6 – சென்னை

களப்பணி – ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  –  ௬ (6 )

 

திருநாரையூரே   அன்று களைகட்டி விட்டது மக்கள் புத்தாடை அணிந்து சாரி சாரியாகக் கோவிலை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்; அனைவர் முகத்திலும் ஆனந்தக் களை.  இருக்காதா பின்னே?  மாமன்னர் ராஜராஜ உடையார் அல்லவா அவர்கள் ஊருக்கு விஜயம்  செய்ய உள்ளார்; அதுவும் அவர்கள் ஊர் பொள்ளாப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி தரும் பிரசாதத்தை அருந்தும் அற்புதத்தை, நாடெங்கும் அதிசயமாக பேசப்பட்டு வரும் அற்புதத்தை அல்லவா பார்க்க வருகிறார் !
 
நால்வர் பாடிய உலகு புகழும் தேவாரப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட  ராஜ ராஜ உடையார் தொடர்ந்து அவற்றைத் தொகுக்க முயன்று வந்தார்; ஆனால் சில பாடல்கள்தான் கிடைத்தனவே தவிர ,அவருக்குப் பாடல்கள் முழுவதும் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், திருநாரையூர்  வந்து தனக்கு உதவும்படி கேட்டார்.  நம்பியும்  விநாயகரிடம் முறையிட்டார். அப்போது ஒலித்த அசரீரி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தென்மேற்கு மண்டபத்தில் திருமுறைச் சுவடிகள் இருப்பதாகக் கூறியது. இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிராகாரத்தில் ‘திரு முறை காட்டிய விநாயகர்’ எனும் சந்நிதி இருப்பதைக் காணலாம் .

 

நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம்சென்ற மன்னர், தீக்ஷிதர்கள் வைத்த நிபந்தனையை நிறைவேற்றி,  மண்டபத்தில்  புற்றுக்களால் மூடிக்கிடந்த திருமுறைச் சுவடிகளை மீட்டு எடுப்பதற்குப் புற்றின்மேல் எண்ணெயூற்றி, புற்றைக் கரைத்து,  அரித்தது  அழிந்தது போக எஞ்சி யதை எடுத்தனர். அவற்றை நம்பியாண்டார் நம்பி ஒழுங்குபடுத்தி  7 திருமுறைகளாகத் தொகுத்தார். தொகுக்கப்பட்ட  தேவாரப் பதிகங் களுக்குப் பண் அமைக்க விரும்பிய நம்பியும், அரசனும் திருஎருக் கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள  சிவபெருமானை வேண்டினார்கள். "திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் பிறந்த பாடினி  என்ற ஒரு பெண்ணுக்குப் பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப் பெண்ணை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர்" என்று தெய்வவாக்குக் கிடைத்தது. மனம் மகிழ்ந்த மன்னனும், நம்பியும் அத்தலத்திலுள்ள அப்பெண்ணைக் கண்டறிந்து,  தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரது  முன்னிலை யிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்குப் பண் முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர். இவ்வாறு, திருமுறைகள் கிடைக்கக் காரணமாக இருந்ததால் பொள்ளாப் பிள்ளையாருக்கு ’திருமுறை காட்டிய விநாயகர்’ என்ற பெயரும் உண்டானது. இந்தப் பிள்ளையார் சந்நிதிக்கு எதிரில் ராஜராஜ அபயகுலசேகர சோழ மன்னனுக்கும்,  நம்பியாண்டார் நம்பிக்கும் சிலைகள் உள்ளன.  மன்னர் ’திருமுறை கண்ட சோழன்’ ஆனார் .

 

இவ்வாறு பத்தாம் நூற்றாண்டில் தஞ்சை மன்னர் ராஜராஜ உடையார் உதவியுடன் நம்பியாண்டார் நம்பி மறைந்து கிடந்த தேவாரத் திரு முறைகளைத்  தொகுத்து, அவற்றை மீண்டும் பல நூறு ஏடுகளில் படியெடுத்துப் பதிப்பித்து,  அந்த தேவாரச் சுவடிகளை எல்லா சிவால யங்களிலும் இடம் பெறச் செய்தார்.  சொல்லப்போனால் இவரே முதல் சுவடிப் பதிப்புச் செய்தவராக இருக்கலாம்; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏடுகளைத்தேடி, தொகுத்து, அவற்றைத்  தமிழ் நாடெங்கும் இருக்கும் ஆலயங்களில் வைத்து அவற்றை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார். அவரும் தஞ்சை மன்னர் ராஜராஜ உடையாரும் இதை மட்டும் செய்யாதிருந்தால் நமக்குத் தேவாரம், திருவாசகம் கிடைத்திராது .

 

சென்னை !

திருவொற்றியூரை அடுத்த டோல் கேட்  எனும் பகுதியில்  நல்ல தண்ணி ஓடக்குப்பம் என்ற இடத்தில்  கண்ணன் என்பவரிடம்  50 சுவடிகள்  இருப்பதாக  எங்களது NMM பட்டியல் கூறியது. அந்தப் பகுதி  முழுவதும் கடலை ஒட்டிய மீனவர் குப்பங்கள். நாங்கள் ஒவ்வொரு கிராமமாக நல்ல தண்ணி ஓடக்குப்பம் என்பதையும், கண்ணன் என்ப வரைப் பற்றியும் விசாரித்துக்கொண்டு, கடலை  ஒட்டியே நடந்தோம். ஆனால் எங்கள் நடவடிக்கைகளைக் கண்காணித்தபடியே ஒரு கும்பல் எங்களுக்குப் பின்னால் வருவதை நாங்கள் உணரவில்லை. இப்படியே போய்க்கொண்டிருந்த போது இடையில் ஒரு கோயில் வந்தது; அங்கே சுமார்  20  நபர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் .நாங்கள் இவர்களைக் கேட்டால் இவர்களில் ஒருவருக்கு நிச்சயம் கண்ணன்  என்பவரைப்பற்றித் தெரிந்திருக்கும் என்று எண்ணி ’ இங்கு  நல்ல தண்ணி ஓடக்குப்பம் என்ற இடத்தில் கண்ணன் என்று யாராவது இருக்கிறார்களா ?’ என்றோம்.  உடனே அவர்களில் ஒருவர் ’இதுதான் நல்ல தண்ணி ஓடக்குப்பம், உட்காருங்கள்’ என்றார்; .நாங்களும் உட் கார்ந்தோம். அடுத்தகணம்  எங்கள்  பின்னால் வந்த சுமார்  10 பேர் ’தலைவரே ! இவர்கள் ஒரு மணி நேரமாக நம்ம கண்ணனைத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள் ’ என்று கூறியபடி அவர்களும் அந்தக் கூட்டத்தில் அமர்ந்து விட்டனர்.

 

எனக்கு உடனே புரிந்துவிட்டது, நாங்கள்  மீனவர் பஞ்சாயத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறோம் என்பது.  சரிவரச் சமாளிக்காவிட்டால்  விஷயம் விபரீதமாகலாம் என்பதும் புரிந்தது.  உடனே நான் எங்களது ஓலை தேடும் படலத்தைப் பற்றி மிக விரிவாகக் கூற ஆரம்பித்தேன்.

பிறகு ’ நல்ல தண்ணி ஓடை என்று சொன்னார்களே, அந்த நல்ல தண்ணி ஓடை எங்கே  இருக்கிறது ?’ எனப் பேசி அங்கே ஒரு சுமுக சிநேகித சூழ்நிலையை உண்டாக்கத் தலைப்பட்டேன்.  உடனே தலைவர் எனப் பட்டவர் அந்தக் கூட்டத்திலேயே இருந்த ஒருவரைக்காட்டி ’இவர்தான் கண்ணன்’ என்று கூறி எங்களை அதிசயப்படுத்தினார். ஏன் எனில் அவர் எங்களுடனேயே  இதுவரை நடந்து வந்தவர்களில் ஒருவர்.  பிறகு ’ எங்கள் குப்பத்தில் வந்து எங்களில் ஒருவரைப்பற்றி நீங்கள் விசாரிக் கிறீர்கள்; என்ன விஷயம் என்பது தெரியாமல் நாங்கள் எப்படி அவரைக் காட்டிக் கொடுப்போம். பின்னால் அவருக்கு உங்களால் ஏதாவது தீங்கு வந்தால் நாங்கள்தானே பொறுப்பாவோம் ’ என்று தம் செயலுக்குக் காரணமும் கூறினர்.  அவர்களின் ஒற்றுமையை அவரி டமே பாராட்டிவிட்டு ‘எங்களைப் பார்த்தால் அப்படித் தீங்கு  செய்பவர் கள் மாதிரியா தெரிகிறது?’ என அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டோம் . ’நாங்கள் தமிழ் அன்னையின் தொலைந்து போன இலக்கிய, அறிவுசார் நூல்கள்  போன்ற  ஆபரணங்கள் எங்காவது மதிப்பறியாமல் புதைந்து போய்விடக் கூடாதே என அவற்றைத் தேடுகி றோம்’ என இலக்கிய ரீதியில் பேசத்தொடங்கினோம் . ’கண்ணன் அவரிடமிருக்கும்  சுவடிகளை எங்களுக்குத் தந்தால் அரசு மூலம் பரிசுகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது’ என்றோம். உடனே தலைவர்  ’ஏம்ம்பா, உன்னிடம் ஓலைச் சுவடிகளிருக்கிறதா?’  என்று கேட்டார் .
கண்ணன் பவ்யமாக ’ நான் இதுவரை ஓலைச் சுவடிகளை சன் டி வி யில்தான் பார்த்திருக்கேன் தலைவா !  ’ என்று சிரிக்காமல் கூறினார் .

நாங்களும் அதை நம்பியதுபோல் காட்டிக்கொண்டு  எழுந்தோம்; உடனே தலைவர் ’இந்த இடத்தில் ஒரு நல்ல தண்ணீர் ஓடை நீண்ட நாட்களாக மக்களுக்குக் குடிநீர் தந்து வந்தது; .இப்போது அந்த ஓடையும் கடலால் மூழ்கடிக்கப்பட்டு விட்டது. ஆனால்  இப்பவும் கடலில் அந்த இடத்தில் இருக்கும் தண்ணீர் நல்ல தண்ணீராக இருக்கிறது. இத்தனைக்கும் காரணம் இந்த அம்மன்தான்’ என்று நாங்கள் அமர்ந்திருந்த கோயிலைக் காட்டினார் .நாங்களும் அம்மனை நோக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டு  இடத்தைக் காலி  செய்தோம் .

இவ்வாறு இந்த நிகழ்ச்சியை விரிவாகக் கூறக்காரணம் இந்த மாதிரி எங்களுக்கு அடிக்கடி பின்னாளிலும் நேர்ந்தது. விசாரித்து உண்மையான முகவரி கண்டுபிடிப்பது ஒரு நம்பிக்கை ஏற்பட்டால்தான் எளிதாகிறது.  சென்னையில் இருக்கும் முகவரிகளில் பார்க்கும்போது நிறையக் கோயில்கள் இருக்கக் கண்டோம். திருவேட்டீஸ்வரர் கோயில் சன்னதி என முகவரி இருந்தது .நாங்களும் சன்னதிக்குச் சென்று E.O  மற்றும் குருக்களைக் கேட்டோம்.  நாங்கள் என்ன நம்பியாண்டார் நம்பியா ? இறைவனிடம் நேரடியாகப் பேசுவதற்கு;  ஆனால் அவர்களே அவர்கள் கோயில் நிலத்தை மீட்கப் பழைய ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருப்ப தாகக் கூறினர். பழைய சுவடிகள் எங்கே போனது எனத் தெரியவில்லை எனக்கூறி, ஏதாவது எங்களுக்குக் கிடைத்தால் கூறுங்கள் என்றனர். நாங்களும் அவர்கள் கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்ந்தோம் .

 

எங்கள் பட்டியலில் இன்னும் அமைந்தகரை மாங்காளி அம்மன் கோயில், வடபழனி முருகன் கோயில், வடபழனி  100  ரோடு சித்தர்கள் மடம்,வடபழனி ஜெயின் கோயில், வடபழனி வேங்கீஸ்வரர் கோயில், ஜாபர்கான் பேட்டை கங்கை அம்மன் கோயில், புரசைவாக்கம் நவசக்தி விநாயகர் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், பாடி திரு வாலேஸ்வரர் கோயில், கோயம்பேடு குசேலேஸ்வரர், செம்பியம் சுந்தர விநாயகர் கோயில், தி நகர் சிவவிஷ்ணு கோயில்,  அண்ணா நகர் எல்லைப் பிடாரி கோயில், வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயில்  போன்றவற்றுடன் ஏன் வள்ளுவர் கோட்டம் பெயர் கூட இருந்தது.  பொறுமையாக எல்லாக் கோயிலுக்கும் சென்றோம். அங்கு பொறுப்பான அதிகாரிகளை க் காத்திருந்து பார்த்தோம். ஆனால்  எந்த இடத்திலும் சுவடிகளின் சுவடுகூடக் கிடைக்கவில்லை.

 

எப்படி ? பட்டியல் தவறாகத் தயாரித்து விட்டார்களா என்ற வினா எழுந்தது;  ஆனால் அப்படியும் எண்ணமுடியாதபடி  ஜாபர் கான் பேட்டை கங்கை அம்மன் கோயில்பூசாரி முன்று கட்டுகள் முன்பு இருந்ததாகவும், ஓர் ஆண்டுக்கு முன் யாரோ வாங்கிச் சென்றனர் எனவும் கூறினார். எனவே நாங்கள் தாமதமாகத்  தேடி வந்திருக் கிறோம்;  சுவடிகள் இருந்தபோது பட்டியல் எடுக்கப்பட்டிருக்கிறது என உணர்ந்தோம். எனவே கோயில்கள் நீண்ட நாட்களாக சுவடிகளைப் பாதுகாக்கும் இடமாக,  சீஸ்வது  பண்டாரம் எனப்படும் பொது நூலக மாக, தேவாரம் திருவாசங்கள் தினசரி பாடும் இடமாக ஒரு காலத்தில் இருந்து வந்துள்ளன என்பது உறுதியாகத் தெரிய வந்தது. தேவாரத் திருமுறைகள் வேண்டும்போது பொது மக்கள் கோயில்களில் இருக்கும் மூலங்களிலிருந்து படி எடுத்துப் போகும் வழக்கமும் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது படிப்படியாகக் காலப் போக்கில் சுவடிகளும் மாய மாகி விட்டன. இப்போது இருக்கும் குருக்களும், அதிகாரிகளும் வம்பில் மாட்டிக்கொள்ளவேண்டாம் என மிக்க முன்ஜாக்கிரதையாக ’ஓலைச் சுவடியா, அப்படி என்றால் என்ன?’ என்று கேட்டு விடுகின்றனர்.

தருமமிகு சென்னையாயிற்றே !  வாழ்க்கையில் உஷாராகத்தான் இருக்கவேண்டி இருக்கிறது ;.ஆனால்  நாங்கள் மதுரைக்குத் தெற்கே பாண்டிய நாட்டுப்பகுதியில் தேடும்போது வேறுவிதமான அனுபவங்கள் கிடைத்தன.

ஒரு வழியாக மாலை ஏழு மணிக்கு வேலையை முடித்து அறைக்குத் திரும்பினோம். .அடுத்தநாள் ஒரு பெரிய சுவடிக் குவியலை சுமார்  1500 கட்டுகள்,  20, 000  ஏடுகள் பார்க்கப் போகிறோம் எனத் தெரியாததால் சற்றுச் சோர்வுடனேயே அன்று  படுத்தோம் . 

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *