Home Uncategorized ‘தமிழ்க் கடல்’ பேராசிரியர் T. வேணுகோபாலன்

‘தமிழ்க் கடல்’ பேராசிரியர் T. வேணுகோபாலன்

by Dr.K.Subashini
0 comment

அமரர் தி வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் – ஒரு மாணவனுடைய கண்ணோட்டம்

ஹரி கிருஷ்ணன்

 

‘திறமான புலமையெனின் வெளிநாட்டார் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்‘ என்றான் பாரதி. உள்ளூர்க்காரன் என்றால் அபிமானம், அபிப்பிராயத்தை பாதித்தாலும் பாதித்துவிடலாம். எனவே, உள்ளூர் இல்லாமல் வெளியூர் கூட இல்லை, வெளி நாட்டில் எந்தப் புலமை வணங்கப்படுகிறதோ, அந்தப் புலமைதான் உண்மையிலேயே திறமையும் அசாத்திய சக்தியும் உடையது என்ற பாரதி வாக்குக்கு இலக்கணமாகவே விளங்கியவர் என் ஆசிரியப் பிரான் அவர்கள். அவர் இருந்தவரையில் அவருடைய புகழ் சென்னையின் எல்லைகுள்ளும், கல்கத்தா தமிழ்ச் சங்கம் வரையிலும் பரவியிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு அவர் குடிபெயர்ந்த மூன்றே ஆண்டுகளுக்குள் அவருக்கு எப்படிப்பட்ட பெருமையும் புகழும் பரவியிருந்தது என்பதற்குச் சாட்சியாகத்தான் ஆஸ்திரேலியத் தமிழர் எழுதிய நினைவுக் குறிப்பை முகப்புப் பக்கத்துக்குப் பொருத்தமானதாகத் தெரிவு செய்தேன். ஆஸ்திரேலியாவில் அவர் நிகழ்த்திய திருக்குறள் அறிமுகச் சொற்பொழிவும், சிட்னி தமிழ் மன்றத்தின் அழைப்பின் பேரில் 12.10.1996 அன்று ம. தனபால சிங்கம் அவர்களின் தலைமையில் ‘பாரதி–யார்?’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுமே, ஆஸ்திரரேலியாவெங்கிலும் அவரைத் ‘தமிழ்க் கடல்’ என்று அறியக் காரணமாக இருந்தன. இரண்டு சொற்பொழிவுகளிலேயே அயல்நாட்டில் வாழும் தமிழர்களிடம், முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் எவ்வளவு தூரம் அவருடைய செல்வாக்கு பரவியிருந்தது என்பதற்கு திரு நல்லதம்பி அவர்கள் எழுதியுள்ள நினைவுக்குறிப்பே போதுமானது.

 

ஆசிரியருக்கு அசாத்தியக் கல்வி; கூர்த்த மதிநுட்பம்; ‘இணைத்துப் படிப்பது’ (link reading) என்று அவர் குறிப்பிடுவதுபோல, ‘ஏதேனும் ஒரு நூலை மையமாக வைத்துக்கொண்டு, பிறகு எதைப் படித்தாலும் தான் மையமாக வைத்துக்கொண்டுள்ள நூலோடு இணைத்தபடி படிப்பது என்ற வழக்கம், அவருடைய சொற்பொழிவுகளின் ஆழத்தை அதிகப்படுத்தின; செழுமைப் படுத்தின; ‘கேட்டார் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்‘ என்று குறள் வகுத்த இலக்கணத்துக்கு ஏற்ப, கேட்பவர்களைத் தன் வசமிழக்கச் செய்தன; கேளாதவருக்கும், அத்தகைய பேச்சைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கின. கேட்கக் கேட்க, இன்னமும் கொஞ்சம் கேட்க வேண்டும் என்று கிறங்க அடிக்கும் கருத்துகள். திருக்குறளை விளக்கும்போது, ஓப்பன்ஹீமரிலிருந்து, ரூஸோவிலிருந்து, கீதையிலிருந்து, உபநிஷத்துகளிலிருந்து, பைபிளிலிருந்து என்று வரிசையாகச் சரம் சரமாக, விநாடிப் போதுக்குள் வந்து விழும் விவரக் கோவையின் அசாத்திய ஆற்றலால் தாக்கப்படாதவர்கள், ஈர்க்கப்படாதவர்கள் யாருமே இல்லை. நான் இதற்குமேல் அவருடைய சொற்பொழிவுகளைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை. The proof of pudding is in the eating. இங்கே தொகுக்கப்பட்டுள்ள அவருடைய சொற்பொழிவுகளின் ஒலிப்பதிவுகள் இருக்கின்றன. ஏதேனும் ஒன்றைத் திறந்து ஒரே ஒரு நிமிடம் கேட்டுப் பார்க்கும் எவராயினும், ‘இன்னும் கொஞ்சம் கேட்கவேண்டும்’ என்ற தாகத்தால் அலைப்புறாமல் போக இயலாது என்பது திண்ணம்.

 

என்னுடைய நல்லூழ், எனக்கு இத்தகைய ஆசான் வாய்த்தார். கல்லூரிக்குப் பிறகு 22 ஆண்டுகள் அவருடன், ஒரு நண்பனைப் போல் (அவர் என்னை நண்பனாகத்தான் நடத்தினார்; என்னால்தான் அப்படி இருக்க முடியவில்லை. இன்னமும் மாணவனாகவே தொடர்கிறேன்.) அவரைச் சந்திப்பதற்கு முன்னாலேயே, வெகு முன்னாலேயே எனக்கு பாரதி பரிச்சயம் மட்டுமல்லாமல், பாடமும் ஆகியிருந்தான். ஆனால், பாரதியை அணுகும் விதத்தை, என் பார்வையை, சொல்லும் ஒழுங்கை, சீர்மையை நெறிப்படுத்தியவர் ஆசிரியர்தான். கம்பன் எனக்கு அவரிட்ட பிச்சை. வள்ளுவரைப் பற்றி அவரிடம் பயிலும் வரையில் எனக்கு அதிகம் தெரியாது. தேர்வில் கொடுக்கப்படும் இரண்டு மதிப்பெண்களுக்காக ஏதோ நான்கோ, ஆறோ, மனப்பாடப் பகுதிக்கு உட்பட்ட குறட்பாக்களைத் தாண்டி எனக்கு 1972 வரை ஒன்றுமே தெரியாது. இன்று நான் அறிந்திருக்கும் அத்தனைக் குறளுக்கும், அவற்றை நான் அணுகும் முறைக்கும், இணையப் பழங்குடி மக்கள் என்றும் மறவாத கல்லாமா, தம் மக்கள் போன்ற கட்டுரைகளில் நான் மேற்கொண்டிருக்கும் விவரிப்புகளுக்கும், ஆசிரியரிடம் நான் பெற்ற பயிற்சியே காரணம். இதற்காக நான் என்றென்றும் அவருக்குக் கடன்பட்டிருக்கிறேன்.

 

சங்கீத விற்பன்னர் டாக்டர் எஸ் இராமநாதன் (என்பதைவிட, எழுத்தாளர் கீதா பென்னட்டின் தகப்பனார் என்றால் உடனடியாகப் புரியும்!) அவர்களிடம் ஆசிரியருக்கிருந்த மதிப்பு அளவிடற்கரியது. பாரதி பாடல்களைப் பாடும் நெறியை ஒழுங்குபடுத்தி, பாரதி இயலுக்கு டாக்டர் ராமநாதன் அவர்கள் செய்துள்ள பெருந்தொண்டு பலருக்குத் தெரியாது. அவரை தன்னுடைய குரு என்றே பல இடங்களில் பல சொற்பொழிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார். ஆசிரியர் ஆற்றிய சொற்பொழிவு ஒன்றில் பத்துப் பன்னிரண்டு வயதில், பாவாடை சட்டை அணிந்த சிறுமியாக வந்து, பாடியவர் டாக்டர் ராமநாதன் அவர்களுடைய சிஷ்யையான, இன்றைய பிரபல பாடகி சௌம்யா. பத்துப் பன்னிரண்டு வயது சௌம்யா பாடிய ஒலிப்பதிவும் ஓரிரு வாரங்களில் இந்தத் தளத்தில் இடம் பெறும்.

 

இந்த ஒலிப்பதிவுகள் நமக்குக் கிடைத்ததே ஒரு தற்செயல் நிகழ்வுதான். ஒவ்வொரு முறை பேசும்போதும் ஆசிரியர் ஒரு கையடக்க ஒலிநாடாப் பதிவனில் தன் சொற்பொழிவைப் பதிந்துகொள்வார். வீட்டில் இருக்கும்போது, ஓய்வான நேரத்தில் மீண்டும் கேட்டு, எங்கே அதிகம் சொல்கிறோம், எங்கே தவறவிட்டிருக்கிறோம், எங்கே எந்த விவரம் இன்னமும் விளக்கம் பெறவேண்டும் என்பன போன்ற சுய விமரிசனத்துக்கும், மேம்பாட்டுக்குமென அவர், தன் தனிப்பட்ட உபயோகத்துக்காகப் பதிந்து வைத்துக் கொண்டு, அவற்றில் வேறொரு சொற்பொழிவின் போது அழித்துப் பதியாமல் மிஞ்சியிருப்பவையே இங்கே இடம் பெறுகின்றன. இவற்றை இத்தனை ஆண்டுகள் (2011 ஜூன் மாதம் அவர் காலமாகி பதினைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன) மீண்டும் மீண்டும் பதிந்து, புதுப்பித்து, பாதுகாத்து வந்திருக்கும் அவருடைய துணைவியார் திருமதி சரஸ்வதி வேணுகோபாலனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர், அவருடைய கணவருடைய நினைவுகளைப் பாதுகாத்தார். ஆகவேதான் இவையெல்லாம் நம்மை வந்தடைந்திருக்கின்றன.

 

ஆசிரியரைப் பற்றி ஒன்றே ஒன்று, என் கருத்தாகக் குறிப்பிடவேண்டும். ஆசிரியர் தன்னை நாத்திகர் என்று அழைத்துக்கொண்டவர். (கவனிக்கவும். நாத்திகர் என்று நான் சொல்லவில்லை; அவர் அழைத்துக் கொண்டதாகத்தான் குறிப்பிடுகிறேன்!) ஆனால் அவர் பேசிய அனைத்துச் செய்திகளுமே இறைவனுடன் ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்புள்ளவையாகத்தான் இருந்தன. அவற்றில் எதுவானாலும், தன்னுடைய கருத்தை ஏற்றாமல், தனக்கு ஏற்றபடி அந்த இலக்கியங்களுக்கு விளக்கம் சொல்லும் சாமர்த்தியத்தைக் காட்டாமல், உள்ளது உள்ளபடிச் சொல்லும் நேர்மை அவரிடம் நிறைந்திருந்தது. அவர் விவரிக்கும் ராமாயண, பாரதக் குறிப்புகளை, எந்த ஒரு பாகவதரும்கூட இவ்வளவு துல்லியமாக விவரிக்க முடியாது என்பதை இந்தப் பதிவுகளைக் கேட்கும் யாரும் ஒப்புக்கொள்வர்.

 

ஆனால், இத்தனை ஆண்டுகள் கழித்து, இப்போது இந்தப் பதிவுகளை மீண்டும் கேட்கும்போதுதான் ஒன்று விளங்குகிறது. அவர் ஒன்றும் அவரே சொல்லிக் கொண்டதுபோல, நாத்திகர் அல்லர். அவர் சடங்குகளை மறுத்தவர். சடங்குகளை மறுக்கும் ஒரே காரணத்துக்காக யாரும் நாத்திகராகிவிட முடியாது. ‘திருவாசகத்தைப் படிக்கும்போதெல்லாம் என் கண்களில் நீர் வழிவதைப் பார்த்து என் துணைவியார், ‘நீங்கதான் நாத்திகராச்சே.. ஒங்களுக்கு எதுக்கு இந்தத் திருவாசகமும், கண்ணில் கண்ணீரும்’ என்று கேலி செய்வதை ஒரு சொற்பொழிவில் குறி்ப்பிட்டிருக்கிறார். இன்னோரிடத்தில் ‘உங்களுக்குத்தான் நம்பிக்கையில்லையே… பின் எதற்காக இத்தனை பக்தி இலக்கியங்களைக் குவித்து வைத்துக்கொண்டு படிக்கிறீர்கள்’ என்று கேட்கிறார்கள். என்னுடைய இன்றை நிலைப்பாடு இது. நாளை ஒருவேளை எனக்குத் தெளிவு பிறந்தாலும் பிறக்கலாம். தெரியாது. ஆனால், அப்படி ஒருவேளை தெளிவு ஏற்பட்டுவிடுமானால் அதற்கான வாயிலைச் சாத்திவிடக்கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன்’ என்று குறிப்பிடுகிறார். (சுபமங்களா சொற்பொழிவுத் தொடரின் இறுதிப் பகுதியில் வருகிறது இந்தக் குறிப்பு.) இன்னும் பத்தாண்டுகளோ பதினைந்து ஆண்டுகளோ இருந்திருந்தால் அவருடைய நிலைப்பாடு மாறியிருந்தாலும் மாறியிருக்கலாம். அது மாறுவதை இறைவன் விரும்பவில்லை போலும். அறுபத்திரண்டு வயதில் அவர் உயிர் நீத்தது இந்த மனிதனைப் பற்றிய இந்தக் குறிப்பிட்ட புதிருக்கான விடையைத் தெளிவாக்கவில்லை என்றாலும், நான் இந்த முடிவுக்கு வர அவருடைய சொற்பொழிவுகளே ஆதாரமாக இருக்கின்றன.

 

வாருங்கள். இனி வரும் நாட்களில், அவருடைய சிறுகதைகள் (ஆனந்தவிகடனில் ஜெயகாந்தன் ஒருவாரம் இவர் ஒரு வாரம் என்று மாற்றி மாற்றி முத்திரைச் சிறுகதைகள் எழுதிய காலம் ஒன்றுண்டு) நாடக வசனங்கள் முதலானவற்றையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த முயற்சிக்கு உறுதுணையாக நிற்கும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு எவ்வளவுமுறை நன்றி சொன்னாலும் போதாது. தமிழை வளப்படுத்தும் எதையும் ஆவணப்படுத்தவேண்டும் என்ற த ம அ நிறுவனர் நா. கண்ணன். சுபா போன்றோரின் ஆர்வமும், உடனடி ஈடுபாடுமே இந்தச் சொற்பொழிவுகள் ஆவணப்படுத்தப்படுவதைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அவர்கள் நம் எல்லோருடைய நன்றிக்கும் உரியவர்கள்.

 


 

 

இந்தச் சொற்பொழிச் செல்வத்தை 14 ஆண்டுகள் பதிந்து பதிந்து காத்து, கொடையாக அளித்த திருமதி சரஸ்வதி வேணுகோபாலன் அவர்கள்

(அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் மேலதிகரியாகப் பணியாற்றியவர்)

 


 

 

அமரர் ‘தமிழ்க் கடல்’பேராசிரியர் T. வேணுகோபாலன் -ஒரு கண்ணோட்டம்
பா. நல்லதம்பி

 

(ஆஸ்திரேலியாவின் ‘கலப்பை’ இதழ், ஆடி 1997ல் வெளியிட்ட நினைவுக்குறிப்பு)

 

சிட்னி தமிழரால் ‘தமிழ்க்கடல்’ என்று அழைக்கப்பட்ட தமிழ்ப் பேராசிரியர் வேணுகோபாலன் அவர்களை ஒரு சிறந்த தமிழ்ப் பேச்சாளராகவே சிட்னி தமிழர் அறிவர்.  ஆனால், அவரொரு சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியரும் கூட என்பதை நம்மில் பலர் அறியோம்.  மேஜர் சுந்தர்ராஜன், மனோகர் ஆகியோரின் மேடைநாடகங்கள் கொடிகட்டிப் பறந்தது இவரது மேடை வசனத்தால் என்றால் மிகையாகாது.  ஆம்.  கல்கி அவர்களின் சிறுகதை ஒன்றை மேட நாடகமாக ஆக்கி, அதைத் ‘தூக்கு தண்டனை’ என்ற பெயரில் பலமுறை அரங்கேற்றப்பட்டுள்ளது.  டைரக்டர் விஜயன் அந்த நாடகத்தில் முக்கியப் பங்கேற்று நடித்தார்.  அந்தச் சமயத்தில் வேணுகோபாலன் அவர்களும் அநில் ஒரு பாத்திரமேற்று நடித்தார்.  இந்த நாடகமே, பிற்பாடு ‘ஜஸ்டிஸ்’ என்ற பெயரில் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களால் அரங்கேற்றப்பட்டது.  மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், சிவகுமார் போன்றவர்கள் நாடக மேடையில் பெயரையும் புகழையும் பெறக் காரணமாக இருந்தது இவர் எழுதிய நாடக மேடை வசனங்களே.  திரு. மனோகர் அவர்களது ‘துரியோதனன்’இவரால் எழுதப்பட்டதுதான்.  தனது கல்லூரி நாட்களிலிருந்தே பல வானொலி நாடகங்களையும் எழுதிப் புகழ் பெற்றிருக்கிறார்.

 

பாரதிமேல் பக்தி கொண்ட இவர், பாரதியைப் போலவே தனது பத்தாவது வயதில் பூணூலை அறுத்தெறிந்துவிட்டு எல்லோருமை் ஒரே சாதியினர்தாம் என்று புரட்சிக் கொடியெழுப்பியவர.  இந்தப் பாரதிமேல் பக்தி கொண்ட நாயகன் பிறந்த ஊர் தஞ்சாவூரிலுள்ள அய்யம்பேட்டை என்ற ஊராகும்.  1995ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் நாள் பிறந்த இவர், தஞ்சையில் பள்ளிப் படிப்பை முடிந்ததுடன், அந்நாளைய இடைநிலை வகுப்புகளை (Intermediate) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், முதுகலைப் படிப்பினை சென்னை மாநிலக் கல்லூரியிலும் முடித்தார்.

 

பின்னர் சில ஆண்டுகள் சென்னையில் மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் (Accountant General’s Office)  பணிபுரிந்த பின், 1965ல் சென்னை A. M. ஜெயின் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.  1975ல் தனது M. Phil பட்டத்தினை ‘புறநானூறு, திருக்குறளில் அன்றைய அரசியல்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றார்.  ‘கம்பராமாயணத்தில் நாடகவியல்’என்ற தலைப்பில் முனைவர் (கலாநிதி) பட்டத்திற்கான ஆராய்ச்சியையும் செய்துள்ளார். 

 

இக்கால கட்டத்தில் கல்லூரி ஆசிரியர்களுக்கென ஒரு கட்டுக்கோப்பான சங்கம் இல்லையென உணர்ந்து, தாம் பணியாற்றிய ஏ. ஏம். ஜெயின் கல்லூரியில் ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றினார்.  மாநில அளவில் ஆசிரியர்கள் நலனுக்கென்று Association of University Teachers என்ற பெயரில் ஒரு சங்கம் அமைத்து, அதன் செயலாளராக விளங்கி, ஆசிரியர்களின் நலனுக்காக நடந்த போராட்டங்களில் முன்னணியில் நின்று இருமுறை சிறைவாசம் அனுபவித்தார்.

 

பல ஆண்டுகள் இவர் தமிழுக்காக உழைத்திருந்தாலும், 1989 முதல் 1995 வரையிலான நாட்கள் இவரது திறமைக்குக் கிடைத்த பொற்காலம் என்று கூறலாம்.  இந்தக் காலத்திற்றான் பல தமிழ் இலக்கிய அமைப்புகள் இவரது திறமையை உணர்ந்து இவரைச் சொற்பொழிவுகள் நிகழ்த்துமாறு அழைத்தன.  1985 ஜனவரியில் ‘கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின்’ அழைப்பில் அவர் சென்ற பத்து தினங்கள் சொற்பொழிவுத் தொடர் ஒன்றை நிகழ்த்தினார்.  மேலும் பொள்ளாச்சி நா. மகாலிங்களம் என்ற தமிழ் ஆர்வலரின் முயற்சியில் ‘பாரதி ஆய்வுச் சொற்பொழிவுகள் பலவற்றைத் தொடராக நடத்தியுள்ளார்.  ‘மது. ச. விமலானந்தம் அறக்கட்டளை ஏற்பாடு செய்த பாரதி ஆய்வுச் சொற்பொழிவுகளில் ‘செந்தமிழ்த் தேனீ’ என்ற தலைப்பில் இவர் செய்த சொற்பொழிவு பாரதியின் செந்தமிழ்ப் புலமையையும், பழந்தமிழ் இலக்கியங்களில் இவருக்கிருந்த தோய்வையும் வெளிக்கொணருவதாக இருந்தன.  இவை தவிர, பாரதி பாசறை என்ற (சென்னை) இலக்கிய அமைப்பிலும், சுபமங்களா என்ற (கோமல் சுவாமிநாதன் அவர்கள் ஆசிரியராகச் செயல்பட்ட) இலக்கிய மாத இதழ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் இவர் பாரதியின் பன்முகங்கள் குறித்துத் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

 

இவை எல்லாவற்றுக்கும் சிகரமாக ‘பாரதி கலைக்கழகம்’என்ற இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த திருக்குறள் வகுப்புகளில் ‘திருக்குறள் இன்றைய வாழ்க்கை நெறியில் எவ்வாறு பொருந்தும்’ (Present day application of Thirukkural) என்ற கண்ணோட்டத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேல் நிகழ்த்திய சொற்பொழிவுகள் திருக்குறளை அணுகிக்க கற்க முயல வேண்டும் என்று இவர் விளக்கியது பலருக்குப் பெருத்த பயனுடையதாக அமைந்தது.

 

பாரதி மீது இவருக்கிருந்த பற்றின் காரணமாக இவர் தமது இறுதி நாட்களில் மிக முக்கியமான பணி ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.  தமிழகத்தில் தற்கால சூழ்நிலையின் காரணமாக மறைக்கப்பட்டிருக்கும் பாரதியின் புகழையும், பெருமையையும் வெளிக் கொணருவதற்கும், இன்றைய இளைஞர் சமுதாயத்தினர் அவரைத் தமது வழிகாட்டியாக அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடும், பாரதியின் படைப்புகளுக்கு ஒரு புதிய உருவம் கொடக்க வேண்டும் என்று விரும்பினார்.  அதன் ஒரு பகுதியாக பாரதியாரின் உரைநடைகளை — இதுவரை பிரசுரம் ஆனவற்றையும், கையெழுத்துப் பிரதிகளாக இருப்பனவற்றையும் தொகுத்து, ஒரே பகுதியாக (volume) கொண்டுவர வேண்டும் என்று முயன்று, சென்னையில் இயங்கி வரும் ‘பாரதி பாசறை’ என்ற அமைப்பினை இப்பணியில் ஈடுபடுத்தினார்.  மிகச் சிறந்த பாரதி ஆய்வாளர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இப்பணிக்கு, சென்னை ஸ்ரீராம் ட்ரஸ்ட் நிறுவனத்தினர் பொருளுதவி தர முன்வந்தனர்.  இரண்டாவதாக, பாரதியாரின் பாடல்களை ஓர் ஆராய்ச்சிப் பதிப்பாக (Annotated Edition) இலக்கண அடிக்குறிப்புகளுடனும் எழுத்தகராதியுடனும் (Glossary) வெளிக்கொணர வேண்டும் என விரும்பி அப்பணியைத் தாமே மேற்கொண்டிருந்தார்.  மூன்றாவதாக இன்றைய கவிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், அவர்களுக்குக் கவிதை எழுதத் துணிச்சலைத் தந்தவனாகவும் பாரதியை இவர் கருதியிருந்த காரணத்தால் பின்னாட்களில் அவரைப் பற்றிப் புனையப்பட்ட கவிதைகளைத் திரட்டி ஒரு ‘கவிதாஞ்சலி‘யாக வெளியிடவேண்டும் என அவாக்கொண்டு, கவிதைக்காகவும், கவிஞர்களுக்காகவுமே 45 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக பணிபுரிந்து வரும் அமைப்பான பாரதி கலைக்கழகத்தை, இப்பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.  ஆனால் இப்பணி அனைத்தும் நிறைவேறுவதைக் காணாமலேயே அவருடைய காலம் முடிந்து விட்டது.

 

‘அகல உழுவதிலும் ஆழ உழு’என்ற வாக்கிற்கேற்ப அவர் எதையுமே ஆழ்ந்து கற்றும், கற்றவற்றில் தோய்ந்தும் இருந்தார்.  எந்த இலக்கியத்தைப் படிப்பினும் அவர், ஒன்றை மற்றொன்றோடு இணைத்துப் பொருத்தி ஒப்புமைப் படுத்திப் படிப்பதையே வழக்கமாகக் கொண்டவர்.  சுருங்கக் கூறின், அவர் ஓர் ஆராய்ச்சியாளர்; திருவள்ளுவரிலும் கம்பனிலும் பாரதியிலும் தோய்வு கண்டவர்.  கலை விமர்சகர்.  சிறுகதை எழுத்தாளர்.  நாடக ஆசிரியர், நடிகர், சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர்.

 

அவுஸ்திரேலிய மண்ணில், மின்மினிப் பூச்சிகளிடையே கதிரவனா வந்த இந்தத் தமிழ் மேதையின் மறைவு அவுஸ்திரேயத் தமிழர்களுக்கு, ஏன் தமிழ் உலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்.

 

 

You may also like

Leave a Comment