- முத்திமலை
- வாயுமலை
- பொறுதுமலை
- வந்திமலை
- அழகுமலை
- தாருமலை
- சூதமலை
- தவமலை
- அனந்தன்மலை
- தங்கமலை
- யோமலை
- மேருமலை
- கொங்குமலை
- கத்தகிரி
- ஞானகிரி
- இரத்தகிரி
- கோணகிரி
- பிரம்மகிரி
- தீர்த்தகிரி
- தர்மகிரி
- கந்தகிரி
- பதுமகிரி
- தேதுகிரி
திருச்செங்கோட்டு இறைவனுக்கான பாடல்கள் மேலும்…
கந்தர் அலங்காரம்
23. தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான்
ஐவர்க்கு இடம் பெறக் கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
கைவைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே.
நன்றி: ஆரூரன்
நன்றி.திரு.நரசய்யா
அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் சொல்கிறார்:
விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்புசெய்த பழிக்குத்துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத்துணை வ டிவேலும் செங்கோடன் மயூரமுமே!
இதைத் தவிர திருப்புகழில் ஐந்து பாடல்கள் அவர் திருச்செங்கோடு குறித்துப் பாடியுள்ளார்.
1.
அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத மொன்ற …… நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள் …… முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற …… குழலாரைக்
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து …… அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை …… யணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த …… வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு …… வரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
செங்கோ டமர்ந்த …… பெருமாளே.
2
காலனிடத் …… தணுகாதே
காசினியிற் …… பிறவாதே
சீலஅகத் …… தியஞான
தேனமுதைத் …… தருவாயே
மாலயனுக் …… கரியானே
மாதவரைப் …… பிரியானே
நாலுமறைப் …… பொருளானே
நாககிரிப் …… பெருமாளே.
3
கொடிய மறலியு மவனது கடகமு
மடிய வொருதின மிருபதம் வழிபடு
குதலை யடியவ னினதருள் கொடுபொரு …… மமர்காண
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்
கொடியு மகிலமும் வெளிபட இருதிசை …… யிருநாலும்
படியு நெடியன எழுபுண ரியுமுது
திகிரி திகிரியும் வருகென வருதகு
பவுரி வருமொரு மரகத துரகத …… மிசையேறிப்
பழய அடியவ ருடனிமை யவர்கண
மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
பரவ வருமதி லருணையி லொருவிசை …… வரவேணும்
சடில தரவிட தரபணி தரதர
பரசு தரசசி தரசுசி தரவித
தமரு கமிருக தரவனி தரசிர …… தரபாரத்
தரணி தரதநு தரவெகு முககுல
தடினி தரசிவ சுதகுண தரபணி
சயில விதரண தருபுர சசிதரு …… மயில்வாழ்வே
நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ
எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ …… நெடுவானும்
நிலனும் வெருவர வருநிசி சரர்தள
நிகில சகலமு மடியவொர் படைதொடு
நிருப குருபர சுரபதி பரவிய …… பெருமாளே.
4
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய …… குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத …… மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி …… தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக …… மறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி …… தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தப …… னிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட …… மறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்பகி ரிச்சுரர் …… பெருமாளே.
5
புற்புதமெ னாம அற்பநிலை யாத
பொய்க்குடில்கு லாவு …… மனையாளும்
புத்திரரும் வீடு மித்திரரு மான
புத்திசலி யாத …… பெருவாழ்வு
நிற்பதொரு கோடி கற்பமென மாய
நிட்டையுடன் வாழு …… மடியேன்யான்
நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
நிற்கும்வகை யோத …… நினைவாயே
சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
சக்ரகதை பாணி …… மருகோனே
தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற
வைத்தவொரு காழி …… மறையோனே
கற்புவழு வாது வெற்படியின் மேவு
கற்றைமற வாணர் …… கொடிகோவே
கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
கற்பதரு நாடர் …… பெருமாளே.
(நன்றி திரு கோபாலசுந்தரம்; கெளமாரம்)