Home Palm Leaf 5 – சென்னை

5 – சென்னை

by Dr.K.Subashini
0 comment

களப்பணி  – ஓலைச்சுவடிகளைத்  தேடிய  படலம்  ! –  ௫ –  ( 5  )

 

தமிழ்த்  தாத்தா உ.வே. சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை போன்ற பலரை நாம் ஓலைச் சுவடிப் பதிப்பாசிரியர்கள்  என இப்போது கொண்டாடினாலும்,   இவர்கள் அத்துணை பேரையும் விட மிக முந்தைய ஒரு சுவடிப் பதிப்பாசிரியரை நாம் முழுமையாக மறந்து விட்டோம்.  சொல்லப்போனால் இதன் புரவலர் தஞ்சையில் இருந்து தான் அவரை இயக்கினார்.

வண்ணாரப் பேட்டையை நோக்கி  வண்டி ஓட ஆரம்பித்தது.  அங்கே மொத்தம்  9  முகவரிகள் இருந்தன. அனைத்துமே தனி நபர்கள்; ஒரே ஒரு மருத்துவமனை. எப்படி ஓலை வைத்திருக்கும் நபர்கள் பலரும் அதிக எண்ணிக்கையில் சென்னை வண்ணாரப் பேட்டையைத் தேர்ந்தெடுத்து வசிக்கிறார்கள் என்ற வினா மனத்தில் மின்னலடித்தது.

எப்படியும் அத்தனையையும் பார்த்து விடுவது என உறுதி எடுத்து  அதிகம் அலைந்தோம். தனி நபர்கள், வீடுகளை எல்லாம்  அலைந்து திரிந்து  ஒவ்வொன்றாகத் தேடினோம். வழக்கம்போல் அப்படியும் இப்படியும் திரிந்து வழியில் அகப்படும் அனைவரையும் தொந்தரவு செய்து அவர்களையும் மிகவும் சிந்திக்கச் செய்து ஒவ்வொரு முகவரியாகச் சென்று விசாரித்தோம்.

 

ஆனால் சென்ற இடம் எங்கும் ஓலைச் சுவடிகள் இல்லை என்ற பதிலே கிடைத்தது. ஒருவேளை பட்டியல் தவறோ என்ற எண்ணம் வந்தபோது , ஓரிடத்தில் மட்டும் அவர்களுக்கும் ஓலைச் சுவடிக்கும் சம்பந்தம் இருக்கும் தகவலை கூறினார்கள். குடும்பமே கூடி அந்தத் தகவல்களை  உறுதிப்படுத்தினர். பாஸ்கர் என்னும் அந்த குடும்பத் தினைச் சேர்ந்த வாலிபர்  வீடுகட்டும் தொழில் செய்து வருகிறார்.

சென்னையில் ஒரு வீட்டைப் புதிதாக்க் கட்டுவதற்காக முழுமையும் இடிக்கும் வேலையில் ஈடுபட்டபோது இரண்டு சாக்குப்பை நிறைய அங்கே ஓலைச் சுவடிகள் கிடைத்தனவாம்; அந்தச் சுவடிக் குவியலை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் வைத்திருந் தனராம்; ஆறுமாதம் முன் யாரோ ஒரு மீசைக்காரர் அதை வாங்கிக் கொண்டு போனாராம்.  எங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்கள் ? அந்த மீசைக்காரர் பற்றி வேறு ஏதாவது மேல் விபரம் தெரியுமா என்று மிக்க ஆதங்கத்துடன் பலமுறை கேட்டோம்; ஆனால் அவர்கள் அதை அத்துணை சிரத்தை எடுத்துக் குறித்து வைக்கவில்லை. எங்களுக்கோ கைக்கு எட்டியது இப்படி நழுவி விட்டதே என்ற வேதனை.  பிறகு  மோர் எல்லாம் கொடுத்து எங்களை அவர்களே ஆறுதல் படுத்தினர்.   சில ஆண்டுகளுக்கு முன் NSS  மாணவர்கள் வநது ஓலைச் சுவடி பற்றிக் கேட்டதையும் உறுதிப்படுத்தினர்; ஆனால் ’உடனே வருவது தானே, இவ்வளவு ஆண்டுகள் என்ன செய்தீர்கள் ?’ என்ற
அவர்களது கேள்விக்குத்தான் எங்களால் பதில் கூற முடியவில்லை.

பல இடங்களில் இப்படித்தான் ’அங்கே கொடுத்தோம், இங்கே கொடுத்தோம்’ என்று கூறுவதை  அடிக்கடி  கேட்பது வழக்கம் ஆனது. கொஞ்சம் விபரம் அறிந்தவர்கள் புதுவை பிரெஞ்சு நிறுவனம், சென்னை பல்கலை , திருப்பதி தேவஸ்தானம் என விபரம் கூறுவார்கள். பலர் யாரோ வந்து வாங்கிச் சென்றனர் என்பதோடு நிறுத்திக் கொள்வர். இன்னும் சில இடங்களில் வண்ணாரப் பேட்டையில் அலைந்தோம் ஆனால் அவர்களிடம் ஓலைச் சுவடிகள் இருந்த தடயமே இல்லை .

வெய்யில் சுட்டெரிக்க நண்பகல் உணவு நேரம் தாண்டி,மணி இரண்டைக் கடந்தது .  உடல் களைப்பும், மனச் சோர்வும் மிகவும் உண்டாயின. காலையில் இருந்து சுவடிகளைக்  கண்ணால்  பார்க்காத ஏக்கம்  வேறு !
அந்த நேரத்தில் குவளை நிறைய பாதாம் இட்ட சுவைமிக்க கெட்டியான குளிர்ந்த பானத்தைக் கொடுத்துக் கையில் ஒரு கட்டு திருவாசகம் ஏடுகளைக் கொடுத்தால் எப்படி இருக்கும் ?  என்ன பகலிலேயே கனவா என்கிறீர்களா ?

உண்மையில் இது அப்படியே நடந்தது !

வண்ணாரப் பேட்டையில் மொத்தம்  9   முகவரிகளில் ஒரு மருத்துவ மனை முகவரி இருந்தது எனச் சொல்லிருந்தேன் அல்லவா ? அந்த மருத்துவமனையின் பெயர் ’ராகவேந்திரா  மருத்துவமனை’ என்று இருந்தது; சென்றபோது எதிர்பார்த்தபடி அது சித்த மருத்துவசாலை தான்; ஆனால் நவீனமாக இருந்தது. மக்கள் கூட்டமும் அதிகம் இருந்தது . நாங்கள் முக்கிய விஷயமாக டாக்டரைப் பார்க்கணும் என்று சொல்லி எப்படியோ டாக்கடர் அறையில் நுழைந்து விட்டோம். எங்கள் பசி அப்படி ! டாக்டரும் நவீனமாகத்தான் இருந்தார்.  என்ன வேண்டும் என்றபோது ’ டாக்டர் உங்களிடம் நிறைய ஓலைச் சுவடிகள் இருப்ப தாக எங்களுக்குத் தகவல். நாங்கள் அதைப் பார்க்க தஞ்சைப் பல்கலை யில் இருந்து வருகிறோம்’  என்றோம் . இப்போது எல்லாம் எப்படிப் பேசுவது என்பது அத்துப்படி ஆகிவிட்டது.  ’அப்படியா ?’  என்ற டாக்டர் வேறு ஒருவரை அழைத்து ’இவர்களை அலுவலகம் அழைத்துப் போங்கள் ’என்று கூறி , எங்களைப் பார்த்து "நீங்கள் அங்கே சென்று கொஞ்ச நேரம் இருங்கள்; நான் விரைவில் காத்திருப்பவர்களை அனுப்பிவிட்டு வநது உடனே வநது விடுகிறேன் " என்றார்.  அவர் ஓலைச் சுவடிகள் இல்லை என்று சொல்லாமல் காத்திருக்கச் சொன்னதுமே எங்கள் கற்பனை சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது.

 

அங்கே நாங்கள் போனதும் பார்த்தால் கண்ணாடி அலமாரி நிறைய ஓலைச் சுவடிகள் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. இருவர் ஒரு சிறந்த மின்வருடி கொண்டு சுவடிகளை வருடிக்கொண்டிருந்தனர். அப்படியே நாம் என்ன செய்ய நினத்தோமோ  அதை அங்கு செய்து கொண்டு இருந்தனர். நாங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்; செல்வமுரளி  technical  விபரம்  கேட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் ஓலைச் சுவடிகளை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். சுமார் 300  கட்டுகள் இருக்கலாம். அத்தனையும் மருத்துவச் சுவடிகள். மிக நேர்த்தியாகச்  சுத்தம் செய்யப்பட்டு, எண்ணெயிட்டு,  மையிட்டு, புதிய நூலில் சுற்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

டாக்டர் "என்ன, பார்த்தீர்களா ?"  என்று கேட்டபடி வந்தார். அவரது அறைக்கு அழைத்தார். முன்பு கூறியபடி குளிர்ந்த பாதாம்கீர் வந்தது. அவரது பெயர் Dr . ராமசாமி பிள்ளை; நாகர்கோயிலைச் சார்ந்தவர். பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் படித்தவர் என்று அறிமுகப் படுத்திக்கொண்டார். எங்களைப் பற்றிக் கேட்டார். நாங்கள் எங்கள் தேடுதல் , தமிழ் மரபு அறக் கட்டளை ஆகியவை பற்றிக் கூறினோம். அவரும் ’MEDICAL  MANUSCRIPT RESEARCH  CENTRE’   என்ற அமைப்பை உருவாக்கி, இதுவரை சுமார்  300  கட்டுகள் வரை சேர்த்து இருப்பதாகவும் , மத்திய சுகாதாரத்   துறையின் நிதி உதவி பெற்று இதைச் செய்து வருவதாகவும் கூறினார்.
 

அவருக்கு மருத்துவச் சுவடிகள் மட்டுமே தேவை என்றாலும் ,வேறு வகைச் சுவடிகளும் கிடைப்பதாகக்  கூறி அப்போதுதான் திருவாசகச் சுவடிக் கட்டை எங்கள் கையில் கொடுத்தார்.  அவர்களிடமிருந்தும் சுவடிகளைப் பெறமுடியாது என்று தெரிந்து கொண்டு சோகத்துடன் சுவடியைத் திருப்பிக் கொடுத்துக் கிளம்பினோம்.
பிறகு அருகில் இருந்த  உணவு விடுதியில் கிடைத்ததை உண்டு விட்டு அருகில் இருக்கும்  திருவொற்றியூர் சென்றோம். அங்கே நல்ல தண்ணி ஓடையை நாடிச் சென்று ஊர்ப் பஞ்சாயத்தில் மாட்டிக்கொண்ட கதையைப் பார்க்கலாம்.

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

You may also like

Leave a Comment