9 – பாஞ்சாலங்குறிச்சி

May 24, 2010

 

பாஞ்சாலங்குறிச்சி:  வீர பாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் 
 
இப்படி மேலும் பல தகவல்களைச் சித்திரங்களாக சுவர்களில் தீட்டி அதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழே சிறு குறிப்பும் சேர்த்திருக்கின்றனர். ஆனால் துரதிஷ்ட வசம். எங்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டே வந்த அதிகாரி எங்களை அங்கு பொறுமையாக இருந்து சித்திரங்களைப் பார்த்து குறிப்புக்களை எடுத்துக் கொள்ள நேரம் கொடுக்கவில்லை.  அவர் படங்களுக்கான விளக்கத்தைச் சொல்லிக் கொண்டு சுற்றி இருப்பவர்கள் கேட்கின்றார்களா இல்லையா, அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்கின்றோமா, கேள்விகளுக்கு சற்று விளக்கம் தரலாமே என்ற எண்ணம் ஏதுமில்லாமல் பாடத்தை மனனம் செய்து ஒப்புவிப்பவர் போல ஒப்புவித்துக் கொண்டே சென்றார். இடையில் புரியாத வார்த்தைகளுக்கு கேட்ட சந்தேகங்களையும்  அவர் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
 
அவர் கடமை வந்தவர்களை மண்டபத்தை ஒரு முறை சுற்ற வைத்து படங்களைக் காட்டி பின்னர் வெளியே அனுப்பி வைப்பது. அவ்வளவே. அதை செய்வதிலேயே அவர் கவனம் முழுவதும் இருந்தது, ஒரு இயந்திர மனிதனைப் போல!

 

 
மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும் உடனே இருப்பது சித்திரக் கூடம். இதற்கு உள்ளே சென்றால் மேலும் ஒரு சிறிய கூடம் ஒன்று இருக்கின்றது. அதன் மையத்தில் மிக கம்பீரமான வீர பாண்டிய கட்டபொம்மனின் சிலை ஒன்று பிரமாண்டமாக வடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றது. 

 

 

பக்கத்தில் அகழ்வாராய்ச்சியின் போது சேகரிக்கப்பட்ட சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்த்து அவசரமாக சில படங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.
 
இவற்றை வெகு விரைவாக  எங்களைப் பார்க்க வைத்து விட்டு வெளியே கொண்டு வந்து விட்டு விட்டு எங்களிடம் சன்மானத்திற்காக கையை நீட்டினார் அந்த அதிகாரி. இது மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. அவருக்கு ஒரு தொகையைக் கொடுத்து விட்டு புல்வெளியில் இறங்கி நடந்தோம்.
 
அழகான நினைவு மண்டபம். சுத்தமாக பாதுகாக்கப்படுகின்றது. ஆனாலும் இது மட்டும் போதாது. மேலும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை  மேம்ப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. உதாரணமாக எனக்கு அதிருப்தி தருபனவாக இருந்த சில விஷயங்கள்.
 
சித்திரங்களுக்கு விளக்கம் கொடுத்த அதிகாரி: அவர் வருகையாளர்களிடம் கவனத்தோடு பொறுமையாக தகவல்களை வழங்க வேண்டியது அவசியம். சில விஷயங்கள் புதிதாக இருக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு அவற்றை ஒதுக்கி விடாமல் பொறுமையாகக் கேட்டு அதற்கு பதிலளிக்க வேண்டியது இவ்வகையான சுற்றுலாத்துறை அதிகாரிகளின் பொறுப்பு.  இவ்வகை அதிகாரிகள் தானே சுற்றுலாத்துறையின் தூதுவர்களாக இருக்கின்றனர். இவர்களின் கனிவான திறமையான விளக்கங்கள் தான் மேலும் பலர் இங்கு வந்து செல்ல உதவும். 
 
அதோடு இங்கு வரும் வருகையாளர்களுக்கு வீரபாண்டிய கட்ட பொம்மன் வரலாற்றை விளக்கும் ஒரு சிறு கையேட்டை வழங்கலாம்.  இதனை இலவசமாகத்தான் தரவேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு  சிறு தொகைக்கு விரும்புவோர் வாங்கிச் செல்லும் வகையில் சிறு கையேட்டை இங்கு வைப்பதன் வழி வருகை தரும் சுற்றுப் பயணிகளுக்குச் சரியான தகவல் சென்றடைய உதவ முடியும். இங்கு மட்டுமல்ல. பொதுவாகவே வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்,  ஆலயங்களில் கூட இப்படிப்பட்ட சிறு கையேடுகளை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து வைக்க வேண்டும். இது சரியான தகவல் மக்களுக்குச் சென்று சேர பெரிதும் உதவும்.
 
இவ்வகையான முக்கியமான நினைவுக் கூடங்களில் அதிலும் தூரத்திலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் சுற்றுப் பயணிகள் வந்து செல்கின்ற நிலையில் இங்குள்ள அதிகாரிகள் சற்று கவனமுடன் செயல்பட வேண்டியதும் மிக முக்கியமான ஒன்று. அதிலும் வருகை தரும் சுற்றுப் பயணிகளிடம் சன்மானம் பெருவதற்காக கை நீட்டுவது முற்றிலுமாக போக்கப்பட வேண்டிய ஒரு செயல்.
 
வருகை தரும் சுற்றுப்பயணிகளுக்குக் கழிப்பறைகள் அதிலும் தூயமையாகப் பாதுகாக்கப்படும் கழிப்பறைகள் இருக்க வேண்டியது முக்கியம்.  தூரத்திலிருந்து பயணம் செய்து வருபவர்களின் அடிப்படை தேவைகளைக் கவனத்தில் கொண்டு கிராமமோ நகர்ப்புறமோ எல்லா இடங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டியது மிக மிக அவசியம்.
 
குறை சொல்வதற்காக குறிப்பிடப்படுபவை அல்ல இவை. சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நினைவு மண்டபம் மேலும் சிறப்புடன் பலரும் வந்து பார்த்து பாராட்டிச் செல்லும் வகையில் அமைந்திட இந்த சிறிய மேம்பாடுகள் பெரிதும் உதவும்.

 
இவற்றைப் பற்றி பேசிக் கொண்டே மண்டபத்திலிருந்து வெளியே வந்த எங்களை ஒல்லியான, உயரமான தோற்றத்துடன்  தலைப்பகை அனிந்திருந்த ஒரு மனிதர் எதிர் கொண்டார். எங்களிடம் அவர் வீரபாண்டிய கட்டபொம்மனின்  நேரடி வாரிசு வீமராஜா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
 
அன்புடன்
சுபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *