"காந்தி காவியம்" படைத்த டி.கே.இராமாநுஜக் கவிராயர்
மணிவாசகப்பிரியா
20ஆம் நூற்றாண்டில், திருநெல்வேலி என்ற புண்ணிய பூமி தந்த பெரும் புலவர்களுள் இராமாநுஜக் கவிராயரும் ஒருவர். எளிமையின் பிறப்பிடமாய், புலமைக்கோர் கலங்கரை விளக்காய், கருவிலே "திரு" வாய்க்கப் பெற்றவராய்த் திகழ்ந்தவர் இராமாநுஜக் கவிராயர். வைணவத் திருத்தொண்டராகவும் செந்தமிழ் அறிஞராகவும் விளங்கிய இவர், 1905ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி, கள்ளபிரான் – அரசாள்வார் அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
வைணவ பக்தி இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்த இவர், ஆரம்பக் கல்வி பயின்ற காலத்திலேயே கம்பராமாயணம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் இரண்டையும் கசடறக் கற்றுத் தெளிந்தார். உயர்நிலைக் கல்விக்குப் பிறகு பி.ஏ.,பி.எல்., பட்டம் பெற்று வழக்குரைஞரானார். பின்னர், வழக்குரைஞரான தந்தை கள்ளபிரானுக்கு உதவியாக இருந்தார். ஆனால், அங்கு உண்மைக்குப் புறம்பாக வாதாட வேண்டிய சூழ்நிலையைப் புரிந்துகொண்ட கவிராயர், தந்தையாரின் அலுவலகத்தைத் தொடர்ந்து நடத்த மறுத்துவிட்டார்.
தனது முறைப்பெண்ணான செல்லம்மாள் என்பவரை இளம் வயதிலேயே மணந்துகொண்டார் கவிராயர். இல்லற நெறியில் சிறந்து விளங்கிய கவிராயர், மிகக் குறுகிய காலமே அந்நெறியில் நிற்க முடிந்தது. காரணம், அவரது துணைவியார் இளம் வயதிலேயே இறையடி சேர்ந்தார்.
ஆரம்பக் கல்வி பயின்றபோது கம்பராமாயணம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் முதலியவற்றைக் கற்றது மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அனைத்தையும் கற்றார். கற்றதோடு நில்லாமல், தமக்குப் பாடமாக வைத்திருந்த நாடகத்துக்கு, மற்ற மாணவர்களுக்காக விளக்கவுரையும் எழுதித்தரும் அளவுக்கு புலமை வாய்க்கப் பெற்றிருந்தார். வைணவச் செம்மலாகத் திகழ்ந்த கவிராயர், பலசமயம் போற்றும் பண்பாளராகவும் திகழ்ந்துள்ளார். இயேசுவின் பிறப்பை ஆங்கிலத்தில் மிக அழகாகப் போற்றிப் பாடியுள்ளார். இந்து மதத்தில் சீரிய ஈடுபாடு கொண்டிருந்தபோதிலும் பிற மத நூல்களான (பைபிள்) விவிலியத் திருநூல், திருக்குர்ஆன் முதலியவற்றையும் படித்தார். தம் அச்சகத்தில் திருக்குர்ஆனை அச்சிட்டும் கொடுத்திருக்கிறார்.
காந்திய நெறியில், தமது வாழ்வை நடத்திவந்த கவிராயர், மகாத்மா காந்தியின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு படைத்த மகா காவியம்தான் "மகாத்மா காந்தி காவியம்" அல்லது "மா காவியம். காந்தியடிகளின் வாழ்வை" ஆங்கிலத்தில் கதையாகவும், நாடகமாகவும் செய்துள்ளார்.
இக்காவியத்தைப் படைக்க இவர் எடுத்துக்கொண்ட காலம் எவ்வளவு தெரியுமா?
சுமார் 31 ஆண்டுகள்.
அண்ணல் காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு அதாவது, 1948ஆம் ஆண்டு துவங்கப்பட்ட காந்தி காவியத்தின் நிறைவுப் பகுதி 1979ஆம் ஆண்டு தான் வெளிவந்துள்ளது. காந்தியக் கோட்பாடுகளை வலியுறுத்தும் இந்நூலில், "As he lived like chirst and died like him on Friday itself",என்று காந்தியடிகளின் மறைவை, ஏசுநாதரின் மறைவுடன் ஒப்பிட்டு, அண்ணல் காந்தியடிகளும் உயிர்த்தெழுவார் என்பதை மறைமுகமாக உணர்த்தி, காப்பியத்தை நிறைவு செய்திருக்கிறார் கவிராயர்.
- 12,285 பாடல்கள் கொண்ட காந்தி காவியம்
- 1,019 பாடல்கள் கொண்ட பூகந்த வெண்பா
- 1,692 பாடல்கள் கொண்ட அராவகன் காதை
ஆகிய மூன்றும் பாவினப் பாங்கில் அமைந்தவை.
"துளவன் துதி" என்பது திருமால் புகழ்பாடும் தோத்திர இசைப் பாடல்களின் தொகுப்பு.
- திருமால் மொழி
- திருமால் ஒளி
- திருமால் வழி
- திருமால் எழில்
- திருமால் பொழில்
என்னும் ஐந்து கூறுகள் பெற்ற இந்நூல், பல்வகை யாப்பமைதியுடன் விளங்குவது மிகச்சிறப்பு.
கோவிந்த பஜனை என்ற நூல், 45 கீர்த்தனைகள் அடங்கியது. கட்டபொம்மன் கதை என்ற நூல்,1,127 பாக்களைக் கொண்டது.
வானவியலிலும் ஈடுபாடு கொண்டு விளங்கிய இராமாநுஜக் கவிராயர், சூரியக் கதிர்கள், கோள்களின் அமைப்பு, தொலைவு, கோணம் இவற்றால் ஏற்படும் தாக்கம் பற்றி ஆங்கிலத்தில் செய்த நூல் தான் "கணிதவியலும் மனிதனும்" (Mathematics and Man).
அரிச்சந்திரன் கதையை, காந்தியடிகளைப் போன்று நன்கு தோய்ந்து, அறிந்த கவிராயர், "வாய்மையே வெல்லும்" என்ற கருத்தை வலியுறுத்தி இயற்றிய ஆங்கில நாடகமே "முதின்" என்ற நூல். ஆண்டாள் அருளிய திருப்பாவைக்கு விரிவுரை வழங்கிய இவர், நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கும் விளக்கவுரை எழுதியுள்ளார். கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தமிழின் பெருமையையும், சிறப்பையும் பிற மொழியாளர்களும் அறியும் வகையில் செய்து புகழ் சேர்த்திருக்கிறார்.
இலங்கையில் நடைபெற்ற இந்து சமய மாநாட்டுக்கு, அமைச்சர் இராஜதுரையின் வேண்டுகோளின் பேரில், "இந்துசமய நூல்" – (A TREATISE ON HINDUISM) என்ற சிறுநூலை எழுதியுள்ளார்.
இவைதவிர, தனிப்பாடல் திரட்டு, அராவகன தளம், தத்துவ தரிசனம் முதலிய தமிழ் நூல்களையும் ஆங்கிலத்தில்,
- Lyrics of Life
- Mahathma Gandhi
- Mathamatics and Man
- Mudin
- Bharath Reborn
- Kamba Ramayanam in English verse
முதலிய நூல்களையும் படைத்துள்ளார்.
இவரது காந்தி காவியத்தைப் பற்றி, தினமணி நாளிதழின் இணைப்பாக அன்றைய நாளில் வெளியான தினமணிச் சுடரில் (1.8.76), "பள்ள நீர்க்கடல், மங்கை மன்னன், அரியராயினும், கங்கை விஞ்சிடும் காவிரித் தீந்தமிழ், செய்மிகு மொழிவழி, சோலையில் சூழ்குயிலொலி போல, நாமகள் நடனம் புரிந்திட, அஞ்சன விழியே, கயல்விழித் துயிலெழில் போன்ற பாடல்களின் நயம் பற்றி குறிப்பிட்டு, பண்டிதர்களும் திகைக்கும் அளவு செந்தமிழ் நடையில், சந்த அமைப்பில் பல பாடல்கள் இந்நூலில் அமைந்துள்ளன. "பாஞ்சாலி சபதம்" பாடிய பாரதியாரும் துணியாத பெருங்காப்பியம் இயற்றும் நன்முயற்சியில் இந்நூலாசிரியர் ஈடுபட்டு, வெற்றி கண்டிருப்பது பாராட்டத்தக்கது", என்று பேராசிரியர் என்.வி.வரதராஜ ஐயங்கார் அளித்துள்ள இந்தப் பாராட்டை பதிவு செய்துள்ளது தினமணி நாளிதழ். மேலும், "The author seems to have thoroughly mastered Kamban’s Ramayana and Nalayira Divya Prabandam. The author’s picturesque descriptions are striking and his command over language remarkable. The diction is chaste and the metre rhythematic. It is heartwarming to note that we have in our midst a poet who can compose verses in the traditional style, that too at will and abundantly",என்று 21.8.76 தேதியிட்ட ”Indian Express" நாளிதழ் பாராட்டியுள்ளது. இதுபோல பல முன்னணி ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களும் காந்தி காவியத்தைப் பாராட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
"வாழ்நாள் முழுவதும் தனிமையிலே கழித்த கவிராயர், துணையாகக் கவிதைகள் சூழத்தான் களித்திருந்தார். இறையுணர்வும், தமிழறிவும், தேசபக்தியும் நிரம்பிய அந்த அறிஞர் எளிமையாக, ஆரவாரமில்லாமல், வாழ்ந்து மறைந்து விட்டார். தமிழ்கூறும் நல்லுலகத்துக்குப் பல நயமான பாடல்கள் தந்த கவிராயரைத் தமிழுலகம் சரியாக, உணர்ந்து போற்றிப் பாராட்டியதா என்று கேட்டால், "இல்லை" என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அவருடைய புத்தகங்கள் நூலகங்களில் வைக்கப்படவில்லை; கல்லூரிகளில் பாடமாக வைக்கப்படவில்லை; புகழ்பெற்ற பதிப்பகங்களில் விற்பனை செய்யப்படவில்லை; தங்கச் சுரங்கமாகவே அவை தங்கிவிட்டன. தமிழறிஞர் ஏ.வி.சுப்பிரமணியனால் இனங்காட்டப்பட்டு, உலகுக்கு வந்த அவரது பாடல்கள், நெல்லையில் உள்ள தமிழ் அறிஞர் சிலரால் சுவைக்கப்பட்டாலும், இப்போதுதான் முனைவர் வளன்அரசு முயற்சியால் மக்களைச் சென்றடையும் நிலைக்கு வந்திருக்கிறது" என்று டி.கே.இராமாநுஜக் கவிராயர் நூற்றாண்டு நினைவு (சிறிய மலர்:-12 பக்கம்) மலரில், இராமாநுச கள்ளபிரான் என்பவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாடலாசிரியர், பனுவலாசிரியர், காப்பிய ஆசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாசிரியர் எனப் பன்முகப் பேராற்றல் கொண்ட கவிராயர், 1985ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி இறையடி சேர்ந்து, இறவாப் புகழ் பெற்றார்.
நூற்றாண்டுகள் கடந்தும், குடத்திலிட்ட விளக்காய் இருக்கும் கவிராயரின் அரிய படைப்புகள் அனைத்தையும், குன்றிலிட்ட விளக்காய் ஒளிரச்செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமையும் பொறுப்பும் தமிழறிஞர்களுக்கும், தமிழ்கூறும் நல்லுலகிற்கும் உரித்தானது.
நன்றி:- தினமணி