Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 2

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 2

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

1.1 வெத்தலக்கட்டு பிடியாத விளையாட்டு

இருபாலரும் (வயது 8 முதல் 13வரை) இணைந்து விளையாடும் விளையாட்டு இது. விளையாடும் நபர்களுக்கு எண்ணிக்கை வரம்பு இல்லை. பெரியவர்களாக இருக்கும் இரண்டு சிறுமிகள் தங்கள் கைகளைக் கோர்த்துத் தரையில் வைத்துக் கொண்டு குத்த வைத்து அமர்ந்து கொள்கின்றனர். மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக முன்னாலிருப்பவரின் சட்டையைப் பிடித்துக் கொண்டு வரிசையாக நிற்கின்றனர். நிற்பவர் – அமர்ந்திருப்பவருக்கிடையே உரையாடல் நடைபெறுகிறது. அது

நிற்பவர்கள் : ஏன் அரமன ராசா அடச்சுக் கெடக்குது
அமர்ந்திருப்பவர் : தீத்தாம மெழுகாம அரக்காசு மால வாங்கிப் போடாம
அடச்சுக் கெடக்கு
நிற்பவர்கள் : தீத்திக்கிறோம் மெழுகிக்கிறோம் அரக்காசு மாலை வாங்கிப்
போட்டுக்கிறோம் கொஞ்சம் தூக்கிக்கங்க.
பின்னர் அமர்ந்திருப்பவர்கள் தங்கள் கைகளைத் தங்கள் தலைக்கு மேல் கூரை போன்று உயர்த்திப்பிடித்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் அந்தக் கைகளுக்கிடையே குனிந்து நிற்கின்ற இருவரையும் மாறி மாறி எண் 8 வடிவில் சுற்றிக்கொண்டே பின்வரும் பாடலைப் பாடுகின்றனர்.
வெத்தலக்கட்டு பிடியா……..த பிடியாத
பாக்குக்கட்டு பிடியா……த பிடியாத
பொகலக்கட்டு பிடியா…….த பிடியாத
சுண்ணாம்புக் கட்டு வருது ஓம் பொண்ணச் சீக்கிரமாப் பிடிச்சுக்கோ.

பாடலின் இறுதியடியினைப் பாடுகின்ற பொழுது கைகளுக்கிடையில் வருகின்ற ஒருவரை நிற்பவர்கள் தங்கள் கைகளுக்கிடையில் பிடித்துக்கொள்கின்றனர். பிறகு நிற்கின்றவருக்கும் ஓடுபவர்களில் முதலாமவருக்கும் உரையாடல் நடைபெறுகிறது. அது,

ஓடுபவர்களில் முதலாமவர் : ஏங்க எம்பொண்ணப் புடிச்சீங்க
பிடித்துக் கொண்டவர்கள் : ஏங்க எம்புல்லத் திண்டுச்சு
ஓடுபவர்களில் முதலாமவர் : இந்தா ஓம் புல்லுக்கு புல்லு
பிடித்துக் கொண்டவர்கள் : ஏங்க எங்கொள்ளத் திண்டுச்சு
ஓடுபவர்கள் : இந்தா ஒங் கொள்ளுக்கு கொள்ளு
பிறகு கைகளுக்கிடையில் பிடிபட்டவரிடம் நிற்பவர்கள்
பாய்சுருட்டு என : அவர் தன்னைத் தானே இரண்டு சுற்றுச் சுற்றுகிறார்
கூழ்கிண்டு என : இருவர் கைகளிலும் கூழ்கிண்டுவது போல பாவனை செய்கிறார்
புளியங்கா புடுங்கு என : மரத்திலிருந்து புளியங்காய் பறிப்பது போல பாவனை செய்கிறார்.
பிறகு அவரிடம் சிறுவனாக இருந்தால் உன் பெண்டாட்டி பெயரென்ன? என்றும் சிறுமியாக இருந்தால் உன் புருஷன் பெயரென்ன? என்றும் கேட்கிறார். அவரும் திருமண உறவு முறையுடையவரின் பெயரைக் கூறியவுடன் அவரை வெளியே விட்டுவிட அவர் ஓரமாக நின்று விடுகிறார்.

பிறகு மீண்டும் வெத்தலக்கட்டு பிடியாத என்பதில் தொடங்கி விளையாட்டு நபர்கள் அனைவரும் பிடிபட்டு பின் ஓரமாக நிற்கும் வரை தொடர்கிறது. இறுதியில் ஓடுபவர்களில் முதலாவதாக இருப்பவரை மட்டும் கைகளிலிருந்து விடுவதில்லை. பின்னர் ஓரமாக நிற்கும் அனைவரும் தங்கள் இருகைகளிலும் மண்னை அள்ளிக்கொண்டு வருகின்றனர். கைகளுக்குள் பிடிபட்டிருப்பவர் தன் முகத்தை இரு கைகளாலும் முடிக்கொள்கிறார். பிடித்தவருக்கும் பிடிபட்டவருக்கும் உரையாடல் நடைபெறுகிறது.

பிடிபட்டவர் : யார் வந்து நிக்கிறது?
பிடித்திருப்பவர்கள் : முனியனும் முனியன் பெண்டாட்டியும்
பிடிபட்டவர் : ரெண்டு பேரும் என்ன ட்ரெஸ் போட்டிருக்காங்க?
பிடித்திருப்பவர்கள் : முனியன் எலித்தோலு அவன் பெண்டாட்டி நரித்தோலு
பிடிபட்டவர் : சரி அவன் பெண்டாட்டியைக் கீழே போட்டு உள்ள வரச்சொல்லு.

அப்பெயருக்குரியவர் மண்ணைக் கீழே போட்டு விட்டு பிடிபட்டவருடன் கைகளுக்குள் வந்து சேர்ந்து கொள்கிறார். பிறகு அடுத்தவர் மண்ணுடன் வர இதே போன்று உரையாடல் தொடர்கிறது. அனைவரும் சேர்ந்த பிறகு ‘நெருக்கு மச்சான் நெருக்கு’ என்று கூறியபடி அனைவரும் அடித்துக்கொள்கின்றனர். கைகளைக் கோர்த்து நிற்கின்ற இருவரும் கைகளை விட்டுவிடாமல் நிற்கின்றனர். இறுதிவரை கீழே விழாமல் நிற்பவரே தைரியமானவராகக் கருதப்படுகிறார்.
சேகரித்த இடம் : வண்ணாம்பாறைபட்டி-14.6.94

பிற

1. விளையாட்டின் ஆரம்பகட்ட உரையாடலில் மட்டும் மாற்றம் காணப்படுகின்றது.
நிற்பவர்கள் : என்ன வீடு இடிஞ்ச கிடக்கு
அமர்ந்திருப்பவர்கள் : கோயில் மாடு கொம்பு குத்தி வீடே .இடிஞ்சு கிடக்கு
நிற்பவர்கள் : அதுக்கு என்னல்லாம் வேணும்
அமர்ந்திருப்பவர்கள் : அரிசி பருப்பு தேங்காய் பழம் உளுந்து எல்லாம் வேணும்
(வலையப்பட்டி-14.9.96)

 

1.2. வெத்தலப் பெட்டி வருது விளையாட்டு

சிறுமிகளில் பெரியவர்களாயிருக்கின்ற இருவர் முதலில் தங்கள் கைகளிரண்டையும் கோர்த்துக் கொண்டு தரையில் புறங்கை படுகின்ற படி கைகளை வைத்து, தரையில் குத்த வைத்து உட்கார்ந்து கொள்கின்றனர். மற்றவர்கள் அந்தக் கைகளுக்கு நேராக ஒருவர் பின் ஒருவராக (ஊசியாக – Narrow line) நின்று கொள்கின்றனர். பின் அவர்களிடையே கீழ்க்கண்ட உரையாடல் நடைபெறுகிறது.

நிற்பவர்கள் : என்ன வீடு இடிஞ்ச கிடக்கு
அமர்ந்திருப்பவர்கள் : கோயில் மாடு கொம்பு குத்தி வீடே இடிஞ்சு கிடக்கு
நிற்பவர்கள் : அதுக்கு என்னல்லாம் வேணும்
அமர்ந்திருப்பவர்கள் : அரிசி பருப்பு தேங்காய் பழம் உளுந்து எல்லாம் வேணும்

இவ்வுரையாடல் முடிந்ததும் அமர்ந்திருக்கும் இருவரும் எழுந்து நின்றுகொண்டு மற்றவர்களிடம்
குதிர மேல வாறயா? யான மேல வாறயா? என்று கேட்க

மற்றவர்கள் ‘யான மேல வாறோம்’ என்றவுடன் தங்கள் கைகளைச் சேர்த்து உயர்த்தி தலைக்கு மேலே பிடித்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக இருவருக்கும் இடையே நுழைந்து வெளியே வர என்று இருவரையும் சுற்றிக்கொண்டே ஓடுகின்றனர். அப்போது ஓடுபவர்கள்

வருது வருது வெத்தலப் பெட்டி வருது
வருது வருது பாக்குப் பெட்டி வருது
நெருஞ்சி முள்ளு வருது
நெருக்குண்டு பிடிச்சுக்கோ

என்று பாடுகின்றனர். பாடலின் கடைசி வரியைப் பாடுகின்ற போது இருவருக்கும் இடையில் வருகின்ற சிறுமியை இருவரும் பிடித்துக்கொள்கின்றனர். பிடித்துக்கொண்ட இருவரும் ஓடுபவரில் முதலாவதாக ஒடுபவரும்

நிற்பவர்கள் – இந்தாய்யா ஓம் பொண்ணுக்கு பொண்ணு
ஓடுபவர் – இந்தாய்யா ஓம் மண்ணுக்கு மண்ணு

என்று கூறியபடியே இருகைகளையும் இடுப்பில் வைத்து இடுப்பை ஆட்டியபடி இடித்துக் கொள்கின்றனர். பிறகு நிற்கின்ற இருவரும் மாட்டிய சிறுமியிடம் நெல்லுகுத்து, பணியாரஞ்சுடு என்று கூற சிறுமியும் நெல் குத்துவது போன்றும், பணியாரம் சுடுவது போன்றும் பாவனை செய்கிறார். அவற்றை அவர்களுக்குச் சாப்பிடுவதற்கு ஊட்டி விடுவது போல பாவிக்கிறார். பின்னர் ‘உன் புருசன் பேரென்ன’ என்று கேட்க அவர் ‘நாகராசு’ என்று கூறிவிட்டு ஓடிவிடுகிறார். அந்தச் சிறுமி அத்துடன் அவுட். மீண்டும் விளையாட்டிற்குச் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பிறகு மற்றவர்கள் முதலிலிருந்து ஆட்டத்தைத் துவங்குகின்றனர். கடைசியாக உள்ளவர் ‘அவுட்- ஆகும் வரை விளையாட்டு நடைபெறுகிறது.

1. இவ்விளையாட்டின் இறுதியில் மாட்டிய சிறுமியிடம் உம் புருசன் பேரன்ன’ என்று கேட்டவுடன் அச்சிறுமி பெயரைக் கூறாமல் வெட்கத்துடன் நின்று கொண்டிருக்க மற்ற சிறுமிகள் ‘மத்த நேரமெல்லாஞ் சொல்லுவேல புள்ள சொல்லு – என்று வற்புறுத்த அச்சிறுமி மிக மெதுவாக வெட்கத்துடன் ‘நாகராசு’ என்று கூறிவிட்டு ஓடிவிட்டார். அப்பெயர் அநேகபேருடைய காதிலேயே விழவில்லை. மற்றவர்களிடம் கேட்டே ஆய்வாளரால் அப்பெயரைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உடனிருந்தவர்கள் ‘அந்தப் பேரு அவளோட அக்கா வீட்டுக்காரர் பேரு டீச்சர்’ என்று என்னிடம் தெரியப்படுத்தினர். பிறகு அச்சிறுமியிடம் ‘அக்கா வீட்டுக்காரர எப்படிபுள்ள கட்டிக்குவ’ என்று கேலி செய்தனர்.

2. விளையாட்டினிடையில் குதிரை மேல வாறயா? ஆனமேல வாறயா? என்று கேட்டபோது குதிரை மேல வருகிறேன் என்று கூறினால் நிற்பவர்கள் தங்கள் கைகளை நெஞ்சுவரை தூக்கிப் பிடித்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் இருவருக்கும் இடையில் நுழைந்து வெளியே வருவதற்கு இந்த உயரம் போதாதாகையால் பெரும்பாலும் குதிரை மேல் வருகிறேன் என்று கூறுவதில்லை.சேகரித்த இடம் – வலையபட்டி-14.9.96

[பகுதி 3 க்குச் செல்க]

You may also like

Leave a Comment