தத்துவ மேதை டி.கே.சீனிவாசன்
கலைமாமணி விக்கிரமன்
1951 – 52ஆம் ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.
பாரத நாட்டில் விடுதலைக்காக அந்நியரை எதிர்த்துப் போராடும் இயக்கங்களின் இலட்சியம் ஒன்றானாலும், பல்வேறு பாதைகளில் அவை இயங்கிக் கொண்டிருந்தன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அந்நியர் ஆதிக்க எதிர்ப்பைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் – நம்மிடையே உள்ள பிற்போக்குக் கொள்கைகளை, மூடப் பழக்க வழக்கங்களை, சாதி ஏற்றத் தாழ்வுகளை, வர்ணாசிரமக் கொள்கையை ஒழிக்கப் போராடுவது முதல் கடமை என்று வீறு கொண்டெழுந்து அதற்காகப் புது இயக்கத்தைத் தொடங்கினர்.
மேடைப்பேச்சு மட்டும் போதாது; படித்த வகுப்பாரிடையே – சிந்திக்கும் சக்தி உடையவரிடையே திராவிடக் கழகத்தின் கொள்கையைப் பரப்ப, பத்திரிகைகள் வேண்டும்; பத்திரிகைகளில் எழுதப் பல படைப்பிலக்கிய எழுத்தாளர்கள் தோன்ற வேண்டும் என்ற அறிஞர் அண்ணாவின் திட்டப்படி பல கொள்கை ஏடுகள் தோன்றின.
அவை பல எழுத்தாளர்களை உருவாக்கின.
அறிஞர் அண்ணாவின் பேச்சால், எழுத்தால் ஈர்க்கப்பட்டு சிறந்த பேச்சாற்றலால் மேடையில் கனல் கக்கிய இளைஞர்களுள் டி.கே.சீனிவாசனும் ஒருவர்.
1952ஆம் ஆண்டு வழக்கமான எழுத்தாளர்களுக்கு ஒரு சவால்போல் “பஞ்சும், பருத்தியும்” எழுதிய தொ.மு.சி.இரகுநாதனும் “ஆடும் மாடும்” எழுதிய தி.கோ.சீனிவாசனும் புத்திலக்கியத்தால் பிரபலமானவர்கள்.
தி.கோ.சீனிவாசன், திருச்சியில், 1922ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்தார்.
தந்தையார் பெயர் கோதண்டபாணி. தாயார் பெயர் ஆனந்தவல்லி.
ஊர்ப்பெயரின் முதல் எழுத்தையும், தந்தை பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து தி.கோ.சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார்.
ஆனால், தி.கோ.சீனிவாசன் என்பதைவிட டி.கே.சீனிவாசன் என்று சொன்னால்தான் பலருக்குப் புரியும்.
டி.கே.சீனிவாசன் என்ற பெயரைக் குறிப்பிட்டவுடனே, “ஓ! ஆடும், மாடும் எழுதிப் புகழ் பெற்றவரா?” என்று மாற்றுக் கொள்கை உடையவர்களும் பெருமையுடன் கேட்கும் அளவுக்கு எழுத்தால் புகழ்பெற்றவர் அவர்.
தொடக்கக் கல்வியைத் திருச்சி மற்றும் பசுமலையிலும் கற்ற அவர், இராமநாதபுரத்தில் பள்ளி இறுதிப் படிப்பைத் தொடர்ந்தார். அதை முடிக்கும் முன்பே 1941இல் அவருக்கு இரயில்வே துறையில் வேலை கிடைத்தது. 17 ஆண்டுகள் இரயில்வே பணியில் தொடர்ந்தார்.
இளைஞராக இருந்தபோதே எழுத்துப் பணியில் ஈடுபாடும், அரசியலில் ஆர்வமும் ஏற்பட்டன. தன் வயதொத்த இளைஞர்களை ஒன்றுசேர்த்து படிப்பகம், கழகங்கள் அமைத்தார். புதிய கட்சி தொடங்க வேண்டும் என்ற ஆர்வமும் எழுந்தது.
இரயில்வே துறையில் எழுத்தாளராக இருந்த அவருக்கு அந்தப் பணி நிறைவைத் தரவில்லை. எழுத்தரைவிட எழுத்தாளராக இருப்பதே அவர் விருப்பம்.1944இல் சரசுவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவரது பெயரால்தான் புத்தகங்கள் வெளிவந்தன. தத்துவமேதை டி.கே.சீனிவாசன் என்றே நூலில் பெயர் அச்சிடப்பட்டிருக்கும்.
இரயில்வே பணியில் ஈடுபட்டிருந்தபோதே, நீதிக்கட்சி, சுய மரியாதை இயக்கம், திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர் அந்த நாளிலேயே சீர்திருத்த மனப்பான்மையில் பேசியும் எழுதியும் வந்தார்.
வாழ்க்கை அவருக்குப் போராட்டமானதால் அரசியல் இயக்கமா, இரயில்வே பணியா என்ற மனப் போராட்டம் ஏற்பட்டபோது முழுநேர அரசியல் அவரை ஆட்கொண்டது.
ஆனால், குடும்ப வாழ்க்கையையும் நடத்த வேண்டுமே! எனவே, இரயில்வே பணியைத் துறந்தார். எழுத்தை நம்பி, தன் பேச்சுத் திறமையை நம்பி சென்னைக்குக் குடியேறினார்.
1.11.1951இல் “ஞாயிறு” என்ற இதழில் அவரது சிறுகதை “பதிவு செய்யப்படாதவள்” வெளிவந்தது.
பிறகு, தஞ்சையிலிருந்து ஏ.கே.வேலன் நடத்தி வந்த “ஞாயிறு” என்ற இதழின் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
அவருடைய சிறுகதைகளின் முக்கிய கருவே விதவை மறுமணம்.
விதவைக்கு மறுவாழ்வு என்ற கொள்கையை அவர் பல கதைகளில் வற்புறுத்தியிருக்கிறார்.
பலத்த எதிர்ப்பு அந்தக் கதைகளுக்கு இருந்தது.
மிகத் துணிவுடன் கதையின் கருவை மிக அழுத்தமாக வெளியிட்ட கொள்கை வீரர் அவர்.
“மஞ்சளோடு மங்களமும் மறைய வேண்டும்” என்று விதண்டாவாதம் பேசிய பழைமைவாதிகளுக்குப் பதில் கூறுவதுபோல், “மலரும் பூவின் மணத்தைத் தடுக்க எந்த வேலியும் பயன்படாது” என்று எழுதினார்.
“கண்டதும் தோன்றுவதற்குப் பெயர் காதலன்று; உடற்கவர்ச்சி. யாராவது ஒருவருடைய ஏதாவது சில நடவடிக்கைகள் நமக்குப் பிடித்துப் போகின்றன. அப்போது பிறக்கிறது அன்பு. அதே நடவடிக்கைகள் தொடர்ந்து நம் வாழ்க்கையில் குறுக்கிடும்போது நட்பு உருவாகிறது. அந்த நடவடிக்கைக்குரியவரைச் சந்திக்காவிட்டால் என்னவோபோலத் தோன்றும் போதுதான், அது காதல் என்ற பெயரை அடைகிறது” என்று காதல் தத்துவத்தை டி.கே.சீனிவாசனைப்போல் எளிமையாக விளக்கியவர் யாருமில்லை.
1960ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தது முதல் கழகத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.
தி.மு.க. நடத்திய போராட்டங்களில் அவர் பங்கு குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் உரிமைக்காகப் பலபோராட்டங்கள் நடத்தினார். திராவிட முன்னேற்றக் கழகம் அகவிலை உயர்வை எதிர்த்து நடத்திய போராட்டத்துக்குத் தலைமை வகித்தார். மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் பெற்றார்.பேச்சுக் கலையில் வல்லவரான அவர், பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்.
திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. இரண்டாவது மாநில மாநாட்டில், “தத்துவ வரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலைநாட்டுத் தத்துவங்களைக் கீழை நாட்டுத் தத்துவங்களோடு ஒப்பிட்டுப் பேசினார். அதுமுதல் அவரை “தத்துவ மேதை” என்றே அழைத்தனர்.
அறிஞர் அண்ணாவின் மீது பெருமதிப்பு உடையவர். அண்ணாவின் பேச்சையும் கருத்துகளைக் கூறும் திறனையும் கணித்தறிந்து அவரைப்போலவே பேசும் திறன் பெற்றவர். தொலைவிலிருந்து அவரது பேச்சைக் கேட்போர் அண்ணாதான் பேசுகிறாரோ என்று ஐயப்படும் அளவுக்கு அவரது பேச்சிலும் ஒற்றுமை இருந்தது. ஒரு முறை இவரது பேச்சை வீட்டிலிருந்தபடி கேட்ட அண்ணாவின் துணைவியாரே அண்ணாதான் பேசுகிறாரோ என்று நம்பும்படியானதாம்.
கொள்கை விளக்க மேடைப் பேச்சுகள் மூலமாக மட்டுமல்லாமல் இவரது இலக்கியப் படைப்புகள், கழகத்தின் பிற்காலப் படைப்பாளிகளுக்கு மிக உதவியாக இருந்தன.
டி.கே.சி.யின் புதினம், சிறுகதை, கட்டுரைகள் மிக்க பலமாக அமைந்தன.
திராவிட இயக்கத்துக்கென்று தனி படைப்புக்கலை உருவானது. திராவிட இயக்கக் கொள்கைகளை, சிந்தனைகளை, சமூக மறுமலர்ச்சியை, தன்மான உணர்வை வளர்த்தன. அதற்குக் கதைகள், புதினங்கள் உதவின. சிறுகதை இலக்கியத்தின் மூலம் சீர்திருத்தக் கொள்கைகளை விளக்கலாம் என்று உறுதியாக நம்பி கதைகள், நாடகங்கள் எழுதிவந்த அறிஞர் அண்ணாவின் சமகாலத்தவர்கள் வரிசையில் டி.கே.சீனிவாசனின் எழுத்துப் பணியை மறக்க முடியாது.
முழுக்க முழுக்க கொள்கைப் பிடிப்பாளரான அவர், எக்காலத்திலும் எதற்காகவும் முற்போக்குக் கொள்கைகளை விட்டுக் கொடுத்தாரில்லை. திராவிட இயக்கப் புதினப் படைப்பாளிகளாலும் மற்ற விமர்சனம் செய்பவர்களாலும் தத்துவ மேதை டி.கே.சீனிவாசனின் “ஆடும் மாடும்” புதினம் இன்றும் பேசப்படுகிறது.
“ஆடும் மாடும்” அவருக்குப் பெருமை சேர்த்த நாவல்.
அவருடைய முதல் நாவல். “கதைக்காக ஒருமுறை – கருத்துக்காக ஒருமுறை – நடைக்காக ஒருமுறை” என்று படித்து இரசிக்கக்கூடிய புதினம் என்று விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
இதுவரை மூன்று சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.
தத்துவ மேதை தன் கதைகளிலும், புதினங்களிலும் பாரதிதாசனாரையும் திருவள்ளுவரையும் வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சாட்சியாக நிற்க வைக்கத் தவறியதில்லை.
தன் பேனா நர்த்தனத்தைப் பல பத்திரிகைகளில் பணியாற்றி புலப்படுத்தியதோடு “தாய்நாடு” என்ற இதழையும் சில காலம் வெளியிட்டார்.
இழப்பு நேர்ந்ததால் அந்தப் பத்திரிகையை நிறுத்திவிட்டார்.
பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், தமிழகத் திட்டக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
தத்துவ மேதை டி.கே.சீனிவாசன், 1989ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி இயற்கை எய்தினார்.
திருச்சி கோதண்டபாணி சீனிவாசனின் இரு புதல்வர்களான நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவனும், பேராசிரியர் வில்லாளனும் தந்தையின் புகழும் பெயரும் நிலைத்து நிற்கச் செய்கிறார்கள்.
நன்றி:- தினமணி