Home HistoryEtayapuram 5 – கயத்தாறு

5 – கயத்தாறு

by Dr.K.Subashini
0 comment

May 16

 

வீரபாண்டிய கட்டபொம்மன் [1760 – 1799]
 

கயத்தாறு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊர்.  ஊருக்கு உள்ளே நுழைந்ததுமே சாலையின் ஓரத்திலேயே  வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட இடத்திலேயே இந்த மண்டபத்தை கட்டி அதில் நடுவே உயர்ந்த சிலையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

 

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் 

 

நாங்கள் சென்ற சமயம் இந்த நினைவு மண்டபம் திறக்கப்படவில்லை. ஆக உள்ளே சென்று அருங்காட்சியகத்தைப் பார்வையிட முடியவில்லை.  வெளிப்புறத்திலேயே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஒரு சுற்றுலா பயணிகள் பஸ் ஒன்றும் சில பயணிகளோடு வந்து நின்றது. பயணிகள் இறங்கி கதவு பூட்டியிருப்பதைப் பார்த்து ஏமாற்றத்துடன் சற்று நேரத்தில் புறப்பட்டனர். நாங்கள் அருகிலுள்ள கடையில் எப்போது மண்டபம் திறக்கப்படும் என விசாரித்தபோது அவர்களுக்கும் சரியாக தெரியவில்லை. அங்கு மேலும் சில நிமிடங்கள் காத்திருந்து பார்த்து பின்னர் புறப்பட்டோம்.

 

 
வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் தமிழ் படம் பெற்ற வெற்றி, தமிழர்கள் பலருக்கு இந்தப் போராட்ட வீரனை அறிமுகம் செய்து வைத்தது என்பது உண்மை. இந்த தமிழ் சினிமா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திறமையான நடிப்பு இந்த வீரனை நேரில் பார்த்திராதவர்களுக்கு இப்படித்தான்  இருப்பார் என்ற ஒரு கற்பனை வடிவத்தையும் தந்து விட்டது. 
 
வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி மேலும் சில விபரங்கள் தெரிந்து கொண்டேன். இதில் எந்த அளவு உண்மைச் செய்தி உள்ளது என்று தெரியவில்லை.  வீரபாண்டிய கட்டபொம்மன் 3.1.1760ல் பிறந்தவர். தனது 30வது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாராம். அவர் முருக பக்தர் என்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் 21 மணி மண்டபங்களை கட்டி அங்கு பூஜைகள் சிறப்பாக நடைபெற வழி செய்தாராம். திருச்செந்தூரில் பூஜை ஆரம்பிக்கும் அதே சமயம் அவரது குலதெய்வமான ஜக்கம்மா  கோயிலிலும் மணி அடித்து பூஜை செய்யப்படுமாம்.
 
அது மட்டுமல்ல. அவரது ஆட்சி காலத்தில் 96 கிராமங்களைத் தனது ஆட்சிக்குள் உள்ளடக்கி  ஆட்சிப் பொறுப்பினை நடத்தி வந்தாராம்.  தனது ஆட்சி காலத்தில் 6 ஆண்டுகள் ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்காமலேயே இருந்திருக்கின்றார். இது ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இவர்  மேல் கோபம் ஏற்படக் காரணாமாக இருந்து வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்குத் தண்டனை கிடைத்தது வரையிலான நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றது.
 
இந்த நினைவு மண்டபத்தின் அறிவிப்புப் பலகையில் சில குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன. அதன் வாசகங்கள் இதோ:

 

 
 
"வீரபாண்டிய கட்டபொம்மன் 2.2.1790ல் பாஞ்சாலம் குறிச்சிப் பாளையக்காரராகப் பொறுப்பேற்றார். ஆங்கில நிர்வாகம் 1795-ல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பாளையக்காரர்கள் அனைவரும் தங்களுடைய கோட்டைகளை இடித்துவிட்டு, ஆயுதங்களை ஆங்கில அதிகாரிகளிடம் ஒப்படைத்து வரியைப் பாக்கி இல்லாமல்  செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
 
கட்டபொம்மு இதை எதிர்த்து வரி கொடுக்க மருத்தார். 10-9-1798ல் கலெக்டர் ஜாக்சனுக்கும் கட்டபொம்முவிற்கும் இராமநாதபுரத்தில் நடந்த பேச்சு வார்த்தக் கலவரத்தில் முடிந்தது.

 

5-9-1799ல் மேஜர் பானர்மேன் பாஞ்சாலம் குறிச்சி மீது போர் தொடுத்தார். முதல் நாள் போரில் கட்டபொம்மு வெற்றி பெற்றார். எனினும் பீரங்கித் தாக்குதலுக்குத் தம்முடைய மண்கோட்டைத்  தாக்கு பிடிக்காது என்பதை உணர்ந்து சில வீரர்களோடு வெளியேறினார்.


1-10-1799ல் கட்டபொம்முவைத் தந்திரமாகப் புதுக்கோட்டையில் கைது செய்து கயத்தாற்றிக்குக் கொண்டு வந்தனர். மேஜர் பானர்மேன்  போலி விசாரை ஒன்றை நடத்திக் கட்டபொம்மனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார். 16-10-1799ல் கட்டபொம்மன் கயிற்றின் சுருக்கை கழுத்தில் மாட்டிக் கொண்டு உயிர் துறந்தார். அப்போது அவருக்கு வயது 39. "

 
விக்கிபீடியாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய பக்கத்தை http://en.wikipedia.org/wiki/Veerapandiya_Kattabomman காணலாம்.
 
 
கயத்தாறிலிருந்து புறப்பட்டு பாஞ்சாலங் குறிச்சி நோக்கி புறப்பட்டோம். பச்சை பசுமையான வயல்வெளிகள் சாலையின் இரண்டு பக்கங்களிலும்.  மழை காரணமாக வயல்களில் நல்ல நீருடன் இளம்பயிர்கள் பசுமையாக காட்சியளித்து பயணத்தை இனிமையாக்கிக்கொண்டிருந்தது.

 

கயத்தாறிலிருந்து பாஞ்சாலங் குறிச்சி செல்லும் வழியில் இரு பக்கங்களிலும் உள்ள பயிர் நிலங்கள்

 

மேலும் கட்டபொம்மனைப் பற்றிய செய்திகள் அடுத்த பகுதியில்..!
 
அன்புடன்
சுபா
 

You may also like

Leave a Comment