ச.வே.சுப்பிரமணியன்தான்

"வாழும் தமிழே"! –  முனைவர் ச.வே.சுப்பிரமணியன்

கலாரசிகன்

ச.வே.சுப்பிரமணியன்தான்

"வாழும் தமிழே" என்று அழைப்பதற்கான அனைத்துத் தகுதியும் பெற்ற தமிழர் யார் என்று என்னைக் கேட்டால், சற்றும் தயங்காமல் என்னிடமிருந்து வரும் பதில் "ஐயா" முனைவர் ச.வே.சுப்பிரமணியன்தான் என்பதாகத்தான் இருக்கும். தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெருமகனார், ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வொழிவின்றி தமிழ்ப்பணியைத் தொடர்கிறார் என்பதுதான் நம்மை நெகிழ வைக்கிறது.
 
தொல்காப்பியத்துக்கு தெளிவுரை எழுதிய கையோடு சங்க இலக்கியம் முழுவதையும் தெளிவாகச் சொற்களைப் பிரித்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அதன் மூலத்தை பதிப்பித்தார். தொடர்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும், பன்னிரு திருமுறைகளையும் மூலத்தை மட்டும் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டார். இப்போது "கம்பராமாயணம்" அவரால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது.

1958ல் மர்ரே.எஸ்.இராஜம் அவர்களால் வெளியிடப்பட்ட கம்பராமாயணம்தான் முதன் முதலில் அனைவரும் படிக்கும் நிலையில் சொற்கள் பிரித்து வெளியிடப்பட்ட நூல். அதற்குப் பிறகு சென்னை கம்பன் கழகம், கம்பராமாயணம் 11,661 பாடல்களையும் ஒரே நூலாக பைபிள் தாளில் வெளியிட்டது. இப்போது, முனைவர் ச.வே.சுப்பிரமணியத்தின் "கம்பராமாயணம்" மணிவாசகர் பதிப்பகத்தாரால் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.

அறிஞர் ச.வே.சுப்பிரமணியனின் தமிழ்ப் பணி பிரமிக்க வைக்கிறது. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற அறிஞர் ச.வே.சு தமிழில் இதுவரை 55 நூல்களையும், ஆங்கிலத்தில் 5 நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். இதுவரை சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் இவரது வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
 
அகவை எண்பதை நெருங்கும் அறிஞர் ச.வே.சு தற்போது வாழ்ந்து வரும் நெல்லை மாவட்டம் தமிழூரை நோக்கித் தமிழ்கூறு நல்லுலகம் இருகரம் கூப்பி வணங்கினால் தகும். அத்தகைய தொண்டு அன்னாருடையது.
 

நன்றி: தமிழ்மணி (தினமணி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *