9 – பழவேற்காட்டு

ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  – ௯ (9 ) 

ஓலைச் சுவடி தேடல் என்பது பன்முகம் கொண்டது. சரியான சுவடியைச் சரியான நபர் இடத்தில் இருந்து பெறுதல்  (acquire ) என்பது தொடக்கம்; அதன் பிரதிகளைத் திரட்டல் ( collect ) – ஓலையிலும் தாளிலும் படிகள் கிடைக்கின்றனவா என முயற்சி மேற்கொள்ளுதல், அதுபற்றிய பிற தொடர்புடைய தகவல்களை நூலகப் பதிவுகள்    (cataloque ) போன்றவற்றில்  இருந்து  பெறுதல் அடுத்த தளமாகும்.
.
சுவடியின் வரலாறு  என்பது  இதில் முக்கியமானது. மூலமா, படியா என்பதுடன்  தனி நபர், மடம், கல்வியாளர் என  யாரால் கையாளப் பெற்றது என்ற நெறியும், யாரை எட்டியது, யாரால் ஏற்கப்பட்டது  ( reach and reception ) என்பன இதனால் புலப்பட்டு அச்சுவடிக்கான  வரவேற்பைப் பற்றி அறிய முடியும்.
விருப்பம், ஆர்வம், முயற்சி  என்பதுடன் ஆய்வு நுணுக்கமும், அறிவுத் திறனுமே இச்சுவடி தேடல் உழைப்புக்கு உறுதுணையாகும் . 
                                                                                                                                                 –   டாக்டர் அன்னி தாமஸ்
                                                                                                                                                  (பதிப்பியல் எண்ணங்கள் )

 

பழவேற்காட்டில்!

சென்னையைப் போல் பொலிவுடன் விளங்கி இருக்கவேண்டிய பழவேற்காடுவரலாற்றின் ஒரு சிறிய மாறுபாட்டால் இன்று அது ஒரு மீன்பிடிகிராமமாக  அத்தனைப  பரபரபின்றிக்  கழிமுகங்களும்  காடு நிலம்,ஏரி, கழிமுக நீர் என நாலா பக்கமும் விதவிதமாக விரிந்து கிடக்கிறது . இங்கிருக்கும் ஏரி இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியாகும்.

 

பல  இடங்களில் சுற்றி அலைந்தபடியே பழவேற்காடு வந்து சேர்ந்த போது மதியம் மணி இரண்டு ஆகிவிட்டது. ஆலய வழிபாடு செய்ய வில்லை என்றாலும் வயிற்றுக்கு வழிபாடு செய்தாக வேண்டுமே !  உணவு படைத்தல் என்றுதானே கூறுகிறோம்.  அங்கும் இங்கும் உணவு தேடியலைத்து ஒருவழியாக எதோ கிடைத்த உணவை  அள்ளிப் போட்டுக் கொண்டு  புறப்பட்டோம். புலிகாட் எனப்படும் பழவேற் காட்டில்  எங்கள் பட்டியல்படி ஆறு முகவரிகள் இருந்தன.
B. Haridaas
PULICAT – 601205

என்று ஒரு முகவரி;    நல்ல வேளையாக மீனவர் குப்பங்களைத் தவிர்த்துப் பழவேற்காட்டில் ஒரு சில தெருக்களே இருந்தன.

கிராமங்களில் முகவரி தேடும்போது நபரின்  தந்தை பெயரோ அல்லது  ஜாதியோ தெரிந்து விட்டால் கண்டுபிடிப்பது சுலபம். ஜாதி தெரிந்து விட்டால் அந்த ஜாதியினர் இருக்கும் தெருவை சுலபமாக்க் காட்டி விடுவார்கள்; அல்லது அந்த ஜாதியை சேர்ந்த வேறு யாராவது ஒருவரைக் கை காட்டுவார்கள்.முதலெழுத்து மட்டும் இருக்கும் போது நாங்கள் அதற்கு விரிவுரை தருவோம். B   என்றால் பாலசுப்ரமணியமாக இருக்கலாம்; பாஸ்கராக இருக்கலாம் எனச் சொல்லிக்கொண்டே போவோம்.  வழி சொல்பவரும் ஏதாவது தெரிந்த பெயர் வந்தால் நாங்கள் கூறும் பட்டியலின் ஓட்டத்தைச் சற்று நிறுத்தி விபரம் கூறுவார். ஜாதிக்கு இன்னும் கிராமங்களில் அதிக முக்கியத்துவம் இருக்கிறது.

ஒருவாறு ஹரிதாஸ் வீட்டை  கண்டுபிடித்தோம். வீட்டின் கதவோ மூடப்பட்டிருந்தது ; " சார் சார் "  என்று கதவைத் தட்டிக்கொண்டு நின்றோம். கதவைத் திறந்து ஒரு பெண்மணி வெளியில்  வந்தார்;
நாங்கள் நிறைய மார்க்கெட்டிங் தந்திரங்களைக் கையாளுவோம்; முதலில் அதிக நேரம் நம்மை இருக்க அனுமதித்தால்தான் நம்மால் அதிக விபரம் அவர்களிடம் இருந்து பெறமுடியும். எனவே சீராகப் பேசி நல்ல எண்ணம் பெற முயல்வோம் .

 

"அம்மா  நாங்கள் தஞ்சைப் பலகலையில் இருந்து ஓலைச் சுவடி தேடி வந்திருக்கிறோம் ; சார் இல்லையா ? உங்களிடம் உங்களிடம் சில ஓலைச் சுவடிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டோம்"  என்று கூறியபடி அங்கிருந்த திண்ணையில் அமர்ந்து விட்டோம். அந்த அம்மையார் "ஆமாம், இருக்கிறது"  என்றது எங்கள் சோர்வு போனஇடம் தெரிய வில்லை; சற்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். "ஐயா எங்கே ? "  எனக் கேட்ட போது அவர் கணவர் தலைமை ஆசிரியராக அருகில் இருக்கும் பள்ளியில் வேலை செய்வதாகக் கூறினார்.  எங்கள் பேச்சைச் சற்றே வளர்த்தோம்; அருகில் இருக்கும் கோயில்கள், திருவிழாக்கள் முதலி யன பற்றிப் பேசி அவரிடம்  எங்கள்பால் ஓர்  ஈடுபாட்டினை உருவாக் கினோம். அம்மையார் உடனே  “களைப்பாக இருக்கிறீர்களே, மோர் வேண்டுமா?’ என்றார்;  இது அவர்களிடம் இன்னும் சற்று நெருங்க ஒரு வழி ! "இருந்தால் கொஞ்சம் தாருங்கள்; தாகமாத்தான் இருக்கு" என்றோம். மோர் குடித்தவுடன் ”ஐயா கைபேசி எண் தந்தால் அவருடன் பேசுகிறோம் ” என்றோம். பொதுவாக  அவர்களின் நல்ல எண்ணத் தையும், நம்பிக்கையையும் பெறாமல் கைபேசி எண் கேட்கக் கூடாது. அப்படி அவசரப்பட்டுக் கேட்டால் ”எனக்குத் தெரியாது” என்ற உஷா ரான பதில் உடனே கிடைத்துவிடும் . இதில் மிக நுட்பமான மன விளை யாட்டுக்களைப் பயன்படுத்த வேண்டும். அந்த அம்மையாரும் மனமு வந்து இப்போது ஒத்துழைக்கும் நிலையில் இருந்தார்.  அவரே அவரது கைபேசியில் அவரது கணவரின் எண்ணைப் போட்டு ”இதில் நீங்களே பேசுங்கள்;  இதில் பேசினால் அவர் உடனே எடுப்பார்” என்று கூறினார். அதே சமயம் எங்களிடம் எண்ணைக் கொடுக்காமல் தவிர்த்த சாமர்த் தியமும் புரிந்து விட்டது.கொடுத்தால் ’ஏன் எண்ணைக்  கொடுத்தாய்?’ என அவர் கணவர் கோபிக்கும் சாத்தியக்கூறு உண்டு.  நம்ம கிராமத்துத் தாய்மார்கள் மிகவும் சாமர்த்தியம்;  அதுவும் கணவர் நலம் காப்பதில்  மிகுந்த உஷார் !

முனைவர் மணி பேசினார். அவர் தான் வர இரவு ஆகிவிடும் என்றும், தன்னிடம் ஓலைச் சுவடிகள் இருந்தது உண்மைதான் எனவும், சில ஆண்டுகளுக்கு முன் கணக்கெடுத்தபோதே அதைப் பொன்னேரி கிளை நூலகரிடம் தந்துவிட்டதாகவும் கூறினார்.

"ஐயா இப்போது வேறு சுவடிகளே இல்லையா ? அம்மா எதோ சுவடி இருப்பதாக கூறினார்களே" எனப் பணிவுடன் கேட்டோம்.

"ஆமாம் இருக்கிறது ஆனால் அது உங்களுக்கு பயன்படாது. அது கணக்கு வழக்குப் பற்றிய  ஓலைச் சுவடி"
.
"அதைப் பார்க்கலாமா ? "

 

"அதைப் பார்த்து நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள்?  இதை முன்பே பார்த்துவிட்டு  வேண்டாம் என்று சொல்லிப் போய்விட்டார்கள்  "
 .
"வந்துவிட்டோம்; எதற்கும் பார்க்கிறோமே? "

 

"இல்லை; அது எங்கே இருக்கிறது என்று தேடமுடியாது. அது நான் வந்துதான்  செய்யவேண்டும்; நீங்கள் போய் வாருங்கள் "

அம்மையாரின் முகத்தில் அதன் இருப்பிடம் தெரியும் என்ற குறிப்பும்  தெரிந்தது; ஆனாலும் கணவர் கூறிவிட்டாரே இனி எப்படிக் காட்டுவது என்ற விசனமும் தெரிந்தது. "சரி மீண்டும் அவர் இருக்கும் போது வாருங்கள், நான் காட்டுகிறேன் "  என்று கனிவுடன் கூறினார். அந்த சகோதரிக்கு நன்றி கூறி அந்த இடத்தைக் காலி செய்தோம்; ஆனால் பொன்னேரி சென்று  கிளை நூலகரைப் பார்க்க வேண்டும் என உறுதி செய்து கொண்டோம்.

அடுத்தமுகவரி
K.GANESAN
PULICAT 601205 என்பதுதான் .

எங்கள் அதிர்ஷ்டம் அவர் வீட்டில் இருந்தார். இவர்  பழவேற்காட்டில் இருக்கும் நூலகத்தில் பகுதி நேரப்பணி செய்கிறார்.

அவரிடம் பேசி நடப்பாகிப் பொன்னேரிக் கிளை நூலகர் கைபேசி எண் பெற்றோம்.  கணேசனும் அவர் வீட்டில் இருந்த இரண்டு கட்டு ஓலை சுவடிகளைப் பொன்னேரி நூலகரிடம் கொடுத்ததாகக் கூறினார்.
நாங்கள் அந்த "யானை பிடிக்கும் தந்திரத்தை" கையாண்டு அவரையும் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டோம். அவரே பழவேற்காட்டில் இருக்கும் இதர முகவரிகளுக்கும் அழைத்துப் போனார். பாவப்பட்ட பழவேற்காட்டு மக்கள் எங்கள் கேள்விக் கணைகளில் இருந்து தப்பித் துக் கொண்டனர். முகவரி கிடைக்கும் வரை எதிரில் அகப்படும் பொது ஜனத்தை அப்படிக் கேள்விகள் கேட்டுப் பாடாகப் படுத்தி விடுவோம். எங்களுக்கு ’டீ’ எல்லாம் வாங்கிக் கொடுத்துத் தப்பித்துக் கொண்டவர்களும் உண்டு.

கணேசன் எங்களைக் கந்தசாமி குருக்கள் என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஒரு முதியவர் தம்மிடம் இருந்த ஓலைச் சுவடிகளை சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்திற்குக் கொடுத்துவிட்டதாகக் கூறினார். ஆனால் அவர் வீட்டில் இன்னும் ஆகமங்களைப் பற்றிய ஏராளமான வடமொழிப் புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். அவற்றை எங்களுக்குக் காட்டினார். நாங்கள்  மின்னாக்கத்தின்  பயன் பற்றி அவருக்கு எடுத்துக் கூறினோம். அவரும் அவற்றை மின்னாக்கத்திற்குத் தர சம்மதம் தெரிவித்தார்; ஆனால் அங்கேயே வந்து செய்ய வேண்டும் என்றார்.
வேறு பல இடங்களுக்கு கணேசன் அழைத்து சென்றார். பெரும்பாலான இடங்களில் யாரும் இல்லை; ஓலையும் கிடைக்கவில்லை.

பிறகு கணேசனிடம் பெற்ற கைபேசி எண் வைத்துப் பொன்னேரிக் கிளை நூலகர்  போனிக் பாண்டியனிடம் பேசினோம். .அவரிடம் எங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு அவரைப்  பார்க்க இப்போது பொன்னேரி வருவதாகக் கூறினோம்; அவரும் வரச் சொன்னார். ஆனால் அவரிடம் பழவேற்காட்டில் இருந்து பெற்ற ஓலைச் சுவடிகளைப் பற்றிக்  கேட்கவில்லை; அவரை நேரிலேயே பார்த்துக் கேட்கலாம் என்று முடிவு செய்தோம்.

விரைவாகப்  பொன்னேரி  சென்றோம்; ஒருவழியாக நூலகம் சென்றால் அங்கே நூலகர் போனிக் பாண்டியன் இல்லை. எங்களுக்கு ஏமாற்றம் ! அவரது உதவியாளர்தான் எங்களை வரவேற்று ” நூலகர் அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டார்; நீங்கள் வந்தால் வேண்டிய உதவி செய்யச் சொன்னார்” என்று கூறி காபி ஆர்டர் செய்தார் .

நாங்கள் பழவேற்காட்டில் திரு.போனிக் வசம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஓலைச் சுவடிகளைப் பற்றிக் கூறி அவரை அவசியம் பார்க்கவேண்டும் என்றோம்.  அவரும் அப்படி இங்கே எந்த ஒலைச் சுவடியும் இல்லையே என்று கூறி நூலகருக்குக் கைபேசியில் பேசினார் .

போனிக் பாண்டியனும் போனில் எங்களிடம் பேசும்போது "என்னிடம் எந்த ஓலைச் சுவடியும் இல்லையே, அப்போதே திருப்பித் தந்து விட்டேனே "என்று கூறினார். என்னடா  இது இந்த ஓலை நம்மிடம் இப்படிக் கண்ணாமூச்சி காட்டுகிறதே என சற்று மயங்கினோம்; ஆனாலும் எப்படியும் பெற்றே தீருவது என முடிவு செய்து சில அதிரடித் திட்டங்களை வகுத்தோம்;  பிறகு பொன்னேரியில் இருந்த சில முகவரிகளைப் பார்க்க ஆரம்பித்தோம் .

மறுநாள் அந்த ஓலைச் சுவடிகளை எப்படிக் கையில் வாங்கினோம் என்பதை அடுத்த இழையில் பார்ப்போம்.

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *