Home Tamil MedicineHerbs அகத்தி – Sesbania grandiflora

அகத்தி – Sesbania grandiflora

by Dr.K.Subashini
0 comment

அகத்தி

திரு.அ.சுகுமாரன்

 

Dec 25, 2009

 

அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே’ என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது. அகத்தியை வெற்றிலைக் கொடிக்கால்களில் ஊன்று கால்களாக வளர்ப்பர்.

அகத்தை சுத்தப்படுத்துவதால் அகத்தி என பெயர் வந்ததுவோ என்னமோ..சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மருந்திடுதல் என்ற ஒரு நம்பிக்கை தமிழ் மக்களை ஆட்டி வந்திருக்கிறது; மனைவியின் அன்பு தொடரக் கணவனும், கணவனின் அன்பு தொடர மனைவியும் , விலை மாதர்கள் தங்களுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் கிடைக்கவும் இந்த மருந்திடுதலைப் பயன் படுத்தியதாகக் கூறப்படுகிறது .உள்ளுக்கு ஒரு சில கூட்டு  மருந்துகளைச் சேர்த்துக் கொடுத்துவிட்டால் அதை அருந்தியவர் கொடுத்தவரிடம் தொடர்ந்து அன்புடன் இருப்பாராம் .இது உண்மையா எனத் தெரியாது .ஆனாலும் ஆராயத்தக்கது; எனவே இதைப் பதிவு செய்கிறேன்.  அத்தகைய மருந்திடுதல் எனும் தோஷத்தை அகத்தி நீக்குமாம்.

 

”மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்- வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு.”

–   குணபாடம்

அகத்தியை உண்ணில் இடுமருந்து என்னும் மருந்திடுதல் எனும் தோஷத்தில் இருந்து விடுதலையும் , பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும்; ஆகாரம் எளிதில் ஜீரணமாகும் .வாயு உண்டாகும் என்கிறது .இதன் பொதுவான குணங்கள் இலகு மலகாரி , சமனகாரி ( மூன்று தோஷங்களையும்  சமன்
செய்யும் ), விஷ நாசகாரி.

அகத்தி இடுமருந்தை முறிப்பது போல் எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறித்துவிடும் .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது  இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் .அதே சமயம் தொடர்ந்து ஆங்கில மருந்துகளைச் சாப்பிட்டு அதன் பக்க விளைவுகளை எண்ணி பயந்து வருபவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்து .ஆனால் வாரம்  ஒருமுறை மட்டுமே அகத்தியை உபயோகிக்கவேண்டும் .அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும் .

வாரம் ஒருமுறை அகத்தியை உபயோகித்தால் தேகத்தில் இருக்கும் உஷ்ணம் குறையும்;கண்கள் குளிர்ச்சியாகும்;.மலம் இலகுவாகப்  போகும்;சிறுநீர் தடையில்லாது தாராளமாகப்  போகும்; நீரடைப்பு, பித்தமயக்கம் இவை நீங்கும் .அடிபட்டு ரத்தம் கசியும் ரணங்களுக்கு அகத்தியை அரைத்து வைத்து ரணத்தில் கட்டினால்  விரைவில் ஆறும்;  சீழ்   பிடிக்காது. அகத்தியைக் கீரை என்பார்கள் .நம் பண்டைய தமிழர்கள் தாவரங்களை பெயர்  வகைகளைப் பிரிப்பதில்  இருந்தே  தங்களது   தாவரவியல் அறிவை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

 

அத்தி, மா, பலா, வாழை, ஆல், அரசு, வேம்பு, பூவரச்சு (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ’இலை’ என்று பெயர்;  அகத்தி, பசலை வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலைகள்  இலையாகாமல் ‘கீரை’ ஆகின்றது;  மண்ணில் படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயராகிறது; அறுகு, கோரை முதலியவற்றின் இலைகள் ‘புல்’ எனப்படுகின்றன;  மலையில் விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை’;  நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள்’ ஆகும்; சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ’மடல்’; கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ’தோகை’ ; தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள் ‘ஓலை’ என்றே சொல்லப்படுகின்றன.

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்லாது, தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கிறது. ஆனால் இவை எல்லாம் பார்க்கும்போது இத்தனை அறிவையும் நம் பண்டைத்தமிழர்கள் எங்கே தொலைத்தனர்,  ஏன்  தொலைத்தனர் என்னும் ஆதங்கம்தான் எஞ்சுகிறது.அகத்திக் கீரை வயிற்றுப் புண் என்னும் பெப்டிக் அல்சர் நோயைக் குணப்படுத்துகிறது. இதற்கு அகத்திக் கீரையை நன்றாகச் சுத்தம் செய்து நான்குபங்கு சின்ன வெங்காயம் சேர்த்து சூப் தயாரித்து தினசரி ஒரு  வேளை குடிக்கலாம்.

 

வேறு  மொழியில் அகத்தியின் பெயர்கள்    

•Hindi: गाछ मूंगा Gaach-munga, Hathya, अगस्ति Agasti
•Manipuri: হৌৱাঈমাল Houwaimal
•Marathi:शेवरी Shevari, हतगा Hatga
•Malayalam: Akatti
•Telugu: Ettagise, Sukanasamu
•Kannada: Agasi
•Bengali: Buko, Bak
•Urdu: Agst
•Gujarati: Agathio
•Sanskrit: Varnari,Munipriya, Agasti, Drigapalaka

தாவரப்பெயர் : Sesbania grandiflora
குடும்பம் : Fabaceae (Pea family)

 

அகத்தியின் வேறு பெயர்கள்: அச்சம், முனி, கரீரம்  ;

வகைகள் : சாழை, அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி

இதிலும் அகத்தி – செவ்வகத்தி என இரு  பிரிவு உள்ளது. இரண்டுக்குமே மருத்துவ குணங்கள் ஒன்றே. வெள்ளைப் பூவுடையது அகத்தி எனவும், சிவப்பு நிறம் கொண்டது செவ்வகத்தி எனவும் அறியலாம்.
அகத்திக் கீரைச்சாறு ஒரு பங்கும், தேன் ஐந்து பங்கும் சேர்த்து கலந்து  தலை உச்சியில் விரல்களால் தடவி வந்தால் குழந்தைகளுக்கு நீர்க்கோவையும், மூக்கில் சிறிது விட்டால் தலைவலியும் நீங்கும்.இதன் பட்டையைக்  கொதிக்கவைத்து குடிநீர் செய்து அம்மைக் காய்ச்சல், விஷக் காய்ச்சல் போன்றவற்றுக்குக் கொடுத்து வரலாம். தண்டின் சாறு பெரியம்மையைக் குணப்படுத்தும். பீடி,சிகரெட், சுருட்டு, மது  போன்றவற்றைப் பயன்படுத்துவதால்  ஏற்படுகின்ற விஷச் சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும்.

 

அகத்தியை ஏகாதசி அன்று விரதமிருந்த பின் துவாதசியன்று உணவில் சேர்க்கும் வழக்கம் தமிழகத்தில் உண்டு; அதோடு நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வர். எதையும் அர்த்தத்துடன் தான் நம் முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர். நாம்தான் முதுசொம்களை மதிக்கத் தவறிவிட்டோம்.

 

மரண விகிதம் அப்போதை விட இப்போது குறைந்திருக்கலாம் வாழும் காலமும் இப்போது நமக்கு நீண்டிருக்கலாம் .ஆனால் நாம் உண்ணும் ரசாயனங்கள் இருக்கிறதே ! எண்ணிப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது .நீண்ட  காலம் வாழ நாம் கொடுக்கும் விலையும், இழக்கும் இன்பமும் மிக மிக அதிகம் .ஆனால் அகத்தி உடலில் இருக்கும் தேவையற்ற ரசாயன நஞ்சை நீக்கும் நல்ல மருந்து .

ஆனால் அளவோடு சாப்பிடுங்க  !

வாழ்க வளமுடன் !

You may also like

Leave a Comment