Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 21

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 21

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

20. தாயம் விளையாட்டு

இருபாலராலும் விளையாடப்படும் விளையாட்டு இது. இதில் மூன்று வகைகள் காணப்படுகின்றன

1 – தாயம் மனை
2 – பழ மனை
3 – வெளிச்சுற்;று / தெரு /பாதுகாப்பற்ற இடம்
x – பாதுகாப்பான இடம் / ஊடுமனை

மேலே காட்டியுள்ளபடி தரையில் குச்சியினால் வரைந்து கொள்கின்றனர். இவ்விளையாட்டைத் தனியாக விளையாடினால் இரண்டு முதல் நான்கு பேராகவும், சோடியாக விளையாடினால் நான்கு முதல் எட்டு பேராகவும் விளையாடுகின்றனர். சோவியும், புளியங்கொட்டையும் விளையாடும் காய்களாக பயன்படுத்தப்படுகின்றன. தாயக்கட்டை அல்லது பெரிய சோவி விளையாட்டுக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

நான்குபுறமும் காணப்படும் மனை என்பதற்கு அருகில் நால்வர் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் மனைக்கு முன்னாலிருக்கும் ‘தாயம்மனை’ என்கிற கட்டத்தின் வழியாகவே காய்களை உள்ளே நுழைந்து நகர்த்துகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கு வலப்புறமாகவே காய்களை நகர்த்துகின்றனர். தாயக்கட்டையிலிருந்து கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும் எண்கள் 1,2,3,4,5,6,12 போன்றவையாகும். இவற்றில் ஒன்று என்பது தாயம் எனப்படுகிறது. இது விளையாட்டில் காயை வெளியிலிருந்து மனை வழியாகக் கட்டத்திற்குள் கொண்டு வருவதற்குப் பயன்படுகின்ற நுழைவு எண் ஆகும். 5,6,12 ஆகிய மூன்றும் ‘விருத்தம்’ என்றழைக்கப்படுகின்றன. தாயக்கட்டையை உருட்டுகின்ற பொழுது விருத்தம் விழுந்தால் தொடர்ந்து ஒருவரே கட்டையை உருட்டுகின்றார். விருத்தத்திற்குப் பிறகு 2,3,4 எண்கள் விழுந்தாலோ தாயக்கட்டையை மற்றவரிடம் தந்து விடுகிறார். எண் 12 மட்டும், 12ஐத் தொடர்ந்து மூன்று விழுந்தால் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

கட்டத்திற்குள் உள்ள குறுக்குக் கோடுகள் போடப்பட்டுள்ள கட்டத்தில் காய்கள் இருந்தால் அவற்றை மற்றவர்களால் அடிக்கமுடியாது. குறுக்குக்கோடுகள் இல்லாத கட்டங்களில் காய்கள் இருந்தால்தான் மற்ற காய்களால் அடிக்கமுடியும். இவ்விடங்கள் தெரு அல்லது காடு என்றழைக்கப்படுகின்றன. இத்தெருவில் ஒருவரின் காய் இருக்கும்போது மற்றவர் காய் அதனைத் தாண்டிப் போக முடியாது. அப்போது அதனை அங்கிருந்து வெட்டுவதன் மூலமாக வெளியேற்றிவிட்டு (தன்னுடைய காய்களின் மூலமாக) செல்கிறார். அதற்குத்தான் அடித்தல், கொத்துதல் அல்லது வெட்டுதல் என்று பெயர்.

கட்டம் முழுவதற்கும் தாயக்கட்டம் என்று பெயர். இத்தாயக்கட்டத்தினை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கின்றனர். இதன் சுற்றுக்கட்டம் மட்டும் வெளிப்பகுதி என்றழைக்கப்படுகிறது. மற்றவை உட்பகுதி என்றழைக்கப்படுகின்றன. ஒருவர் மற்றொருவரின் காயை அடித்த பிறகே உட்பகுதியினுள் செல்லமுடியும். இல்லாவிட்டால் வெளிப்பகுதியில் தான் நிற்கிறார். உட்பகுதியில் இருக்கின்ற நான்கு கட்டங்கள் (குறுக்குக்கோடிட்ட) ஊடுமனை என்றழைக்கப்படுகின்றன. இந்த நான்கு கட்டங்களில் தங்களுக்குரிய கட்டத்தின் வழியாகத்தான் உள்ளே நுழைகிறார். நடுவில் உள்ள கட்டம் பழமனை எனப்படுகிறது. இறுதியில் இதில்தான் பழமேற வேண்டும். முதலில் பழமேறியவர் அதாவது எத்தனை காய்கள் வைத்து விளையாடுகிறார்களோ அத்தனையையும் முதலில் பழமேற்றியவர் வென்றவராகிறார். கட்டத்தின் வெளிப்பகுதி மட்டுமன்றி உட்பகுதியிலும் ஒருகாயை மற்றவர் காயால் அடிக்கிறார்.
விளையாட்டில் பயன்படுத்தப்படும் காய்கள் நாய் என்றழைக்கப்படுகின்றன. ‘தாயம்’ போட்டுக் காயை உள்ளே நுழைதலுக்குத் துவைதல் என்று பெயர்.
சேகரித்த இடம் – செக்காணூரணி

பிற

1. சில இடங்களில் தரையில் கட்டம் வரைவதற்கு பதில் பலகைகளில் கட்டம் வரைந்தே வைத்திருக்கின்றனர். தேவையானபொழுது அதனை வைத்தே விளையாடுகின்றனர்.

2. விளையாட்டுக்கருவியாக தாயக்கட்டை. சோவி, புளியங்கொட்டைகள் – பயன்படுத்தப்படுகின்றன. புளியங்கொட்டைகளை தரையில் ஒருபக்கம் தேய்த்து வெள்ளைப் பகுதியாக்கிக்கொள்கின்றனர். வெள்ளைப் பகுதியை வைத்து எண்களைக் கணக்கெடுத்துக்கொள்கின்றனர்.

3. விளையாட்டுக்காய்களாக சோவி, புளியங்கொட்டை, சிறிய கற்கள், சிகப்பு, முத்துக்கள், விளக்கமாற்றுக்குச்சிகள். உடைந்த வளையல் துண்டுகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவை 4,6,12 என்கிற எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் சோடியாக விளையாடும்போது தான் 12 காய்கள் உள்ளன.

4. கட்டத்தினுள் நுழைவதற்குத் தாயத்துடன் ‘ஐந்து’ என்கிற எண்ணும் பயன்படுத்தப்படுகிறது.

5. தாயக்கட்டை வைத்து விளையாடும்போது ‘சோனான்(ல்) என்ற ஒன்று காணப்படுகிறது. தாயக்கட்டையை உருட்டும்போது இரண்டு கட்டைகளிலும் இரண்டு இரண்டாக நான்கு என்கிற எண்ணிக்கை வருமானால் அது சோனால் ஆகும். இது விருத்தத்துடன் சேர்ந்தது.

6. சில ஊர்களில் விருத்தம் எண் 12 – உடன் 3 மட்டுமன்றி மற்ற எண்கள் (2-4) விழுந்தாலும் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

7. சில இடங்களில் தெருவிலிருக்கும் காயை மற்றவர் தாண்டலாம் என்கிற விதி காணப்படுகிறது. சிலர் விளையாட ஆரம்பிக்கின்றபொழுதே ஒருவர் ஒருமுறைதான் அடிக்க வேண்டும் என்று பேசிவைத்துக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் விளையாட்டு சீக்கிரமாக முடிவடைந்துவிடுகின்றது. ஒருவர் மற்றவரை அடிப்பதற்கு எளிதில் வாய்ப்பு கிடைக்காத வரையில் சுற்றுக்கட்டத்தைச் சுற்றிக்கொண்டேயும் இருக்கலாம்.

8. இக்கட்டம் மதுரை மாவட்டத்திற்கு மட்டுமே உரியது. அல்லது அதிகமாக இப்பகுதி மக்களால் மட்டுமே விளையாடப்படுகின்றது.

9. சோடியாக விளையாடும்போது சோடிகளிருவரும் அருகருகிலும் அமரலாம். சோடிகள் ஒருவர் விட்டு ஒருவர் என்ற எதிரெதிராகவும் அமர்ந்து கொள்ளலாம்.

தாயக்கட்டம் -2 – ஏரொப்ளேன் கட்டம்

இந்தத் தாயக்கட்டமானது திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக விளையாடக் கூடியதாகும். தரையில் மேலே படத்தில் காட்டியவாறு படம் வரைந்து கொள்கின்றனர். விளையாடும் கருவிகள், காய்கள், விளையாட்டுமுறை அனைத்துமே சதுரக்கட்டத்திற்கு உரியது போன்றதே. எனினும் சிற்சில இடங்களில் இக்கட்டம் மாறுபடுகிறது. அம்மாறுபாடுகள் மட்டும் இங்கு தரப்படுகின்றன.
கட்டத்தின் நான்கில் ஒவ்வொன்றுக்கும் ஒருவராக நால்வர் விளையாடுகின்றனர். சதுரக்கட்டத்தை விட இவ்விளையாட்டுக் கட்டம் விளையாடி முடிப்பதற்கு அதிக நேரமாகின்றது. கொம்பு, பிட்டி என்பவை இந்த விளையாட்டிற்கே உரிய சிறப்பம்சங்களாகும். இவையிரண்டும் அனைவருக்கும் தனித்தனியானவை. ஒருவருக்குரிய கொம்பில் மற்றவர் செல்லமுடியாது. இக்கொம்பின் வழியாகத்தான் பழமேறுகிறார்கள். பிட்டி என்பது பழமேறுவதற்கு முதலில் உள்ள நிலை. இதில் நின்று கொண்டால் தாயம் போட்டு மட்டுமே பழமேற முடியும். இதே மாதிரியான இடம் சதுரக்கட்டத்திலும் உண்டு. ஆனால் அங்கு இது பிட்டி என்று கூறப்படவில்லை.
இவ்விளையாட்டில் சில விதிமுறைகளுக்கு மாற்றே கிடையாது. அவை

1. தாயம் – என்பது மட்டுமே நுழைவு எண் ஆகும்.

2. 12-என்கிற விருத்த எண்ணிற்கு 3 மட்டுமே சேரும்

3. நான்கு என்கிற எண் சோனால் என்கிற விருத்தமாகச் சேர்க்கப்படுகிறது. தாயக்கட்டை இரண்டில் ஒன்றில் இரண்டு எண்கள் வீதம் நான்கு எண்கள் இருப்பின் சோனால் ஆகும்.

4. ஒருவர் காயை எத்தனை முறையானாலும் அடிக்கலாம். அடித்து விளையாடுவதும் இவ்விளையாட்டில் சிறப்பாகும்.

5. மற்றவர் காயினை அடிக்காதவரை கட்டத்தைச் சுற்றிக்கொண்டே இருக்கலாம்

6. சோவி பயன்படுத்துவதில்லை. ஏனெனில் சோவியில் எத்தனை முறை வேண்டுமானாலும் தாயம், விருத்தம் போன்றவற்றை ஒருவரே போட்டுக்கொண்டிருக்க வாய்ப்புண்டு. ஆகையால் தாயக்கட்டைமட்டும் பயன்படுத்தப்படுகிறது.

7. 12 காய்களே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

8. விளையாட்டுக்காய்களாக செப்பாலாகிய சிறு சிறு காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இந்த விளையாட்டிற்காகவே தயாரிக்கப்பட்டவை. இவை கடையிலிருந்து வாங்கப்படுகின்றன.

9. காய்களைத் தாண்டக்கூடாது. காயை அடிக்க வேண்டும். முடியாவிட்டால் பின்னால் நிற்கவேண்டும். நிற்கும்போது மற்றவர் வந்து அடிக்கலாம். அல்லது தானே மற்றொரு காயைக் கொண்டுவந்து முன்னிற்கும் காயை அடிக்கலாம். ஒருவருடைய இரண்டு, மூன்று காயை ஒரே நேரத்தில் தொடர்ந்து அடிக்கலாம்.
இக்கட்டம் சிறுவர்களால் அதிகமாக விளையாடப்படவில்லை. வீட்டிலுள்ள பாட்டிகளும், பெண்களும் அதிகமாக விளையாடுகின்றனர். சிறுவர்களாலும், ஆண்களாலும் விளையாடப்படுவதே இல்லை எனலாம். காரணம் அதிக நேரமாவதேயாகும்.
சேகரித்த இடம்-தல்லாகுளம் – 6.6.93

[பகுதி 22 க்குச் செல்க]

You may also like

Leave a Comment