Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 19

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 19

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

18. கல்லா? மண்ணா? விளையாட்டு

இருபாலரும் விளையாடும் விளையாட்டு இது (6-10 வயது). பெரும்பாலும் தெருக்களில்தான் விளையாடப்படுகின்றது. வீட்டுத்திண்னைகளும், வீட்டு வாசல்படிகளும் கல்லாகவும், தெருவின் தரைப்பகுதி மண்ணாகவும் கொள்ளப்படுகின்றது.

விளையாடுகின்றவர்கள் அனைவரும்கூடி சாட், பூட், த்ரீ முறை மூலம் பட்டவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவரிடம் கல்லுவேணுமா, மண்ணு வேண்ணுமா என்று கேட்க அவரும் மண்ணு வேணும் என்று கூறுகிறார். பிறகு ஒருவர் அவரை வேகமாகச் சுற்றிவிட்டு மண்ணில் ஓரிடத்தில் நிற்கவைத்துவிட்டு அனைவரும் கல்லில் நின்றுகொள்கின்றனர். பிறகு மண்ணில் இறங்கி கல்லில் ஏறுவதுமாக ஒவ்வொருராக மாறி மாறிச் செய்து கொண்டேயிருக்கின்றனர். அவர்கள் மண்ணில் நிற்கும் போது பட்டவரைப் பார்த்து ‘உம் மண்ணு போச்சு உனக்கு வெக்கமில்லயா’ என்று கூறுகின்றனர். அவர் தொடுவதற்கு வருகின்றபோது கல்லில் ஏறிவிடுகின்றனர். பட்டவரும் கல்லில் ஏறுகின்றபோது அனைவரும் அவரைக் கிள்ளுகின்றனர். விளையாடுபவர்கள் ஒரே கல்லில் நின்று கொண்டேயிருக்கக்கூடாது. அவ்வாறு நின்றிருந்தால் பட்டவரால் அவர் தொடுபட அவர் பட்டவராகிறார். மீண்டும் அவரிடம் கல்லு வேணுமா? மண்ணு வேணுமா? என்று கேட்க அவர் கல்லு வேணும் என்று கூற அவரை கல்லில் விட்டுவிட்டு அனைவரும் மண்ணில் நின்று கொள்கின்றனர். அவர்கள் கல்லில் ஏறிப் பட்டவரைப் பார்த்து ‘உங்கல்லே போச்சு உனக்கு வெக்கமில்லையா’ என்று கூறுகின்றனர். அவர் கல்லில் ஏறிய ஒருவரைத் தொட்டுவிட அவர் பட்டவராகிறார். இவ்வாறு விளையாட்டு தொடர்கின்றது. இதில் வெற்றி, தோல்வி, தண்டனை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

பிற

1. இவ்விளையாட்டிற்கு குளம்ஃகரை என்கிற மற்றொரு பெயரும் காணப்படுகின்றது. மணலில் அல்லது தரையில் ஒரு கோடு கிழித்து அதன் இருபுறங்களையும் குளம்/கரை என்று அழைக்கின்றனர். ஆனால் இதில் பட்டவர் கிடையாது. பொதுவாக ஒருவர் குளம் என்றால் அனைவரும் குளம் என்கிற பகுதியில் நிற்கின்றனர். கரை என்றால் அனைவரும் கரை என்கிற பகுதியில் நிற்கின்றனர். மாறி நிற்பவர் ‘அவுட்’ என்று விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார். இறுதிவரைச் சரியாக விளையாடுபவர் வென்றவராகக் கருதப்படுகிறார்.

2. இவ்விளையாட்டில் கல்தான் வேண்டும் என்று கூறப்படுவதில்லை. ஏனெனில் ஒரு கல்லிலிருந்து மற்றொரு கல்லிற்கு மண்ணின் வழியாக மாறும்போது பட்டவர் அனைவராலும் கிள்ள அல்லது கொட்டப்படுவதாலும், மற்றவர்களைத் தொடுவதற்கு சிரமமாகையாலும் மண்ணே எல்லாவகையிலும் வசதியாக இருப்பதால் மண் கேட்கப்படுகிறது.

3. அருகருகே அதிகமாகக் கல்லிருக்கும் இடங்களில் இவ்விளையாட்டு விளையாடப்படுகின்றது. மண் என்றால் மணலிருக்கும் பகுதியாக இல்லாமல் தரைப்பகுதியே மண்ணாகக் கருதப்படுகிறது.

[பகுதி 20 க்குச் செல்க]

 

You may also like

Leave a Comment