May 12

 

பசுமை நிறைந்த நெல்லை
 
சற்று தாமதமாக, காலை 7:30  மணி  வாக்கில் நான் வந்த இரயில் திருநெல்வேலி இரயில் நிலையத்தை அடைந்தது. திருநெல்வேலி இரயில் நிலையத்தைப் புதுப்பித்திருக்கின்றார்கள். பளிச்சென்று தூய்மையாக நேர்த்தியாக இருந்தது இரயில் நிலையம். இரயிலிலிருந்து இறங்கிப் பார்த்த போது திரு.மாலனின் அதே முகச் சாயலோடு ஆனால் சற்று இளையவராக முகம் நிறைந்த புன்னகையுடன் திரு.ஜெயேந்திரன் நின்று கொண்டிருந்தார்.  ஒருவாறு உடனே என்னையும் அடையாளம் கண்டு கொண்டார். அவரது வாகனத்திலேயே அவரது இல்லத்திற்குப் பயணமானோம். ஒரு நாள் அவர்கள் இல்லத்தில் தங்குவதாக ஏற்பாடு.
 
வீட்டிற்கு சென்று அவரது துணைவியார் மற்றும் ஏனையோரையும் அறிமுகம் செய்து கொண்டு எனது திட்டத்தினைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். 1 மணி நேரத்தில் வாகனமும் துணைக்கு மூவரும் வரவிருக்கின்றார்கள் என்ற செய்தியை ஜெயந்தி கூறினார். எனக்கு ஆச்சரியம். இவ்வளவு ஈடுபாட்டுடன் உதவுகின்றார்களே என்று மண நிறைவாக இருந்தது.  நான் தயாராகி உணவு உண்டு முடிக்கவும் சரியாக காலை 10 மணிக்கு திருமதி.கீதா, திருமதி பகவதி, திரு.விஷ்வநாதன் ஆகிய மூவரும் வருவதற்கும் வாகனமோட்டி திரு.ரிஷான் வருவதற்கும் சரியாக இருந்தது. 
 
சிறுதி நேரம் அறிமுகம் செய்து கொண்டு பயணத்தைத் திட்டமிடலானோம். எனது பட்டியலில் இன்று ஒட்டப்பிடாரம், கயத்தாறு, பாஞ்சாலங்குறிச்சி  பார்த்தாக வேண்டும். ஆக எங்கே முதலில் செல்வது என யோசித்து, திருநெல்வேலியிலிருந்து கயத்தாறு சென்று, பின்னர் பாஞ்சாலங்குறிச்சி சென்று இறுதியாக ஒட்டப்பிடாரம் முடித்து திரும்பலாம் என்று முடிவானது. எங்களுக்கு வழியில் சாப்பிட உணவும் தயாராக ஜெயந்தி ஏற்பாடு செய்து விட்டு பள்ளிக்குச் செல்ல நாங்களும் புறப்பட்டோம். 

 

வரைபடம் (கயத்தார், ஒட்டப்பிடாரம், எட்டயபுரம்)

 
கயத்தாறு நோக்கி செல்லும் வழியில் ஆங்காங்கே சாலையில் சில சிறிய கோயில்கள்.  சில புதிதாக வண்ணம் பூசி அழகாக காட்சியளித்தன. பயணத்தின் போதே தமிழ் மரபு அறக்கட்டளை பணிகள் பற்றிய செய்திகளை இந்த நண்பர்களுக்குத் தெரிவித்தேன். இதுவரை   தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி அறிந்திராத இவர்களுக்கு இந்த பயணத்தின் நோக்கம் தெரிந்ததும் மிக்க மகிழ்ச்சியோடு எனக்கு மேலும் சில தகவல்களையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். அப்படி சென்று கொண்டிருக்கும் போது வழியில் ஒரு சிறு தெய்வ ஆலயம் தென்பட்டது.  திரு.விஷ்வநாதன் வாகனத்தை சற்று நிறுத்தி பார்த்து வருவோம் எனக் கூற அனைவரும் இறங்கி நடந்தோம். அது சுடலை மாடசாமி கோயில்.  இந்தக் கோயிலைப் பற்றிய செய்தியும் படங்களையும் ஏற்கனவே பதிப்பித்திருக்கின்றேன். அதனை இங்கே காணலாம். 

 

 

திருமதி.பகவதி, திரு,ரிஷான், திருமதி.கீதா, திரு.விஷ்வநாதன் – சுடலை மாடசாமிக்கு முன்

 

இந்த சுடலை மாடசாமி காவல் தெய்வம் என்று கிராம தெய்வமாகவும் வழிபடப்படுகின்றார். கிராம மக்கள் வருடத்திற்கு ஒரு முறை இந்த ஆலயத்தில் சுடலை மாடசாமிக்குப் பெரிதாக விழா செய்து பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபடுவார்களாம். அதிலும் குறிப்பாக அமாவாசை பௌர்ணமி நாட்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் பூஜைகள் நடைபெறுமென்று பகவதியும், விஷ்வநாதனும் குறிப்பிட்டனர்.
 
இவ்வகையான சுடலை மாடசாமி தோற்றத்தில், மலேசிய தோட்டப்புறப் பகுதிகளிலும் மதுரை வீரன் சுவாமி கோயில்களை நான் பார்த்திருக்கின்றேன். குறிப்பாக கெடா மானிலத்தில் உள்ள கூலீம், லூனாஸ் பகுதிகளில் சில ஆலயங்கள், பினாங்கிலும் சில ஆலயங்கள் உள்ளன. வெள்ளிக்கிழமைகளில் பூசாரி பூஜை செய்து சர்க்கரைப்பொங்கல் பிரசாதம் வழங்குவதும் பூஜைக்கு முன்னர் பஜனை தேவாரப் பாடல்கள் பாடுவதும் இங்கு மிக சகஜம். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது தமிழர்கள் உள்ள நாடுகளிலும் பொதுவான வழக்கம் தானே.
 
கோயிலைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்த பிறகு அங்கிருந்து மீண்டும் புறப்பட்டோம். கயத்தார் செல்லும் வழியில் சாலையில் ஒரு மோட்டார் வண்டியில் இருவர் நுங்கு  விற்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.

 

 

எனக்கு  நுங்கு மிகவும் பிடிக்கும். மலேசியாவில் முன்னர், பினாங்கில் little india  பகுதிக்குச் செல்லும் போது மறக்காமல் வாங்கிச் சாப்பிட்ட அனுபவம்.  உடனே இங்கு வாங்கிச் சாப்பிடுவோம் என தோன்ற வாகனத்தை நிறுத்தினோம்.  நுங்கு வியாபாரியிடம் பேசி அங்கேயே அவர்  கொடுத்த ஒரு ஓலையில் நுங்கு பழங்களை வைத்து சுவைத்துச் சாப்பிட்டோம். இப்படிப் பட்ட அனுபவங்கள் பயணத்தை மேலும் இனிமையாக்குபவை. 

திருமதி பகவதியின் கையில் பனை ஓலை பாத்திரம்

 

அந்த நுங்கு வியாபாரி ப்ளாஸ்டிக் அல்லது பேப்பர் தட்டுக்குப் பதிலாக பனை ஓலையையே ஒரு பாத்திரம் போல வடிவமைத்துக் கொடுத்தார். இதிலும் ஒரு கலை நயம்; அழகு!
 
இந்த சிறிய ஓய்வுக்குப் பின் மீண்டும் எங்கள் பயணம் கயத்தாறு நோக்கித் தொடர்ந்தது. கயத்தார் செல்லும் சாலை இப்போது மேம்படுத்தப்பட்டு பயணத்தை எளிமையாக்குவதாக அமைந்திருந்தது. ஏறக்குறைய அரை மணி நேரத்தில் கயத்தார் அடைந்தோம். இங்கு நாங்கள் பார்க்க எண்ணியிருந்த இடம் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடமான அவரது நினைவு மண்டபம்.
 
அன்புடன்
சுபா  

 


மேலும் சில குறிப்புக்கள்..

 

ஊரின் பெயர் கயத்தாறு; தாமிர வருணியின் உபநதி கயத்தாறு. அந்த ஆற்றின் பெயரில் இவ்வூர் அமைந்துள்ளது.

 

பிற்காலப் பாண்டியராகிய பஞ்ச பாண்டியரில் ஒரு வம்சாவளியினர் கயத்தாற்றுப் பாண்டியர்கள்; இவர்கள் கயத்தாற்றைத் தலைநகராகக் கொண்டு கோவில்பட்டி,  ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி பகுதிகளை ஆட்சி செய்தனர். பின்னாளில் இந்நிலப்பகுதி தென்காசியை ஆண்ட ஸ்ரீ வல்லப பாண்டியரின் ஆட்சியின்கீழ்
வந்தது. இம்மன்னரின் பெயரில் ’ஸ்ரீ வல்லபன் ஏரி’ என்ற ஓர் ஊரே ஏற்பட்டது;  தற்போதைய பெயர் ‘சீவலப்பேரி’.  இங்கு சிற்றாரும், கயத்தாறும் பொருநையோடு சங்கமிக்கின்றன

 

தேவ்

 

ஓம்.
நீங்கள் சாப்பிட்டது நுங்கு என்று நினைக்கிறேன். பனம்பழம் பச்சையாகச் சாப்பிட முடியாது. நெருப்பில் இட்டுச் சுட்டுத்தான் சாப்பிட முடியும் மிகுந்த நார் வாயினுள் இருக்கும். அதனைச் சூழ்ந்திருக்கும் பசைப் பகுதி சுவையாக இருக்கும். பின்னர் உறிஞ்சிவிட்டு மீந்தநார்ப் பகுதியை வெளியே துப்புவிடுவோம். ப நம் பழங்களை குவியலாக மண்ணில்புதைத்துவிடுவார்கள் சிறிது காலத்திற்குப் பிறகு அந்தப் பழத்தின் கொட்டைகளிலிருந்து பனங் கிழங்குகள் முளைத்து ஆழமாக ஆணி போன்று  தென்படும். தை மாதவாகில் அந்தப் பனங்கிழங்குகள் சேகரம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும். பொங்கல் பானையின் கழுத்தில்  சிறிய கரும்புத் துண்டு, பனங்கிழங்குத் துண்டு ஆகியவை கட்டுவார்கள்.


நாராய் நாராய் செங்கால் நாராய் பவளச் செவ்வாய் கூர்வாய் நாராய், பழம்படு  பனையின் கிழங்கு பிளந்தன்ன!

ஓம் சுப்ரமணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *