முடக்கத்தான் எனும் முடக்கறுத்தான்
திரு.அ.சுகுமாரன்
Dec 22, 1009
முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) எனும் மருத்துவ மூலிகை உயரப் படரும் ஏறுகொடி ஆகும்; இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி காற்று அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயின் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும். இக்கொடியின் வேர், இலை, விதை ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.
இதன் வேறுபெயர்கள் -: முடக்கறுத்தான், முடர்குற்றான், மொடக்கொத்தான்
இதன் தாவரப்பெயர் -: CARDIOSPERMUM HALICACABUM.
தாவரக்குடும்பம் -: SAPINDACEAE.
முடக்கு, அத்துடன் அறுத்தான் என்பது சேர்ந்தால் முடக்கற்றான் ஆகும். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டுவாத நோயை அகற்றுவதால் “முடக்கற்றான்” எனப் பெயர் பெற்றது இதைப் பொதுவாக தோசைமாவில் கலந்து தோசையாகச் செய்து உண்பர்.
சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் – சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி
—இது குணபாடம்
கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு
அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.
பிரசவம் என்றாலே மகப்பேறு மருத்துவ மனைகள், பல ஆயிரம் பணச் செலவு என்றாகிவிட்ட இந்தக்காலத்தில் சுகப்பிரசவம் ஆக முடக்கற்றான் இலையைத் அம்மியில் வைத்து மை
போல் மைய அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றா. இது கைகண்ட முறையாகும் என்றால் யாராவது நம்புவார்களா !ஆனாலும் இதைப் பதிவு செய்வது கடமை.
மலச்சிக்கல், வாயு, வாதம் குணமாக -: வாரம் ஒருமுறை முடக்கற்றான் ரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாயு கலைந்து வெளியேறி விடும். வாயு, வாதம்,மலச்சிக்கல் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.
ரசம் தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ் –
கைப் பிடியளவு முடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி ரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து ரசம் தயாரிக்க வேண்டும்.
மலம் சரிவரப்போக ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை வெள்ளைப் பூண்டுப் பல் ஐந்தை நசுக்கி இதில் போட்டு அரைத்து, தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக் காய்ச்சிக் கஷாயமாக வடிகட்டி, விடியற் காலையில் உட்கொண்டால் பலமுறை பேதியாகும். அதிகமாக பேதியினால் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாறு அருந்தினால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம் மட்டும் சாப்பிடலாம்.
மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பெண்களுக்கு ஒழுங்காக வரும்.
மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு, பாஸ்பரம் படிவங்கள்தான் ’பாரிச வாயு’ எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும். இவற்றைக் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.
வாரம் ஒரு முறை முடக்கற்றான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் கொண்டு 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து வரவும்; முடி கொட்டுவதும் நின்று விடும்; இது நரை விழுவதைத் தடுக்கும்; கருகருவென முடி வளரத் தொடங்கும்
இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வரும் வாதத்திற்கு வீககத்திற்க்கு வைத்துக் கட்ட குணமாகும் .அதிகப் பணச்செலவில்லாத வைத்தியமாக இருப்பதால் சற்றுக் கவர்ச்சி இல்லாமல் இருக்கக்கூடும்;
அதற்குத்தான் அத்தான் என்று இனிமையாக ஒரு பெயர் அமைந்துவிட்டதோ ! ஆனால் இப்போதெல்லாம் சினிமாவில் கூட அத்தானும் இல்லை; முடக்கத்தானும் நம்மில் அதிகம் உபயோகத்தில் இல்லை !