"நாகம்மாள்" படைத்த ஆர். சண்முகசுந்தரம்
கலைமாமணி விக்கிரமன்
காங்கேயத்துக்கு வடக்கில் உள்ள நாலு ரோடு என்னும் இடத்திலிருந்து மேற்கே நான்கு கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் கீரனூர்.
அந்தச் சிற்றூரில், 1917ஆம் ஆண்டு, எம்.இரத்தினசபாபதி முதலியாருக்கும், ஜானகி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் சண்முகசுந்தரம்.
இவருடைய சகோதரர் திருஞானசம்பந்தம்.
எழுத்தாளர் உலகில், கொங்கு மணம் வீசும் படைப்புகளை ஈந்த சகோதரர்களான இவ்விருவரின் பெயர்களும் நினைவில் நிற்கக்கூடிய பெயர்கள்.
இருவரும், எழுத்து ஒன்றையே மூச்சாகக் கொண்டவர்கள்.
இளம் வயதிலேயே தாயை இழந்ததால், தந்தை வழிப் பாட்டியின் அரவணைப்பில் இருவரும் வளர்ந்தனர்.
"உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்கு மேல் படிக்காவிட்டாலும், வாழ்க்கைப் படிப்பை விரைவிலேயே கற்றுக்கொண்டேன்",
என்று பிற்காலத்தில் இலக்கியச் சந்திப்பு ஒன்றில் ஆர்.சண்முகசுந்தரம் தெரிவித்திருக்கிறார்.
செல்வாக்குமிக்க – வசதியுள்ள குடும்பம்.
அந்தக்காலப் பாட்டிகளும், தாய்மார்களும் நல்ல நல்ல கதைகளைச் சொல்லி மகன், மகள், பெயரன், பெயர்த்திகளுக்கு தெய்வபக்தி, தேசபக்தி, ஒழுக்கம் இவற்றை ஊட்டுவர்.
சண்முகசுந்தரத்துக்கு, பாட்டியார் சொன்ன கதைகளும், அந்நாளைய இலக்கியங்களான வடுவூரார், ஆரணியாரின் நாவல்களும் தமிழ் ஆர்வத்தை வளர்த்தன.
கம்பராமாயண வசனம், மகாபாரத வசனம், விக்கிரமாதித்தன் கதைகள், தனிப்பாடல் திரட்டு இவற்றைப் படித்தார்.
கல்கியின் கதைகள், பாரதியார், கே.எஸ்.வேங்கடரமணி ஆகியோரின் நூல்களையும் விரும்பிப் படித்தார்.
அஞ்சாநெஞ்சர் டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திய "காந்தி" பத்திரிகையைப் படித்தார்.
இயற்கையாக உள்ளத்தில் சுரந்த தமிழ் ஆர்வம், எழுத்துத் தாகத்தை மேலும் வளர்த்தது.
"மணிக்கொடி" இதழ் உதயமான நேரம்.
கீரனூரிலிருந்து கோயம்புத்தூருக்கு சைக்கிளில் சென்று அந்த இதழை வாங்கி ஆவலுடன் படித்தார். இதனால், கதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு உதயமானது.
"பாறையருகில்" என்ற சிறுகதையை எழுதி மணிக்கொடிக்கு அனுப்பினார். அப்போது மணிக்கொடிக்கு பி.எஸ்.இராமையா ஆசிரியராக இருந்தார். முதல் கதை மணிக்கொடியில் பிரசுரமானது. முதல் கதையை அச்சில் பார்த்த எந்த எழுத்தாளனுக்குத்தான் ஆனந்தம் ஏற்படாது?
"அந்த ஆனந்தத்திற்கு ஈடு இணை ஏது?" என்று ஒருமுறை சண்முகசுந்தரம் தெரிவித்திருக்கிறார்.
"நந்தா விளக்கு" என்ற மற்றொரு கதையையும் மணிக்கொடியில் எழுதினார்.
இவருடைய தம்பி ஆர்.திருஞானசம்பந்தம், சகோதரனைப்போலவே எழுத்தார்வம் உடையவர்.
"புதுமலர்" என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி, பிரபல பொருளாதார நிபுணர் ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் சிலப்பதிகாரம் – புகார்காண்டத்தை தெளிவான உரையுடன் வெளியிட்டார்.
சண்முகசுந்தரம், கோயம்புத்தூரில் "வசந்தம்" என்ற வார இதழை நடத்தினார்.
ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் ஆதரவு அந்தப் பத்திரிகைக்கு இருந்தது.
தமிழ்மணி, ஹநுமான், ஹிந்துஸ்தான் போன்ற மேலட்டையின்றி எட்டுப் பக்கங்களில் இரண்டணா விலையில் "வசந்தம்" வெளிவந்ததாக நினைவு.
ஆர்.கே.சண்முகம் செட்டியார் அந்தப் பத்திரிகையின் கெளரவ ஆசிரியராகத் திகழ்ந்தார்.
ஆர்.சண்முகசுந்தரத்தின் பல சிறுகதைகளும், வசன கவிதைகளும் அதில் வெளிவந்தன.
ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் மாளிகையில் பெரிய நூலகம் இருந்தது.
அந்த நூலகத்திலிருந்த ஆங்கிலம், தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தையும் சண்முகசுந்தரம் படித்தார்.
சண்முகசுந்தரத்துக்கு மிகவும் பிடித்தவை டால்ஸ்டாயின் நாவல்கள்தான்.
திருஞானசம்பந்தம், "ஹநுமான்" வார இதழின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, அவருக்காக சண்முகசுந்தரத்தின் தந்தை இரத்தினசபாபதி முதலியார், சென்னைக்குக் குடியேறினார்.
அப்போதுதான் சண்முகசுந்தரம் இந்தி மொழி கற்றார்.
பிரபல எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பும் சண்முகசுந்தரத்துக்குக் கிடைத்தன.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சொற்பொழிவைக் கேட்டதால் தேசபக்தி உணர்வு அதிகமானது.
பிறகு, கு.ப.ரா.வுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது.
அப்போது அவர் "பாரததேவி"யில் உதவி ஆசிரியராக இருந்தார்.
ஒருமுறை, திருவல்லிக்கேணி கடற்கரையில் இருவரும் சந்தித்துக்கொண்டபோது, "கிராமிய மணம் கமழும் வகையில் உங்கள் சிறுகதைகள் அமைந்திருப்பதால், நாவல் ஒன்று எழுதுங்களேன்” என்று கு.ப.ரா. கேட்டு ஊக்கமளித்ததால், இரண்டே மாதங்களில் "நாகம்மாள்" என்ற நாவலைப் படைத்தார். கு.ப.ரா.வுக்கு வியப்பு ஏற்பட்டது. பெரிய நாவல் ஒன்று எழுத வேண்டும் என்று ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது, இந்த இளைஞர் திடீரென நாவல் ஒன்றை எழுதி முடித்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். சண்முகசுந்தரத்துக்கு அப்போது வயது 22.
"மணிக்கொடி எழுத்தாளர்களில் சண்முகசுந்தரம்தான் முதன்முதலில் நாவல் எழுதியவர்" என்று திறனாய்வாளர் சிட்டியும், சிவபாத சுந்தரமும் புகழ்ந்து எழுதியுள்ளனர்.
"வட்டாரம்" என்று எல்லை வகுப்பதற்கு ஆதரவாகவும், எதிர் மறையாகவும் அதிர்ச்சி விமர்சகர் க.நா.சு., ஆங்கில ஆசிரியர்களின் மேற்கோள்களுடன் தன் கருத்தைத் தெரிவித்தபோதிலும், "நாகம்மாளுக்கு" முன்பே மண்வாசனை கமழும் நாவல்கள் தமிழில் வெளிவந்துவிட்டன.
- கரிசல்மண் பூமி
- தாமிரபரணித் தமிழ்
- வண்டல்மண்
மணம் வீசும் கதைகள் என்று பாகுபாடு செய்வதற்கு, பாத்திரப் படைப்புதாம் முன் நிற்க வேண்டுமே தவிர, ஊர் வர்ணனை, மக்கள் பேசும் தமிழ் இவை மட்டும் உதவாது.
வட்டாரம் என்று பிரிக்கக்கூடாது என்று வாதிடுபவர்களும் அந்நாளில் இருந்தனர்.
மண்ணின் மணத்துடன் வட்டார நாவல் எழுதிப் புகழ்பெற்றவர் எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம்.
சண்முகசுந்தரத்தின் "நாகம்மாளு"க்கு முன்பே,
- முருகன் ஓர் உழவன்
- சங்கரராமின் மண்ணாசை
ஆகிய நாவல்கள் வெளிவந்திருக்கின்றன என்றாலும், "நாகம்மாள்" குறிப்பிட்ட வட்டாரத்தின் மண்வாசனை வீசும் நாவல் வேறு ஒன்றுக்கும் அமையவில்லை என்று திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இந்தத் தலைமுறையினர் "நாகம்மாளை" படித்தறிய வேண்டும்.
"நாகம்மாள்" நாவலைப் பற்றி கு.ப.ரா., தி.க.சிவசங்கரன், எஸ்.தோதாத்ரி போன்ற சிறந்த திறனாய்வாளர்கள் சிறப்பாக விமர்சித்துள்ளனர்.
"நாகம்மாள்" 85 பக்கங்களே உள்ள நாவல். குறைந்த பக்கத்தில் கிராமியக் காவியத்தை நம் கண்முன்னே நிறுத்தும் நாகம்மாளையும், சண்முகசுந்தரத்தின் மற்ற படைப்புகளையும் கிராமிய நாவலுக்கு முன்மாதிரியாகக் கொள்ளலாம்.
"நாகம்மாள்" நாவலுக்குப் பிறகு,
1944இல் "பூவும் பிஞ்சும்" என்ற நாவலும்
1945இல் "பனித்துளி"யும் அவரால் எழுதப்பட்டன.
நாகம்மாள், பூவும் பிஞ்சும் ஆகிய இரு நாவல்களையும் "இரட்டை நாவல்கள்" என்று விமர்சகர்கள் குறிப்பிடுவர்.
கொங்கு மணம் கமழும் "நாகம்மாள்" ஆர்.சண்முகசுந்தரத்தின் பெயரை தமிழ்நாட்டில் முன் நிறுத்திய பெருமைக்குரிய நாவல்.
பார்சி, உருது மொழிகளைக் கற்றுக்கொண்ட சண்முகசுந்தரம், சரத் சந்திரரின் நாவல்கள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார்.
"கல்கி" ஆசிரியராக இருந்தபோது, ஆனந்த விகடனில் இவர் மொழிபெயர்த்த "சந்திரநாத்" என்ற சரத் சந்திரரின் நாவல் தொடராக வெளிவந்தது.
கு.ப.இராஜகோபாலனால் தூண்டப்பட்டு, கடுமையான திறனாய்வாளர் க.நா.சு.வால் ஊக்கப்படுத்தப்பட்ட ஆர்.சண்முகசுந்தரத்தின் இளவல் ஆர்.திருஞானசம்பந்தமும் பத்திரிகையாளராக, பதிப்பாளராக இருந்தவர்.
சகோதரர் திருஞானசம்பந்தம் இறந்தபிறகு, தனக்கென வாழாமல், தன் தம்பிக்காகவும், தம்பியின் குழந்தைகளுக்காகவும் வாழ்ந்தார் என்பதை அவருடைய வாழ்க்கை வரலாறு தெரிவிக்கும்.
"பணத்தை அளவுகோலாக வைத்துக்கொண்டு என்னை மதிப்பவர்களை நான் மதிப்பதில்லை. வறுமையை நான் விரும்பியே ஏற்றுக்கொண்டேன். நான் போய்விட்டாலும், என் எழுத்துகள் நிற்க வேண்டும்”
என்று தன் நெருங்கிய நண்பரும் உறவினருமான டி.சி.இராமசாமியிடம் பேசும்போது குறிப்பிட்டாராம்.
1977ஆம் ஆண்டு தம் அறுபதாவது வயதில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு, சண்முகசுந்தரம் கொங்கு மண்ணுடன் கலந்தார்.
நன்றி:- தினமணி