Home HistoryEtayapuram 6 – கயத்தாறு

6 – கயத்தாறு

by Dr.K.Subashini
0 comment

May 17

 

காய்கறிகள் வாங்கிய அனுபவம்
 
கயத்தாறிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி செல்லும் பாதை கொள்ளை அழகு. சாலைகள் விரிவாக இல்லாவிட்டாலும் வாகனம் பயனிக்க அதிகம் பிரச்சனையில்லாமல் செல்ல முடிகின்றது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக குழிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆக சற்று மெதுவாகத் தான் பயணம் செல்ல வேண்டியுள்ளது. இந்த சாலையில் வாகனங்களும் குறைவு. அவ்வப்போது சாலையில் மாட்டு வண்டிகள் செல்வதையும் ஏதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக வாகனங்களையும் பார்க்க முடிந்தது. கயத்தாறில் கட்டபொம்முவின் அருங்காட்சியகத்தைப் பார்க்க முடியாமல் போனது மனதிற்கு ஒரு குறையாகவே இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் புதிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் போகின்றோம் என்பது பயணித்துக் கொண்டிருந்த எங்கள் நால்வருக்குமே தெரியாது. 
 
சாலையின் இரு புறங்களுமே பயிர்கள் நன்கு வளர்ந்திருந்தன. ஆங்காங்கே சிறு பண்ணைகளுக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் நிலங்களை உழுது பயிரிட்டுப் பாதுகாத்து வருகின்றனர். வெண்டைக்காய் தோட்டம் ஒன்று வழியில் தென்பட்டது. இளம் பச்சையில்  மிகச்  செழிப்பாக நீண்டு பெரிதாக வளர்ந்திருந்த செடிகள்  நீள நீளமான வெண்டைக்காய்கள் வெண்டை பூக்களுடன் காட்சியளித்தன. எனது நண்பர்களுக்கு அவற்றை வாங்கிச் செல்ல ஆசை. ஆக வாகனத்தைச் சாலையில் நிறுத்தினோம். 

 

 
ஒரு பெண் கூடையை வைத்துக் கொண்டு வெண்டைக்காய்களைப் பறித்துக் கொண்டிருந்தார். கீதா அவரிடம் பேச்சுக் கொடுத்து ஒரு வகையாக விலை பேச, மூவருக்குமாகச் சேர்த்து  5 கிலோ வெண்டைக்காய்களை வாங்கிக்கொண்டார்கள். நானும் அதில் சிலவற்றை அப்படியே சாப்பிட்டு ருசிபார்க்கத் தவறவில்லை.   அங்கிருந்து புறப்பட்ட பின்னர் மேலும் சில கிலோமீட்டர் பயணித்தோம். சாலையின் இரண்டு பக்கங்களிலும் சோளப் பயிர் வளர்ந்து செழித்து மிக அழகாக காட்சியளித்தது. வெண்டைக்காய் வாங்கியது மட்டும் போதாது. சோளமும் இருந்தால் அவித்து சாப்பிடலாம் என கீதாவும் பகவதியும் சொல்ல அருகில் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி யாராவது தென்படுகின்றார்களா என்று தேடினோம்.

 

சற்று தொலைவில் ஒரு குடிசை தென்பட்டது. விஷ்வநாதன் அந்தக் குடிசையில் யாராவது இருப்பார்கள் என்று கூறி அக்குடிசையை நோக்கிச் சென்று அங்கிருந்தவர்களிடம் விஷயத்தைச் சொல்ல இரண்டு பேர் வந்தார்கள். முதலில் அவர்களுக்குச் சோளத்தை விற்க மனமில்லை. வேறு ஏதாவது காரணத்திற்காக மொத்தமாக விற்பனை செய்வதற்காக இருக்கலாம். ஆனாலும் கீதாவும் பகவதியும் காட்டிய ஆர்வம் அவர்களை  மாற்றி விட்டது. சரி பறித்துக் கொள்ளுங்கள் என்று கூறி பணம் வாங்கிக்கொள்ளாமல் விட்டு விட்டு எங்களிடம் சிறிது நேரம் கதை பேசிவிட்டு அவர்களும் சென்று விட்டார்கள். ஏறக்குறைய 20 சோளத்தைப் பறித்த திருப்தியில் அதனையும் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டோம்.
 
இந்தப் பகுதியில் சோளம், காய்கறிகள் இவற்றோடு நெல் பயிரிடுதல் மற்றும் பல வகையான தானிய வகை பயிர்கள் பயிரிடதல் போன்றவையும் முக்கியமாக உள்ளன.  இவற்றை விளக்கிக் கொண்டே வந்த விஷ்வநாதன் உளுந்து பயிரைப் பார்த்திருக்கின்றீர்களா என்று கேட்டார். நான் இதுவரை பார்த்ததில்லை. உடனே வாகனத்தைச் சாலையில் நிறுத்தி எனக்கு உளுந்துப் பயிரை காட்டினார். மிகக் குட்டையான செடிகள். அதில் பீன்ஸ் போல பட்டையாக உளுந்து மணிகள். 

 

 

வயலில் இறங்கி சற்று நடந்தோம்.  இந்த உளுந்து தோட்டம் கன்னுக்கெட்டியவரையில் மிக விரிவாக காட்சியளித்தது. இடையில் ஒரு பெண்மனி வயலில் பயிர்களுக்கு இடையில் களை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று சற்று நேரம் பேசினோம். அவர் அங்கு வேலை செய்பவர் மட்டுமல்ல அது அவர்களது குடும்ப நிலம். அங்கேயே சற்று தள்ளி பக்கத்திலேயே இருக்கின்றது அவர்களது இல்லம். காலையில் உணவு தயாரித்து விட்டு வயலுக்கு வந்து விடுவாராம்.  பகல் வேலையெல்லாம் முடித்து மீண்டும் இல்லம் திரும்ப 3 மணியாகுமாம் அவருக்கு. அவர் பயிரிடும் முறையைப் பற்றி விளக்கினார். உளுந்து இன்னமும் அறுவடைக்குத் தயாராகாத நிலையில் தான் இருந்தது. அதில் ஒரு பீன்ஸைப் பறித்து கொடுத்துச் சாப்பிட்டுப் பார்க்கச் சொன்னார்.  அதுவும் நல்ல அனுபவம்.

 

 
அங்கிருந்து புறப்பட்டு மேலும் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். வழியில் மத்தியான வெயிலில் நெல் வயலில் பாடிக்கொண்டு ஐந்து அல்லது ஆறு பெண்கள் நாற்று நட்டுக் கொண்டிருந்தனர். இது பாரதிராஜா தமிழ்படம் போல அப்படியே இருக்கின்றதே என்று சொல்லி மீண்டும் வாகனத்தை நிறுத்தி அவர்கள் பாடிக் கொண்டே வேலை செய்யும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டு நின்றோம். ஒரு வயதான பெண்மணி எங்களை பார்த்து விட்டு என்ன செய்கின்றோம் என தெரிந்து கொள்ள அருகில் வந்தார். புகைப்படம் எடுக்கின்றோம் என்று சொன்னதும் அவருக்கு  சந்தோஷம். என்னையும் எடுப்பீர்களா என்றார். அதற்கென்ன எடுத்தால் போச்சு என்று சொல்லி அவரை படம் எடுத்துக் காட்டிய போது பெரிய மூக்குத்தி ஜொலிக்க  அவரது சிரித்த முகத்துடன் எடுக்கப்பட்ட படம் மிக அழகாக வந்திருந்தது. 

 

 

அவருக்கு preview காட்டியதும் அதிக மகிழ்ச்சி. தூரத்தில் இருந்த தனது கணவரிடம் சந்தோஷமாக இந்த விஷயத்தைக் கூற அவருக்கும் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை.அவரையும் புகைப்படம் எடுத்துக் காட்டினோம்.  அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அவர்களை மகிழ்ச்சி படுத்தியதில் எங்களுக்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சி.
 
கிராமப்புறங்களில் பெண்கள் தோட்டங்களிலும் வயல்களிலும் வேலைகளை அலுக்காமல் தயங்காமல் செய்வதைப் பார்க்கும் போது  அவர்களை நினைத்து மனம் பெருமையாக இருந்தது. கடின உழைப்பு பெண்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் மன மகிழ்ச்சி இரண்டுக்குமே உதவக் கூடியது. இதை நினைத்துக் கொண்டு குறிப்பை எழுதிக் கொண்டு வரும் போது வழியில் ஒரு கோயில். ஸ்ரீ பாலசுந்தர விநாயகர் கோயில். அங்கு ஒரு சித்தர் வாழ்கின்றாராம். சற்று வாகனத்தை நிறுத்தி பார்த்தோம். மண்டபத்தில் இருவர் அமர்ந்திருந்தனர். ஆலயம் பூட்டியிருந்தது. சித்தர் அன்று இல்லை. அங்கிருந்து புறப்பட்டோம்.
 
சற்று நேரத்தில் பாஞ்சாலங்குறிச்சியை அடைந்தோம். மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி. மகா வீரன்,வீரபாண்டிய கட்டபொம்மன் இருந்து ஆட்சி செய்து வாழ்ந்த நிலம். அங்கு செல்வதில் அவர் வாழ்ந்த பகுதியில் நடந்து செல்வதிலும் கூட ஒரு பிரமிப்பு இருந்ததை அனைவருமே உணர்ந்தோம். சாலையில் முதலில் எங்களை  வரவேற்று நின்றது ஊமைத்துரை தோரணவாயில்!

 

அன்புடன்
சுபா

You may also like

Leave a Comment