நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 25

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

24. பிள்ளைப் பந்து விளையாட்டு

சிறுவன் மட்டும் (8-14) விளையாடுகின்ற விளையாட்டு இது. விளையாட்டு நபர்களுக்கு எண்ணிக்கை கிடையாது.

விளையாடுபவர்கள் தங்களுக்குரிய விளையாட்டுக் களமாக சுவர், உயர அகலமான கல்,மரம் போன்றவை பின்னணியில் இருக்குமாறு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். அவ்விடத்திற்கு முன் விளையாட்டு நபர்களி;ன் எண்ணிக்கைக்கு ஏற்ப மணலில் சிறு சிறு குழிகளாகத் தோண்டிக் கொள்கிறார்கள். பின் சாட் பூட் த்ரீ முறையில் பட்டவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.
இக்குழிகளுக்கு நேரெதிரே சிறிது தூரத்தில் பட்டவர் நின்று கொண்டு சிறிய பந்தினை குழிகளை நோக்கி உருட்டுகிறார். மற்றவர்கள் குழிகளுக்கருகில் நிற்கின்றனர். உருட்டப்பட்ட பந்து ஒரு குழியில் விழுந்தவுடன் அக்குழிக்கு உரியவரைத் தவிர மற்றவர்கள் விரைவாக ஒடுகின்றனர். பந்து விழுந்த குழிக்குரியவர் வேகமாக பந்தை எடுத்து ‘ஸ்டாப்;’ என்று கூறுகிறார். ஓடிக்கொண்டிருந்தவர்கள் அந்தந்த .இடத்தில் நின்று கொள்ள பந்தை எடுத்திருப்பவர்; நிற்பவரில் ஒருவர் மீது பந்தை எறிகிறார். அவர் மீது பந்து சரியாகப் பட்டுவிட்டால் அவர் குழியில் ஒரு கல் போடப்படுகிறது. அவ்வாறின்றி பந்து அவர் மீது படாவிட்டால் எறிந்தவரின் குழியில் ஒரு கல் போடப்படுகிறது. அவர் ஒரு குழந்தை பெற்றதாகக் கருதப்படுகிறார். அவரை மற்றவர்கள் ;ஒரு பொம்பளப்புள்ள பெத்த’ என்று கிண்டல் செய்கின்றனர். மீண்டும் விளையாட்டு தொடர்கிறது. முதலில் பத்து பெண் பிள்ளைகள் பெற்றவர் தோல்வி அடைந்தவராவார்.

முதலில் பத்துப்பெண் பிள்ளைகள் பெறும் நபரை விளையாட்டிலிருந்து வெளியெற்றி விடுகின்றனர். அதோடு குழிகளுக்குப் பின்னால் உள்ள சுவரில் ஃ மரத்தில் தோற்றவரின் கையை வைக்கச் சொல்லி அக்கைளில் (உள்ளங்கை) மற்றவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக பத்துமுறை பந்தை எறிகின்றனர். இதுவே அவருக்குத் தரப்படும் தண்டனை. பந்தை எறிபவர் குறி தவறிவிட்டால் தோற்றவர் இவரது கைகளில் அதே போன்று பந்தை எறிகிறார். இவ்விளையாட்டில் குறைவாகப் பிள்ளைகள் பெற்றவரே வென்றவர்.
சேகரித்த இடங்கள் : மண்ணாடிமங்கலம், நல்லூர், பொதுப்பணித்துறை குடியிருப்பு

பிற

1. பட்டவர் என்று ஒருவரைத் தேர்ந்தெடுக்காமல் விளையாட்டில் கலந்து கொள்ளாத ஒருவரைக் குழிகளில் பந்தை உருட்டச் செய்கின்றனர்.

2. பிள்ளை போடுவதற்கென்று தனியாக ஒரு நபரினை வைத்துக் கொள்கிறார்கள்.
25. கொட்டாங்(ன்) கொட்டா(ன்) விளையாட்டு
இவ்விளையாட்டு சிறுவன்கள் மட்டும் விளையாடுவது. எத்தனை நபர் வேண்டுமானாலும் இதனை விளையாடலாம்.முதலில் மணலில் பெரியதாக ஒரு வட்டம் வரைந்து கொள்கின்றனர். வரையப்பட்ட வட்டக்கோட்டின் மேல் ஒருவர் பின் ஒருவராக அனைவரும் மெதுவாக ஓடுகின்றனர். அவ்வாறு ஓடுகின்ற பொழுது பின்வரும் பாடலைப் பாடுகின்றனர்,

முதலில் ஒடுபவர் : கொட்டாங் கொட்டான்
மற்றவர்கள் : என்ன கொட்டாங்?
முதலில் ஒடுபவர் : சீனிக்கோ வாணிக்கோ
கொட்ட கொட்ட
மற்றவர்கள் : யாரைக் கொட்ட?
முதலில் ஒடுபவர் : நம்மள – ஊந்தியப் புடிச்சுக்
கொட்டுங்கடா
(ஊந்தி என்பது ஒருவருடைய பட்டப்பெயர்)

இவ்வாறு ஒருவர் பெயரைக் கூறியதும் உடனே அப்பெயருக்குரியவர் கோட்டை விட்டு வெளியே ஓடிவிடுகிறார். அவ்வாறு ஓடாவிட்டால் அவருடைய தலையில் மற்ற அனைவரும் கொட்டுகிறார்கள். எனவே ஒரு பெயர் கூறப்பட்டவுடனே அந்த பெயருக்குரிய நபர் ஓடிவிடுகிறார். ஆனால் அதே நேரத்தில் மற்றவர்களும் அவரை ஓடவிடாமல் பிடித்துக் கொள்கின்றார்கள். மீறி அவர் வெளியில் ஓடியபிறகு வெளியிலிருந்து கொண்டே வட்டத்திற்குள் நிற்கின்ற நபர்களை ஒவ்வொருவராக வெளியில் பிடித்து இழுக்கிறார். அவ்வாறு இழுக்கின்ற போது வட்டத்திற்குள் நிற்பவர்கள் அவரை உள்ளே இழுத்துவிடாமல் மீண்டும் அவர் தலையில் கொட்டி அவரை வெளியேற்றி விடுகின்றனர். அவர் மீண்டும் முதலில் ஓடுபவராக விளையாட்டிற்குச் சேர்த்துக்கொள்ளப்படுகிறார். இந்த முறை யாரைக் கொட்ட வேண்டும் என்று இவரே கூறுகிறார். இவ்வாறு விளையாட்டு தொடர்கிறது. இறுதிவரையில் கொட்டுப்படாமலும் அதிகமான எண்ணிக்கையில் விளையாட்டு உறுப்பினர்களை வெளியில் இழுத்தவரே வென்றவராகிறார்.
சேகரித்த இடம்: கச்சைகட்டி

பிற
1. இவ்விளையாட்டு இன்றைக்குச் சிறிது மாற்றத்துடன் சிறுமிகளால் மட்டும் விளையாடப்படுகிறது. விளையாட்டுக்குப் பெயர் இல்லை. சிறுவன் விளையாட்டிலிருக்கும் கொட்டு என்பதற்கு பதிலாக சிறுமிக்கு முதுகில் அடி விழுகிறது. பாடல்; மாறுகிறது. அப்பாடல்

ஆத்துக்கு போறேன்
அயிரை மீனைப்பிடிச்சேன்
சுட்டு தின்னேன்
யாருக்குக் குடுக்கல?
ராசாத்திக்கு குடுக்கல

அனைவரும் ராசாத்தி என்கிற பெயருடைய சிறுமியைப் பிடித்து அடிக்கின்றனர். வேறு மாற்றம் இல்லை.
சேகரித்த இடம்: நல்லூர்

 

[பகுதி 26 க்குச் செல்க]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *