4 – சென்னை

களப்பணி- ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம் !- ௪ (4 )
 

பழஞ்சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி இருக்காது; நெட்டெ ழுத்தைக் காட்டும்  கொம்பு வேறுபாடுகளும் சுவடிகளில் இரா. ஏடுகள் ஒடிந்தும் கிழிந்தும் இருக்கும்; மெய்யெழுத்துகளில் புள்ளி இருக்காது ; இவற்றை அறிந்து எழுதுவதற்கு மிகுந்த  பயிற்சி வேண்டும். அதை விட அதிகம் வேண்டுவது பொறுமை. பார்வைக் கூர்மை மிக அவசியம் .

சிந்தாதிரிப் பேட்டையில் எங்களுக்குச் சுவடி கிடைக்காவிட்டாலும் நான்கு முக்கிய  போதனைகள் கிடைத்தன என்று சொல்லி இருந்தேன். இப்போது நாங்கள் பெற்ற போதனைகளைப் பார்ப்போமா?

 

NMM  பட்டியல்  2006ல்  முழுமையாக வெளியிடப்பட்டுப் பயன்பாட்டில் இருந்தாலும் அதை நாங்கள் இப்போதுதான்  மிகவும் தாமதமாகப் பயன்படுத்த இறங்கி இருக்கிறோம். பெரும்பாலான சேகரிப்பாளர்களும்,
நிறுவனங்களும் முன்பே முதல் அறுவடை செய்து சுலபமாகப் பெறகூடியவற்றைப் பெற்றுவிட்டன .எனவே இந்தப் பட்டியல் உண்மையா பொய்யா ? அதிலுள்ள தகவல்களை எந்த அளவு நம்பலாம் இந்தப் பட்டியலை  வைத்துத் திறம்பட எவ்வாறு வேலை செய்வது.?  அதில் இருந்து அதிக பட்ச வெற்றியைப் பெற என்ன செய்ய வேண்டும்  ?   எனப் பல சிந்தனைகள் மனத்தில் இருந்தன . வேறு முனையில் வேறு இந்தப்பட்டியல் முழுவதும் தவறு என ஒரு பேச்சு இருந்தது. ஆனால் சிந்தாதிரிப் பேட்டை விஜயம் எங்களுக்குச் சில தெளிவை உடனே உண்டாக்கியது.

 

க ) பட்டியலில் இருக்கும் ஊரின் பெயர், தெருவின் பெயர், நபரின் பெயர் இவை எதையும் அதில் உள்ளபடியே எடுத்துக்கொள்ளக் கூடாது; ஏன் எனில் தமிழ் நாட்டில்  NSS  மாணவர்களால் வீடு வீடாகச் சென்று எடுக்கப்பட்ட பட்டியல் தில்லிக்கு அனுப்பப்பட்டு அங்கிருக்கும் தமிழ் தாய்மொழி அல்லாத ஹிந்திக்காரர்களால் தட்டச்சு செய்யப்பட்டிருப்பதால் இதில் இருக்கும் ஊர், தெரு, நபர்கள் பெயருக்கு அவர்களுக்குத் தோன்றிய உச்சரிப்புக் கொடுத்துத்  தட்டச்சுச் செய்திருக்கிறார்கள். எனவே நிமலன்  என்பது நமீலன் ஆனது போல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் எனவே பட்டியலில் இருப்பது ஒருவேளை சரியாக இருந்தாலும் இருக்கலாம் அல்லது அதை ஒத்த வேறு பெயராகவும் இருக்கலாம். எனவே விபரம் வழி முதலியவை விசாரிக்கும்போது பெயரை ஒத்த எல்லாவித மார்கத்திலும் விசாரிக்க வேண்டும்; நிறையக் கற்பனை வளம் வேண்டும். நிகண்டு அறிந்திருந்தாலும் நல்லதே. அம்மட்டுமா ?

௨) முகவரியைச் சரியாகக் கண்டபின் அங்கிருப்பவரிடம் எப்படி அணுகுவது என எங்களுக்கு ஒரு தெளிவு உண்டாகியது .வாரியார் சுவாமிகள் வீட்டில் இருந்தோர் மிகுந்த நல்ல எண்ணம் கொண்ட வர்கள். எங்களுக்கு ஆறுதலும் ,ஆசியும் வழங்கினர். ஆனால் பிற  இடங்களில் எப்படிப் பேச வேண்டும் எப்படி அணுக வேண்டும் என எங்களுக்குள் ஒரு மனக்கணக்கு உருவானது .

 

 ’First impression is the best impression’  எனக் கூறுவார்கள். எனவே நாம் கூறும் முதற் சொற்களைப் பொறுத்தே,  ஆரம்பிக்கும் விதத்தை வைத்தே அங்கே ஓலைச் சுவடி பெறுவதும்,  இதர உபசரிப்பும் இருக்கும் எனப் புரிந்து  கொண்டோம்.

 

௩) நடக்க ஆரம்பிக்கும்போது நாம் போகப் போக வண்டியையும் கூடவே நகரச் செய்ய வேண்டும். அதற்கு முதலில் ஓட்டுனரின் கை பேசி எண் மிகவும் தேவை. இதனால்  ஒரு வேலை முடிந்ததும் அடுத்த இடம் போக வண்டியும் தயாராக இருக்கும் .

௪) பட்டியலில் இருக்கும் முகவரிகள் ஏதோ பொய் முகவரிகள் அல்ல. அவை ஓலைகள் இருக்கும் இடம், இருந்த இடம் அல்லது இருக்கும் சாத்தியம் உள்ள இடம்தான் என்பதை புரிந்து கொண்டோம். ஒவ்வொரு இடமும் அவசியம் போகவேண்டிய இடமே! எந்தப் புற்றில் பாம்பு இருக்குமோ தெரியாது.

புரிந்தவை எனக் குறிப்பிடுபவை மிகவும்  elementary  ஆகப்  பலருக்கும் தோன்றலாம்.  ஆனால் சின்னச் சின்னப் புரிதலும் அதன் ஒழுக்கமும் தான் வாழ்வின் வெற்றியை நிர்ணயிக்கின்றன . நாங்கள் சென்னையை முதலில் ஓலை தேடுதலுக்குத் தேர்ந்தெடுத்த  காரணமே, சென்னையில் கிடைக்கும் அனுபவங்களைப் பொறுத்தே தேடுதல் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும் என்பதால்தான்;.ஏனெனில் சென்னையில் மொத்தம் 76  இடங்கள்தான். எனவே முடிந்தவரை எல்லா இடங்களையும் சென்று பார்த்துப் பட்டிய லின் நம்பகத்தன்மையை அறிவதும்,  மக்களை எப்படி அணுகுவது, அவர்களின் reaction    எவ்வாறு இருக்கிறது என்பதைக் காண்பதும் எங்கள் நோக்கமாக இருந்தது. சென்னை அருகில் இருக்கிறது; .குடியிருப்புப் பகுதிகள்  அருகருகே உள்ளன; ஓரளவு சாலை வசதி அங்கே உண்டு.பிற மாவட்டங்களில் ஒவ்வொன்றும் ஆயிரத்திற்கு மேல் முகவரி உண்டு.  மொத்தமும் கிராமங்களை கொண்டது. இடைவெளி தூரம் அதிகம். எனவேதான் சோதனை செய்யச் சென்னையைத் தேர்ந்தெடுத்தோம்.
 

விளையாட்டுப் பயிற்சிக்கு அருகில் இருக்கும் மைதானம் தானே சிறந்தது.  வாரியார் சுவாமிகளின் வீட்டில் இருந்து அவசர அவசரமாக மயிலாப்பூர் கிளம்பினோம்.  மயிலாப்பூரில் சமஸ்க்ருத கல்லூரி,  K.S.R INSTITUTE NO. 84, T.V.K ROAD  என இரு முகவரிகள் இருந்தன.  மாலை எத்தனை மணிக்குக் கல்லூரி மூடப்படுமோ என்ற பயத்துடன் விரைந்தோம்;  நல்லவேளை அங்கு கல்லூரி மூடப்படவில்லை; K.S.R   NSTITUTE   கல்லூரி வளாகத்திலேயே இருந்தது . நாங்கள்  அதன் முதல்வர் முனைவர் காமேஸ்வரியை சந்தித்தோம்.  அவர்களிடத்தில் சுமார்  1500  சுவடிகள் இருப்பதைக் காட்டினார்.  அதில் ’சாரங்கன் கதை’ என்ற ஒரு கதைப் பாடலும்,  மற்றவை வைஷ்ணவ  கிரந்தங்களாகவும் இருப்பதாகக் கூறினார். ஆனால் அவற்றைத் தஞ்சை பல்கலைக்குக் கொடையாகத் தர இயலாது என்றார். அவர்களிடம் அவற்றை  மின் னாக்கம் செய்வது குறித்தும்  பேசினோம். அவர்கள் முறைப்படி எழுத்து மூலம் அனுமதி கேட்கச் சொன்னார்.  முதல் நாளிலேயே ஓலைச் சுவடிகள்  1500  கண்ணால் கண்டது எங்களுக்கு  உற்சாகத்தை அளித்தது. மேலும் ஒரு விஷயம் முகவரி சரியாக இருந்தது மட்டுமல்லாமல்,  ஓலைச் சுவடிகளின் எண்ணிக்கை அதில்  1050 + 600  எனவும் சரியாகக்  குறிப்பிடப்பட்டிருந்தது  மன சந்தோஷத்தை அளித்தது.

 

இவ்வாறு எங்கள்  சுவடி தேடல் முதலில் அளித்த மனநிறைவால் ஆண்டவனுக்கு நன்றி கூறி, கபாலீசுவரரையும் கற்பகாம்பாளையும் மனத்தில் தொழுது அன்றைய வேலையை முடித்தோம் . 

 

மறுநாள் காலை  8.30  மணிக்கே திருவல்லிக்கேணி வியாசராஜ மடத்தில் இருந்தோம் .  அங்கே  200  சுவடிகள் இருப்பதாக பட்டியல் கூறியது .

 

மடம் என்பதால் எங்களுக்கும்  இருக்கும் என நம்பிக்கை இருந்தது . ஆனால் எங்களை உபசரித்தார்களே தவிர அவர்கள் இது வரை ஓலையைக் கண்ணாலேயே பார்த்ததில்லை என ஒரே போடு போட்டனர் .அவர்களின் மைசூர் தலைமை முகவரி கேட்டுப் பெற்றுக்கொண்டு  அங்கிருந்து கிளம்பினோம்.

 

அடுத்து ராயபுரம் அவ்வை கலைக் கழகம் என்ற முகவரி  இருந்தது. அதல்  30  சுவடிகள் இருப்பதாகவும், அது ராமானுஜர் மியுசியம் எனவும் போட்டிருந்ததால் மனத்தில் பல கனவுகள்; 

 

30  கட்டாக இருக்கும் எனப் பேசிக்கொண்டோம் .

 

ஆனால் அங்கே போனதும்தான் தெரிந்தது அது   கணிதமேதை ராமானுஜர் கண்காட்சி என்று. அவர்களும் ஆர்வமுடன் பேசினர்.

ஆனால் அங்கே ஓலைச் சுவடிகள் இல்லை;  ஆனால் பார்க்கவேண்டிய இடம்தான் அது.
 
அடுத்து வண்ணாரப்பேட்டையை நோக்கி வண்டியை விட்டோம்.  அங்கே எங்களுக்கு ஒரு மிகப்பெரிய வியப்புக் காத்திருந்தது. 

 

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *