Home Tamil MedicineHerbs நெல்லிக் காய் – EMBILICA OFFICINALLIS.

நெல்லிக் காய் – EMBILICA OFFICINALLIS.

by Dr.K.Subashini
0 comment

நெல்லிக் காய்

திரு.அ.சுகுமாரன்

 

Oct 21, 2009

தேவருலகில் இந்திரன் அமிர்தம் அருந்தியபோது சிறிது பூமியில் சிந்தி அது நெல்லி மரமாக ஆனது என்று கூறுவார்கள். .உண்மையில் நெல்லி ஒரு அமிர்தம் தான் .இல்லாவிடில் தனக்கு கிடைத்த கரு நெல்லியை அதியமான் ,தமிழ் வாழ அவ்வையாருக்கு அளித்து மகிழிந்திருப்பாரா ?

 

நெல்லி ஒரு காயகல்ப்ப மூலிகை. அதன் காய் ஒரு காயகல்ப்பம் ,சந்தேகமே இல்லை .
நெல்லி காயாகத்தான் இருக்குமே தவிர அது பழம் ஆவதில்லை . அதுவே காயகல்ப்பத்தன்மை .நெல்லியின் மேன்மையை தமிழர் சங்ககாலத்தில் இருந்து அறிந்து வந்திருந்தனர் என்பது அதியமான் அவ்வையார் கதையால் மட்டுமல்ல , கிழவரும் ஐங்குறுநூறு பாடலாலும் அறியலாம் .

அம்ம வாழி தோழி சிறியிலை
நெல்லி நீடிய கல்காய் கடத்திடைப்
பேதை நெஞ்சம் பின்செலச் சென்றோ ?

சுவாமிமலைக்கு அருகே பூமிதேவியானவள் பார்வதியின் சாபத்தால் பலகாலம் இருந்து, ஷண்முகனை வணங்கி சாப விமோசனம் பெற்றாள். முருகனை விட்டுப் பிரிய மனமில்லாது அங்கேயே நெல்லிமரமாக நின்றாள் –  இவ்வாறு சுவாமிமலை. மகாத்மியம்.கூறுகிறது .பூமியின் மிகச்சிறந்த மரம் நெல்லி என்றுத்தான் கூறலாம் .

கோவில்களில் நெல்லி தல விருட்சமாய் வணங்கப்பட்டு வருகிறது.  திருநெல்வாயிலில் உள்ள உச்சிவனேஸ்வரர் சிவாலயத்திலும்; தஞ்சாவூர்- பழையாறை சோமநாதர் சிவாலயத்திலும்; பெரம்பலூர்- ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் சிவாலயத் திலும்; திருவாரூரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருநெல்லிக்கா என்னும் ஊரில் உள்ள நெல்லிவனநாதர் ஆலயத்திலும் தெய்வங்களுக்கு நிகராய் நெல்லி மரத்தினையும் பக்தர்கள் வணங்கி வலம் வருகின்றனர்.

சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கல் என்னும் ஊரில் சிறிய குன்றில் சிவன்
கருநெல்லி நாதர் என்ற பெயரில்  இருக்கிறார் .

 

நெல்லி மரம் ஒரு சிறிய மரம். இந்தியாவின் பலப்  பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் அதிகமாக வளர்கிறது. தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் அளவில் சிறியதாகவும்  கொஞ்சம் துவர்ப்பும், புளிப்பும் அதிகம் கொண்டதாக இருக்கும். வடநாட்டில் வளரும் நெல்லி பெரிதாக இருக்கும்.
 நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள்.தண்ணீர் இனிப்பாக மாறிவிடும். இந்தபழக்கம் எல்லா கிராமத்திலேயும் முன்பு  இருந்தது .இப்போது அவர்களுக்கு தெரியுமா தெரியவில்லை .நாம் தான் மினரல் வாட்டேருக்கு மாறிவிட்டோமே !

தாவரப்பெயர் -: EMBILICA OFFICINALLIS.

குடும்பம் -: EUPHORBIACEAE.
கருநெல்லி, அருநெல்லிஎன்ற இரு இனம் உண்டு.
அரு நெல்லி அத்தனை மருத்துவ குணம் உடையது இல்லை .மிக சிறியதாக இருக்கும் .
கரு நெல்லி , எனும் தோப்பு நெல்லி எனும் காய் தான் சத்துநிறைந்தது ,  உருண்டையாக இருக்கும் .

aavalaa — (Marathi),
amla — Hindi,
amlaki — Bengali,
Nellikka — Malayalam,
Nellikkai –Kannada,
நெல்லி காய்  — Tamil
 usiri — Telugu,
வேறு பெயர்கள் -: அம்லா, ஆமலகம், கோரங்கம்,மிருதுபாலா.
 
இலை, பட்டை.வேர்,காய்,பழம்,காய்ந்த பழம், பூ, மற்றும் வேர்பட்டை,விதை அனைத்தும் பயன்தருவது .

சத்துக்கள்  விவரம்
மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4 கி. கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி. இரும்புச்சத்து – 1 மி.கி. வைட்டமின் பி1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி. நியாசின் – 0,4 மி.கி. கலோரிகள் – 60

வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் ‘சி ‘ அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில்  இருபத்து –முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.

நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும்.

மஞ்சளையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து சிறுநீர்ப்பைத் தொற்று வியாதிகளுக்கு மருந்தாகக் கொடுப்பார்கள்.

சிறுநீர் கழியாமல் தடைபடும் நிலையில் ஏலக்காயையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து மருந்தாகக் கொடுப்பார்கள்.

இரத்தம் கலந்து சிறுநீர், சிறுநீர் கழியும் போது வரும் எரிச்சல் போன்றவற்றிற்கு நெல்லிக்காயை தேனில் கலந்து அரைத்துக் கொடுப்பார்கள்.

நெல்லிக்கனி விதையைப் பவுடராக்கி, அதனுடன் அரிசி கஞ்சியை கலந்து கொடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் கட்டுப்படும்.

தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்து ணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக் காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.

ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.

 நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.

ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்  வராது.

உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும்.

அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.
அமலா கூந்தல்தைலம் கேடத்திற்கு நல்லது .உடலுக்கு குளிர்ச்சி தரும் .
ஆயுளை நீட்டிக்கும் அற்புதமான மூலிகை நெல்லியாகும். உடம்பில் உண்டாகும் வெட்டைச் சூட்டினால் கன்னம் குழி விழுந்து ஒட்டிப்போய், தேகம் வறண்டு, நடை தளர்ந்து நாணலாகிப் போன இளைஞர்கள் இன்று நிறைய பேர் இருக் கிறார்கள். இவர்கள் இருபது வயதில் அறுபதை எட்டியவர்கள். இவர்கள் மன்மத அழகுடன் வலம் வர நெல்லிக்கனியைச் சரணடைவதே மிகவும் நல்லது.

நெல்லிக்காயை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி சாப்பிட்டு வரவும். அல்லது நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயை துவையல், சட்னி, சூப் போன்ற ஏதேனும் ஒரு முறையில் தினசரி சாப்பிட்டு வரலாம்.
 ஆயுர்வேத மருந்து விற்பனைக் கூடத்திற்குச் சென்று, உலகப் பிரசித்தி பெற்ற "சயவனபிராச லேகியம்’ அல்லது "நெல்லிக்காய் லேகியம்’ எனக் கேட்டு வாங்குங்கள். இதனை தினசரி காலை- மாலை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். எண்ணற்ற பலன்களை இந்த ஒரே மருந்தினால் நீங்கள் பெறலாம்.

நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும்.
கடைகளில் "நிஷா ஆமலகி சூரணம்’ என்ற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கிறது.  உபயோகித்து சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.

சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.

நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.
நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

 

தேரையர் என்னும்  சித்தர் கூறுவதையும் பார்க்கலாம்
மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

 

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.

எவ்வளவு இயல்பாக பேசுகிறார்கள் பாருங்கள் .மாப்பிள்ளைகள் போல் இருக்கலாமாம் நெல்லிக்காய் சாப்பிட்டால் !

அப்புறம் என்ன இப்போது தான் நெல்லிக்காய் சீசன் ,வாங்கி பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் .இது ஒரு வாழ்நாளை நீடிக்கச் செய்யும் காயகல்ப மூலிகையாகும்.

You may also like

Leave a Comment