எண்ணங்களின் ஊர்வலம் -6
31-07-2009
மனித வாழ்க்கையில் மாணவப் பருவம் கவர்ச்சிகரமானது. உடல், மனம் இரண்டிலும் மாறுதலை உணரும் பருவம். உல்லாசப் பறவைகள். வயதான காலத்திலும் “அக்காலம் வராதா ?” என்று ஏங்க வைக்கும் பருவம். அந்தக் கொடுப்பினை எனக்கில்லை.
எட்டையாபுரம் அமைப்பினைப் பார்க்கலாம்.
அது ஒரு சின்ன ஊர். ஜமீன் அரண்மனை மத்தியில் அமைந்திருந்தது. பெரும்பாலானோர் அரண்மனைத் தொடர்புள்ளவர்கள். மற்றும் பள்ளி போன்ற இடங்களில் வேலை பார்க்கும் நடுத்தர மக்களும், உழைத்துக் களைத்துப் போன ஏழைகளும் உடன் வசித்தனர். எட்டையாபுரத்தை யொட்டி நடுவிற்பட்டி என்று அழைக்கப் பட்ட ஒரு இடமும் இணைந்திருந்தது. இங்கு வணிகர்கள், வசதியுள்ளவர்கள் இருந்தனர். இரண்டையும் இணைக்க ஒரு தெரு. அந்தத் தெருவில் தான் “ராஜா உயர் நிலை”ப் பள்ளியும் “பாரதமாதா”என்ற தியேட்டரும் அமைந்திருந்தன. அட்டக்குளம் என்று ஒரு குளமும் உண்டு. அது
குடி தண்ணிர்க் குளமல்ல. தியேட்டரையொட்டி ஒரு சிங்காரத் தோப்பு. அரண்மனையைச் சேர்ந்தது. மஹாராஜாவின் தனியிடம். இங்கு தங்கிக் கொண்டு ஓவியம் வரைவதும், சங்கீதம் கற்பதும் போன்ற அவர் கலைப் பசிக்கு அது உபயோகப் பட்டது என்று கேள்விப் பட்டிருக்கின்றேன்.
பொதுமக்கள் அரண்மனைகளைப் பார்வையிட முடியாது. பள்ளிக்கூடமும் சினிமா அரங்கும் அரண்மனை நிர்வாகத்தில் இயங்கி வந்தன.
ஊரிலிருந்து பள்ளிக்குள் நுழையும் பொழுது ஒரு பழைய மண்டபம் இருக்கும். வெளிப் புறத்திலும் வகுப்புகள் நடக்கும். கொழுந்துவேல் வாத்தியார், சங்கர வாத்தியார், அய்யாக்குட்டி வாத்தியாரின் நினைவுகள் வருகின்றன. கொழுந்துவேல் வாத்தியார் சிரித்துப் பார்த்ததில்லை. மிகவும் கண்டிப்பானவர். அவர் உட்கார்ந்திருந்தால் எந்த சேட்டையும் செய்யாமல் நல்ல பெண்ணாக நடந்து செல்வேன். என்னால் சும்மா இருக்க முடியாது. வருகிறவர்களை வம்புக்கிழுப்பேன். குச்சி கையில் வைத்துக் கொண்டு
“இதோ பார் கத்தி “என்று சுழற்றுவேன். எம்.ஜி. ஆர் அவர்களைச் சின்னப் பிள்ளைகள் விரும்பியது போல் அப்பொழுது பி. யூ. சின்னப்பா குழந்தைகளுக்குப் பிடிக்கும். இருப்பினும் சினிமா மோகம் இக்காலத்தைப்
போல் அப்பொழுது வேரூன்றவில்லை. கொழுந்துவேல் வாத்தியாரின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் என் வாழ்வில் தொடர்புள்ளவர்களானார்கள்.
என் இலக்கிய ஆரவத்திற்கு கு. துரைராஜ். இவர் பின்னால் உசிலம்பட்டி கல்லூரியின் முதல்வரானதுடன், சாலமன் பாப்பைய்யாவின் பட்டிமனறம், மற்றும் வழக்காடு மன்றங்களில் முக்கியமானவராகத் திகழந்தார். நாராயணன் என் வகுப்புத் தோழன். தமிழில் நானோ அவனோதான் முதல் மதிப்பெண்
பெறுவோம். கடுமையான போட்டி. ஒரே மகள் பாப்பாவும் ,ராஜனும் என் மாணவர்கள். கே.கே ராஜன் இப்பொழுதும் சிறுகதைகள் எழுதி வருகின்றார். 200க்கும் மேற்பட்டு எழுதியுள்ளார். இவர்
கதைகள், விகடன், கல்கி, குமுதம். அமுதசுரபி இன்னும் பல பத்திரிகைகளில் வருகின்றன.
சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு நான் படித்த அரங்கத்திற்குப் போகலாம்.
மண்டபத்துக்கடுத்து ஒரு புதிய கட்டடம் (அப்பொழுது ). அடுத்து பக்கத்தில் வரிசை வீடுகள் போல் வகுப்பறைகள் கட்டப் பட்டிருக்கும். சுற்றி ஒரு காம்பவுண்ட் சுவர். பின் பக்கம், சுவர் தாண்டினால் ஒரு வயல், அடுத்து ஒரு நீண்ட பாதை. கோவில்பட்டியிலிருந்து வரும் பேருந்துகள் வரும் பாதை. அதனையடுத்து நிமிர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாரதி மணிமண்டபம்.வெற்றுத்தரையாய்க் கிடந்த பூமியில் மண்டபம் பூரணமாக வளரும் வரை தினமும் பார்த்து வளர்ந்தவள் நான். பாரதியைத்தான்
பார்க்க முடியவில்லை. அவன் நினைவில் எழும்பும் மாளிகையையாவது பார்க்கலாம் என்ற துடிப்பில் அதன் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்தவள்.
என் பள்ளிக்குள்ளும் ஒரு பாரதி இருந்தார். அவர்தான் கே.பி. எஸ் நாராயணன்.அவர் ஒரு ஆசிரியர். பரீட்சைக்காக மட்டும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் அல்ல. பல பேச்சாளர்களை, பல எழுத்தாளர்களை,
பல கலைஞர்களை, பல சமுதாயச் சிற்பிகளை உருவாக்கியவர்.முன்னதாக ஏற்கனவே பட்டியல் எழுதிவிட்டதால் மீண்டும் இங்கே குறிக்கவில்லை.
அவர் பாடம் நடத்துவதே அழகு. புதிய அர்த்தங்கள் நிறைந்தவை.
இலக்கிய மன்றம் அவர் பொறுப்பில். பள்ளி வகுப்புகள் முடிந்தாலும் அவரைச் சுற்றி வருவோம். பாரதியின் ஒவ்வொரு வரிகளையும் எங்கள் இதயங்களில் புதைத்தவர். அவர் கூறுவது இப்பொழுதும் நினைவிற்கு வருகின்றது.
“நிறைய படிக்கலாம். எழுதலாம், பேசலாம். இவைகள் மட்டும் போதாது. நல்ல எண்ணங்களைச் செயல்படுத்த வேண்டும். செயல்கள்தான் சமுதாயத்தைச் செம்மை படுத்தும். மாறுதல்களை
உடனே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நெஞ்சில் உரத்துடன் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாது உழைக்க வேண்டும். சோம்புதல் கூடாது. அலர்களைக் கண்டு சுருண்டு விடக் கூடாது. சுத்தமான மனம்
முக்கியம். சாதி, மதம், என்ற பிரிவினைகளால் ஒற்றுமை சிதறாமல் பாதுகாக்க வேண்டும். ஓர் ஆணுக்கு உண்டான அனைத்துக்கும் உரிமை படைத்தவள் பெண். ஆணும் பெண்ணும் ஆரோகியமான உணர்வுடன்
நட்பு கொள்ள வேண்டும் “ அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவைகள் கொஞ்சமல்ல. செயலிலும்
பயிற்சி கொடுத்தார். எந்தத் தலைப்பில் பேசப் போகின்றோம் என்று தெரியாது. மேடையேறியவுடன் தலைப்பை கூறுவார். நாங்கள் பேச வேண்டும்.
கவனத்தை ஈர்க்கும் பேச்சு நடை இருக்க வேண்டும். கருத்தாழம் கொண்டிருந்தால் மட்டும் போதாது, புதியனவும் இருக்க வேண்டும். அசைவுகளையும் (body language) சொல்லித்தர மறக்கவில்லை.
நாங்கள் உருவாக்கப் பட்டவர்கள். சிலர் மட்டும் செதுக்கப் பட்டார்கள். அத்தனை பெருமைக்கும் சொந்தமான சிற்பிக்கு என் நன்றியை இப்பொழுதும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கற்றுக் கொடுத்த பேச்சுத் திறமையால்தான் உயர்மட்ட அறிஞர்களின் நட்பு கிடைத்தது.
என் பள்ளிப்பருவத்தின் செயல்பாட்டைப் பார்க்கலாமா? நான் ஒரு சுட்டிப் பெண். பயம் அறியாதவள். அதுமட்டுமல்ல, பெண்ணுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எதுவும் இல்லாத ஒருத்தி. பெருமையாகச் சொல்லுவதாகத் தயவு செய்து நினைக்காதீர்கள். இக்குணங்களின் பலமும், பலஹீனங்களும் என்னைப் புரட்டி எடுத்திருக்கின்றன. இந்த இயல்பு எப்படி வந்தது?என் தந்தைக்கு ஒரே மகள். வேறு மகனும் கிடையாது.
என்னை ஆண்மகனைப் போல் வளர்த்தார். பள்ளித் தோழிகளுடனும் அதிகமாகப் பொழுதைப் போக்கியதில்லை. எங்கள் ஹோட்டலில் வேலை பார்த்த பையன்கள் விளையாட்டுத் தோழர்கள்.
என் வீட்டில் வசித்த முத்துவும் முக்குலத்தோர் பெண். தைரியசாலி. என்னைச் செல்லமாக வளர்த்த என் அப்பாவிடம் பல முறை பிரம்படியும் பட்டிருக்கின்றேன்.
ஒரு நாள் அப்பாவிடம் சொல்லாமல் சினிமாவிற்குச் சென்று விட்டேன். திரும்பி வந்தால் வீடு உள்ளே பூட்டியிருந்தார்கள். அப்பா வந்து விட்டார் என்று புரிந்து கொண்டேன். வாசலில் ஓர் வேப்ப மரம். அதி ஏறி, மொட்டை மாடியில் இறங்கி , வீட்டு நடுவில் இருந்த முற்றத்தில் குதித்தேன். சப்தம் கேட்கவும் பின் கதவு திறந்தது. என் அப்பா கையில் பிரம்புடன் நின்று கொண்டிருந்தார். அன்று நடந்த பிரம்படி உற்சவம் இன்னும் மறக்க வில்லை.
ஆகஸ்டு 15 சுதந்திரம் பிறந்தது.
ஊரெல்லாம் கொண்டாட்டம். வீட்டிலே விருந்து. அடுத்து உடனே வந்த நிகழ்ச்சி. பாரதி மணி மண்டபத் திறப்பு விழா. ஆசையுடன் எதிர்பார்த்த விழா. இராஜாஜி, டிகே.சி. கல்கி, சதாசிவம், எத்தனை பெரிய மனிதர்களைப் பார்க்கும் வாய்ப்பு அந்த சின்ன ஊர் மக்களுக்குக் கிடைத்தது. என்னால் மட்டும் முழுமையான மகிழ்ச்சியில் இருக்க முடியவில்லை.
எட்டையாபுரத்தில் பூப்பெய்த பெண்களைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை.
பாரதி பிறந்த மண்ணில் அவர் மறைந்த பின்னும் பெண்ணின் நிலை மாறவில்லை.
என்னை என் தந்தை பள்ளிக்கு அனுப்பினார். வயதுக்கு வந்த பெண் பள்ளிக்குச் சென்றவர்களில் வரிசையில் நிற்கும் முதல் பெண் நான் தான்.
“அடக்கி வைக்காம, இப்படியா ஒரு பெண்ணைப் படிக்க அனுப்புவாங்க. பிழைக்க வந்தவங்க தானே. ஊர் கட்டுப்பாட்டை மதிப்பாங்களா ?” எழுதப் படாத கட்டுப்பாடுகள் ஒவ்வொரு ஊரிலும் கோலோச்சிக்
கொண்டிருந்த காலம். அதை உடைத்துக் கொண்டு வெளி யேறிய என்னைத் தூற்றியது. என்னால் சுதந்திரமாக ஆரம்பத்தில் வெளியில் நடமாட முடியவில்லை. என்னுடைய ஒவ்வொரு அசைவிலும்
குற்றம் கண்டனர். சில நாட்களில் மனம் தெளிந்து விட்டது. இது போன்ற வம்புகளுக்கு அதிக ஆயுள் கிடையாது. வேறொன்று பேசக் கிடைத்து விட்டால் இதன் வலிவு குன்றி விடும். சமுதாயத்தைச் சமாளிக்க நான் கற்றுக் கொண்ட முதல் பாடம். என் ஆசிரியர் கே.பி.எஸ் அவர்களிடம் மட்டும் குறை பட்டுக் கொண்டேன். அவர் என்னை அடிக்கடி, “பாரதி கண்டபுதுமைப் பெண் நீ “என்பார்.
இத்தனை வசைச் சொற்களின் மாலைகளுடன் போய் அவர் முன் நின்று, “சார், நான் புதுமைப் பெண் அல்ல. புரட்சிப் பெண்.. ஊருக்கு நான் ஒர் அடங்காப்பிடாரி “என்று கூறினேன்.
என் குரலில் அவர் எதை உணர்ந்தாரோ தெரியாது, அவர் உடனே என்னிடம் கூறியது .”பாரதியின் கண்ணுக்குப் புதுமைப் பெண். அவர் சொன்னபடி, நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும், ஞானச்செருக்கும் கொண்டு, அச்சத்தையும் நாணத்தையும் நாய்களுக்கு எறிந்து விட்டு ஒருத்தி நடந்தால், அவளுக்கு இந்தப் பெயர்கள்தான் கிடைக்கும். பயப்படாதே. இதுதான் சமுதாயம். உன் மனத்திற்கு சரி என்று பட்டதைச் செய். மூட நம்பிக்கைகளை, பழக்க வழக்கங்களை உடைத்துவா
முதலில் செல்பவர்கள் சொல்லடிபட்டுத்தான் ஆக வேண்டும் .தயங்காதே” என் இரத்தத்தோடு கலந்து விட்ட சொற்கள்.
முரட்டுப் பெண் உதயமாகி விட்டாள். இந்த சமுதாயம் அவளை உருட்டிப் புரட்டி அலைக்கழித்தபொழுதும் நம்பிக்கையுடனும், துணிவுடனும் இன்று வரை வாழ்ந்து வருகின்றாள்.
என்னுடன் படித்த அரண்மனைப் பெண் படிப்பை நிறுத்தி விட்டார்கள்.
பிரிவு மட்டும் என்னைப் பாதித்தது. எனக்கு, சுப்புலட்சுமி, மீனாட்சி என்று இரு சிநேகிதிகள். அடுத்த வகுப்பில் படித்து வந்தனர். என் வகுப்பில் நான் மட்டுமே பெண். மற்றவர்கள் ஆண்கள்.
ஒருவருக்கொருவர் பாசத்துடன் பழகும் பண்பு அவர்களுக்கிடையில் இருந்தது. கேலிப்பேச்சால், மனம் புண்படும் வார்த்தைகளால் , ஆபாசச் சொற்களால் உடன்படித்த மாணவர்கள் என்னைக் காயப் படுத்தியதில்லை.
ஊரார் சொற்களால் என்னை வதைப் படுத்திய பொழுது எனக்கு ஆறுதலாய்த் துணை நின்றவர்கள் என் பள்ளித் தோழர்கள்.
அடுத்து என் போராட்ட வாழ்க்கைக்கு அரங்கேற்றம்.
சுப்புலட்சுமி பூப்பெய்து விட்டாள். அவளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்துக் கொண்டனர். என் மனம் பதறியது. சுப்புலட்சுமி ஒரு கவிஞர். அவளெழுதிய கவிதை ஒன்றில் மூன்று வரிகள் இப்பொழுதும் என் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
“தமிழே, தமிழே, தழைத்தோங்கும் தமிழே
தமிழர் போற்றும் தத்துவத் தமிழே
இன்னமுதூட்டும் இன்பத் தமிழே”
ஏழாவது வகுப்பில் படிக்கும் பொழுது அவள் எழுதிய வரிகள். அவள் பெற்றோர் மகளைப் பூட்டி வைத்துவிட்டதாக நினைத்தனர். தமிழையல்லவோ பூட்டி வைத்து விட்டார்கள் பொங்கி எழுந்தேன். அவளைப் பள்ளிக்கு அனுப்பும் வரை அவள் வீட்டு வாசல் படியில் உட்கார வேண்டும், உண்ணா விரதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து அத்தமிழ்ப் பெண் வீட்டுப்படிகளில் உட்கார்ந்து விட்டேன். தந்தையிடமோ, ஆசிரியரிடமோ அனுமதி வாங்கிச் செல்லவில்லை. என் மனம் வழி நடத்தியது. அமர்ந்து விட்டேன்
ஊர்வலம் தொடரும்..!
எண்ணங்களின் ஊர்வலம் – 7
03-08-2009
எண்ணங்களின் பயணத்தில் அவ்வப்பொழுது மனம் லயித்து அங்கேயே தங்கி விடுகின்றது. Time machine எதுவுமின்றி அக்காலத்திற்கே போய் விடுகின்றேன். தோல்விகளைக் கூடச் சுவையாக உணர்கின்றேன். என் நண்பர்கள் கூறுவார்கள் “உனக்கு வயதாகியிருக்கலாம். ஆனால் நீ பேசும் பொழுது உன் பேச்சில் இளமை இருக்கின்றது. “ மூளைக்கு வேலைகள் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வளமான சிந்தனைகள் சீரிளமை காக்கும். தோல்விகளில் மூழ்கி விடாமல், சிறிய வெற்றியாயினும் அதனை நினைத்து உற்சாகம் கொள்ளுதல் மனத்திற்குச் சத்துணவு. என் சிறிய சாதனைகளையும் நினைத்து மகிழ்வதால், என் உடல் தளர்ந்த பொழுதும் மனம் இளமையின் வலிவுடன் இருக்கின்றது.
முதல் வெற்றியும் முதல் தோல்வியும் ஒரே இடத்தில் கிடைத்தன. என் தோழியின் வீட்டு வாயிற்படியில் உட்கார்ந்து விட்டேன். அவள் பெற்றோருக்கு என்னை மிகவும் பிடிக்கும். வாசலில் உட்கார்ந்த என்னைப் பார்த்துத் தவித்துப் போனார்கள்.அவர்கள் மிகவும் அமைதியானவர்கள்.ஊர்ப் பழி வந்தால் மகளுக்குத் திருமணம் ஆகாதே என்ற பயம்.இராமபிரானே ஊர்ப் பழிக்கு அஞ்சித் தன் ஆசை மனைவியை அக்கினியில் குதிக்க வைக்கும் பொழுது கிராமத்து மனிதன் என்ன செய்ய முடியும். வேடிக்கை பார்க்கச் சிலர் வந்து விட்டனர். வந்தவர்களுக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆச்சரியம் என்னவெனில் வந்தவர்களில் சிலர் என்பக்கம் பரிந்து பேசினர். சில மாதங்களுக்குள் மனித மனம் மாறிய விந்தையை உணர்ந்தேன். என் தோழியின் அப்பாவும் மகளைப் பள்ளிக்கு அனுப்ப ஒப்புதல் கொடுத்து விட்டார். உடனே அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து என் தோழியின் கையால் உணவு உண்டேன். அவள் முகத்தைப் பார்த்தேன். ஜீவனில்லாச் சிரிப்பைக் கண்டேன். அப்பொழுது அதன் அர்த்தம் தெரியவில்லை. அது சில மாதங்களில் புரிந்த பொழுது திடுக்கிட முடிந்ததேயொழியக் கையாலாகாமல் நின்று விட்டேன். அவளுக்குத் திருமணம் நிச்சயமாகி விட்டது. அவள் கவிதை மனத்திற்குச் சமாதி கட்டப்பட்டு விட்டது, மணமானால் கவிதை போய்விடுமா என்று கேட்கத் தோன்றும் . எங்கள் காலச் சூழல் அப்படி.
காலத்தைச் சொல்லும் பொழுது என் தாயின் காலம் நினைவிற்கு வருகின்றது. ஒரு பெண் பூப்படையும் முன் திருமணம் செய்துவிட வேண்டும் என்று பிராமணச் சமுதாயத்தின் கட்டுப்பாடு. என் பெரியம்மாவுக்கு ஐந்து வயதில் திருமணம்.அவர்கள் 21 வயதில் கணவனை இழந்தார்கள். அவர்கள் மிகவும் அழகானவர்கள்; நீண்ட கூந்தல். கணவனை இழக்கவும் அவர்கள் கூந்தல் மழிக்கப்பட்டது. உண்பதிலிருந்து உறங்குவது வரை கட்டுப்பாடுகள்.என் தாய்க்கு 12 வயதில் திருமணம். அக்காலத்தில் ஐந்து நாட்கள் திருமணம்.பெண் பாட்டுக் கற்றிருக்க வேண்டும். பெண் பார்க்கும் சடங்கில்
பெண் பாடிக்காட்ட வேண்டும். அவளுக்குப் பேசத்தெரிந்திருக்கிறதா, கூந்தல் நீளமானதா, சரியாக நடக்கத் தெரிகிறதா, ஏன், அடுப்புப் பற்ற வைக்கத் தெரிகிறதா என்றெல்லாம் பரிசோதிப்பார்கள். பெண்ணைச் சந்தை மாடாக நடத்திய காலத்தில் பிறந்தவள் நான்.(திருமணத்திற்குப் பின் எத்தனை நாட்கள் பெண்ணைப் பாடச் சொல்லிக் கேட்டிருக்கின்றார்கள்?) என் தாயின் திருமணத்தின் பொழுது 13 ரூபாய்க்கு ஒரு பவுனும், ஒரு ரூபாய்க்கு 12 படி அரிசியும் விற்ற காலம். ஒரு சல்லிக்கு ஒரு கூறு கடலை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். ஓட்டைக் காலணாக்கள் சேர்த்து மாலை கட்டி விளையாடியிருக்கின்றேன். எரிச்சலும் இன்பமும் கலந்த கலவை உணர்வுகள்.
என் தோழிக்குத் திருமணமாகிச் சென்றுவிட்டாள். அடுத்து மீனாட்சி, சடங்கான பின்னும் பள்ளிக்கு அனுப்பப் பட்டாள். பெண் பூப்படைவதைச் சடங்காகிவிட்டாள் என்றும் கூறுவதுண்டு. எப்படியோ கிராமத்திலும் பெண்கல்விக்குத் தடை நீங்கியது. தொடர்ந்து கற்கின்றார்களா என்பது வேறு பிரச்சனை. முட்டுக்கட்டை நீக்கப்பட்டதே பெரிது. எங்கள் வீட்டில் ஒருத்தியாய் இருந்த முத்துவிற்கும் திருமணமாகிக் கோயில்பட்டிக்குச் சென்றுவிட்டாள். பிரிவுகளின் வலியையும் புரிந்து கொண்டேன்.
என் மனத்தை மிகவும் பாதித்த செய்தி அண்ணல் மகாத்மா காந்தியின் மரணச் செய்தி. அதிலும் அவர் கொலை செய்யப்பட்டது தாங்கிக் கொள்ள முடியாத அதிர்ச்சியாக இருந்தது. வானொலியில் செய்தி அறிவித்த பொழுது என் தந்தை உடனே மயக்கம் போட்டு விழுந்தார். அவர் விழுந்ததைக்கூட உணரமுடியாமல் அருகில் மலைத்துப் போய் நின்று கொண்டிருந்தேன். அதிர்ச்சி முதலில் ஊமையாக்கிப் பின்னர் அழவைத்தது.
கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என் தந்தையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஒரு நல்ல மனிதரை ஏன் சுட்டுக் கொன்றார்கள்? இரண்டுங்கெட்டான் வயது. புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவேசம் தோன்றியது. என் பார்வையின் வட்டம் பெரிதானது. ஒவ்வொரு செயலையும் ஊன்றிப் பார்க்க ஆரம்பித்தேன்.
இதுவரை தோன்றாத எண்ணங்கள் தோன்றலாயின. அதுவும் என் வீட்டில் ஆரம்பித்தது. என்னை உருவாக்கியதில் என் தந்தை பெரும் அக்கறை எடுத்துக் கொண்டார். மறுக்கவில்லை. ஆனால் அவருடைய இன்னொரு முகம் தெரிந்த பொழுது எழுந்த கோபத்தைப் பாசத்தால் அழிக்க முடியவில்லை.
என் தந்தைக்கு முன் கோபம் அதிகம். எதற்கெடுத்தாலும் பிரம்பெடுத்து அடிக்க ஆரம்பித்து விடுவார். என்னைவிட என் தாயார்தான் நிறைய அடிகள் வாங்கியுள்ளார். அவர் சொன்னவுடன் செய்துவிட வேண்டும். இல்லையென்றால் அடி. நான் தவறு செய்து அடி வாங்கிக் கொண்டிருக்கும்பொழுது என் தாயார் குறுக்கே விழுந்து நிறைய அடிகளை வாங்கிக் கொள்வார். “பெண்ணை வளர்த்திருக்கிறாயே, கொஞ்சமாவது அடக்கம் இருக்கா?”- இப்படி ஒரு பழியை என் தாயின் மேல் போடும்பொழுது என் தந்தையை முறைத்துப் பார்ப்பேன். “என் மகளை ஆண்பிள்ளை போல வளர்ப்பேன் “ என்று என்னை முரட்டுத்தனமாக வளர்த்தது என் தந்தை. புகழ் வந்தால் தந்தைக்கு, பழி வந்தால் தாய்க்கா? என்னடா உலகம் ? மனம் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. இவ்வளவு அடி வாங்கி விட்டு என் தாயார் தந்தைக்குக் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து, “குழந்தையை மன்னிச்சுடுங்கோ “என்று கெஞ்சுவார்கள். அப்பொழுதும் திட்டிக்கொண்டே தந்தை போவார். நான் பெரிதாகத் தப்பும் செய்திருக்க மாட்டேன். எனவே அவர் கொடுத்த தண்டனை நியாயமற்றது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். அடி வாங்கிக் கொண்டே கீழே விழுந்து வணங்கும் என் தாயின் அசட்டுத்தனம் எரிச்சலைக் கொடுத்தது. அன்று மாலையே என் தந்தை காசு கொடுத்து எங்களை சினிமாவிற்கு அனுப்புவார். பல முறை இதைப் பார்க்கவும் என் ஆத்திரம் கூடியது. ஏமாற்றுபவர், ஏமாறுபவர் இருவர் மீதும் கோபம் வந்தது.
இன்று அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இதனை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது இங்குள்ள சூழல்கள், விதிகளை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இங்கு பிள்ளைகளை அடிக்க முடியாது. போலீஸ் வந்து விடும். சட்டத்திற்காக என்று பார்க்க வேண்டாம், பெற்றோரின் வன்முறைச் செயல்கள் பிள்ளைகளை எப்படி மாற்றிவிடும் என்பதைப் பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உளவியல்படி மனிதனின் பெரும்பாலான குணங்கள் பிள்ளைப் பருவத்தில் உள்ளத்தில் பதிகின்றன. என் காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களைத் தலையில் குட்டுவார்கள், கிள்ளுவார்கள், பிரம்படி கொடுப்பார்கள், பெஞ்சுமேல் நிற்க வைப்பார்கள். இங்கே மாணவர்களைத் தொட்டால்கூட குற்றமாக்கி விடுவார்கள். என் காலத்து ஆசிரியர்களை இக்காலத்தில் கற்பனையில் கொண்டு வந்து ரசித்தேன். இந்த வயதிலும் இப்படி ஒரு அற்ப சந்தோஷம்.
மற்றக் குடும்பங்களையும் பார்க்க ஆரம்பித்து விட்டேன். வீட்டுக்குக் குடித்துவிட்டு வரும் ஆண்கள், பெண்டாட்டி – பிள்ளைகளை அடிக்கும் ஆண்கள், மனைவி இருக்கும் பொழுதே இன்னொரு பெண்ணுடன் வாழும் ஆண்கள் , செய்யும் தவறுகளை நியாயப்படுத்தும் ஆண்கள் இவர்கள் எனக்குள் ஏற்கனவே தோன்றியிருந்த கோபத்தை மேலும் வளர்த்தனர். அப்பாவும் அம்மாவும் உடலுறவு கொண்டு பிள்ளையைப் பெறுவார்கள் என்றுகூட எங்கள் காலத்தில் தெரியாது. அப்பாவித்தனத்துடன் வாழ்ந்த காலம். இன்று பிரமிக்கத்தக்க சூழலில் குழந்தைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அக்காலத்தில் யார் எதைச் சொன்னாலும் நம்புவோம். மூடப்பழக்கங்களுக்கு அதுவும் ஒரு காரணம். அர்த்தமற்ற அச்சங்கள் அவை வளர்வதற்கும் காரணம் என்பதையும் மறத்தல் கூடாது. முரண்பாடுகளை உணரத் தொடங்கிய பொழுது எனக்கு வயது 14. இனிமையைச் சுவைக்க வேண்டிய பருவத்தில் கசப்பான நிகழ்ச்சிகளைப் பார்க்கப் பார்க்க மனக்கசப்பும் வளர ஆரம்பித்தது. பேச்சுக்கும் செயலுக்கும் மாறுபாடாக நடக்கும் பல பெரியவர்களின் நிழலாட்டம் என்னைப் போராளியாக உருவாக்க ஆரம்பித்தது. இந்நிலையில் எங்கள் குடும்பம் இடம் மாறியது. வெளி உலகம் பற்றிய செய்திகளை அறியும் சூழலுக்குள் நுழைந்தேன்.
இந்த வயதிலேயே உலக அரசியல் தொடங்கி, உள்நாட்டு அரசியல் வரை கற்க ஆரம்பித்தேன். நிமிர்ந்து நின்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். ஊர்வலத்தின் உற்சவத்திற்கு அச்சாரம் போட்ட அனுபவங்கள் பெறப் புதிய குடிலுக்குச் சென்றேன்.
ஊர்வலம் தொடரும்..!
எண்ணங்களின் ஊர்வலம் – 8
06-08-2009
பார்ப்பவையெல்லாம் இதயத்தில் பதிந்து விடுவதில்லை.
மனம் எங்கோ லயித்து இருக்கும் பொழுது பார்வையில் படும் பல கவனத்தை ஈர்ப்பதில்லை. சில சாதாரணமாகத் தாண்டிப் போய்விடும். சிலவற்றை நாம் பெரிது படுத்தாமல் தெரிந்தே ஒதுக்கி விடுகின்றோம். மிச்சமிருப்பவை எண்ணக் கிடங்கில் தங்கிவிடும். தூசி தட்டி எடுப்பதும் உண்டு, இல்லையெனில் தேவையில்லையெனத் தூக்கி எறிவதும் உண்டு.
எண்ணக்கிடங்கு குப்பைக் கிடங்காக மாறுவதும் உண்டு. இத்தனையும் பெரும்பாலானோர் இயல்பு. சிலர் அவைகளை வெளிப்படுத்தும் பொழுது வியந்து போகின்றோம். அப்பொழுது கூட அவை நாம் துக்கி எறிந்தவை என்பதை உணர்வதில்லை. என்னைப் பொருத்தவரையில் குப்பைகளைக்கூடச் சுத்தப்படுத்திச் சேமித்து வைத்துக் கொள்வேன்.
என் பயணத்தில் பிரிந்து விட்ட ஒரு தோழியைப் பார்க்க விரும்பினேன். அவள் விலாசம் தேடி அலைந்தேன். இந்தியாவிற்குப் போகும் பொழுதுதான் இந்தத் தேடல்கள். எப்படியோ கண்டு பிடித்துவிட்டேன். தொலைத்துவிட்ட பொம்மையைக் கண்டு பிடித்த குழந்தைபோல் மகிழ்ந்தேன். உடனே தொலைபேசியில் அவளை அழைத்தேன். குரல் கேட்கவும் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு. அது காதலுக்கு மட்டும்தான் என்று சொன்னவர்கள் அரிய நட்பை உணராதவர்கள். அவளைப் பார்க்க ஒரு டாக்ஸியில் கிளம்பினேன்.
அடையாளம் கேட்டுக் கொண்டே அவள் வீட்டிற்கு முன் சென்று இறங்கினேன். என் கைபிடித்தவள் என் தோழி. அவ்வளவுதான், அவளைக் கட்டிபிடித்துக் கொண்டு வீதியென்றும் பாராமல் அழுதேன். அவள் கண்களிலும் கண்ணீர். 56 வருடங்கள் கழித்து அவளைப் பார்க்கின்றேன். இரண்டாம் வகுப்புத் தோழி.
என் தோழி தங்கம்மாளை முதலில் என் அன்பு வாசகர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கின்றேன். எட்டயபுரத்து மஹாராஜாவின் மூத்த மகள். எட்டயபுரம் ஒரு ஜமீன் என்றாலும் நாங்கள் அவரை மஹாராஜா என்றுதான் அழைப்போம். அரண்மனைக்கு அருகில் சிறிது காலம் குடியிருந்தோம். விளையாட அங்கே போய்விடுவேன். பள்ளிக்குப் போகும் பொழுது அவர்கள் கெடிலாக் காரில் ( அப்பொழுது இந்தக் கார் கவுரவத்தின் அடையாளம் ) அரண்மனை சின்ன ராணியுடன் செல்வேன். எங்கள் ராணியின் கைராசிதானோ என்னவோ, என் அரசுப் பணியில் எப்பொழுதும் எனக்கு வாகன யோகம் அமைந்தது. என்னுடைய பள்ளிப் பருவச் சேட்டைகளை என்னுடன் வந்திருந்த நண்பர்களிடம் தங்கம்மாள் கூறிய பொழுது எல்லோரும் சிரித்துக் கொண்டே ரசித்தனர்; நானும் ரசித்தேன். ஊரில் இருந்த சின்னப் பையன்கள் சிறுத்தைப் புலியென்று சுவரெல்லாம் எழுதி வைப்பார்கள். இரண்டு அர்த்தங்களில் பதிவு. சீட்டா என்றால் சிறுத்தை. ஓட்டத்திலும் சிறுத்தை. எனக்கு எங்கள் ஊரில் சிறுவர்கள் கொடுத்த செல்லப் பட்டம்.
“ நடக்கறாளா, ஓடிக்கிட்டே இருக்கா. கொஞ்சமும் அடக்கம் இல்லே, பொண்ணா இது ? “ ஊர் பேச்சு.வேலைக்கு வந்த பிறகும் என் அலுவலத்தில் பேசியது “ இந்த அம்மா நடக்காதா ? உருண்டுகிட்டே இருக்காங்க” ஆமாம் ஓட்டம் என்பது உருண்டு என்று மாறியது. உடல் பருத்துவிட்டதால் வார்த்தையில் மாற்றம்.
எட்டயபுரம் அரண்மனை
பழமையும் புதுமையும் கலந்த பல கட்டடங்கள். அரண்மனை தர்பார் இன்னும் இருக்கின்றது. எத்தனை கலைஞர்கள், எத்தனை வித்துவான்கள் வந்து போன இடம்! சுப்பையாவுக்குப் பாரதி பட்டம் கொடுக்கப்பட்ட இடம். முத்துசாமி தீட்சிதர் தன் சகோதரருடன் வந்த இடம். அங்கு சென்று நின்றால்,
ஒலி கேட்கும் சக்தி நமக்கு இருந்தால் பாரதி சின்னப் பயல் நாடகம் கேட்டிருக்க முடியுமே. ஒலிகள் அழிவதில்லை. நமக்குப் புரிந்து கொள்ளும் சக்தி இல்லை . புஷ்பக விமானம் பறந்தது என்று புராணங்களில் எழுதப்பட்டதைக் கேலி செய்தவர்களுக்கு முன்னால் விமானம் பறந்தது. எங்கோ ஒலி, பதிவு செய்யப்பட்டுக் காற்றிலே வெளியிட, எங்கோ இருக்கும் மனிதன் கேட்க முடிகிறது என்றால் இறைவன் அனுப்பிய ஒலிகளிலிருந்து வேதம் உணரப்பட்டது என்பது மட்டும் பொய்யுரையாகுமா? நான் வேத மதத்தை மட்டும் சொல்லவில்லை, இஸ்லாமிய மதத்தையும் சேர்த்தே கூறுகின்றேன். ஆண்டவன் அவ்வப்பொழுது யாரையோ அனுப்பி மனிதனைத் தட்டி எழுப்புகின்றார். நாம்தான் சரியாக உணராமல் பேசிக் கொண்டிருக்கின்றோம்.அரண்மனைக்குள் போவோம் அந்தப்புரம்.
ராணிகள் வாழும் இடம். அங்கே உரியவர்களைத் தவிர வேறு ஆண்கள் நுழைய முடியாது. எத்தனை அறைகள் ? மஹாராஜாக்களுக்கு மனைவியர் கூட ஒரு படை. மக்கள் ஆட்சியில் மன்னர்களாய் வாழும் உயர் மட்டத்தினருக்கே கட்டியவர்களும் உண்டு, ஒட்டியவர்களும் உண்டு.
மன்னர்களுக்குக் கேட்பானேன்! சில சமயங்களில் கற்பனைக் குதிரை ஓடும். அங்கே அவர் வைத்திருக்கும் பெண்களில் எல்லோருடைய பெயர்களும் நினைவில் இருக்குமா ?ஒரு நாள் அல்லது சிலநாட்கள் உறவுக்குப் பின் கவனிக்காமல் விடப்படும் பெண்களும் உண்டு. அந்தப்புரத்தின் கொத்தடிமைகள். அந்தஸ்து முத்திரை மட்டும் இருக்கும். மன்னனின் இந்தக் குறை அவனுடைய மற்ற சாதனைகளில் மறைந்துவிடும்.
அரண்மனையில் கொலு வைப்பார்கள். எட்டயபுர அரண்மனைக் கொலு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தங்க சரஸ்வதி, மேல் விட்டத்தைத் தொடும் அளவு உயரம். கம்பீரமாக உட்கார்ந்திருப்பாள். வெளியூரிலிருந்தும் கூட்டம் கூட்டமாக வருவார்கள். நாள், கிழமையென்று கரகாட்டமும் மயிலாட்டமும் நடக்கும். நடக்கும் கூத்துகளில் இரவு முழுவதும் உட்கார்ந்திருப்போம் . மஹாராஜா பிறந்த நாள் வந்து விட்டால் போதும். ஊரே களைகட்டி விடும். சமஸ்தான வித்துவான்கள் என்றும் உண்டு. பாடகர் ஜி. என். பாலசுப்பிரமணியன், எங்கள் சமஸ்தான வித்துவான்களில் ஒருவர். வசுந்தராதேவி தன் குட்டிப் பெண் வைஜயந்தியுடன் வந்திருக்கின்றார். நாதஸ்வர மேதை டி. என் ராஜ ரத்தினத்தின் கச்சேரியும் உண்டு. எம்.எஸ். சுப்புலட்சுமியும் வந்திருக்கின்றார். சினிமாக்காரர் இல்லாமலா? என். எஸ். கிருஷ்ணனும், டி. ஏ. மதுரமும் வந்த பொழுது சொல்ல முடியாத கூட்டம். எங்கள் காலத்து நாயகன் எம். கே. தியாகராஜ பாகவதர் வந்த பொழுது பக்கத்து கிராமங்களிருந்தும் வெளியூரிலிருந்தும் கூட்டம் .
சமீபத்தில் ஒருவர் பெண்ணுரிமை பற்றிப் பேசும் பொழுது, ’ஆண்கள் தனக்குப் பிடித்த நடிகையின் பெயரைச் சொல்லுவது போல் பெண்களால் கூற முடியுமா? அதற்குக் கூட உரிமையில்லை’ என்று சொன்ன பொழுது “நிறுத்துடா“ என்று கத்த வேண்டும் போல் தோன்றியது. எனக்கு இந்த நடிகரைப் பிடிக்கும் என்று சொன்னால் என் காலத்திலேயே புருஷன் கோபித்துக் கொள்வதில்லை. அவனாவது தயங்குவான். பெண்ணுக்குப் புருஷன் விஷயத்தில் “என் புருஷன்தான், எனக்கு மட்டும்தான் “ உரிமை உணர்வு. இவன் சும்மா சொல்வானா, அசடு வழியச் சொல்லுவான். அவளுக்கு ஆத்திரம் வரும். பெண்ணுக்கு சம உரிமை பேசும் பல ஆண்கள் எங்களுக்கு வேண்டாதவைகளையும் கேட்டு விடுகின்றனர். அந்த சலுகைகளால் எங்களைவிட ஆண்கள்தான் அதிகப் பயன் பெறுவர். ”அடப்பாவிங்களா, நீங்க நல்லவங்கதான். ஏதோ நல்லதுன்னு நினைச்சுக் கண்டதையும் பேசாதீங்க. பின்னாலே ஒங்களுக்கும், ஒங்க பிள்ளகளுக்கும்தான் கஷ்டம்.”
எட்டயபுரத்திற்குப் பாரதிமட்டும் பெருமை சேர்க்கவில்லை. கொட்டிக் கிடக்கும் பெருமைகளுக்குச் சொந்தக்காரர்கள் எங்கள் ஊர் மஹாராஜாக்கள். மக்கள் திலகம் போட்டுக் கொண்ட முதல் தங்க மோதிரம் எங்க ஊர் ராஜா கொடுத்தது. நிறைய எழுதலாம். கொஞ்சமாவது எழுதியே ஆக வேண்டும் என்று என் மனக்குரல் கூறுவதால் மேலும் எங்கள் ஊர்பற்றிச் சொல்லுவேன். மீண்டும் சந்திப்போம்.
ஊர்வலம் தொடரும்..!
எண்ணங்களின் ஊர்வலம் – 9
07-08-2009
மும்மூர்த்திகள் சங்கீத உலகில் மட்டுமல்ல; நாடக உலகிலும் மும்மூர்த்திகள் இருந்தனர். சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் மற்றும் காசி விஸ்வநாதப் பாண்டியன் ஆவர்.
சங்கரதாஸ் சுவாமிகள்
மதுரையில் நாயக்கர் ஆண்ட காலத்தில் விஜய நகர சமஸ்தானத்திலிருந்து வந்து நடைபெற்ற போர்களில் வீரமாகப் பங்கு கொண்டவர்க்குக் கிடைத்த சன்மானம்தான் எட்டயபுரம் சமஸ்தானம். ஜமீந்தார் என்றாலும் மக்கள் அழைத்தது மஹாராஜா என்று தான் காசிவிஸ்வநாதப் பாண்டியன் எட்டயபுரம் மஹாராஜாக்களில் ஒருவர். இவருடைய சாதனைகள் முழுவதும் எழுதப் போவதில்லை. சில விஷயங்களைச் சொன்னால்தான், மன்னர் காலத்து வாழ்க்கையைத் தொட்டுக் காட்ட முடியும்.
இவரிடம் பல திறமைகள் உண்டு. ஓவியர். இசைப் பிரியர் மட்டுமல்ல, நன்றாகத் தபேலா வாசிப்பார். நாடகத் துறையில் அதிக ஆர்வம் உண்டு அதெற்கென குழு அமைத்து, பயிற்சி கொடுத்து, பல நாடகங்களை அரங்கேற்றியவர். நாடகத் திரைச்சீலைகளை அவரே தீட்டியிருக்கின்றார் என்றால் அவர் ஆர்வத்தைப் புரிந்து கொள்ளலாம். நாடக நடிகர்களுக்குப் பரிசுகள் அள்ளித் தருவார். அவர் குழுவினர் மட்டுமல்ல, மற்ற நாடகங்களையும் , நடிகர்களையும் ஊக்குவிப்பார்.மக்கள் திலகம் ஆரம்ப காலங்களில் நாடகத் துறையில் இருந்தது அறிந்த விஷயம். அந்தத் தங்க நிற மேனியானுக்கு முதல் முதல் தங்கத்தை அணிய வைத்தவர் காசி விஸ்வநாதப் பாண்டியன்தான். பரிசளிக்கப்பட்ட மோதிரம்பற்றி எம்.ஜி. ஆர் அவர்களே பல இடங்களில் கூறியிருக்கின்றார்.
டி. கே. சண்முகம் அவர்கள் தன் நாடகக் கம்பனியை மூடவேண்டி வந்த பொழுது, தந்தை பெரியார் அவர்களும் மஹாராஜா அவர்களும் உதவி செய்து அதைக் காப்பாற்றியதும் நாடக வரலாற்றில் இருக்கின்றது. தேசப்பற்று மிக்கவர்; சுதந்திரப் போராட்டத்திற்குப் பொருளுதவி செய்தவர்; பாரதியின் நண்பர். அவர் தோற்றுவித்த தியேட்டருக்கு “பாரதமாதா டாக்கீஸ் “ என்று பெயர் வைத்ததுடன், படம் ஆரம்பிக்கும் முன் பங்கிம் சந்திரரின் பாடல் “வந்தே மாதரம்” இசைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்திருந்தார். காங்கிரஸ் கூட்டங்களும் அந்தத் திரையரங்கில் நடைபெறும். அவருக்குப் பின் வந்தவர்களும் பல நிகழ்ச்சிகளை நடத்தும் களமாக அதைப் பயன்படுத்தி வந்தனர். இது அமைந்திருந்த இடம் அரண்மனைக்குச் சொந்தமான சிங்காரத்தோப்பை ஒட்டியது. தியேட்டரை ஒட்டி இருந்த ஒரு கட்டடத்தில்தான் நாங்கள் கடைசியாகக் குடியிருந்தது.
தியாகராஜ பாகவதர் வந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இடமும் இந்த அரங்கம் தான். எட்டயபுரம் சமஸ்தானத்து மன்னர்கள் கலையுணர்வு மட்டும் கொண்டவர்களல்லர்; விடுதலைப் போராட்டத்திற்கும் பல வகையில் உதவி செய்தவர்கள். இந்த ஊரில் என் காலத்தில் வசித்தது ஐந்து வீடுகளில்; முதல் மூன்றும் அமைந்த இடங்கள், பாரதியின் பிறந்த இல்லம் ஒரு பக்கம், கொஞ்சம் தள்ளிச் சென்றால் சோமசுந்தர பாரதியின் “தமிழகம் “ வீடு இன்னொரு பக்கம். வீட்டிற்குக் கூட நாட்டின் பற்றைக் காட்டும் வேகம் அக்காலத்தில் இருந்தது. பாரதியை, சோமசுந்தர பாரதியை நான் பார்த்ததில்லை. இன்னொரு வீட்டில் நாங்கள் காலி செய்தபின் யோகி சுத்தானந்த பாரதி வந்திருந்த பொழுது பார்த்திருக்கின்றேன். இந்த வீடுகள் மட்டுமின்றி அரண்மனை அருகில் இருந்தது. விருந்தினர் மாளிகைக்கு வந்த பல பெரியவர்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாகத் தோழி தங்கப் பாண்டியன் கிடைத்தது. வயது 8 ஆன பொழுது கடைத்தெரு மேல வாசலுக்குச் சென்றோம். அந்த வயதில் பரபரப்பான அனுபவங்களும் ஆரம்பித்தன. 14 வயதில் தியேட்டர் வீட்டிற்கு வந்தேன். அருகில் மட்டும் மாய உலகம் என்றில்லை, உலகைப் பார்க்கத் தொடங்கியதும் இங்குதான். தியேட்டரின் எதிரில் ராஜா உயர் நிலைப் பள்ளி. பாரதியும், சிவானந்தரும் இன்னும் பல பெரியவர்களும் படித்த பள்ளி. இங்கு நான் படித்ததோடு மட்டுமன்றி, ஓராண்டு ஆசிரியப் பணியும் செய்திருக்கின்றேன்.
எங்கள் இல்லத்திற்கு எதிராக அட்டக் குளம் என்று ஒரு குளம். தண்ணீர் இருக்காது. குளக்கரையில் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரின் சமாதி இருக்கின்றது. அதற்கு அடிக்கல் நாட்டும் விழா நடத்தியது என் தந்தை. அதில் பல போராட்டங்கள். வேலை மாற்றி நான் வெளியூர் செல்லவும் என் பெற்றோர்களும் அவ்வூரைவிட்டு வந்து விட்டனர். பல ஆண்டுகள் கழித்து சமாதி கட்டப்பட்டது. அப்பாவிடம் இருந்த இடம் சம்பந்தப் பட்ட கோப்புகளை வாங்கிச் சென்ற பின்னரே சமாதி எழுப்பினர். அந்த சமாதி விபரங்களில் அப்பா பெயர் கிடையாது. தெரிந்து மறைக்கவில்லை; தெரியாமல் விடப்பட்டது. நாங்களும் பெரிதாக நினைக்கவில்லை. இது ஒரு சாதாரண விஷயம்தான். ஆனால் வரலாற்றில் காணப்படும் செய்திகளில் இப்படிச் சின்னைச் சின்ன உண்மைகள் இடம் பெறாத நிலைக்கு இது ஓர் உதாரணம்; பள்ளிக்கு அடுத்த பக்கம், சொல்லப்போனால் பின்னால்தான் பாரதி மணி மண்டபம் இருக்கின்றது. அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து அதைத் திறந்து வைக்கும் வரை நான் ஒரு பார்வையாளர். அதுமட்டுமல்ல, அங்கு சென்று விளையாடுவோம். கட்டடத்தில் புதைந்திருக்கும் பல செங்கற்களை நான் தொட்டுத் தடவி இருக்கின்றேன். அப்பொழுதே கற்பனை உலகில் அலைவேன்.
அப்பொழுது ஒரு கற்பனை – “பாரதி, நீ இருக்கும் பொழுது நான் இங்கே பிறந்திருந்தால் உன் மடியில் கிடத்தி ஓர் தாலாட்டுப் பாட்டு பாடி இருப்பாயே. நான் கொடுத்து வைக்காதவள் “ பின்னால் அவனைப் பற்றி அறிந்த பொழுது என் கற்பனை கற்பனயாகத்தான் இருக்க முடியும் என்று சிரித்துக் கொண்டேன். சின்னக் குருவிகளுடன் கொஞ்சும் அந்த கவிஞன் தன் குழந்தைகளைக் கூட கொஞ்சாமல் கற்பனை உலகில் பறந்து கொண்டிருந்தவன். பக்கத்தில் பசியுடன் இருக்கும் மனைவியை மறந்து, இருக்கும் அரிசியைக் குருவிகளுக்குப் போட்டுவிட்டு மகிழ்ந்து கொண்டிருந்தவன். போகட்டும். மீண்டும் மண்ணுலகு வருகின்றேன். பள்ளியும் அரண்மனையைச் சேர்ந்தது. மன்னர் மக்களுக்கு வேண்டிய பல வசதிகளை அமைத்திருந்தார். அடுத்து வந்தவர் ராஜ ஜெகவீர ராம முத்துக் குமார வெங்கடேஸ்வர எட்டப்பர். அவரும் இசைப் பிரியர். இயந்திரங்களின் நுட்பங்களைப் பயில்வதில் ஆர்வம் கொண்டவர்.வித விதமாகக் கார்கள் வாங்குவார்; புகைப்படம் எடுப்பதில் தன்னையே மறப்பவர். அரண்மனை அறையொன்றில் வகை வகையாகப் பல கேமிராக்கள் இருப்பதைக் கண்டிருக்கின்றேன். சிங்காரத்தோப்பில் அவரே கார் ஓட்டி மகிழ்வதைப் பார்த்திருக்கின்றேன். மன்னரின் பிறந்த நாள் வந்து விட்டால் ஊருக்கே திருநாளாகிவிடும்.
எத்தனை நிகழ்ச்சிகள் ! எங்கள் ஊர் சின்ன ஊர். அலைய வேண்டாம். மற்ற ஊர்களில் நடந்தவரும் கலை நிகழ்ச்சிகள் எங்கள் ஊருக்கு கொண்டு வந்து எங்களை மகிழ்வித்தவர் எங்கள் ஊர் ராஜா. ஆடி முதல் நாள் மக்கள் சந்திப்பு. தர்பாரில் மூன்று நாட்கள் மக்கள் சந்திப்பு. மக்களின் குறை கேட்கும் நாட்கள். மக்கள் ஆட்சியில் மந்திரிகளைப் பார்க்க, பெரிய அதிகாரிகளைப் பார்க்க குறுக்கே நிற்கும் நந்திகள் இங்கே கிடையாது. பக்கத்தில் திவான் இருப்பார். உடனுக்குடன் குறைகள் தீர மன்னரின் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவிடும். இப்பொழுதோ, குறையை அரசுக்குப் பதிவுத் தபாலில் அனுப்பினால் கூட நம் கடிதம் மறைந்து விடும் மாயம் கண்டு மருண்டு போகின்றோம்.திருமணமா, மன்னரின் உதவி உண்டு; வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு மன்னரின் பரிசுகள் உண்டு. கல்வியிலிருந்து கேளிக்கைவரை மன்னர் மக்களைக் கவனித்து வந்தார்.மழை இல்லையென்றால் வரிவிதிக்க மாட்டார். மழை வர அமிர்தவர்ஷிணி ராகம் பாடப்பட்ட செய்தி கேள்விப்பட்டிருக்கின்றேன். இத்தனையும் நான் பார்த்து உணர்ந்தவை. வெறும் செவிவழிச் செய்தியல்ல. தமிழக வரலாற்றைச் சரியாக எழுத முடியாததற்கு மதன் கூறிய காரணங்களில் ஒன்று. பரிசுக்காகப் புலவர்கள் பாடியது, மது கொடுத்து மயங்கிக் கிடக்கும் பொழுது புலவர்கள் பாடியதை வைத்து உண்மையான சரித்திரம் எழுத முடியுமா என்ற ஐயம், எழுதுவதற்குக் குறுக்கே நிற்கின்றது . இதற்கு வரலாறு.காமில் டாக்டர்.கலைக்கோவனும், ஆசிரியர் குழுவில் ஒருவரான கமலக் கண்ணனும் பதில் கொடுத்திருக்கின்றார்கள். இப்பொழுது நானும் புகழ்ப் பாட்டு பாடிக் கொண்டிருக்கின்றேன். வாசகர்கள் மனத்தில் சில கேள்விகள் கிளம்புவதையும் நான் உணர்வேன். எட்டயபுர வரலாற்றில் கரும் புள்ளியாக இருக்கும் எட்டப்பர் கதை, நல்லவையாகக் காட்டப்படும் காலத்தில் கண்ட குறைபாடுகள், மன்னர் ஆட்சி சிறந்ததா, மக்கள் ஆட்சி சிறந்ததா என்ற பட்டிமன்றத் தலைப்புக் கேள்வி. இவைகளுக்குப் பதில் கொடுத்தால், அது ஒரு நீண்ட வரலாறாகிவிடும். ஆனாலும் சில வினாக்களுக்கு விடை கூறியே ஆக வேண்டும். இல்லையெனில் என் எண்ணங்களின் ஓட்டத்தில் குப்பை சேர்ந்து விடும்.அடுத்த சந்திப்பில் முடிந்தவரை விடையளிப்பேன்.
(ஊர்வலம் தொடரும்..
எண்ணங்களின் ஊர்வலம் – 10
07-08-2009
”தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா ”
இது போன்ற வரிகளைப் படிக்கும் பொழுது என்னையே ஒரு கேள்வி கேட்டுக் கொள்வதுண்டு. “பெருமையைக் காக்க நான் என்ன செய்தேன் ?” தமிழன் நிறைய சாதனைகள் செய்திருக்கின்றான். ஆனாலும் ஒரு குறை மனத்தை அடிக்கடி உறுத்தும்.ஒற்றுமைச் சிதறலில் ஒற்றுமை உண்டு .இன்றைய சில மாவட்டங்கள் அப்பொழுது ஒரு நாடு. சில சிற்றூர்கள் சேர்ந்தது சிற்றரசு. அந்தச் சின்ன வட்டங்களில் எத்தனை சண்டைகள் ? தமிழனின் வரலாற்றில் வலிக்கும் கரும் புள்ளியாய் நடந்தேறிய அவலம் ! வள்ளல் பாரியை , மூவேந்தர்கள் சேர்ந்து சூழ்ச்சியால் கொன்றது. பின்னரும் பாரியின் மகளிரை வேட்டையாடத் துடித்தனர். புலவர் கபிலர் அரணாய் நின்று அலைந்தார். மூவேந்தர்களின் விரட்டல்களில் மற்றச் சிற்றரசுகள் அடைக்கலம் கொடுக்கக்கூட மறுத்தனர். மலையமான் மட்டும் அன்று வீரத்துடனும், மனித நேயத்துடனும் அந்தப் பெண்களின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கடமையை முடித்த கபிலர் நண்பனைப் பிரிந்து வாழமுடியாமல் தீக்குளித்து மாண்டார் .ஒற்றுமை இன்மைக்கு ஒன்றா அல்லது இரண்டா, பல உண்டு .இது நம் நாட்டுக் கதை. அண்டை நாட்டைப் பார்ப்போமா?
ஆஸ்திரேலியா – இந்த ஊர்ப் பெயர் கேட்கவும் கிரிக்கெட் நினைவிற்கு வரும். அவர்களின் தொழில்களில் ஒன்று. அவ்வூர் சரித்திரம் கொடுமையானது. அங்கே மனிதன் 50000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழத் தொடங்கி விட்டான். ப்ரிட்டன் ஒரு சின்ன நாடு. அதற்கு ஆதிக்க வெறி வந்தது. உலகத்தை ஒரு குடையின் கீழ்க் கொண்டு வர எதையும் செய்யத் துணிந்து பல்முனைத்தாக்குதல் நடத்தியது. நாட்டின் வளத்தின் மேல் கண்.ஆட்கள் இறக்குமதி செய்யப்பட்ட பொழுது பழங்குடியினர் கண்ணில் பட்டனர். முதலில் காகிதத்தைக் காண்பித்து, ” உங்களுக்கு நிலம் சொந்தம் என்று உறுதிப் பத்திரம் இருக்கின்றதா அல்லது இந்த இடம் உங்களுக்குச் சொந்தமில்லை” என்று விரட்டப் பட்டனர். காகிதம் பார்க்காதவர்கள். சொல் நாணயத்தை நம்பிப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த நிலங்களைப் பறி கொடுத்தனர்.
நிலங்கள் மட்டுமா? ஆங்கிலேயர்களுடன் வந்த ஒரு கூட்டம் பிள்ளகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்தது. ஓட ஓட விரட்டப் பட்டார்கள். பிரிந்தவர் பிரிந்தது தான். சமீபத்தில் அரசாங்கம் மன்னிப்புத் தெரிவித்தது. ஆனால் பிள்ளைகள் கிடைக்கவில்லை. இன்னும் குமுறல் அடங்கவில்லை.இன்னொரு கொடுமையும் நடந்தது. இங்கிலாந்தில் இடமில்லை என்று குற்றவாளிகளை இன்றைய சிட்னியில் இறக்குமதி செய்தது. திறந்த வெளிச் சிறைச்சாலை. வந்தவர்கள் ஆண்கள் மட்டுமல்லர். விலைமாதர்கள் என்று முதலில் கூறப்பட்டது.பத்திரிகைகள் கடுமையாக விமர்சனம் செய்யவும் , அவர்களும் குற்றவாளிகள்தான் , விலைமாதர்கள் அல்ல என்று மறுப்புத் தெரிவிக்கப் பட்டது. வந்த வழி எந்த வழியானால் என்ன,வந்த பெண்கள் எல்லோருக்கும் ஊழியம் செயவதுடன் மனித இச்சையைத் தீர்க்கும் கொடுமைக்காளானார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் குடியுரிமை கிடையாது. ஒரு கணவன் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி மனைவியின் உடலைப் புண்ணாக்கிக் கொன்று விட்டான். முதலில் தண்டனை கிடைத்தது. ஆனால் சீக்கிரம் விடுவிக்கப் பட்டான். காரணம். அந்தப் பெண்ணின் பாட்டி விபச்சாரம் செய்தவள் . அப்படித் தலைமுறையில் பிறந்தவர்களைக் கொன்றால் குற்றம் இல்லை.அப்பன் பெயர் தெரியாத பிள்ளைகளைப் பெற்ற பெண்களை அந்த அவலக் குழியில் தள்ளியவர் யார்? நூலகம் சென்றால் இதைப் போன்ற செய்திகளைத் தாங்கிய பல புத்தகங்கள் பார்க்கலாம்.
ஆங்கிலேயப் படை வீரகள் சின்னப் பிள்ளைகளைக் கூடக் கட்டாயப் படுத்தி கிரிக்கெட்டுக்குப் பயிற்சி கொடுத்தனர். ஏனென்றால் அது அவர்கள் விளையாட்டு.இன்று ஆஸ்திரேலிய மக்களுக்கு அது ஒரு தொழில். நிச்சயம் நன்றாகத்தான் விளையாடுவார்கள்.
ஆங்கிலேயர் வரவால் ஏற்பட்ட ஒரு நல்ல காரியம். நடப்பன எல்லாம் அவர்களின் விருப்பப்படி. வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்த ஒப்பீடு செய்வது சாலச் சிறந்தது. ஆங்லேயர்களின் ஆக்கிரமிப்பின் சுவடுகளை அடையாளம் காட்டுகின்றேன். அலெக்ஸாண்டர் மாவீரன் என்று அழைக்கப் படுகின்றான். அவன் படைகள் நடைகளில் ஆழமாகப் பதிக்கப்பட்ட அழிவுகள் காணலாம்.
வாதாபி எரியூட்டலில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. தமிழன் வரலாறும் கன்னடர்கள் வரலாறும் புலிகேசியை, இரு வேறு கோணங்களில் காட்டுகின்றன. நெப்போலியனால் கூறப்பட்ட செய்தியைக் குறிப்பிட விரும்புகின்றேன் “வென்றவர்கள் வரலாற்றுச் செய்தியை மாற்றி விடுவதுண்டு” அழிக்கப்பட்டது, மாற்றப்பட்டது, இவைகளையும் மனத்தில் கொண்டு, காலம்,சூழல், அப்பொழுது இருந்த அமைப்பு, முன் நடந்த வரலாற்று எச்சங்கள் இவைகளை ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறிய முயல்வர் வரலாற்று ஆய்வாளர்கள். இராஜராஜன் சமாதி எது என்பதில் இன்றும் நடக்கும் மாற்றுக் கருத்துக்களின் மோதல்.
இத்தனையும் கூறுவதற்குக் காரணம் வரலாற்றில் எட்டயபுரம் மேல் விழுந்துவிட்ட கரும்புள்ளியை, சில கோணங்களில் மனம் அலசிப் பார்க்கத்தான்.அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள் பொன்னும் பொருளும் வேண்டிப் பல நாடுகளில் காலூன்றினர். வரலாறு பார்த்தால் மனித இனம் சண்டை செய்து கொண்டே புலம் பெயர்ந்தது தெரிய வரும். ஆங்கிலேயர் ஆட்சியில் சூரியன் மறைவதில்லை என்று கூறிக் கொள்வார்கள். கிழக்கிந்தியா கம்பெனி என்ற பெயரில் வியாபாரத்திற்காக இந்தியா நுழைந்தனர். பல மொழிகள், பல இனங்கள், பல கலாசாரங்கள் இத்தனை பிரிவுகள், அவர்கள் நோக்கம் நிறைவேறக் காரணிகளாயின. பிரித்தாளும் சூழ்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக நாடு அவர்கள் வசமாக ஆரம்பித்தது.
மூவேந்தர்கள் ஆட்சி முடிவிற்கு வர விஜயநகரத்திலிருந்த அரசு கை நீட்டிப் பாண்டிய நாட்டைத் தன் வயப்படுத்தியது. வலு சேர்க்க 72 பாளையங்களாகப் பிரித்து வரி வசூல் செய்யவும், சிறுபடைகளைப் பேணவும் ஏற்பாடுகள் செய்து கொண்டனர்.நாடு என்றால் சில மாவட்டங்களின் தொகுதி. சிற்றரசு என்றால் சில வட்டங்கள். பாளையங்கள் என்றால் சில கிராமங்களின் தொகுப்பு. ஜமீன் என்ற பெயர்.
எட்டப்பரும் , கட்டபொம்மனும் பாளையத்துக்காரர்கள்; அதிலும் அண்டை வீட்டுக்காரர்கள்.
கட்டபொம்மன் வீரத்துடன் கோபமும் இருந்ததால் “கட்டபொம்மன் என்று பெயர் சொன்னால் அழும் குழந்தையும் வாய் மூடி அழுகையை நிறுத்திவிடும்“ என்று கிராமங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. பின்னர் இஸ்லாமியரால் கைப்பற்றப்பட்ட பாண்டிய நாடு கடன் கட்ட முடியாமல் ஆங்கிலேயர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டது. இரண்டு மூன்று என்றாலே ஒற்றுமை போய்ச் சண்டை போடும் மனிதர்கள் 72 ஆகப் பிரிக்கப்பட்டிருந்தது, ஆங்கிலேயர்களுக்குப் பிரிவினையை உண்டாக்க வசதியாகப் போயிற்று. பங்காளிச் சண்டையில் ஏற்பட்ட விபத்து கட்டபொம்மன் கைது. எல்லோரும் வெள்ளையனைப் பார்த்து பயந்த பொழுது நிமிர்ந்து நின்றவர் கட்டபொம்மன் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை ; அந்தளவில் பெருமைக்குரியவர் தான்.
அகராதியில் ஒரு புதுச் சொல்லை உண்டு பண்ணியிருப்பது பற்றிப் பேச விரும்புகின்றேன். துரோகிக்கு – காட்டிக் கொடுப்பவனுக்கு ஓர் அடையாளச் சொல் “எட்டப்பன்”. இலங்கையில் நடக்கும் இனப் போராட்டத்தில் அடிக்கடி இன்றும் உபயோகப்படும் சொல் எட்டப்பன். தமிழர் வரலாற்றில் எத்தனை துரோகங்கள், காட்டிக் கொடுத்தல் நடந்திருக்கின்றன! ஒற்றுமையின்மைக்குத் “தமிழன்” என்று பெயர் கொடுக்க இயலுமா? அன்று உலகை ஆட்டிப் படைத்த ஆங்கிலேயர்களை “வன்முறையாளன்” என்று சொல்ல முடியுமா? சிந்திக்க வேண்டிய அடைமொழிகள். எப்படி இந்தச் சொல் மனிதன் மனத்தில் ஆழமாகப் பதிந்தது ?நாம் சமூக வரலாற்றில் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம். செல்லும் பாதையில் காணும் சிலவற்றை முடிந்த அளவு புரிந்து கொள்ள முயல்வோம். அடுத்து என் எண்ணங்களைத் தொடர்வேன்.
ஊர்வலம் தொடரும்…!